திருமாவளவன்-பிஜேபி மோதல்: பிஜேபி வலையில் வன்னியர் ஓட்டு -வசீகரன்

தமிழகத்தில் திராவிட சிந்தனை அரசியல் உள்ளவரை
பிஜேபியால் காலூன்ற முடியாது
என்பதை உணர்ந்த இந்துத்துவ சக்திகள்,
திராவிட சிந்தனைக்கு எதிரான
பல அரசியல் உத்திகளை வகுத்துள்ளன.
அதில் முக்கியமானது, தமிழர்களை சாதிகளாகப் பிரித்து
இந்துத்துவத்திற்குள் கொண்டுவருவதுதான்.

 

சமீபகாலமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன், பிஜேபி கடும் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது. இதற்குக் காரணம், தமிழகத்தில் பிஜேபி செய்ய நினைக்கும் இந்துத்துவ அரசியலுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது, திருமாவளவனும் அவரது விடுதலை சிறுத்தைகள் கட்சியும்தான். சொல்லப்போனால், தற்போது பிஜேபி நடத்தி முடித்திருக்கும் வேல் யாத்திரையே, திருமாவளவனின் சனாதன-மனுதர்ம-இந்துத்துவ எதிர்ப்பு அரசியலுக்கு பதிலடி அரசியல்தான்.

பிஜேபி தனது இந்துத்துவ சாதி அரசியலை, கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் தீவிரப்படுத்தியுள்ளது. மத்தியில் பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் முக்கிய அரசியல் ஆளுமைகளான ஜெயலலிதாவும் கருணாநிதியும் இறந்துபோன இடைவெளியை பயன்படுத்த திட்டமிட்டது. திமுக ஒருகாலத்தில் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்தபோதும், கருணாநிதி, ‘பிஜேபியை தீண்டத்தகாத கட்சி இல்லை’ என்று கூறியிருந்தாலும், இந்துத்துவ அரசியலுக்கு கருணாநிதி எப்போதும் கசப்பானவர்தான். ஜெயலலிதாவை பொறுத்தவரை, அவர் ஒரு திராவிட கட்சிக்கு தலைவராக இருந்தாலும், பிஜேபியுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைத் தவிர்த்தாலும், அவர் ஒரு பார்ப்பனர் என்பதால் தமிழக பார்ப்பனர்கள் அவரை ஏற்றுக்கொண்டிருந்தனர். ஜெயலலிதா இறந்துபோனதும் தமிழக பார்ப்பனர்கள் முழுவதும் பிஜேபி-இந்துத்துவ ஆதரவாளராக மாறிவிட்டனர்.

இந்தச் சூழ்நிலையில், பிஜேபி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதே நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியால் தமிழகத்தில் ஒரு இடத்தைக்கூட பெறமுடியவில்லை. இத்தனைக்கும், தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுக, மிக முக்கிய வன்னியர் சாதிக் கட்சியான பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டும்கூட, பிஜேபியால் வெற்றிபெற முடியவில்லை. இதற்குக் காரணமான, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நடைபெறும் திராவிட கருத்தியல் அரசியல் மீது, பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவ சக்திகள் கடும் கோபம்கொண்டன. அதன் விளைவாகத்தான், கடந்த ஓர் ஆண்டாக தமிழக பிஜேபியினர், பெரியார் மற்றும் திராவிட சிந்தனையின் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

உதாரணமாக, கந்த சஷ்டி கவசத்தில் இருக்கும் ஆபாசங்களை குறிப்பிட்டு, கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோவை எதிர்த்து, பிஜேபி காட்டிய ஆவேசமும் ஆர்பாட்டமும், அந்த வீடியோவை வெளியிட்டவர்களை கைதுசெய்யும் அளவிற்குப் போனது. பெரியாரிய சிந்தனையாளர்கள் நீண்டகாலமாக, இந்துமத நூல்களில் இருக்கும் ஆபாசங்களை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் நீட்சியாகத்தான் கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி வீடியோவை வெளியிட்டது. இதுநாள்வரை, அதைப் பொறுத்துக் கொண்டிருந்த தமிழக பார்ப்பனர்கள், தற்போது மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பெரியாரிய-திராவிடச் சிந்தனை பிரச்சாரங்களை ஒடுக்க முயற்சி செய்கிறார்கள்.

தமிழகத்தில் திராவிட சிந்தனை அரசியல் உள்ளவரை பிஜேபியால் காலூன்ற முடியாது என்பதை உணர்ந்த இந்துத்துவ சக்திகள், திராவிட சிந்தனைக்கு எதிரான பல அரசியல் உத்திகளை வகுத்துள்ளன. அதில் முக்கியமானது, தமிழர்களை சாதிகளாகப் பிரித்து இந்துத்துவத்திற்குள் கொண்டுவருவதுதான்.

முதலாவதாக, பிஜேபியின் மாநிலத் தலைவராக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனை நியமித்தது. அத்துடன், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இத்தனைக்கும், பிஜேபி சமூகநீதி இடஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி. மேலும், எல்.முருகனை வைத்தே வேல் யாத்திரை எனும் இந்துத்துவ அரசியலையும் நடத்தி முடித்திருக்கிறது. தங்களுடைய சமூக படிநிலைப் பற்றிய விழிப்புணர்வு அற்ற நிலையில் இருக்கும் அருந்ததியரை, இந்துத்துவ சிந்தனைக்குள் உள்வாங்கும் தந்திரம்தான் இது.

அடுத்ததாக, ஏழு உட்பிரிவுகளாக இருக்கும் பள்ளர்கள், தங்களை ஒன்றாக சேர்த்து தேவேந்திரகுல வேளாளர்கள் என அறிவிக்க வேண்டும் என்றும், தங்களை பட்டியல் சாதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் வைத்துவந்த  கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மாநில அரசு விரைவில் பரிந்துரை செய்யும் என்று முதல்வர் எடப்பாடியும் அறிவித்துள்ளார். பட்டியல் சாதி பிரிவிற்குள் இருந்து வெளியேறுவதன் மூலம், அவர்கள் தங்களுடைய இடஒதுக்கீடு சலுகைகளை இழக்க நேரிடலாம். ஆனால், அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பார்ப்பனியம் இட்டுக்கட்டிய தேவேந்திரர்கள் என்ற பெருமையை அணிந்துகொள்ள நினைக்கிறார்கள். அந்தளவுக்கு இந்துத்துவம் அவர்களை ஆட்கொண்டுள்ளது. இப்படியாக, தமிழக தலித் சமூகத்தின் ஒரு பகுதியை இந்துத்துவத்திற்குள் இழுத்து, பிஜேபி தனக்கான தலித் வாக்குவங்கியை உருவாக்கியுள்ளது.

பறையர், பள்ளர், அருந்ததியர் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது தமிழகத்தின் தலித் சமூகம். அதில், பெரும்பான்மையான மக்கள்தொகை கொண்டது பறையர் சமூகம். அதற்கு அடுத்த நிலையில் மக்கள்தொகை கொண்டது பள்ளர் சமூகம். அதற்கும் அடுத்த நிலையில் இருப்பது அருந்ததியர் சமூகம்.

தமிழக தலித்களில் பெரும்பான்மை சமூகமான பறையர் சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவர் திருமாவளவன். அவர், தொடர்ந்து இந்துத்துவ-சனாதான அரசியலை எதிர்த்துப் பேசியும் செயல்பட்டும் வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, சனாதான-தர்ம எதிர்ப்பு மாநாடு ஒன்றை திருமாவளவன் நடத்தியுள்ளார். மேலும், சமீபத்தில் மத்திய பிஜேபி அரசு, ஓபிசி-களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்தபோது, அதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது. இது தலித் மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனை இல்லை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சினை. சமூகநீதிக்கு எதிரானது என்ற அடிப்படையில் திருமாவளவன் அந்த போராட்டங்களை நடத்தினார். பெருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடானது, இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீர்குலைத்துவிடும் என்று அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இப்படி, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைகளில் திருமாவளவன் உறுதியாக நிற்பதால்,  ஆர்எஸ்எஸ்-இந்துத்துவ சக்திகள் திருமாவளவனை குறிவைத்தன. பெரியார் மற்றும் இந்திய அரசியல் என்ற இணையவழி கருத்தரங்கில், மனுஸ்மிருதி பற்றி திருமாவளவன் பேசிய கருத்துக்களை முன்வைத்து, அவர் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என்றும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார் என்றும் குற்றம்சாட்டி, பிரச்சினையைக் கிளப்பியது பிஜேபி. ஏற்கனவே கருப்பர் கூட்டத்தை கைது செய்யவைத்த நினைப்பில், திருமாவளவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்ப்பை தீவிரப்படுத்தியது பிஜேபி. ஆனால், திருமாவளவன் இந்த சந்தர்ப்பத்தை மிக சாமர்த்தியமாக, மனுதர்மத்தை எதிர்க்கும் பிரச்சாரமாக மாற்றினார். நான்கு-வர்ண சாதி அமைப்பை வலியுறுத்தும் மனுஸ்மிருதி நூலை தடைசெய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியது. மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றியும் சாதிகளைப் பற்றியும் உள்ள பகுதிகளை சிறு பிரசுரங்களாக வெளியிட்டது. பிஜேபி இந்த பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது, நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் என்று, பிஜேபியை எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

இருந்தபோதும், சமூக வலைதளங்களில் திருமாவளவனின் மீதான தாக்குதலை பிஜேபியினர் அதிகப்படுத்தினர். பறையர் சமூகத்தின் செல்வாக்குபெற்ற தலைவரான திருமாவளவன் மீதான இந்த வன்மம்மிக்க தாக்குதல், பறையர் சமூகத்தில் இருந்து பிஜேபிக்கு மிக்குறைந்த வாக்குகள்கூட கிடைக்காது என்ற நிலைக்கு இட்டுச் சென்றது. ஆனால், இந்த இடத்தில் பிஜேபியின் கணக்கு தலைகீழாக உள்ளது. திருமாவளவன் உடனான இந்த தீவிர மோதல் போக்கானது, தங்களுக்கு வன்னியர்களின் வாக்குகளை பெருமளவு பெற்றுத்தரும் என்று பிஜேபி கணக்கு போட்டுள்ளது.

தென்மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்தின் தென் பகுதியிலும் பள்ளர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். கொங்கு மண்டலம் முழுவதும் அருந்ததியர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். வடமாவட்டங்கள் முழுவதும் பறையர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். அதே வடமாவட்டங்கள் முழுவதும், வடக்கே சென்னை முதல் தெற்கே திருச்சி, நாகை மாவட்டங்கள் வரை உள்ள, 118 சட்டமன்ற தொகுதிகளில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த 118 சட்டமன்ற தொகுதிகளிலும் சற்றே குறைய வன்னியர்களின் அளவிற்கு பறையர்களும் வாழ்கிறார்கள். இப்படி இந்தப் பகுதிகளில் வன்னியர்களும் பறையர்களும் அருகருகே வாழ்வதால், இரு சமூகத்தினருக்கும் இடையே கடும் பகைப்போக்கு நிலவுகிறது.

இந்தப் பகைப்போக்கை பிஜேபி பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, வன்னியர்கள் தங்களை சத்திரியர்கள் என சொல்லிக் கொள்கின்றனர். இந்த சத்திரியர் என்ற வர்ணப் பிரிவை உருவாக்கியது மனுஸ்மிருதி. திருமாவளவன் இந்த மனுஸ்மிருதியைத்தான் விமர்சித்து வருகிறார். எனவே, மனுஸ்மிருதியை முன்வைத்து, திருமாவளவன் மீது நிகழ்த்தும் தாக்குதல்கள் வன்னியர்களை மகிழ்விக்கும் எனக் கருதுகிறது பிஜேபி. இது வடமாவட்டங்களில் கணிசமான அளவு வன்னியர்களின் ஓட்டுக்களை பெற்றுத்தரும் என்றும் பிஜேபி கணக்குப் போட்டுள்ளது.

Total Page Visits: 280 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *