வன்னியர் உள் இடஒதுக்கீடு போராட்டம்: பாமக நாடகமா? -கி.நடராஜன்

ஒரே கோரிக்கைக்கான இரு போராட்டங்களும்
ஒன்று சமூகநீதிக்கான போராட்டமாகவும்,
மற்றொன்று நாடக போராட்டமாகவும் இருக்கிறது என்பதை
வரலாற்றின் புதர் மண்டிய புதை சேற்றிலிருந்து
உண்மைகளை ஆராய்ந்து
விமர்சனத்தால்தான் விளங்கி கொள்ள முடியும்.

80-களின் வன்னியர் இடஒதுக்கீடு சமூகநீதி போராட்டமும், 2020-யில் ராமதாசு குடும்ப பதவிவெறிக்காக நடத்தும் நாடகபோராட்டம் ஒரு பார்வை;

1986-87 களில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் வன்னிய சங்கம் 20 % இட ஒதுக்கீடு கேட்டு வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியது. அதில் 21 ஏழை வன்னியர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். பின்பு கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பொழுது வன்னியர்கள் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பிற்பட்டோர் பட்டியலை பிரித்து 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதே ஆண்டுதான் மண்டல் அறிக்கையை வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டு இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு ஒதுக்கியது.

தற்பொழுது 80 வயதாகும் டாக்டர் இராமதாசும், அவர் மகனும் மீண்டும் அதே கோரிக்கையை வைத்து பாமக கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்துகின்றனர். இது பதவி வெறிக்கான சாதி ஒட்டு வங்கிக்கான, ஓட்டு பொறுக்க நடத்தும் #நாடகபோராட்டமாகும்!

ஒரே கோரிக்கைக்கான இரு போராட்டங்களும் ஒன்று சமூகநீதிக்கான போராட்டமாகவும், மற்றொன்று நாடக போராட்டமாகவும் இருக்கிறது என்பதை வரலாற்றின் புதர் மண்டிய புதை சேற்றிலிருந்து உண்மைகளை ஆராய்ந்து விமர்சனத்தால்தான் விளங்கி கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

தமிழ்நாடு வரலாற்றில் இட ஒதுக்கீடுக்கான போராட்டங்கள் நூறு ஆண்டுகளை மேலானதாகும். இந்திய அளவில் இட ஒதுக்கீடு சமூக நீதிக்கான போராட்டங்கள் நீண்ட வரலாறு கொண்டது! சமூக நீதியில் இடஒதுக்கீடு முக்கியமானது. ஆனால் அதுவே முழு சமூக நீதி கிடையாது. சர்வலோக நிவாரணியும் கிடையாது.

நமது சமூகம் சாதிகள் நெகிழும் ஏணிப்படி படிநிலைகளாக கீழிருந்து மேல் நோக்கி கட்டப்பட்டுள்ள சாதிய சமூகமாகும். இந்த படிநிலை சாதி சமூகம் பற்றி விரிவான ஆய்வுகளும், அதை தகர்க்க வழி முறைகளும் விவாதிக்கப்படுகின்றன. அதற்கான போராட்டங்களும் நடைபெறுகின்றன. அதே நேரம் 2000 ஆண்டுகளாக மனுஸ்மிருதி காலம் தொட்டு ஒருவகையான இட ஒதுக்கீடு கல்வி, பொருளாதாரம், பண்பாடு என்று சகல விசயங்களிலும் திணிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வந்துள்ளன. இதில் சாதி அடுக்குகளுக்கு தகுந்தவாறு வாழ்வாதாரங்கள் ஒதுக்கப்பட்டன. சாதி மேல் மட்டத்தில் உள்ள பிராணர்களுக்கு அனைத்து வாழ்வாதாரங்கள் கிடைக்கும் படியும், படிப்படியாக சாதி படிநிலைக்கு தகுந்தவாறு வாழ்வாதரங்களை குறைந்து கீழே உள்ள உழைக்கும் தீண்டதகாத சாதிகள், சூத்திர சாதிகளுக்கு முற்றிலும் கல்வி, பொருளாதாரம், பண்பாடு என அனைத்து வாழ்வாதாரங்கள் மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்ட சமூக நீதியை மீட்பதில் ஒர் அம்சம்தான் இட ஒதுக்கீடு!

சூத்திர சாதிகளாக உள்ள பல சாதிகளின் இணைப்புதான் வன்னியர் என்ற சாதிகளின் தொகுப்பு! இதிலும் படிநிலை ஏற்றதாழ்வுகள், வேறுபாடுகள் அன்றும், இன்றும் தொடர்கிறது. வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டங்களில் 1986-97யில் நடந்த போராட்டம் இட ஒதுக்கீடு வரலாற்றில் மைல்கல் ஆகும். இதில் எம்.ஜி,ஆர் ஆட்சி பல சூழ்ச்சிகளை செய்து திசை திருப்ப முனைந்தது. ஆனால், கருணாநிதி ஆட்சி காலத்தில் வன்னியர் உட்பட் 41 மிகவும் பிற்படுத்தோர் சாதிகள் இணைத்து பிற்பட்டோர் வகுப்பு பட்டியலில் இருந்து 20% தனியாக ஒதுக்கப்பட்டது..

தோழர் மருதுபாண்டியன் அவர்களின் இட ஒதுக்கீடு வரலாறு பற்றிய விளக்கம்: நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தில் 1950ல் சாதிவாரிய இட ஒதுக்கீடு செல்லாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கு பின்பு தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சரத்து 15 (4) லும், 9வது அட்டவணையும் சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் SC 15% ம், BC க்கு 25% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. அதன் பின் G.O. 842-ன் மூலம் தமிழக அரசு 13 – 11-1969ல்,

முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை A. N. சட்ட நாதன் தலைமையில் நியமனம் செய்தது. அந்த ஆணையம் 1970ம் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் BCக்கு 16% மும் , MBC என்ற தனிப்பிரிவை உருவாக்கி அதற்கு 18% இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அதே வேளை ரூ 9000/-க்கு மேல் வருமானம் உள்ளவர்களை நீக்கவும் பரிந்துரைத்தது. ஆனால் கலைஞரின் திமுக அரசு எல்லாப் பரிந்துரைகளையும் செயல்படுத்தாமல் SC க்கு 15% லிருந்து 16%மாகவும், BC க்கு 25% லிருந்து 32%மாகவும் உயர்த்தியது. 1979 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அரசு ரூ 9,000/- உச்ச வரம்பைக் கொண்டு வந்து கடுமையான எதிர்ப்பை எதிர் கொண்டது. இந்தச் சூழலில் 1980 நாடாளுமன்றத் தேர்தலில் எம்ஜிஆரின் அஇஅதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றிட வருமான உச்சவரம்பை எம் ஜி ஆர் அரசு நீக்கியது. மேலும் இட ஒதுக்கீட்டில் முக்கியத் திருத்தங்களையும் கொண்டு வந்தது. SC க்கு 16% லிருந்து 18%மாகவும், BC க்கு 32% லிருந்து 50% மாகவும் இட ஒதுக்கீட்டு அளவை திருத்தம் செய்து அறிவித்தது.

தனி இட ஒதுக்கீடு கேட்டு 1987 வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்திற்கு பின், 50% BC இட ஒதுக்கீட்டை , BC க்கு 30% மாகவும், MBC என்ற பிரிவை உருவாக்கி MBC க்கு 20% என்றும் கலைஞரின் திமுக அரசு அறிவித்தது.

இந்தக் கால கட்டங்களில் 1979ம் ஆண்டு ஜனதா அரசு இரண்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமனம் செய்தது. MP மண்டல் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த ஆணையம் OBC மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்து 1980ல் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. அதைச் செயல்படுத்தாமல் காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டுவிட்டது. கிடப்பில் போடப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை 1990 ஆம் ஆண்டு V P சிங் அவர்கள் தனது பிரதமர் பதவியை விலையாகக் கொடுத்து அமல்படுத்தினார். அதை எதிர்த்து இந்திரா சஹானி VS இந்திய அரசு என்ற வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வானது, 16.11.1992 அன்று வழங்கிய தீர்ப்பில், மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டினை விஞ்சக் கூடாது என்று ஆணையிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்த ஏதுவாக, 1993 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களுக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவு 31.12.1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு சட்டமாகியது(தமிழ்நாடு சட்டம் 45/1994). பின்னர் இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 31ஆன் கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு 1994 ஆம் ஆண்டு அரசியலமைப்புச்(76வது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதற்குத்தான் ஆசிரியர் கி.வீரமணி “சமூக நீதி காத்த வீராங்கனை ” என்று ஜெயலலிதாவிற்கு பட்டம் சூட்டி மகிழ்ந்தார்.

மேற்குறிப்பிட்ட தமிழ்நாடு சட்டம் 45/1994ன் செல்லும் தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இப் பேராணை மனு எண்.454/1994 மற்றும் வளமான பிரிவினரை இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்குதல் குறித்து தாக்கல் செய்யப்பட்ட இப் பேராணை மனு எண்.194/2006 ஆகியவற்றில், உச்ச நீதிமன்றமானது, 69 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் வளமான பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து நீக்குதல் ஆகிய இரண்டு பொருள்கள் பற்றி தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையினை பெற்று 12.7.2011க்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென்று முறையே 13.7.2010 மற்றும் 3.1.2011 ஆகிய தேதிகளில் ஆணையிட்டது.

அவ்வாறு பிறப்பித்த ஆணையில், ஒரு மாநிலம் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இட ஒதுக்கீடு செய்ய முனையும் போது, அதனுடைய ஆணையானது எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களின் அடிப்படையில், அம்மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் பிறப்பிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்கள் அரசால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டன. மேலும் ஆணையம் கோரிய பல்வேறு விவரங்கள், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டு ஆணையத்திற்கு அரசால் அனுப்பி வைக்கப்பட்டன. இட ஒதுக்கீட்டின் அளவு மற்றும் வளமான பிரிவினரை நீக்கம் செய்வது ஆகியன குறித்து எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களை ஆய்வு செய்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மேற்காணும் பொருள் குறித்த தனது அறிக்கையினை 8.7.2011 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தது.

அவ்வறிக்கையில், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு சட்டம் 45/1994 எவ்வித குறைபாடும் இன்றி உள்ளது என்றும், எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 விழுக்காடு, மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பினருக்கு 20 விழுக்காடு, ஆதி திராவிடர் வகுப்பினருக்கு 18 விழுக்காடு மற்றும் பழங்குடியினருக்கு 1 விழுக்காடு என்று வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் அளவு, மேற்படி வகுப்பினருடைய மக்கட்தொகையைக் கணக்கில் கொள்ளும் போது முற்றிலும் சரியானது என்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், 17 ஆண்டு காலமாக அமலில் இருந்து வரும் தமிழ்நாடு சட்டம் 45/1994ன் அமலாக்கத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டிலிருந்து வளமான பிரிவினரை நீக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த அறிக்கை, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 11.7.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் 8.7.2011 அன்று தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையினை ஏற்றுக் கொள்வது என்றும், அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டம் 45/1994ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது என்றும், இட ஒதுக்கீட்டில் வளமான பிரிவினரை நீக்கம் செய்ய வேண்டியதில்லை என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டம் 45/1994ஐ தொடர்ந்து நடைமுறைப் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 11.7.2011 அன்று வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையின்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினருக்கு 20 விழுக்காடு, ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு, ஆக மொத்தம், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு, வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த இட ஒதுக்கீட்டுக்கு இப்பொழுது ஆபத்து வரப்போகிறது. என்ன செய்யப் போகிறோம்? 1920களில் முத்தையா முதலியாரால் கொண்டு வரப்பட்ட கம்யூனல் ஜி.ஓ. என்றழைக்கப்பட்ட சமூக நீதிக் கோட்பாட்டுக்கு எதிராக ஆளும் இந்துத்துவ மோடி அரசு செயல்பட்டு வருகிறது. சமூக நீதிப் போராட்டத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழகம் என்ன செய்யப் போகிறது?

மருது பாண்டியன், சோசலிச மையம்…

“இராமதாசு குடும்ப பதவி சுகம், அதிகார வெறியும்-இந்துத்துவ பாஜகாவும்.”

தற்பொழுது இராமதாஸ் தலைமையிலான பாமக 20% உள் ஒதுக்கீடு போராட்டம் வரும் தேர்தலில் வன்னியர் ஓட்டு வங்கியை  முழுவதுமாக தக்க வைக்கவும், அதிமுக- பாஜக கட்சியுடன் சட்ட மன்ற தொகுதிகள் இட ஒதுக்கீடு பேரம் நடத்தவும், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க பெரு முயற்சி, சூழ்ச்சிகள் செய்யும் பாஜகவுக்கு ஆதரவாகவும் நடத்தப்படுவதாகும்.

ஒரு குறிப்பிட்ட சாதிக்கு இட ஒதுக்கீடு என்பது பல ஆயிரம் சாதிகள் உள்ள நமது சமூகத்தில் சாத்தியம் இல்லை என்பது ஊரறிந்த இரகசியம். இது அன்புமணி இராமதாசுக்கு தெரியாதா என்ன?

தெரியும். ஆனால் மத்திய-மாநில ஆட்சியாளர்களால் ( பாஜக-அதிமுக கட்சிகள்) வன்னிய ஏழை மக்கள் உட்பட அனைவரின் வாழ்வாதாரங்கள் சகல தளங்களிலும் பாதாளத்திற்கு வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

எட்டு வழிச்சாலை திட்டம், செல்லா பணம், நீட் தேர்வு, 10 % பொருளாதார இட ஒதுக்கீடு, புதிய மூன்று வேளாண் சட்டங்கள் என்று பல வகைகளில் மத்திய பாஜக ஆட்சியில் வன்னியர்கள் (விரல் விட்டு எண்ணத்தக்க சிலரை தவிர) பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் இதெற்கெல்லாம் பாமக இப்படியான போராட்டத்தை நடத்தை வில்லை. வெற்று வாய்ச்சால சவடால் போராட்டங்களோடு வன்னியர்களை முடக்கி விட்டது.

அதோடு பாஜகவின் ஓட்டு வங்கி சூழ்ச்சிகளில் சாதிகளாக, மதங்களாக மக்களை பிளவு படுத்துவது முக்கியமானது என்று நடந்த முடிந்த பல மாநில தேர்தல்களில் பாஜக தேர்தல் வியூகங்கள் சொல்கின்றன.

அதன்படி தென் தமிழகத்தில் பல சாதிய கட்சிகளை பாஜக விலை பேசி விழுங்கி வருகின்றது.

மீதி இருப்பது பாட்டாளி மக்கள் கட்சிதான்! சாதிக்கும் பார்ப்பனீயத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.  எந்த சாதியும் குழுவாக நீடிக்க வர்ண-படிநிலை சனாதன மனுஸ்மிருதி பார்ப்பனீய தத்துவம்தான் அடிப்படையாகும்.

அதனால்தான் ஒருபக்கம் இடஒதுக்கு எதிரான சனாதன இந்துத்துவா பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்து கொண்டு இன்னொரு பக்கம் இடஒதுக்கீடுக்கு போராடுவது ஒட்டு பொறுக்கும் சூழ்ச்சி, சாதிரீதியாக ஓட்டுகளை பிரிக்கும் பாஜக சதி திட்டங்களுக்கு எளிதில் ஏழை நடுத்தர வன்னியர்களை பலிகடாவாக்கும்  நாடக போராட்டம் என்றே கருத வேண்டியுள்ளது…

(தொடரும்)

கி.நடராஜன்: வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்

Total Page Visits: 146 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *