கமலின் மய்ய அரசியல்- ஒரு மோசடி! -பேரா.மருதமுத்து

கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி இந்துதமிழ்.இன் வலைதளத்தில் வந்த நேர்காணலில், கமலிடம் கேட்கப்பட்ட கேள்வி: “நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிக்கப்படுமா?”என்பது. அதற்கு கமல் : “ஆட்சிக்கு வந்தால் அரசு மது விற்பனை செய்யாது. மது விற்பனை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மதுவை ஒழித்தால் கள்ளச்சாராயம் வளரும்.” என்று பதிலளித்திருக்கிறார். இதன் மூலம், என்னதான் முயன்றாலும் குடிப் பழக்கத்தை ஒழித்து விடமுடியாது என்று கமல் ஒப்புக்கொள்கிறார்.

கமலிடம் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வி; “ஊழலை ஒழிக்க முடியுமா?” என்பது. அதற்கு கமல்; “ஊழல் ஒழிப்பு தனி மனிதனால் செய்ய முடியாது. மக்களின் ஒத்துழைப்போடு நிச்சயம் ஊழலை ஒழிக்க முடியும்.” என்று, ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளிக்கும் அவர்,. உடனே அதிலிருந்து வழுக்குகிறார்.

குடி குடியை மட்டுமே கெடுக்கும். ஊழலோ நாடு முழுவதையும் நீண்ட காலமாகக் கெடுத்து வருகிறது. குடிப்பதற்கு முடிவு கட்ட முடியாது என்கிறார் கமல். ஆனால் அதை விடக் கொடியதான ஊழல் நோயை மக்கள் ஒத்துழைப்போடு அகற்றிவிட முடியும் என்கிறார். இவர் முதல்வர் ஆனால், என்ன சொல்வார்? “கமல் என்ற தனிமனிதனால் முடியாது என்று முன்பே சொன்னேனே? மக்களாகிய நீங்கள் இன்னும் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் தான் ஊழல் தொடர்கிறது,” என்பார். ஏற்கனவே நம் முதல்வரும், பிரதமர் மோடியும் கொரோனா பரவும்போதெல்லாம் மக்களே முழுப் பொறுப்பு என்று கூறி தப்பித்துக் கொள்ள முயல்வது போலத்தான் நாளை கமல் முதல்வர் ஆனாலும் நழுவார்..

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஒருவேளை இவர் ஆட்சிக்கு வந்ததால், மக்கள் ஒத்துழைப்பு இல்லாமலே, அரசு உத்தரவு மூலம் மது விற்பனையைத் தனியாரிடம் (பெரிய முதலாளிகளிடம்) ஒப்படைத்து விடுவார்.தனித்தோ, கூட்டணியாகவோ பதவியில் அமர்ந்து விட்டால் இது நிச்சயம் நடக்கப் போகிறது என்று இப்போதே சொல்லிவிட்டார் கமல்.

தமிழகத்தில் வெகு காலமாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மது விற்பனையை அரசு மேற்கொண்டு கணிசமான வருமானம் ஈட்டிவருகிறது. தனியாரிடம் ஒப்படைப்பதாலும் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டேதான் இருப்பார்கள் என்று கமலே ஒப்புக்கொள்கிறார். அப்படியானால் இதில் என்ன மாற்றம் ஏற்படும்? அரசின் வருமான இழப்பு மட்டுமே விளைவாக இருக்கும். அப்படியானால் இதுவரை திமுக, அதிமுக அரசுகள் போட்டிபோட்டுக்கொண்டு நடைமுறைப் படுத்தி வந்த மக்கள் நலத் திட்டங்கள் என்ன ஆவது? மக்கள் பெற்றுவந்த பொருள்களும், சேவைகளும் என்ன ஆவது? “அதெல்லாம் மக்களைக் கெடுக்கும் இலவசங்கள். அவை ஒழிக்கப் படவேண்டும்,” என்கிறார் கமல்.

2019- நவம்பர்-9-ஆம் தேதி, தினமலர் செய்தியில்: ”தமிழகத்தில் இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்து விட்டனர். அதை நான் தடுத்தால், ‘கிடைப்பதை தடுக்கிறானே’ என மக்கள் கோபப்படுவர்” என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் பேசினார்.” என்று பரமகுடியில் கமல் போசியது வெளிவந்துள்ளது.  இவர் மக்களை இழிவு படுத்தும் விதத்தில் இலவசத் திட்டங்கள் பற்றிப் பேசியுள்ளார். உண்மையில் இலவசத் திட்டம் என்று சொல்வதே தவறு. அது மக்கள் நலத் திட்டமே. இது பற்றிய புரிதலே இல்லாமல் கமல் ஆணவத்தோடு நாவடக்கமின்றித் தாக்குதல் தொடுத்தார்.

2018- நவம்பர் 13-ஆம் தேதி, மாலைமலரில்; “பிச்சைக்காரர்களுக்குதான் இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.” அதிமுக தனது கண்டன அறிக்கையின் முடிவில்; “தாங்கள் அமைத்த அரசாங்கத்திடமிருந்து நலத் திட்டங்களை பெறுபவர்கள் ஆட்சி அதிகாரத்தின் பங்காளர்களே தவிர, அவர்கள் கையேந்திகள் அல்ல என்பதை கருத்துக் குருடர் கமல்ஹாசன் உணர்ந்து கொள்வது உத்தமம்.” என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் தலைசிறந்த மக்கள் நலத் திட்டங்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப் பட்டு வந்துள்ளதை உலகப் பொருளியல் மேதை அமர்த்தியா சென் மற்றும் சமூக சேவகர் ஜான் திரெஸ் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இப்போது கமல் கிளப்பும் பூதம் என்னவென்றால் மது விற்பனையை அரசிடமிருந்து பிடுங்கி தனியார்களிடம் (private business) ஒப்படைத்துவிட்டால் அவரது எஜமானர்களான கார்ப்பரேட்கள் மனம் குளிரும். இதற்கு இடையூறாக இருக்கும் மக்கள் நலத்திட்டங்களை அரசு கைவிடுவதற்கும் இது வழி செய்யும் மிச்சமாகும் அரசுப் பணத்தைக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகள் வசதிக்காக உள்கட்டுமானங்கள் நிறுவுவதில் ஈடுபடலாம். இதனால் கார்ப்பரேட் மூலதனம் பெரிய அளவுக்குத் தமிழகத்துக்குள் நுழையும்.

இதற்குதான் இன்று குஜராத் மாடல் தொழில் வளர்ச்சி என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. இதன் நாயகன் குஜராத்தின் நரேந்திர மோடி தான்.  இது தமிழக திராவிட இயக்க மாடலுக்கு ஒத்துவராதது. கமல்-ரஜினி-சீமான் முகாம் இலவசங்கள் எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு அரசின் பொறுப்பில் மக்கள் நலப் பணிகள் செய்யப் படுவதை முடிவுக்குக் கொண்டுவந்து குஜராத் மாடலை நுழைக்கப் பார்க்கிறார்கள். இது முற்றிலும் அம்பானி-அதானிகளின் ஆதாயத்திற்கான பொருளாதாரக் கொள்கை. இன்றைய அதிமுக அரசால் இதைத் தடுக்க முடியவில்லை, கலைஞர்-ஜெயலலிதா மறைவுக்குப் பின் இத்தகைய பலவீனம் ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றுவோர்-ஏமாற்றப்படுவோர்  ஆகிய இரு தரப்பினரிடையே மய்யமாக இருப்பது என்றால், அது ஏமாற்றுவோர்க்கு உதவி செய்வது என்றுதான் பொருள்.

Total Page Visits: 79 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *