ஹைதராபாத் பாஜக வெற்றி: சிவப்பு விளக்கு எச்சரிக்கை – பேரா.மருதமுத்து

ஹைதராபாத்தில் பாஜகவின் எழுச்சி
தமிழக மக்களுக்கு
ஓர் எச்சரிக்கை மணியோசை ஆகும்.
வலிமையான மாநிலக்கட்சி எதுவானாலும் அதை அழிப்பது அல்லது பலவீனப்படுத்துவது என்பதே பாஜகவின் அடிப்படை உத்தி. தெலங்கானா மாநிலத்தின் தனிப்பெரும் மாநிலக் கட்சியாக இதுவரை இருந்து வருவது தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்). இதன் தலைவர் கே.சந்திரசேகர ராவ்தான் (கே.சி.ஆர்) தெலங்கானாவின் முதல்வர். இவர் அவ்வப்போது மோடி அரசின் திட்டங்களுக்கெல்லாம் முழு ஆதரவும் அளித்து வந்துள்ளார். (நம்ம அதிமுக போல) இவருடைய மறைமுக கூட்டாளியாக இருந்து வந்தவர் முஸ்லிம் கட்சித் தலைவரான அசாதுதீன் ஒவைசி. (கட்சி–AIMIM) இந்தக் கூட்டின் காரணமாக தெலங்கானாவில் இதுவரை காங்கிரசோ, பாஜகவோ தலைதூக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில்தான் இப்போது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது.
இதில் அமித்ஷா முதல் நம்ம ஊர் குஷ்பூ வரை ஓடிஓடி பிரச்சாரம் செய்தனர்.பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிறிதும் வெட்கமின்றி வெறித்தனமாக இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததனர். இந்த நச்சுப் பிரச்சாரம் காரணமாக இன்று ஹைதராபாத்தில் பாஜகவின் பலம் பெருமளவு பெருகிவிட்டது. சென்ற மாநகராட்சித் தேர்தலில் வெறும் 4 இடங்கள் மட்டுமே பெற்றிருந்த பாஜக இப்போது 48 இடங்களில் வென்றுள்ளது. மாநிலக் கட்சியான டி.ஆர்.எஸ். முன்பு 99 இடங்கள் பெற்றிருந்தது. இப்போது அது 55 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. அது இழந்த இடங்கள் 44. காங்கிரஸ் பெற்றது வெறும் இரண்டே இடங்கள்.
இந்த நிலை ஏற்படக் காரணம் பாஜகவின் இந்து மதவெறிப் பிரச்சாரம். மாநிலக் கட்சியான டி.ஆர்.எஸ். உண்மையில் இந்துக்களின் துரோகி என்று பாஜக இடைவிடாமல் பரப்புரை செய்தது. (தமிழகத்தில் திமுக, விசிக, இடதுசாரிகள் இப்படி முத்திரை குத்தப்படுவது இனி உக்கிரமாக மாறும்.) இப்படி பாஜக பிரச்சாரம் செய்ய ஏதுவாக, ஒவைசியின் நடத்தையும் பேருதவி செய்துள்ளது. இஸ்லாமியர் வாக்குகளை ஹைதராபாத்தில் தக்கவைத்துக்கொள்ள வேண்டி முதலில் இருந்தே ஒவைசி அளவுகடந்த வார்த்தைகளை அடிக்கடி கொட்டி வருபவர். விளைவாக அவர் விரும்பியவாறு ஹைதராபாத்தில் அவருக்கு போதிய வெற்றி கிட்டியுள்ளது.
ஆனால் இதே அதிதீவிர மதம்சார்ந்த பரப்புரையை ஒவைசி பீகாரில் பயன்படுத்தியது ஆபத்தில் முடிந்தது. பாஜக அதனால் பயன்பெற்றது. அடுத்து இவர் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலிலும் இதே முறையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். இதன் விளைவாக தற்போது வங்கத்தில் மம்தா பானர்ஜியின் டி.எம்.சி. எனும் மாநிலக் கட்சியை ஆதரிக்கும் இஸ்லாமியர் வாக்குகள் சிதறிப்போக வாய்ப்பு உள்ளது. இதன் பயனாக அங்கும் பாஜகவே ஆதாயம் பெறும்.
தீவிர மதவெறியை பாஜக ஆயுதமாக்குவதும், அதை எதிர்ப்பதற்காக ஒவைசி தானும் அதே முறையைக் கையாள்வதும் இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்தும் விளைவையே ஏற்படுத்தும். இந்த உத்தி இனி இங்கே தமிழகத்திலும் கையாளப்படும் என்பது உறுதி.
ஒன்இந்தியா.காம் 24 Nov 2020 தகவல்; “கூட்டணிக்கு பிடி கொடுக்கலை. திமுக தோற்றால் நாங்க பொறுப்பு அல்ல. அணுகுண்டை வீசும் தமிழக ஓவைசி கட்சி. “தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக 2 மாதங்களாக பேசியும் திமுக பிடிகொடுக்காத நிலையில் 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிடுவோம்; தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல என்று ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தமிழக தலைவர் வகீல் அகமது கூறியுள்ளார்.”
ஒவைசியின் அணுகுமுறை மோடி முகாமின் மதவெறி அரசியல் வளர்ச்சிக்கே உதவி வருகிறது என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் உள்ள பொறுப்பு மிக்க இஸ்லாமியத் தலைவர்களை பலவீனப்படுத்தி, காலம் காலமாக திராவிடக் கட்சிகளுடன் அவர்கள் கொண்டிருக்கும் சுமூக உறவை முடிவுக்கு கொண்டுவர வேண்டி பாஜகவும், ஒவைசியும் இங்கே படையெடுக்கப் போவது உறுதி. திமுக இந்து விரோதக் கட்சி என்று ஓயாமல் ஏற்கனவே பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இப்போது ஒவைசி போன்றவர்கள் இங்கே தமிழ்நாட்டில் வலிமை பெறுவதற்கும் பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற திராவிடத் தலைவர்கள்தான் முழு பொறுப்பு என்று பாஜக தரப்பில் வசை பாடுவார்கள் என்பது உறுதி.
இன்னொருபுறம் திமுக தமிழர் விரோதக் கட்சி என்ற சீமானின் தாக்குதலும் நடந்து வருகிறது. அத்துடன் எல்லோரும் கூடிக்கொண்டு ஊழலின் பிறப்பிடம் திமுகதான் என்பார்கள். (கொஞ்சம் அதிமுகவையும் தொட்டுக்கொள்வார்கள்)அடுத்து திமுகவில் குடும்ப அரசியல் தலைவிரித்து ஆடுகிறது என்பார்கள். இவையெல்லாமே பாஜக மையப்படுத்தும் குற்றச்சாட்டுகள்தான்.) ஹைதராபாத்திலும் இந்த ஊழல், மற்றும் குடும்ப ஆட்சி குற்றச் சாட்டுகளை பாஜக மையப்படுத்தியது. நம் நாயகனின் மய்யம்கூட இதில் ஆவேசம் காட்டும்.
இப்படித் தமிழக அரசியலை குழப்பம் நிறைந்ததாக மாற்றி இதற்கு நடுவில் மென்மையான் ஆன்மிகம் பேசிக்கொண்டு பாபா வேறு வருகிறார்.
இப்போது புரிகிறதா, ஹைதராபாத்தில் பாஜக நாலே நாலு இடங்களில் இருந்து 48 இடங்களைக் கைப்பற்றியது எப்படி என்று? எல்லாம் எதிர் எதிராகத் தீவிரவாதம் பேசவைத்து வாக்குகளைப் பிரிக்கும் உத்தியினால்தான்.
“நான் முதல்வரானால் முதல் வேலையாக ஊழலை ஒழிப்பேன்,” என்று கருப்புப் பண நடிகர்கள் கூறுவதும் தீவிரவாதம்தான்.
“நான் முதல்வரானால் கச்சத்தீவை உடனே மீட்பேன், ஈழ விடுதலை கணப்போதில் நடந்துவிடும். விவசாயிகளுக்கெல்லாம் உடனே மாத ஊதியம்….” (ஐயோ தாங்க முடியல!) இதுவும்கூட தீவிரவாதம்தான்.
இதற்கு மறுபெயர் ஓட்டுவெட்டி அரசியல் என்பது. ஒவைசி, கமல், சீமான், ரஜினி போன்றவர்கள் எல்லோருமே இந்த ஓட்டுவெட்டி வேலைசெய்து முன்னேற முயற்சிக்கிறார்கள்.(vote cutters) மொத்தத்தில் வலிமையான மாநிலக் கட்சிகள் இருக்கக் கூடாது என்ற நிலையை இவர்கள் உருவாக்க உதவுகிறார்கள். எல்லாக் குடுமிகளும் அமித்ஷா கையில் என்ற நிலையை இவர்கள் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.
இதை நாம்தான் தடுத்து நிறுத்தி முறியடிக்க வேண்டும். இதன் பொருட்டு இந்தியா முழுதையும் நாம் கவனிக்க வேண்டும். எங்கெங்கும் மோடி முகாம் நடத்தும் சதி சூதுகளைக் கண்டறிந்து நன்கு பயில வேண்டியது நம் தலையாய கடமையாகும்.
அப்போதுதான் நமக்கு தமிழக அரசியல் பற்றிய புரிதல் ஏற்படும்.
ஏனெனில் இன்று நாம் வாழ்வது உலகமயமாகிவிட்ட இந்தியாவில், அதில் உள்ளடங்கி உள்ள தமிழகத்தில்.