விவசாயிகளின் தலைவன் மகேந்திர சிங் திகாயத் – திலீப் அஸ்வதி

எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டம் என்று
அதிகாரிகளாலேயே வர்ணிக்கப்பட்ட இந்த கூட்டத்தில்
அரசுக்கு எதிராக ஒருமித்த குரலில்
கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மின்கட்டண உயர்வை எதிர்த்து 1987-ல் திகாயத் போராட்டம் நடத்தியபோது, அது தொடர்பாக, 1987 ஏப்ரல் 30, இந்தியா டுடே ஆங்கில இதழில் வெளிவந்த, திலீப் அஸ்வதியின் கட்டுரையை தமிழில் ஒரு நினைவூட்டலுக்காக வெளியிடுகிறோம். புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து வடஇந்திய விவசாயிகள் கிளர்ந்து எழுந்திருப்பதைப் பார்க்கும்போது நமக்கு திகாயத் நினைவுக்கு வருகிறார்.

“லக்னோவிலோ டெல்லியிலோ அமர்ந்திருப்பவர்கள் எங்களுடைய விதியைத் தீர்மானிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. எங்கள் விதியை நாங்கள்தான் தீர்மானிப்போம்,” திகாயத்தின் இந்த வார்த்தைகள் இன்றைக்கும் இந்திய விவசாயிகளின் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க வேண்டியது அவசியமாகிறது. சௌத்ரி மகேந்திர சிங் திகாயத் 1988-ஆம் ஆண்டு டெல்லியில் நடத்திய முற்றுகைப் போராட்டம் ஒரு மாதகாலம் நீடித்ததால், தலைநகரமே ஸ்தம்பித்துபோனது. இந்திய அரசின் அதிகாரம் ஆட்டம் கண்டது. இதில் ஏற்பட்ட படிப்பினையின் காரணமாகத்தான் , டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு என்றே தனியாக, ஜந்தர் மந்தர் பகுதியை சட்டப்பூர்வமாக ஒதுக்கியது நரசிம்மராவ் தலைமையில் இருந்த மத்திய அரசு.

மேற்கு உத்திரப்பிரதேசத்தின் அதிகாராம்மிக்க தலைவர்

சௌத்ரி மகேந்திர சிங் திகாயத், 52 வயதில் ஒரு ஜாட் தலைவருக்கே உரித்தான உருவம். ஒரு பெருமைமிக்க, பயமில்லாத மனிதர், தன்னுடைய காலணிகள் மீது ஆறு அடிக்கும் அதிகமான உயரத்துடன் நிற்கின்ற அவருடைய குடும்பம்தான், பல தலைமுறைகளாக, மேற்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் இருக்கும் 84 கிராமங்களை ஆண்டு வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக அவர் இன்னமும் உயரமாக நிற்கிறார் – வீர் பகதூர் சிங்கின் முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து விளைவிப்பவராக அதிகரித்துக்கொண்டே வரும் விவசாயிகளின் கிளர்ச்சிக்கு தலைமையேற்றிருக்கிறார். “லக்னோவிலோ டெல்லியிலோ அமர்ந்திருப்பவர்கள் எங்களுடைய விதியை தீர்மானிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. எங்கள் விதியை நாங்கள்தான் தீர்மானிப்போம்.”

அந்த அறைகூவலுடன், மகேந்திர சிங் மற்றும் அவருடைய ஜாட் சகோதரர்கள் ஒரு போராட்ட இயக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள், இந்த இயக்கம் இரண்டு விவசாயிகள் மற்றும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூன்றுபேரை ஏற்கனவே பலிவாங்கிவிட்டது. விவசாயிகள் சமரசம் செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை என்பதும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இந்தக் கிளர்ச்சி உண்மையில் மாதாந்திர மின்சார கட்டணத்தை 1 ஹார்ஸ்பவருக்கு(ஹெச்பி) 22.50 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக அதிகரித்தமைக்கு எதிராகத்தான் தொடங்கியது. ஆனால், மாநில அரசால் கட்டணக்குறைப்பு திருத்தத்திற்கு உத்தரவிடப்பட்டு 25 ரூபாயாக குறைக்கப்பட்டபோதிலும் அவர்களுடைய தீவிரமான மனநிலை ஆறிப்போகவில்லை.

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும், உத்திரப் பிரதேசத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஜாட் தலைவராக உருவெடுத்திருக்கும் மகேந்திர சிங்கின் அழைப்பின் பேரில், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஜாட் மக்கள் தங்களுடைய பெரும் வலிமையைக் காட்டும் வகையில் முசாபர்நகரில் உள்ள ஷாம்லியில் குவிந்தனர்.

எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டம் என்று அதிகாரிகளாலேயே வர்ணிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் மாநில அரசுக்கு எதிராக ஒருமித்த குரலில் கோஷங்கள் எழுப்பப்பட்டன – அத்துடன், மகேந்திர சிங் எப்படிப்பட்ட அதிகாரம் கொண்டவராக விளங்குகிறார் என்பதையும் இது உறுதிப்படுத்தியது. “அவருடைய உத்தரவுகள் அங்குள்ள மக்களின் தோத்திரங்கள் ஆயின. நாம் சாகும்வரை போராட வேண்டும் என்று அவர் கூறினால், அங்குள்ள மக்கள் அதற்குத் தயாராக இருந்தனர்.”

