இந்திய அரசின் எதிர்ப்பை மீறி கனடா பிரதமர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: ராகுல் யோகி

கனடா எப்போதும் உலகில் எங்கும்
அமைதியான போராட்டங்களின் உரிமைக்காக
துணை நிற்கும்.
இந்திய விவசாயிகள் போராட்டம்
பேச்சுவார்த்தையைக் கண்டு
நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்
– ஜஸ்டின் ட்ரூடோ
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் ஒரு வாரத்திற்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கிறது. தலைநகரையே உலுக்கிவரும் இந்தப் போராட்டத்தை இந்திய ஊடகங்கள் அலட்சியப்படுத்தியபோதும், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 26-ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் சலோ டெல்லி போராட்டத்திற்காக டெல்லியின் எல்லைப் பகுதிக்கு வந்தபோது, அவர்கள் மீது தண்ணீர் பீரங்கிகளால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகள் டெல்லியின் பகுதிகளில் தங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். மத்திய மோடி அரசு விவசாயிகளுடன் இதுவரை ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தங்களுடைய முடிவில் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை (30/11/2020) பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் கனடா நாட்டு பிரதமர் ட்ரூடோ; ”விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்திகளை அங்கீகரிக்க விரும்புகிறேன். இந்த நிலைமையில் நாங்கள் அனைவரும் எங்களது நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். உங்களில் பலரும் இதைத்தான் உணர்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். கனடா அமைதியான போராட்டங்களுக்கு துணை நிற்கும். அமைதியான எதிர்ப்புக்கான உரிமையை கனடா எப்போதும் பாதுகாக்கும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தையும் நாங்கள் நம்புகிறோம். அதனால்தான், எங்கள் கவலைகளை இந்திய அரசின் அதிகாரிகளிடம் நேரடியாகவும், மேலும் பல வழிகளிலும் தெரிவித்துள்ளோம்” என்றவர், அத்துடன் சீக்கிய மக்களுக்கு குரு நானக் பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டார். அவருடன் கனடா அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கனடாவின் இந்த நிலைப்பாட்டிற்கு இந்திய மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான கனடா தூதரக உயர் அதிகாரி நாதிர் படேலை கடந்த (4/12/2020) வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில், வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து, இந்தியா தனது எதிர்ப்பு அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது. அதில், ‘இந்திய விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கனடா பிரதமர், சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளையும் உருவாக்கும். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் முன்பு தீவிரவாத நடவடிக்கைகள் கூடுவதை ஊக்குவிக்கும். ஆகவே, இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கனடா அரசு உறுதி செய்யவேண்டும்’ என்று தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பு கூறுகிறது.
இதற்கிடையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை கனடா வெளியுறவு அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் ஏற்பாடு செய்துள்ளார். அடுத்தவாரம் நடைபெறுவதாக உள்ள இந்தக் கூட்டத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள போவதில்லை. இது, விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்ததற்கு எதிரான இந்திய மோடி அரசின் பதில் நடவடிக்கை. இதற்கு முன் நவம்பர் 3-ஆம் தேதி முதல் கட்டமாக நடந்த இதே ஆலோசனை கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா தூதரக உயரதிகாரியை அழைத்து இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, ஒரு பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, கனடா பிரதமர் ட்ரூடோ, ‘கனடா எப்போதும் உலகில் எங்கும் அமைதியான போராட்டங்களின் உரிமைக்காக துணை நிற்கும். இந்திய விவசாயிகள் போராட்டம் பேச்சுவார்த்தையைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என்றார். நிருபர் தொடர்ந்து, ‘இந்த நிலைப்பாடு இந்திய-கனடா உறவிற்கு தீங்கு விளைவிப்பதை பற்றி கவலைப்படுகிறீர்களா?’ என்ற கேட்டதற்கு, ட்ரூடோ மீண்டும், ‘கனடா எப்போதும் உலகில் அமைதியான போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு துணை நிற்கும்’ என்றார்.
இந்தியாவின் வழக்கமான தீவிரவாத பூச்சாண்டியை பொருட்படுத்தாமல், கனடா பிரதமர் ட்ரூடோ, டெல்லியில் போராடும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மீண்டும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.