பசுமை தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதன்: தமிழகத்தின் மீது தொங்கும் கத்தி – பேரா.மருதமுத்து

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர்குழு உறுப்பினராக, ஓய்வுபெற்ற தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கார். இவருக்கான மாத சம்பளம் 2,25,000 ரூபாய். 

கடந்த 2016, டிசம்பர் 5ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். அதையடுத்து 2016, டிசம்பர் 22ம் தேதி கிரிஜா வைத்தியநாதன் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அவரை நியமித்தவர் அன்றைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவ்வாறு நியமிக்க ரகசிய ஆணை பிறப்பித்து நெருக்கியது பாஜக மேலிடம். இது குறித்து, 2016-டிசம்பர் 22ம் தேதி விகடன்.காம் வலைதளம், “யார் இந்த கிரிஜா வைத்தியநாதன்? தலைமைச் செயலாளரானது எப்படி?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. Published:22 Dec 2016 4 PM Updated:22 Dec 2016 4 PM

மேலும், “டெல்லியிலிருந்து பிறப்பிக்கப்பட்ட ரகசிய உத்தரவின் பேரில் கிரிஜா வைத்தியநாதன், தலைமைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.” “கிரிஜா வைத்தியநாதன் நியமன பின்னணியில் அ.தி.மு.க.வில் அதிகார மையத்துக்கு வரத்துடிக்கும் சிலருக்கு ‘செக்’ வைக்கப்பட்டு இருப்பதை உணரலாம,.” என்கிறது அந்த செய்திக்குறிப்பு. ஓபிஎஸ் ஆரம்பம் முதலே பாஜகவின் கைப்பாவைதான் என்பதால் இந்த நியமனம் நடந்துள்ளது. இதன் மூலம் ஈபிஎஸ் முதல்வரான பின்னும் அவரால் ரொம்ப முண்ட முடியாத நிலைதான் இருந்து வந்துள்ளது. கிரிஜா மூலம் பழனிச்சாமி பாஜகவின் கைதி நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பது  2018ல் அப்பட்டமாக வெளிப்பட்டது.

என்ன நடந்தது அப்போது?

எஸ்.வி.சேகர் என்று ஒரு இந்துத்துவா பார்ப்பனிய வெறியர் உள்ளார். இவர் ஓயாமல் வர்ணதர்ம வக்கிரங்களை ஆவேசமான சொற்களில் அன்றாடம் பரப்பி வருபவர். தனது நம்பிக்கையை இவர் மறைப்பதே இல்லை. தமிழ்.ஏசியாநெட்நியூஸ்.காம் 27 June 2017 ரிப்போர்ட்டில் நண்பர் சுபவீ, இந்த சேகரின் நிலைப்பாட்டை எடுத்துக் காட்டியுள்ளார்: “தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் குறித்து, நடிகர் எல்.வி.சேகர், நேற்று முகநூலில் ஒரு  காணொளியை வெளியிட்டு இருந்தார். “சாதியும் மதமும் நமக்குத் தாய், தந்தை போல” என்று கூறியுள்ளதோடு, “ஒவ்வொருத்தரும் தங்கள் சாதியை… உசத்திப் பேசுங்க. அதிலே தப்பில்லை” என்றும் நீங்கள் காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள். எங்களை இழிவுபடுத்தும் சாதி உங்களுக்குத் தாய்போலத் தெரிகிறதா.” இவ்வாறு சுபவீ இந்த சேகரின் சாதிவெறியைக் கண்டித்தார். இத்தகைய வர்ணதர்மச் செருக்குகொண்ட பாஜக புள்ளி சேகரின் சொந்த அண்ணன் மனைவி (அண்ணி)தான் பாஜக மேலிடத்தால் அதிமுக மீது சுமத்தப்பட்ட தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்.  இவர் ஊழல் கறையே படியாத நேர்மையாளர் என்று பறைசாற்றப்பட்டது. கமல் போற்றும் சூரப்பாக்கள் போல. இத்தகைய மேல்சாதியினர் எல்லோரும் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வதில் வல்லவர்கள் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஆனால் அரசியல் களத்தில் இவர்கள் யோக்கியதை வெளிப்பட்டே தீரும்.

2018ல் இப்படி வெளிப்பட்டது. அப்போது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டி கொஞ்சினார். இது பரவலாகக் கண்டிக்கப்பட்டபோது, சேகர் பெண்களை இழிவு செய்யும் விதத்தில் கருத்து வெளியிட்டு மாட்டிக்கொண்டார். அவரைக் கைது செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க அஞ்சியது. ஏனென்றால் சேகர் தலைமைச் செயலரின் மைத்துனர். தலைமைச் செயலர் கிரிஜா, இந்துத்துவா மேலிடத்தின் ஆள். சேகரும் அப்படியே. இந்நிலையில், திராவிட பாரம்பரியத்தின் தொடர்ச்சியே அற்றுப்போன நிலையில் அதிமுக முதல்வர் தனிமையில் அழுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

இதை குத்திக்காட்டும் விதத்தில் இந்த ஆண்டு ஆகஸ்டில், சேகர் உதிர்த்த வார்த்தைகள்: “அதிமுக உருப்பட வேண்டுமென்றால் அதன் கொடியிலிருந்து அண்ணா படத்தை நீக்கிவிட வேண்டும்” என்பது. இவ்வளவு வர்ணத் திமிர்பிடித்த ஆதிக்கவாதி 2018ல் தான் கைது செய்யப்படலாம் என்று பயந்து பதுங்கிக் கிடந்தது யார் வீட்டில் தெரியுமா?  அரசு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த தம் அண்ணியார் கிரிஜா வீட்டில்!! உடனே கமல் போன்றோர் என்ன சொல்வார்கள்? “இதெல்லாம் பிரச்சினையே இல்லை. எங்களவர் கிரிஜா அப்பழுக்கற்ற, ஊழலற்ற நேர்மையாளர், இவர் போன்றோரின் உதவியோடுதான் எங்கள் மய்யம் தமிழகத்தை சீரமைக்கப் போகிறது” என்று.

இந்த கிரிஜா டெல்லிக்கும் தமிழகத்திற்கும் இடையில் ஒரு பாலமாக இருப்பார் என்று கூறப்பட்டு வந்தது. பாலமாக இருந்தது உண்மை. ஆனால், அது ஒருவழிப் பாலம்!

இதுவும் 2018ம் ஆண்டிலேயே நிரூபணம் ஆனது.  வேதாந்தா என்ற உலகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையின் மாசு உற்பத்தியும், மக்கள் உயிரிழப்பும் அனைவரும் அறிந்ததே. தூத்துக்குடி போராட்டம், துப்பாக்கிச் சூடு, சாவுகள் எல்லாவற்றையும் நாம் பார்த்துவிட்டோம். அப்போது அதிமுக அரசு செயலிழந்து கிடக்குமாறு செய்ததில் கிரிஜாவின் முக்கியப் பங்கு இருந்தது.

2018-மே 23-ம் தேதிய, நியூஸ்லாண்டரி.காம் தரும் இந்த செய்தித் தலைப்பே இதை விளக்கும்: ‘மாசுபாட்டை நீக்கி மக்களைக் காப்பதா? அல்லது கார்ப்பரேட் கொள்ளைக்குத் துணைபோவதா? ‘வேதாந்தா அதிபர் பாஜக பெரும் தலைகளுக்கு நெருக்கமானவர். அவரது ஸ்டெர்லைட் ஆலையைப் பாதுகாக்கும் வேலையை அதிமுக அரசு செய்து வருகிறது.’

மேலும் இந்த கட்டுரையில்: அந்த நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமார், “மாநில அரசு இந்த ஆலையைத் திறப்பதில் ஈடுபாடு காட்டவில்லை. ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் இதற்கான ஒப்புதலை இதுவரை தரவில்லை.” என்று ஒரு விசித்திரமான அறிவிப்பை வெளிட்டுள்ளார். இதில் என்ன மர்மம் உள்ளது என்றால், “நாங்கள் இந்த ஆலையைத் திறக்க ஆர்வமாக இல்லையென்றாலும் வேதாந்தா முதலாளி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதி பெற்றுவிட்டால் நாங்கள் என்ன செய்யமுடியும்? திறந்துதானே தீரவேண்டும்?” என்பதைத்தான் மறைமுகமாகச் சொல்கிறார் அமைச்சர்.

இப்போது நிகழ்காலத்திற்கு வாருவோம்.

கடந்த டிசம்பர் 16, 2020  மாலைமலர் தரும் செய்தி: தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினராக, ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனம்.

நியமித்துள்ளது யார்?

செய்தி கூறுகிறது;

“மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கான துறையினுடைய பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை இவர்களை நியமனம் செய்துள்ளது. இவர்களது பணிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும்.” ஒரே வார்த்தையில் சொன்னால், மோடி அரசுதான் ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் கிரிஜாவை பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக நியமித்துள்ளது.

முதலில் தமிழகத்துக்குள் பயங்கர அபாயகரமான கூடங்குளம் அணு உலையை நுழைத்தார்கள். இப்போது வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை சட்டப்படி தொடர்ந்து நடக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கு கிரீன் சிக்னல் காட்டுவதற்காகத்தான் கிரிஜா வைத்தியநாதனுக்கு பொறுப்பு தரப்பட்டுள்ளது.

எத்தனைபேர் செத்தாலும் விவசாயம் வேட்டைக்காடாக மாற்றப்படும் என்பது மோடியின் வாக்குறுதி. அதுபோலவே ஸ்டெர்லைட் காரணமாக, தென்தமிழகத்தில் புற்றுநோய் என்றும் வேறு நோய்கள் என்றும் எத்தனை உயிர்கள் போனாலும், சுற்றுச்சூழல் அழிந்தாலும் கார்ப்பரேட் கொள்ளை தமிழகத்தில் நடந்தே தீரும் என்கிறார் பிரதமர்.

இதுதான் கிரிஜா நியமனம் நமக்கு உணர்த்தும் மெய்ப்பொருள்.

ஊழலை ஒழிக்கத் துடிக்கும் நாயகர்கள் மறைக்கும் மறைபொருள்.

  • பேரா.மருதமுத்து
Total Page Visits: 185 - Today Page Visits: 1