அவருடைய செல்வாக்கை மேற்கொண்டு அளவிட வேண்டுமானால், ஜாட் மக்களின் ஓட்டுக்களை தங்கள் கையில் வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் அரசியல் சக்திகளிடமிருந்து வந்த ஆதரவை மகேந்திர சிங் ஒதுக்கித் தள்ளியதைத்தான் சொல்ல வேண்டும். லோக் தள்(ஏ) தலைவர் அஜீத் சிங் மற்றும் லோக் தள்(பி) தலைவர் வீரேந்திர வர்மா ஆகியோர் உதவி செய்யும் நோக்கத்துடன் மகேந்திர சிங்கை அனுகியுள்ளனர், அதற்கு மகேந்திர சிங் அவர்களிடம், ‘முதலில் அவரவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள் அதன்பிறகு கைகோர்க்கலாம்’ என்று மிக வெளிப்படையாக கூறியிருக்கிறார். பண வகையிலான உதவிகளும் அவரால் நிராகரிக்கப்பட்டன.

குறிப்பிடும்படியாக, இந்த விவசாயிகள் கிளர்ச்சிக்கு, இந்த வருடம் ஜனவரி 14 அன்று மகேந்திர சிங் இந்தக் காட்சியில் அடியெடுத்து வைத்த பின்னரே பெரும் வலிமை கிடைத்திருக்கிறது – அன்றைய தினம்தான், உத்திரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களையும், ஹரியானாவின் சில பகுதிகளையும் சேர்ந்த, 40 லட்சம் ஜாட் மக்களுக்கு பிரதிநிதிகளாக இருக்கின்ற, 18 ஜாட் வம்சாவளிகளுடைய சௌத்ரிகள் (தலைவர்கள்) மகேந்திர சிங்கை சந்தித்துப் பேசினர்.

ஷாம்லியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், மகேந்திர சிங்கின் சொந்த ஊரான சிசோலி கிராமத்தில் ஒரு பிரத்யேகமான ‘பஞ்சாயத்து’ கூட்டப்பட்டது. அங்குதான் தங்களுடைய உரிமைகளுக்காக போராடுவதென்று அவர்கள் தீர்மானித்தனர். முதலாவது மோதல் மார்ச் 1 அன்று நடந்தது, அச்சமயத்தில் ஷாம்லியில் நடந்த தர்ணாவின்போது போலீஸ் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த வன்முறையில் மூன்றுபேர் பலியாகினர். ஜாட் விவசாயிகள் சிசோலியை கோட்டையாக மாற்றினர். கம்புகள் மற்றும் ஈட்டிகள் ஏந்திய விவசாயிகள் 24 மணிநேரமும் ரோந்து சுற்றினர். அவர்கள் ஏறக்குறைய ஒருவார காலத்திற்கு அங்கே தனி அரசாங்கத்தையே நடத்தினர். போலீஸ்காரர் யாராவது கண்ணில் பட்டாலே அவர்களுக்கு போர் முழக்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர்களுடைய ஒட்டுமொத்த குற்றச்சாட்டுமே மின்சாரத்தைப் பற்றியதுதான். அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு உரிய மின்சாரம் கிடைக்காமலேயே பல வருடங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்திருக்கிறார்கள். முக்கியமான நீர்ப்பாசன காலகட்டத்திலோ அல்லது கதிரடிப்பு காலத்திலோ, இரண்டில் இருந்து நான்கு மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் கிடைப்பதில்லை, ஆனால் தொழிற்சாலைகளுக்கு மட்டும் இடைவிடாத மின்சாரம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. விவசாயிகளுடைய போர்வெல் பெரும்பாலான நாட்களுக்கு வறண்டே கிடந்திருக்கிறது. நாட்டுப்புற பகுதிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட மின்சாரத்தில் பெரும்பகுதி சட்டத்திற்கு புறம்பான வகையில் தொழில்துறையினருக்கே ஒதுக்கப்படுகிறது என்பதை உத்திரப் பிரதேச மின்சார வாரியமே ஒப்புக்கொண்டுள்ளது.

இதுவரையில், விவசாயிகள் தங்களுடைய கிளர்ச்சியை கைவிடும் எண்ணத்திலேயே இல்லை. சொல்லப்போனால், அது இன்னமும் வன்முறையானதாக மாறும் என்றுதான் தெரிகிறது. கதிரடிப்பு காலம் நெருங்கிவிட்டதாலேயே அவர்கள் முழுவீச்சில் போராட்டத்தில் இறங்கவில்லை. மகேந்திர சிங் திகாயத் போர்ப் பாதையை தேர்ந்தெடுக்க முடிவு செய்துதிருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்கூட மாநில அரசாங்கம் அவமானப்படுவதில் இருந்து  காப்பாற்றாது.

தமிழில்: மர்மயோகி
நன்றி: indiatoday.in

 

 

Total Page Visits: 417 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *