‘டெல்லி சலோ’: நெடுஞ்சாலையை வீடாக மாற்றிய விவசாயிகள்

டெல்லி சிக்ரி எல்லை
ஒரு பஞ்சாபி கிராமமாகவே மாறிவிட்டது.
விவசாயிகள் பல மாதங்களுக்குத் தேவையான
பொருட்களுடன் வந்திருக்கிறார்கள்.
இது ஒரு உதாரணம்தான்.

டெல்லி-திக்ரி எல்லை இப்போது ஒரு கிராமம் போல காட்சியளிக்கிறது. போக்குவரத்தை மறைத்தபடி டிராக்டர்களில் கூடாரங்கள், மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்ய சோலார் பேனல்கள், விவசாயிகள் விரும்பிப் புகைக்கும் ஹுக்காக்கள்  மற்றும் குளிரால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ முகாம்கள். இத்துடன், சமையல் செய்ய காய்கறிகளை வெட்டுவதிலும் மக்கள் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் 12 நாட்களுக்கு முன்பு டெல்லி நுழைவாயிலுக்கு வந்ததில்  இருந்து, தங்களுடன் வந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் சேர்த்து, சுமார் 5000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளிக்க, ஒவ்வொரு நாளும் லாங்கரை(அடுப்பை)  பற்றவைக்கிறார்கள்.

“இப்போது நாங்கள் இங்குதான் தங்கியிருக்கிறோம். இது ஒரு நீண்டகால போராட்டமாக இருக்குமானால், எதிர்காலத்திலும் இதுதான் எங்கள் வீடாக இருக்கும்” என்கிறார் பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் இருந்து வந்திருக்கும் 50 வயதான குருநம் சிங்.

கடந்த நவம்பர் 26-ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்ட குருநம் சிங், திக்ரி எல்லைக்கு வந்தவுடனேயே மார்பு வலி எற்பட்டதால், இங்குள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, வீட்டிற்கு திரும்பாமல், போராட்டக்காரர்களுடன் வந்து சேர்ந்துகொண்டார். “நாங்கள் பஞ்சாபில் இருந்து  வந்தவர்கள். நாங்கள் எங்கு சென்றாலும் அன்பைப் பரப்புவோம். கொரொனா வைரஸோ அல்லது குளிர்காலமோ நாங்கள் களத்தில் நின்று போராடுவதை தடுக்க முடியாது”, என்கிறார் குருநம் சிங்.

சாலையில் 500-க்கும் மேற்ப்பட்ட டிராக்டர்கள் வரிசையாக நிற்கின்றன. அதில், “விவசாயி இல்லையேல், உணவு இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இல்லை, எதிர்காலமும் இல்லை”, போன்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தனது ஆன்லைன் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்திற்கு வந்துள்ள, ஹனி என்ற பி.ஏ. பட்டதாரி மாணவர், இதுபோன்ற ஒரு சுவரொட்டி தயாரிப்பதில் மும்முரமாக இருத்தார். அது, “நாங்கள் விவசாயிகள், பயங்கரவாதிகள் இல்லை.” என்பதாக இருந்தது. மேலும் ஹனி, “நான் ஒரு விவசாயியின் மகன். நான் இன்று விவசாய சமூகத்தின் உரிமைகளுக்காக போராடவில்லை என்றால், நான் பெறும் கல்வியின் பயன் என்ன?” என்று கேட்கிறார்.

உள்ளூர் மக்களும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் மொபைல் போன்களை சார்ஜ் செய்துகொள்ள வசதியாக, சில உள்ளூர்வாசிகள் சோலார் பேனல்களை அமைத்துத் தந்துள்ளனர். வேறு சிலர் தண்ணீர், சோப்பு, உலர்ந்த பழங்கள் மற்றும் கொசு விரட்டிகளையும் வழங்குகிறார்கள். தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் உதவிகளை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், “மக்கள் தங்கள் வீட்டு கதவுகளை மட்டும் திறக்கவில்லை. அவர்கள் தங்கள் இதயங்களையும் திறந்துள்ளார்கள்” என்கின்றனர்.

இப்பகுதியில் ஒரு சிறிய பட்டறை நடத்திவரும் சந்தீப் சர்மா, விவசாயிகளுக்கு குளிக்கவும் துணி துவைக்கவும் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதற்காக குழாய்களை அமைத்துத் தந்துள்ளார். “இந்த விவசாயிகள் எங்கள் விருந்தினர்கள். அவர்கள் எங்கள் முதுகெலும்பாகவும் இருக்கிறார்கள்,” என்று சர்மா கூறுகிறார். “இன்று அவர்களுக்கு உதவ முடிந்ததால் எங்களை அதிர்ஷ்டசாலிகள் என்று கருதுகிறோம். ஒரு வாரத்திற்குள், நாங்கள் அவர்களுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டோம். அவர்கள் காலை உணவு அல்லது மதிய உணவு சாப்பிடும்போது, எங்களையும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுமாறு வலியுறுத்துகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

அந்தப் பகுதியில் கடை வைத்துள்ள, மருத்துவ ஆக்ஸிஜனை வழங்கும் கிருஷ்ணன் என்பவர், விவசாயிகள் தங்கள் மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்காக, தனது கடை வழியாக மின்சார இணைப்பை நீட்டித்து தந்துள்ளார்.

சண்டிகரில் மருத்துவர்களாக இருக்கும் சுக்விந்தர் சிங் பிரார் மற்றும் ராமன்ஜித் சிங் பிரார் ஆகிய இரண்டு சகோதரர்கள், நண்பர்களின் உதவியுடன் சிங்கு எல்லையில் இலவச மருத்துவ முகாமை அமைத்துள்ளனர். அவர்கள் இரண்டு கார்களில் மருந்துகளை சேமித்து வைத்துள்ளனர். “பெரும்பாலான மக்கள் உயர் இரத்த அழுத்தம், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற உபாதைகளுடன் வருகிறார்கள்,” என்று சுக்விந்தர் கூறினார். மேலும், முகாமில் 10-15 பேர் கொண்ட குழு பணியாற்றி வருகிறது என்கிறார்.

விவசாயிகள் நெடுஞ்சாலையை தங்கள் வீடாக்கி விட்டார்கள். ஏறக்குறைய டெல்லி சிக்ரி எல்லை ஒரு பஞ்சாபி கிராமமாகவே மாறிவிட்டது. விவசாயிகள் பல மாதங்களுக்குத் தேவையான பொருட்களுடன் வந்திருக்கிறார்கள். இது ஒரு உதாரணம்தான். இதுபோலவே, டெல்லியின் அனைத்து எல்லைகளும் விவசாயிகளின் கிராமங்களாக மாறியிருக்கின்றன.

இதனால், விவசாயிகள் போராடிப் போராடி சோர்ந்துபோய் தானாக ஓய்ந்துவிடுவார்கள் என்று, மோடி அரசு நினைப்பதுபோல நடக்கப்போவதில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

கொம்புக்காரன்

நன்றி : telegraphindia

Total Page Visits: 88 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *