மைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா? சாத்தியமா? – சரவணன்

குறைந்த விலையில் செல்போன்களை விற்கலாம்
என்ற வியாபார உத்தியும்கூட, சீனாவின் தயாரிப்பே.
இந்த உத்தியால்தான் ரெட்மீ, மைக்ரோமேக்சை
சந்தையிலிருந்து காணாமல் போகச் செய்தது.

மைக்ரோமேக்ஸ் மீண்டும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்கு “திரும்பி” வந்ததும், இணையம் எங்கும் பக்தர்கள் ஆஹா ஓஹோ என கூச்சலிடுகின்றனர். அவர்களின் கூச்சலைத் தூண்டும்படி, மைக்ரோமேக்சும் “சீனத் தயாரிப்புகளை அழிப்போம்” அல்லது ”சீனத் தயாரிப்பு அல்ல” எனப் பொருள்படும்படியாக “ச்சீனி கம்” என விளம்பரம் செய்திருந்தது.

இதனால், இணையத்தில் இருக்கும் பக்தர்கள் “தலைவன் வந்துட்டாண்டா” என ஆரவாரித்தனர். இந்த ஆரவாரத்தைக் கண்டு, பிரபல டெக் யூடியூபர்கள்கூட, மைக்ரோமேக்சின் ஸ்மார்ட்போன் பற்றி வெளிப்படையாக, நேர்மையாக விமர்சிக்கத் தயங்கினர். அப்படி விமர்சனம் செய்வோர் மீது “தேச விரோதி” எனும் முத்திரை விழுந்துவிடுமோ என அஞ்சி, மென்மையான போக்கை கடைபிடித்தனர். இப்படி ஒரு அச்சுறுத்தல் நிலவுவது குறித்து ஞான் தெரபி (Gyan Theraphy) என்ற யூட்யூப் சேனலில் ராகேஷ் வெளிப்படையாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  “Micromax In Note 1 – Please Lets Be Honest…”என்ற தலைப்பில் இருக்கும் அந்த வீடியோ 26.11.2020  அன்று வெளியானது. மைக்ரோமேக்ஸ் போன் பற்றி விமர்சிக்க அஞ்சும் சூழல் நிலவுவதாக அவர் கூறினார்.  ஒரு ஸ்மார்ட்போன் மீதான விமர்சனம் தேசபக்திக்கான அளவுகோலாக எப்படி மாறியது என்பது இக்கால இந்தியாவில் அதிசயம் இல்லைதான். ஆனால், இந்த பக்தர்கள் ஆர்ப்பரிக்கும்படி, அந்த மைக்ரோமேக்ஸ்  ஸ்மார்ட்போன் முழுமையான இந்தியத் தயாரிப்பா?  முழுமையான “மேக் இன் இந்தியா ஸ்மார்ட்போன்” சாத்தியமா?

முதலில், மைக்ரோமேக்ஸ்  நோட் 1  ஸ்மார்ட்போனின் தயாரிப்பு குறித்து பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போன், முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அல்ல. அதாவது, இதன் எல்லா பாகங்களும் இந்திய நிறுவனங்களால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை அல்ல. இந்த ஸ்மார்ட்போனின் மூளையும் இதயமும் ஆன ப்ராசரர் “ஹீலியோ 80 T”, மீடியாடெக் எனும் ஜப்பானிய கம்பெனியால் தயாரிக்கப்பட்டது. ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே தயாரிக்கும் நிறுவனங்கள் ஏதும் இந்தியாவில் இல்லை. இதன் கேமரா  சென்சார், தென்கொரிய நிறுவனமான சாம்சங்கின் தயாரிப்பு என்று மைக்ரோமேக்ஸ் நிறுவன தலைவர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா, “இந்தியாவுக்காக பேசுவோம்” எனும் யூட்யூப் தொடரில், இந்த கேமரா சென்சார்கள் சாம்சங்கின் தயாரிப்பு எனக் கூறினார். ஸ்மார்ட்போனை ஆன்லைனில் விற்பனை செய்யும் ஃப்ளிப்கார்ட் , அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டுக்கு சொந்தமானது. ஃப்ளிப்கார்ட்டின் பெரும்பான்மை பங்குகள் (77%) வால்மார்ட் வசம் உள்ளன. இந்த போனை இயக்கும் மென்பொருளான ஆண்ட்ராய்ட், அமெரிக்க நிறுவனமான கூகுளின் தயாரிப்பு.   மைக்ரோமேக்ஸ் வகை போன்களை விற்க அந்த நிறுவனம் கையாளும் “ஆன்லைன் மட்டும்” விற்பனை உத்தியும் இந்தியா உருவாக்கியது அல்ல. ஒன்ப்ளஸ் மற்றும் ரெட்மீ , கடைகளில் விற்காமல் ஆன்லைனில் மட்டும் விற்றால், கடைக்காரர்கள் மற்றும் ஸ்டாக்கிஸ்டுகளுக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை தவிர்க்க முடியும். இதனால் குறைந்த விலையில் செல்போன்களை விற்கலாம் என்ற வியாபார உத்தியும்கூட, சீனாவின் தயாரிப்பே. இந்த உத்தியால்தான் ரெட்மீ, மைக்ரோமேக்சை சந்தையிலிருந்து காணாமல் போகச் செய்தது. பின்னர், ரியல்மீயும் இதேவகை விற்பனை முறையில் சந்தையில் அதிக சதவீதத்தை கைப்பற்றியது. சாம்சங் போன்ற பெரிய நிறுவனம்கூட, “ஆன்லைன் மட்டும்” என எம் சீரீஸ் போன்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தன. மைக்ரோமேக்ஸ் இப்போதுதான் இந்த விற்பனை உத்திக்கு மாறியிருக்கிறது. சுருங்கச் சொன்னால், இந்தியாவில் தயாரிக்கப்படும் சாம்சங், ரியல்மீ, ரெட்மீ போன்ற அயல்நாட்டு நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கும் மைக்ரோமேக்ஸ்இன் சீரீஸ் போன்களுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இல்லை. ”மேக் இன் இந்தியா” திட்டத்தின்படி இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கி இந்தியாவிலேயே ஸ்மார்ட்போன்களை உற்பத்தி (அசெம்பிள்) செய்யும் ரியல்மீ, ரெட்மீ மற்றும் சாம்சங் போன்களில் எந்த அளவுக்கு இந்தியத்தன்மை இருக்கிறதோ அதே அளவு இந்தியத்தன்மைதான் மைக்ரோமேக்ஸ் போன்களிலும் இருக்கிறது.

சரி, இதெல்லாம் பரவாயில்லை. ஸ்மார்ட்போன் தரமானதாக இருக்கிறதா என்றால் அதிலும் பல ஐயங்கள் இருக்கின்றன. ஸ்மார்ட்போனின் அடிப்படையான தேவையான உறுதித்தன்மையிலேயே குறைபாடு இருக்கிறது. இதை பல டெக் யூடியூபர்கள் விமர்சிக்காத நிலையில், “குப்தா இன்ஃபர்மேஷன் சிஸ்டம்” எனும் யூட்யூபர் இந்த போனை சோதித்துப் பார்த்தார். அந்த சோதனையில், இந்த போன் இரண்டாக உடைந்துவிட்டது. ஆதித்யா டெக் எனும் தமிழ் யூடூப் சேனலும், இந்த போனின் வடிவமைப்பில் குறை இருப்பதாக காட்டியிருந்தார். அவர் வசம் இருந்த ஐந்து செல்போன்களிலுமே பின்புற கவர் சரியாக பொருத்தப்படாத தன்மையோடு இருந்தது தெரிந்தது. இந்த போன்கள் அனைத்துமே, யூட்யூபில் விமர்சனம் செய்ய மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டவை. மேலும் இந்த மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1இன் கேமராவும், இந்த விலையில் இருக்கும் பிற போன்களோடு ஒப்பிடும்போது சொல்லிக்கொள்ளும்படி இல்லை.  உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் ஏதும் கொடுத்ததாக தெரியவில்லை. மாறாக, இந்த போன் குறித்து விமர்சிப்பவர்களை இணையத்தில் ஒரு குழுவினர் தேசவிரோதி எனவும், நாட்டை விட்டு பாகிஸ்தானுக்கு போ எனவும் பேசினர். தேசபக்தியை தூண்டி வியாபாரம் செய்ய நினைத்த மைக்ரோமேக்சின் வியாபார உத்தி (வணிக ராஜதந்திரம்?) பலித்துவிட்டதாகவே தோன்றுகிற்து.

இச்சூழலில், முழுமையாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பது சாத்தியமா எனப் பார்க்கலாம்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டிலும், இப்போதைக்கு முழுமையான ஒரே நாட்டில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போனை தயாரிப்பது சாத்தியம் இல்லை. சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் பிராசசர் (எக்ஸினோஸ்), கேமரா சென்சார் (ஜி.எம் மற்றும் ஜி டபள்யூ சீரீஸ்), மற்றும் உயர்தரமான ஸ்மார்ட்போன் டிஸ்பிளேக்களை தயாரிப்பதால், தென்கொரியாவை மட்டும் விதிவிலக்காககொள்ள வாய்ப்பு உண்டு. ஆனாலும், பிராசசருக்கான வடிவமைப்பு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்தே சாம்சங்குக்கு கிடைக்கிறது. மேலும், சாம்சங்கின் உயர்ரக போன்களில் அமெரிக்காவின் குவால்காம் நிறுவனத் தயாரிப்பான ஸ்னாப்டிராகன் பிராசசரை பயன்படுத்துவதால், “முழுமையாக” ஒரே நாட்டு தயாரிப்பு என அந்த போன்களைக் கூற முடியாது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களை மூன்று பெரிய வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. ஸ்மார்ட்போனின் முக்கியமான பாகங்களை தயாரிப்பதோடு, ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ஈடுபடும் நிறுவங்கள்.
  2. ஸ்மார்ட்போனின் பாகங்களை வாங்கி, அவற்றை அசெம்பிள் மட்டும் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள்.
  3. ஸ்மார்ட்போனுக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்.

இந்த ஒவ்வொரு வகையையும், அவ்வகையில் இந்தியாவின் நிலையையும் பற்றிப் பார்ப்போம். 

  1. ஸ்மார்ட்போனின் முக்கியமான பாகங்களை தயாரிப்பதோடு, ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ஈடுபடும் நிறுவங்கள் :

சாம்சங் , ஹுவாவே மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவங்கள் இந்த வகைமையில் வருபவை. கூட்டாக இந்நிறுவங்களின் ஸ்மார்ட்போன் மொத்த சந்தைப் பங்கு சுமார்  54 சதவீதம் (2019 கணக்கீட்டின்படி).

தென்கொரிய நிறுவனமான சாம்சங்,  எக்சினோஸ் (Exynos) என்ற எஸ்.ஓ.சி. எனப்படும் ஸ்மார்ட்போன் பிராசசரை தாயாரிக்கிறது. ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவையும் சாம்சங்கே தயாரிக்கிறது. ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே சந்தையில் சாம்சங்கின் முதல் இடத்தில் இருக்கிறது.. மேலும், ஸ்மார்ட்போன் கேமராவையும் சாம்சங் தயாரிக்கிறது. உலக அளவில் இந்த மூன்று பாகங்களையும் தயாரிக்கும் ஒரே நிறுவனம் சாம்சங் மட்டுமே. பாகங்களை தயாரிப்பதோடு நில்லாமல், முழுதாக அசம்பிள் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் சந்தையிலும் சாம்சங் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

சீன நிறுவனமான ஹுவாவே, ஸ்மார்ட்போன் பிராசசர்களை தானே தயாரிப்பதோடு, ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் முதல் இரண்டு இடங்களை மாறி மாறி பிடித்து வருகிறது. (இப்போது அமெரிக்கா விதித்திருக்கும் தடையால், இந்த பிராசசர் தயாரிப்பும், ஸ்மார்ட்போன் தயாரிப்பும் பெரிய பிரச்சனையை சந்தித்து வருகின்றன.)

முதல் ஸ்மார்ட்போனை உருவாக்கிய அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், அதன் போனை தானே வடிவமைப்பதோடு,  பிராசசரை தானே தயாரித்துக்கொள்கிறது.

இந்த வகையில் ஒரு இந்திய நிறுவனம்கூட இல்லை. இதை நோக்கி நகரும் எந்த திட்டமும், இலக்கும் பெருநிறுவனங்களிடமோ, மத்திய அரசிடமோ இல்லை.

  1. ஸ்மார்ட்போனின் பாகங்களை வாங்கி, அவற்றை அசெம்பில் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள்.

சீன நிறுவனமான சியாமி, பிபிகே இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இந்த வகையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள். சியாமியின் முக்கிய பிராண்டாக எம்.ஐ. மற்றும்  துணை பிராண்ட்களாக ரெட்மீ, போக்கோ ஆகியவை இருக்கின்றன. பிபிகே இண்டஸ்ட்ரீசின் பிராண்டுகளாக ஒன் ப்ளஸ், விவோ, ஓப்போ,  ரியல்மீ ஆகியவை இருக்கின்றன.

சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இந்த நிறுவனங்களின் வருவாயை நேரடியாக பாதிக்கும்.

இந்தியாவில், லாவா இப்படியானதொரு நிறுவனம். இவர்கள் லாவா என்ற சொந்த பிராண்டில் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்கின்றனர். மேலும், ஆப்பிளின் சில வகையான ஐபோன்கள் லாவாவால் ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

”மேக் இன் இந்தியா” திட்டத்தின்கீழ் சாம்சங் உள்ளிட்ட சில நிறுவங்கள் இந்தியாவில் தம் தொழிற்சாலையை நிறுவி உள்ளன. இவையும் இந்தியாவில் தயாரிக்கப்படும் போன்கள்தான் என்றாலும் இவை வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகளே.

ஸ்மார்ட்போனை அசெம்பிள் செய்து தரும் நிறுவனங்களில் இன்னொரு உட்பிரிவு இருக்கிறது. இந்நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஸ்மாட்போன் தயாரித்து தருபவை. பல சூழல்களில், இவற்றின் பெயரோ, இப்படி ஒரு நிறுவனம் இருப்பதோகூட பல வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது. ஐபோனுக்கு ஒப்பந்த அடிப்படையில் போன் தயாரித்து தரும் ஃபாக்ஸ்கான், ஐபோனுக்கு சில மாடல்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்துத் தரும் லாவா, கர்நாடகாவில் தொழிற்சாலை நடத்தும் தைவானைச் சேர்ந்த விஸ்ட்ரான் போன்ற நிறுவங்கள் இந்த வகைமையில் வரும்.

இந்த வகைமையின் கீழ் உள்ள சாம்சங் போன்ற அயல்நாட்டு நிறுவனங்களை இந்தியாவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனங்களாக கணக்கில் கொள்ள முடியாது. சீனாவில் பிரச்சினை வந்ததும், இந்தியா போன்ற வேறு நாடுகளில் தொழிற்சாலையை தொடங்கியதைப் போல், இந்தியாவில் தயாரிப்பு செலவு உயர்ந்தாலோ, அரசியல், பொருளாதார சூழல்கள் இசைவாக இல்லாவிட்டாலோ, இவர்கள் உடனடியாக இந்திய தொழிற்சாலையைமூடிவிட்டோ அல்லது உற்பத்தியை குறைத்து விட்டோ, வேறு ஒரு மூன்றாம் உலக நாட்டுக்கு தம் தொழிற்சாலைகளை மாற்றிக்கொள்ளும்

அதனால், இந்த வகையில் இயங்கும் பெரிய இந்திய நிறுவனமாக லாவாவை மட்டுமே கணக்கில்கொள்ள முடியும்.

  1. ஸ்மார்ட்போனுக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்.

ஸ்மார்ட்போனுக்கான பிராசசரை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான குவால்காம், ஜப்பானிய நிறுவனமான மீடியாடெக், டிஸ்ப்ளே உடையாத வகையில் பாதுகாக்கும் வலுவான கண்ணாடியான கொரில்லா கிளாஸை தயாரிக்கும் கார்னிங் , ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் முன்னணியில் இருக்கும் சாம்சங் மற்றும் பிஓஈ (BOE), ஸ்மார்ட்போன் கேமரா சந்தையின் முன்னணியில் இருக்கும் சோனி , சாம்சங்போன்ற நிறுவனங்கள் இந்த வகைமையில் வருவன.

ஸ்மார்ட்போன் சந்தைகள் எப்படி மாறினாலும் இந்நிறுவன தயாரிப்புகளின் தேவை இருந்துகொண்டே இருக்கும். இவர்கள், ஸ்மார்ட்போன் வடிவமைப்பின் தரத்தை உயர்த்திக்கொண்டே செல்வதால், ஸ்மார்ட்போன் வடிவமைப்பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக  இருக்கின்றனர்.

அதிவேகமான பிராசசர்கள், அதிக மெகாபிக்சல் கொண்ட கேமராக்கள், அதிக வலுகொண்ட கொரில்லா க்ளாஸ்கள் என இந்நிறுவனங்கள் ஸ்மார்ட்போனின் தரத்தையும், வாடிக்கையாளர்களின் தேவையையும் உயர்த்திக்கொண்டே செல்கின்றன.

ஒப்பீட்டளவில், முதல் இரண்டு வகை நிறுவனங்களைவிட இவை அதிக நிலைத்தன்மை கொண்டவை. இந்நிறுவனங்களை உருவாக்க ஆராய்ச்சி (ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ), தொழிற்சாலைகள் , விற்பனைக்கான சிறப்பு அனுபவம் ஆகியவை தேவைப்படுகின்றன.

இந்த பாகங்களை தயாரிக்கும் நிறுவங்களின் நிலைத்தன்மைக்கும், முதல் இரண்டு வகை நிறுவனங்களின் நிலையற்ற தன்மைக்கும் உதாரணமாக சோனியின் கேமரா மற்றும் ஸ்மார்ட்போன் பிரிவுகளைக் கூறலாம்

சோனியில் பல தொழிற்பிரிவுகளில், ஸ்மார்ட்போன் பிரிவும், ஸ்மார்ட்போன் கேமரா பிரிவும் இருக்கின்றன. முழுமையாக உருவாக்கப்படும் சோனி ஸ்மார்ட்போனின் சந்தைப் பங்கு ஒரு சதவீதத்துக்கும் கீழே சென்றது. தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவையே மூடும் நிலைக்கு சோனி தள்ளப்பட்டது. இதற்கு எதிர்மாறாக, சோனியின் ஸ்மார்ட்போன் கேமரா சென்சார் உற்பத்தி செய்யும் பிரிவு பெரிய வளர்ச்சி அடைந்தது. 48 மெகாபிசல், 64 மெகாபிக்சல் , 108 மெகாபிக்சல் என ஸ்மார்ட்போன் கேமராவின் மெகாபிசல் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுக்கொண்டே சென்றதும், கேமராக்களின் எண்ணிக்கை இரண்டாகி மூன்றாகி இப்போது நான்காக இருப்பதும், இத்தகைய அதிக மெகாபிசல் மற்றும் அதிக எண்ணிக்கையிலான கேமரா போன்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதும்,  சோனியின் இந்த உற்பத்திப் பிரிவு வளரக் காரணங்களாக இருக்கின்றன. எனவே, ஸ்மார்ட்போன் தயாரிப்பின் முதல் இருவகை நிறுவங்களைவிட, இந்த மூலப்பொருள் /  பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் நல்ல லாபத்தோடு நீண்ட நாட்கள் செயல்பட  வாய்ப்பு அதிகம்.

இந்தப் பிரிவில் இந்தியா முதல் அடி எடுத்து வைக்கும் முன், பிற நாட்டு நிறுவங்கள் இன்னும் பல அடிகள் முன்னேறிச் சென்று இருப்பார்கள் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

உண்மையான கள நிலவரம் இப்படி இருக்கிறது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆராய்ச்சி (Research & Development), அடிப்படை பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வசதி, உள்நாட்டிலேயே ஸ்மார்போனை அசெம்பில் செய்ய தொழில்நுட்ப வசதி கொண்ட நிறுவங்களை உருவாக்குவது, இதற்குத் தேவையான கொள்கை முடிவுகள், நீண்டகால செயல் திட்டம் (Roadmap), இத்துறையில் உற்பத்தியில் முனைப்புடன் செயல்பட விருப்பமுள்ள தொழில்முனைவோர் போன்ற காரணிகள் ஒருங்கிணைந்து செயல்பட்ட்டால், இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது 2040இல்)  முழுமையாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்க முடியும். இதற்கு தொலைநோக்குடன் கூடிய செயல்திட்டம், ஒருங்கிணைந்த உற்பத்திக்கான உள்கட்டமைப்புகள் மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஆகியவை தேவை. அதை நோக்கி தொழில் முனைவோரும், அரசும் ஒருங்கிணைந்து  தீவிரமாக செயலாற்ற வேண்டும்.  அதைவிடுத்து, வெற்று அரசியல் கோஷங்களை எழுப்பவதையும், விளம்பர “பஞ்ச் டயலாக்குகளை” பேசி மக்களின் ஆராய்ந்து வாங்கும் உணர்வை தேசபக்தியின் பெயரால் மழுங்கடிப்பதையும் மட்டுமே செய்து வந்தால், “மேட் இன் இந்தியா” ஸ்மார்ட்போன் கனவு, பகல் கனவாகவே தொடரும்.

 

Total Page Visits: 192 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *