டெல்லி விவசாயிகள் போராட்டம்- பிஜேபி-இந்துத்துவ அரசியல் தோல்வியின் தொடக்கம்!

டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் இரண்டாவது வாரத்தையும் கடந்து, மூன்றாவது வாரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 6 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் பாரத் பந்தை நடத்தி முடித்துள்ளன. இந்த பந்தின்போது அரசியல் கட்சிகள் தங்களது பதாகையையும், கொடிகளையும் பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். அதேபோல, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை, விவசாயிகள் மேடையில் பேச அனுமதிக்கவில்லை. அந்தளவுக்கு விவசாயிகள் இந்த போராட்டத்தை அரசியல் கலக்காமல் செய்ய விரும்புகிறார்கள்.    

இந்நிலையில், இந்த விவசாயிகள் போராட்டத்தை, மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் அண்ணா ஹசாரே தலைமையில் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்துடன் சிலர் ஒப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. அடிப்படையிலேயே இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. ஹசாரேவின் இயக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டது. அந்த இயக்கத்திற்கு பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு இருந்தது. மேலும், ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியும் ஹசாரேவின் இயக்கத்திற்கு பின்னால் இருந்தது என்பதும் இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் முக்கிய வீர்ர்களாக கருதப்பட்ட கிரண் பேடியும் பாபா ராம்தேவும் பின்னர் பிஜேபியின் பிரதிநிதியாகிவிட்டனர். இந்த இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாத் பூசண், ஆர்எஸ்எஸ் மீதான தனது ஈடுபாட்டை சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். மற்றொரு நிறுவனரான அரவிந்த் கொஜ்ரிவால் தனது மிதவாத இந்துத்துவ கட்சியான ஆம் ஆத்மியை தொடங்கியவுடன், ஹசாரேவின் போராட்டம் ஒரு மக்கள் இயக்கமல்ல, அது ஒரு திரைமறைவு அரசியல் என்பது அம்பலமானது.

ஆனால் தற்போது டெல்லியில் நடைபெறும் போராட்டம் அரசியல் பின்னணியில்லாத விவசாயிகள் இயக்கம். இது விவசாய சமூகத்தின் நலன்களால் மட்டுமே இயக்கப்படுகிறது. இது ஒரு காங்கிரஸின் சதித்திட்டம் என்றும், சில விவசாய சங்கங்களுக்கு இடதுசாரி தொடர்பு இருப்பதாகவும் பிஜேபி குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு களம் அமைத்துக் கொடுத்தது பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் என்றும், ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணிக்கு கிடைத்த விவசாயிகளின் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் சுட்டிக்காட்டி, இந்த போராட்டத்திற்கு பின்னணியில் காங்கிரஸ் இருப்பது போன்ற ஒரு கற்பனையை பிஜேபி உருவாக்குகிறது. ஆனால், இந்த உழவர்கள் இயக்கம் விவசாயிகளின் வலிமையின் அடிப்படையில் உருவாகியுள்ளது. அவர்கள் எந்த அரசியல் தலையீட்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், இந்த இயக்கத்தை வழிநடத்த ஹசாரே போன்று ஒரு தனிநபரும் இல்லை. அத்துடன், இயக்கத்தின் கட்டுப்பாடு ஒரு பரந்த அடிப்படையிலான கூட்டுத் தலைமையின் கைகளில் உறுதியாக உள்ளது. இந்த இயக்கம் சக்திவாய்ந்த கார்ப்பரேட் லாபியால் முடுக்கிவிடப்படவும் இல்லை. அதற்கு மாறாக, கார்ப்பரேட்களின் நலன்களுக்கு எதிரானது. ஆகவே, ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் அல்லது வேறு எந்த போராட்டத்துடனும் இந்த உழவர் கிளர்ச்சியை ஒப்பிடுவது போலித்தனமானது.

இந்தியா சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகளாக ஒரு தேசிய அரசாங்கத்தின் கீழ் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், நாடு முழுவதிலும் மெள்ளமெள்ள லஞ்சம் மற்றும் ஊழல் மலிந்துவிட்டது. முதல்வர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள் துவங்கி கிராம நிர்வாக அலுவலர்கள் வரை ஊழலும் லஞ்சமும் சர்வசாதாரணமாகிவிட்டன. அதைக்கண்டு இந்திய நடுத்தரவர்க்க மக்கள் மனம் நொந்துபோய் இருந்தனர். அதனால், நடுத்தர வர்க்க மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்தது மட்டுமல்லாமல், அவர்கள் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழந்துபோனார்கள். இந்த சூழ்நிலையை ஆர்எஸ்எஸ் பயன்படுத்திக்கொண்டு, அரசியல் சார்பற்றவர்போல தோன்றிய அன்னா ஹசாரே, கிரண்பேடி போன்றவர்களை களத்தில் இறக்கியது. ஊடகங்களுக்குள் பதுங்கியிருந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் லஞ்ச-ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை ஊதிப்பெருக்க வைத்தனர்.  இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிந்தைய 70 ஆண்டுகளில், பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சியில் இருந்ததால், நாட்டின் சீரழிவிற்கு காங்கிரஸ் கட்சியையே முழுப்பெறுப்பாக்கின ஊடகங்கள்.

இந்த ஊடக பிரச்சார வெளிச்சத்தில் இருந்து, “70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சீரழிவுகள்” என்ற சுலோகத்தை பிஜேபி உருவாக்கியது. இந்த சுலோகத்தை மோடி இன்றுவரை விடாமல் உச்சரித்து வருகிறார்.  அதேசமயம், காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்தி, நாட்டை தலைகீழாக மாற்றப்போவதாக சவால்விட்டு ஆட்சிக்கு வந்த பிஜேபி, தங்களது அரசு  கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிர்ப்பு எழுகிற போதெல்லாம், இவை காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்கள். இவற்றை நாங்கள் நிறைவேற்றுகிறோம் அவ்வளவுதான் என்று சாக்குபோக்கு சொல்கிறது. தற்போது எதிர்ப்புக்குள்ளாகி இருக்கும் 3 வேளாண் மாசோதாக்களும்கூட காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தாயாரானவைதான் என்று சொல்ல ஆரம்பித்துள்ளது பிஜேபி.

மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், பிஜேபி அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் பெரும்பாலும் மக்களின் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருப்பதால், ஆர்எஸ்எஸின் சகல இந்துத்துவ விருப்பங்களையும் மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. மதசார்பின்மை, சமூகநீதி, சோசலிசப் பார்வை மற்றும் ஜனநாயகம் ஆகிய நவீன இந்தியாவின் அனைத்து அடிப்படை சிந்தனைகளுக்கும் எதிராக செயல்படுகிறது. இவை அனைத்தையும் இந்து பெரும்பான்மை என்னும் போர்வையில் செய்து வருகிறது.

இதுவரை, காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து, புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்பு, ஓபிசி இடஓதுக்கீடு குறைப்பு ஆகிய மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் பெரிய அளவில் போராடினார்கள். ஆனால், அந்த போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் அனைவரும், வெவ்வேறு மக்கள் தொகுதியினராக இருந்தாலும், ஏதோ ஒருவகையில் பிஜேபிக்கும் இந்துத்துவ கொள்கைக்கும் எதிரானவர்கள். மேலும் அவர்கள், பெரும்பாலும் பிஜேபிக்கு  எதிராக வாக்களித்தவர்கள். வருங்காலத்திலும் பிஜேபிக்கு எதிராக வாக்களிக்க கூடியவர்கள். ஆனால், இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கும் வடமாநில விவசாயிகளில் ஒரு பகுதியினர் ஏற்கனவே பிஜேபிக்கு வாக்களித்திருக்க கூடியவர்கள். எதிர்காலத்திலும் பிஜேபிக்கு வாக்களிக்கும் வாய்ப்புள்ளவர்கள். இவர்களுடன் பிஜேபிக்கு ஏற்பட்டு இருக்கும் முரண்பாடும் பகையும் பிஜேபியின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியது, பிஜேபியின் வெற்றிப் பயணத்தை தடுக்கக்கூடியது,

உண்மையில், அரசியல் கலக்காத இந்த விவசாயிகள் போரட்டம், பிஜேபி-இந்துத்துவ அரசியல் தோல்வியின் தொடக்கமாகும்.

  • ராகுல் யோகி
Total Page Visits: 81 - Today Page Visits: 1