இந்திரப்பிரஸ்தம் முற்றுகை: நாட்டிற்கு உணவளிப்போர் அழைக்கிறார்கள் – பத்ரி ரெய்னா

நீங்கள் யார் சார்பாக பேசுகிறீர்களோ
அந்த ஓநாய்களைப் பற்றி
நன்கு அறிந்தவர்கள்தான் நாங்கள்.
நயவஞ்சகமான வீண்பேச்சுக்கள் பேசியதெல்லாம் போதும்.

அனைத்து இடங்களில் இருந்தும் வந்த இந்திய விவசாயிகள், இப்போது இந்திரப்பிரஸ்தத்தை முற்றுகை இட்டிருக்கின்றனர்.

அவர்கள் நீண்ட பயணத்திற்கான முன்னேற்பாடுகளுடனே வந்திருக்கிறார்கள். தாங்கள் பேணிக்காக்கும் மண்ணைப் போன்ற உறுதியுடன், இந்த பூமி இயற்கை சீற்றங்களை தன்னுள் வாங்கிக்கொள்வதைப் போல் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், தண்ணீர் பீரங்கிகளையும் விலக்கிவிட்டு செல்கின்றனர். எதிர்ப்பைக் கண்டு அவர்களுடைய முகங்கள் அமைதியான தீக்குறிகளை சுமந்திருக்கின்றன, அவர்கள் பேசும் வார்த்தைகள் சிலதான், ஆனால் அவை உறுதியானவை. ஒரு சூழ்ச்சிக்கார அரசாங்கத்தை மிகவும் சோர்வுறச் செய்யும் வகையில், அவர்கள் விஷயஞானம் என்கிற ஆயுதத்துடனே வந்திருக்கிறார்கள், தவறான தகவலினால் விளைந்த அற்பமான பொய்யை “எந்தளவுக்கு நம்பக்கூடாது” என்ற தெளிவு அவர்களுக்கு இருக்கிறது.

அவர்கள் “உருளைக்கிழங்கு மூட்டைகள்” அல்ல, இந்தியாவின் ஆர்கானிக் அறிவுஜீவிகள்.

மக்கள்மீது அக்கறையின்றி ஆறு ஏழு வருடங்கள் ஆண்டுவிட்ட ஒரு அரசாங்கத்தால்,  முதல்முறையாக மதம், சாதி அல்லது மதம்சார் கோட்பாடுகளை வைத்து அவர்களை பிரித்தாள முடியவில்லை.

இந்தக் கட்சியோ அல்லது அதன் துணைப்பிரிவோ தயாரித்திருக்கும் எந்த ஒரு “லவ் ஜிஹாத்திற்கும்” அவர்கள் பலியாகவில்லை, எந்த ஒரு “தேச-விரோத, தீவிரவாத” இயக்கத்திற்காகவும் அவர்கள் போராட வரவில்லை. அவர்கள் மீது வீசப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள் எல்லாம், அவை எவ்வளவு தந்திரமானவை என்றாலும், பலமற்ற தடைகளை காற்று அடித்துச் செல்வதைப் போல் கடந்து செல்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காக வந்துள்ள முரட்டுத்தனமான கலகக்காரர்கள் அல்ல இவர்கள்.

அவர்களுடைய கோரிக்கை மறுக்கவியலாத அளவுக்கு எளிமையானது:

நல்ல நேரத்திலும் மோசமான காலங்களிலும் உங்களுக்கு நாங்கள் வழங்கிய உணவுக்கு ஒரு கண்ணியமான மறுபயனை திருப்பியளிக்கும் உத்திரவாதத்தை எங்களுக்குத் தாருங்கள். எங்களுடைய நலன் விரும்பிகளாக நடிக்காதீர்கள்; நீங்கள் யார் சார்பாக பேசுகிறீர்களோ அந்த ஓநாய்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்தான் நாங்கள்.

நயவஞ்சகமான வீண்பேச்சுக்கள் பேசியதெல்லாம் போதும்.

உங்களுடைய பாசாங்குகளை நாங்கள் நம்பிவிட்டதாக நினைத்து எங்களுடன் பேச வராதீர்கள்.

மேலும், அவர்கள் அமலாக்கத்துறைக்கோ, சிபிஐ-க்கோ, என்ஐஏ-வுக்கோ அல்லது வருமானவரி பட்டாளத்திற்கோ பணிந்துபோக வேண்டியவர்களும் அல்ல.

ரொட்டி மற்றும் வெங்காயத்தை வைத்துக்கொண்டே அவர்களால் உயிர்வாழ்ந்துவிட முடியும்.

“நாமாகிய அந்த மக்கள்” ஒரு எளிமையான பிரச்சினையை தீர்க்க நூறாயிரக் கணக்கில் கூடியிருக்கிறார்கள்.

குடியுரிமை சட்டம் மற்றும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஆகியவற்றுக்கு எதிரான போராட்டக்காரர்களைப் போல் அல்லாமல், தேசத்தின் எதிரிகள் என்று கட்டமைப்பதற்கான எத்தகைய ஆதாரமும் இல்லாதவர்கள்தான் அவர்கள்.

ஓட்டுக்கள் மட்டுமே தேவைப்படுகின்ற, ஆனால் வாக்காளர்களைப் பற்றிய அக்கறையில்லாத ஒரு அரசுக்கு எதிராகத்தான் நிற்கிறோம் என்பது அவர்களுக்கே தெரியும்.

ஆக, இந்தப் போட்டி எதை நோக்கியது?

80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் ஐந்து ஏக்கருக்கும் குறைவான துண்டு நிலத்தை உழுதுகொண்டிருக்கிறார்கள். சுரண்டல் வர்க்கம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருக்கிறது என்றால், அதற்கு அர்த்தம் இந்த மூன்று வேளாண்-மசோதாக்களின் வழியாகவும் ஒரு பெரும் கலகத்தை தொடங்கி வைப்பதுதான் என்பதை, அதாவது தங்களுடைய பசித்த நண்பர்களுக்காக விவசாயிகளை பட்டினித் தொழிலாளர்களாக மாற்றி, பொருளாதாரத்தை நாசப்படுத்துவதுதான் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். பெரும் மானியங்கள் பெறுகின்ற விவசாயிகள் உள்ள பல நாடுகளிலும் இது நடந்திருப்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, உலகின் மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்காவிலேயே இது நடந்திருப்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள்.

அதனால், சுத்தியும் அரிவாளும் ஒன்றுசேர்ந்துதான் இந்தப் பிடியை தடுக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

பெருநகரங்களுக்கும் நகரங்களுக்கும் மறுபெயரிடுவது, புதிய கோயில்கள் கட்டுவது, சிறுபான்மையினரை குறிவைப்பது, கற்பனையான எதிரிகளுக்கு எதிராக வன்முறையை கக்குவது, நட்பு பாராட்டாத சதிகாரர்களிடமிருந்து தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பயம்காட்டுவது என எல்லாமே தங்களுடைய ஏழ்மைப்பட்ட வாழ்வின் மீது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, மேற்கொண்டு அழிவுக்கு இட்டுச்செல்லும் கலாச்சாரப் போர்களை நோக்கிச் செல்லவும் அவர்கள் மறுக்கிறார்கள்.

ஆகையால், இத்தகைய அறிவார்ந்த எதிர்ப்புச் சுவரை எதிர்கொள்ளும் அதிகாரங்கள் அவர்களுடைய எளிய கோரிக்கைக்கு எப்படி பதிலளிக்கப் போகின்றன?

அவர்கள் போரை அறிவிப்பார்களா, அல்லது இந்த முற்றுகையினால் மிக மோசமான காலகட்டங்களிலும் அமைதியான முறையில் நிலத்தை உழுத்த மண்ணின் மகன்கள் மற்றும் மகள்கள் கேட்கும் கேள்விக்கு அடிபணிவார்களா?

நமக்குத் தெரியாது.

ஆனால், வரப்போகும் நாட்களில் தங்களுடைய உருளைக்கிழங்கையும் பாஸ்தாவையும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறவர்கள் கவர்ச்சி நடிகைகள் மற்றும் தேசியவாத கோஷங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த உணவு உற்பத்தியாளர்களுடனான உறவைப் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம், மீடியாக்கள் அரிசி, கோதுமை, பூண்டு, வெங்காயம், கடுகு எண்ணெய் மற்றும் காளான்களுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம், உறக்கத்தில் இருக்கும் 70 சதவிகித இந்திய மக்கள் விழித்துக்கொள்ளலாம்.

ஒரு பெரிய எழுத்தாளர் ஒருமுறை கேட்டார்: ஒரு மனிதனுக்கு எவ்வளவுதான் நிலம் வேண்டும்? அவர் இந்தக் கேள்வியை ஒரு விவசாயியை பார்த்துதான் கேட்டிருக்க வேண்டும் – எல்லோருக்கும் போதுமானதை உற்பத்தி செய்யும் அளவு, சுயமாக கண்ணியத்துடன் வாழும் அளவு.

தமிழில்: மர்மயோகி
நன்றி: thewire.in
பத்ரி ரெய்னா – டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்

 

Total Page Visits: 282 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *