மோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்

இம்மாத கேரவன் ஆங்கில இதழில், இந்தியாவில் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் எவ்வாறு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது என்பதையும், இந்த ஊடகங்களின் செய்தி அறைகளில் மோடி அரசின் ஆதிக்கத்தின்கீழ் எப்படி செய்திகள் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் விரிவான அலசல் கட்டுரைகள் வந்துள்ளன. அதில் தமிழகத்தைப் பற்றி வந்துள்ள கட்டுரையில் நிறைய விவரங்கள் அடங்கியுள்ளது!

90-க்கு முன்பு பிராமணமயமாக இருந்த ஊடகத்துறை, அதன்பின் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து கிராமத்திலிருந்து வந்த அறிவுஜீவிகளால், எப்படி மாற்றம் பெற்றது என்பது பற்றியும், நகரங்களையே சுற்றிவந்த ஊடகங்கள் எப்படி கிராமங்களையும் ஏறெடுத்துப் பார்க்கத் துவங்கியது என்பது பற்றியும் விவரித்துள்ளன. இதற்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் இருந்து வந்தவர்கள் காரணம் என்பதைப் பற்றியும், இவர்களின் முற்போக்கு கருத்துகள் மற்றும் பெரியாரிச அம்பேத்கரிய கருத்துக்களின் தாக்கத்தால், கடந்தகால ஊடகங்களின் உள்ளடக்கத்தில் இருந்து எத்தகைய மாற்றங்களை கொண்டுவந்தார்கள் என்பதைப் பற்றியும் விரிவாக குறிப்பிட்டுள்ளது. அரசியல்ரீதியாக கருத்து கேட்க வேண்டுமென்றால், துக்ளக் சோவிடம்தான் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி, பலரும் இன்று கருத்து சொல்வதில் பங்கு பெறும் நிலை ஏற்பட்டதையும் விவரிக்கிறது. பிற்பட்ட பிரிவிலிருந்து வந்தவர்கள் ஊடகங்களை துவக்கினாலும், அடிப்படையில் பெரிய மாற்றமில்லாமல், ராசிபலன் தொடங்கி பல மதங்களின் வழிபாட்டு முறை உட்பட, மூடநம்பிக்கைகளை பரப்புவதில் மாற்றமின்றி அப்படியே தொடர்ந்தனர் என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

செய்தி அறைகளில் மோடி பற்றிய செய்தியை எத்தனைமுறை ஒளிபரப்ப வேண்டும், எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பது உட்பட சொல்லித்தரப்படுகிறது என்பது பற்றியும், இதற்கு மாநில அளவில் செயல்படும் ஊடகங்கள் மட்டுமல்ல, தில்லியில் செயல்படும் பெரும்பாலான ஊடகங்களும் மோடி அரசின் மிரட்டலுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது பற்றியும், எமர்ஜென்சி காலத்தை எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரசும் இதில் அடங்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தி ஊடகங்களுக்கு விளம்பரம் தந்து எப்படி மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது என்பதையும் விவரமாக தந்துள்ளன? தினமும் ஏழெட்டு, பத்திரிகைகள் ஆங்கிலம் உட்பட, படிக்கிறவர்களுக்கு தெரியும், மோடி தொடர்பான செய்திகள், அரசு தொடர்பான செய்திகள், அரசுக்கு எதிரான செய்திகள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும். அது என் அனுபவமும்கூட!

முடிவாக அந்த கேரவன் ஆசிரியர் கூறும் கருத்து இதுதான். மோடி அரசு நான்காவது தூணான செய்தித்துறையை மட்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை, நீதித்துறையையும்கூட தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. மேலும், நாடாளுமன்ற ஜனநாயகங்களுக்கு எந்த மதிப்பும் அளிப்பதில்லை. அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்ட மோடி அரசு ஒரு சர்வாதிகார அரசாக மாறிவருகிறது. பெருமுதலாளிகளின் ஏவலாளாக மாறிவிட்ட மோடி தனது எஜமானர்களை திருப்திப்படுத்துவதே தன்னுடைய பெருங்கடமையாக ஆக்கிக் கொண்டுள்ளார். அவர் கொண்டுவரும் ஒவ்வொரு சட்டமும் முதலாளிகளின் பாசறையிலிருந்து வருவதுதான், இது தெரிந்த செய்திதானே என்று பலர் கூறலாம். ஆனால் தில்லியிலிருந்து வரும் ஆங்கில இதழில் இவ்வளவு விவரமாக ஆதாரங்களுடன் வந்திருப்பதும், அது உலகம் முழுவதும் பரவலாக ஏற்படுத்தும் தாக்கத்தையும் கணக்கிட்டால் அதன் பெறுமானம் புரியும்!

டிவி சீரியல் நடிகையின் தற்கொலையை புலனாய்வு செய்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள். தில்லியில் கடந்த இருபது நாட்களாக நடைபெறும், வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத பிரம்மாண்டமான அமைதிவழி போராட்டங்களைப் பற்றியோ அல்லது அதில் ஆண்-பெண் உட்பட அனைத்து வயது பிரிவினரும் பங்கேற்ற வரலாறு காணாத நிலை பற்றியோ எந்த அளவுக்கு புலனாய்வு செய்து எழுதுகின்றன என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. வெறும் அரிப்புக்கும், பரபரப்புக்கும், அடுத்தவன் வீட்டை எட்டிப்பார்த்து மகிழும் அசிங்கத்தையும் செய்திகளாக்கி மக்களை விழிப்படைய வைக்காமல் மயக்கத்தில் ஆழ்த்துவதிலேயே ஊடகங்கள் குறியாய் இருப்பதற்கும், மோடி அரசின் நடவடிக்கையே காரணம்?

நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்பதைவிட, இந்த தேசத்தின் பெருமுதலாளிகளுக்கு எதிரானது என்பதுதான், இந்த போராட்டத்தின் முக்கிய அம்சமே. தங்கள் எதிரிகள் யார் என்பதை தெரிந்து போராடும் அவர்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பதால்தான், தினமும் பாமர மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடிக்கு, கொல்லும் பனியிலும் தளராத உறுதியுடன் போராடும் விவசாயிகளை சந்திக்கும் தைரியம் வரவில்லை. குறைந்தபட்சம் விவசாய பிரதிநிதிகளை சந்திக்க்க்கூட அவர் தயாராக இல்லை. மோடியின் எஜமானர்களான பெருமுதலாளிகளின் கண்ணசைவின்றி மோடி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். அரசுக்கு எதிராக மட்டுமல்ல, அதையும் தாண்டி தங்களுக்கு எதிரான போராட்டமாக விவசாயிகள் போராட்டம் மாறிவிட்டதால், இதை அனுமதிப்பதென்பது தங்களின் இருப்பையே பாதிக்கும் என்பதனால் அவ்வளவு சுலபமாக பெருமுதலாளிகள் இறங்கிவர மாட்டார்கள்? அதனால்தான் போராட்டத்தின் கோரிக்கை தெளிவாக தெரிந்திருந்தும், விவசாயிகளின் மன உறுதியை குலைக்கும் வகையில் அத்தனை தில்லுமுல்லு வேலைகளிலும் கூச்சமின்றி மத்திய அரசு ஈடுபடுகிறது. தனது ஆதரவு சங்கங்களை தூண்டிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு தடைகளையும், எதிர்ப்பையும் தாண்டி இருபது நாட்களாக நீடிக்கும் இந்த அறப்போராட்டம் தன்னிகரில்லா புகழுடையது.

எனினும், இந்தப் போராட்டம் நீடிப்பதும், வெற்றி பெறுவதும் இனி நாடு முழுவதும் உள்ள அனைத்து உழைப்பாளி மக்களின் எழுச்சியைப் பொறுத்தது? அதை அனைத்து அமைப்புகளும் சேர்ந்து உருவாக்குமா என்பது கோடி ரூபாய் கேள்விதான்? எனினும் அரசின் ஆணிவேராக இருந்து ஆட்டிப்படைக்கும் பெருமுதலாளிகளின் குடுமியை பிடித்து ஆட்டிப்படைத்த பெருமைக்குரிய போராட்டக்காரர்களின் சாதனையை வரலாறு குறைத்து மதிப்பிடாது!

  • வெண் மன்னர்
Total Page Visits: 471 - Today Page Visits: 2