நச்சு மண்டலமாகிவிட்ட எண்ணூர்-மணலி

மாசுபட்ட எண்ணூர் மணலி பகுதியின்
ஒழுங்குமுறையில் கருந்துளை;
60 சதம் நேரத்தில் பெரிய ஆலைகள்
புகை வெளியேற்ற விதிகளுக்கு கட்டுப்படுவதில்லை
– ஆய்வில் கண்டறிவு!
சென்னை, 07 நவம்பர் 2020: மாசுபடுத்தும் ஆலைகள் புகை வெளியேற்ற விதிகளை கண்டுகொள்வதில்லை. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் சட்டங்களை அமலாக்கம் செய்வதில் தவறியுள்ளது. இவற்றின் காரணமாக எண்ணூர் மணலி பகுதி நச்சு மண்டலமாக மாறிவிட்டிருக்கிறது என்று, மாநகரத்தில் செயல்படும் சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவின் ஆய்வு காட்டுகிறது. இந்த பகுதியில் உள்ள ஆறு மிகப்பெரும் மாசுபாடு ஏற்படுத்தும் ஆலைகள் 2019ல் சட்ட விதிகளை மீறி 59 சதம் நேரங்களில் செயல்பட்டன என்று இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
அட்டவணை சாதியினர் உள்ளிட்ட பெரும் விகித விளிம்புநிலை சமூகப் பிரிவினர் இப்பகுதியில் வாழ்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய ஆய்வு, “ஏற்கனவே மிகையாக மாசுபட்டுள்ள இப்பகுதியில் மாசுபடுத்தும் ஆலைகளை இன்னமும் கூடுதலாக அனுமதிப்பது என்ற அரசின் முடிவும் தற்போதிருக்கும் ஆலைகளைக் கட்டுப்படுத்துவதில் TNPCBயின் ஒட்டுமொத்த தோல்வியையும் பார்க்கும்போது, இது சுற்றுச்சூல் சாதியவாதமே அன்றி வேறல்ல என்பது தெளிவாகிறது” என்று ஆய்வறிக்கை விவாதத்தை முன்னெடுக்கிறது.
TANGEDCOவின் வடசென்னை அனல் மின்நிலையம் (NCTPS) ஸ்டேஜ் 1, NTECLன் வல்லூர் அனல் மின் நிலையம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL), தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் (TPL), மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (MPL), மெட்ராஸ் பெர்ட்டிலைசர் லிமிடெட் (MFL), ஆகியவற்றின் புகைபோக்கி வெளியேற்றங்கள் 18,59,472 மணி நேரம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆலைகள் மிகக் கடுமையான காற்று மாசுபாட்டை உருவாக்குபவை என்பதால், இவ்வாலைகளின் புகைபோக்கிகளின் உச்சியில் நிகழ் நேரப் (real time) புகை கண்காணிப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் CARE Air மையத்திற்கு இச்சாதனம் உடனுக்குடன் புகை வெளியீடு அளவுகளை அனுப்பிக்கொண்டிருக்கும்.
“விதிகளை மீறுவதாகப் புகை வெளியேற்ற தரம் இருக்கும்போது, உடனடியாக எச்சரிக்கை செய்யும் சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆலையின் நிர்வாகத்தை எச்சரிக்கை செய்யும். அதேசமயம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்/ உறுப்பினர் செயலாளருக்குத் தானாகவே எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்பி சரிசெய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கும்” என்று TNPCB சொல்கிறது. ஆனால் TNPCB ஆலைகளை கட்டுப்படுத்துகிறது என்பது ஒரு கட்டுக்கதையாகும் என்று ஆய்வறிக்கை சொல்கிறது.
மாநிலத்தின் மிகப்பெரும் மாசுபாட்டு புள்ளிவாயில் (point source) என்று குறிப்பிடத்தக்க, ஆண்டுக்கு 10.5 மில்லியன் டன் திறன் உள்ள CPCL எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், புகை வெளியேற்றத் தரங்களை 2019ல் 65 சதம் நேரங்களில் மீறுவதாக செயல்பட்டது.
சென்னை பெர்டிலைசர் ஆலை (MFL), ஆண்டின் 77 சதம் நேரங்களில் காற்று மாசுபாட்டுத் தர நிர்ணயங்களை மீறியிருக்கிறது. இந்த ஆலையில் அடிக்கடி அம்மோனியா கசிவு ஏற்படும் என்பதற்கு அப்பால், ஆண்டில் 71 சதம் நேரங்களில் MFL அம்மோனியா வெளியேற்றத்தைக் கண்காணிக்க தவறியது. போபால் விஷவாயு போன்ற மரணம் விளைவிக்க கூடிய அமிலத்தன்மை கொண்ட ஹைடிரஜன் புளூரைடு வாயு வெளியேற்றமும் 62 சதம் நேரங்களில் கண்காணிக்கப்படவில்லை. ஹைடிரஜன் புளூரைடு வாயு வெளியேற்றத்தை கண்டுகொள்ளாது விட்டுவிட்டால் அல்லது முன்னெச்சரிக்கை கட்டமைப்பு இயங்கவில்லை என்றால் மிகப் பரந்த அளவிலான அழிவு ஏற்படும்.
ஆண்டின் 58 சதம் நேரங்களில் TANGEDCOவின் வட சென்னை அனல் மின்நிலையம் ஸ்டேஜ் 1(NCTPS stage I) புகைவெளியேற்ற விதிமுறைகளை மீறியது. இந்த காலகட்டத்தின் 88 சதம் நேரங்களில் யூனிட் 1 தர நிர்ணயங்களுக்கு உட்படாமல் இயங்கிவந்தது என்று பதிவு செய்துள்ளது.
வல்லூர் NTECL ஆண்டின் 41 சதம் நேரங்களில் புகை வெளியேற்ற தர நிர்ணயங்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆண்டின் 82 சதம் நேரங்களில் நச்சு வாயுவான சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்றம் அனுமதிக்கத் தக்க அளவைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது.
மாநகரத்தின் மிகப்பெரும் குப்பைக் கிடங்கு, இரண்டு நிலக்கரி சாம்பல் புதை பள்ளங்கள், நிலக்கரி சேமிப்பு இடங்கள், இரண்டு நிலக்கரி அனல் மின்நிலையங்கள், ஒரு பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோகெமிக்கல் ஆலைகள், உரத் தொழிற்சாலைகள், மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளிட்ட 34 அபாயகர ஆலைகள், டீசல் வண்டிகள் பெருமளவு இயங்கும் மிகையான போக்குவரத்து கொண்ட வலைப்பின்னல் போன்ற சாலைகள் ஆகியவை மணலி – எண்ணூர் பகுதியில் அமைந்திருக்கின்றன.
இந்த நிலையில் மேலும் மாசுபடுத்தும் ஆலைகள் கூடுதலாக இப்பகுதிக்குள் வரவிருக்கின்றன. 3000 MW திறன் உள்ள புதிய நிலக்கரி அனல் மின்நிலையம், பிளாஸ்டிக் தொழிற்பேட்டை ஒன்று, பொன்னேரியில் கெமிக்கல் ஆலைகளின் டவுன்ஷிப், ஆண்டுக்கு 320 டன் திறன் கொண்ட அதானி துறைமுகம் (சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தின் ஒன்றிணைந்த திறன்களை போல எட்டு மடங்கு திறன்), மேலும் சாலைகள் என்று இந்த சதுப்பு நிலப்பகுதியில் புதிய திட்டங்கள் வரவிருக்கின்றன.
மணலி பழவேற்காடு பகுதிகளுக்குள் புதிய ஆலைகளை நிறுவுவதற்கும், இருக்கின்ற ஆலைகளை விரிவுபடுத்துவதற்குமான திட்டங்கள் காலவரையறையின்றி தடை செய்யப்பட வேண்டும் என்று சென்னை காலநிலை செயல்பாட்டு குழு அறைகூவல் விடுத்துள்ளது. மேலும், விதிகளுக்கு கட்டுப்படாத ஆலைகள் மீதும், தவறு செய்யும் அதிகார அமைப்பான TNPCB மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயல்பாட்டு குழு கோரியுள்ளது. தமிழ்நாடு பொதுச் சுகாதார சட்டத்தின் விதிகள் படி, ஆலை புகைபோக்கிகளிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் சென்னையின் மாநகராட்சிக்கு (GCC) இருக்கிறது. காற்று மாசுபாட்டின் காரணமாக, இப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் சுவாசப் பிரச்சனைகள் அதிகரித்து, பிற சார்பு நோய்களின் தாக்கம் அதிகரித்து, கோவிட் 19னின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் மக்கள் வாழ்கிறார்கள். இப்பகுதியின் ஆலைகள், சாலைப் போக்குவரத்து மாசுபாடுகள் ஏற்படுத்தும் சுகாதார பிரச்சனைகள் இருப்பதை GCC ஒப்புக்கொள்வதுடன், சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் ஆலைகள் மட்டுமே உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட முடியும் என்பதை TNPCBயோடு இணைந்து உறுதி செய்ய வேண்டும்.
Published by Chennai Climate Action Group
CCAG: சென்னை காலநிலை செயல்பாட்டு குழு (Chennai Climate Action Group) என்பது மாநகரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இளைஞர்கள் குழு ஆகும். நவீன தொழிற்சாலைகளின் வளர்ச்சியினால் சமூகத்தின் மீது, குறிப்பாக பிரதிநிதித்துவம் அல்லாத மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் உள்ள பங்குதாரர்களான எதிர்கால தலைமுறை, விளிம்புநிலை சமூகப் பிரிவினர் மற்றும் பல்லுயிரியம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆய்வு செய்வதும், அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் CCAGயின் பணிகளாகும்.