மோடி அரசின் வேலைவாய்ப்பு கட்டணக் கொள்ளை – காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்த  வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் பெரும்பாலானவை
ஏன் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு
முன்பு வெளியிடப்பட்டன?
இந்த வேலைகள் உண்மையிலேயே இருக்கின்றனவா அல்லது
வாக்காளர்களை ஈர்ப்பதற்கான ஒரு அரசியல் வித்தைதானா?

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ட்வீட்டில்; “மோடி அரசு இளைஞர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தேர்வுகளை நடத்த வேண்டும், நடத்திய தேர்வுகளுக்கான முடிவுகளை அறிவிக்க வேண்டும் மற்றும் பணி நியமனக் கடிதங்களை வழங்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளர். ராகுலின் மற்றொரு இந்தி ட்வீட்டில்; “12 கோடி வேலைவாய்ப்புகள் இல்லை. ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமும் இல்லை. சாமானிய மனிதனுக்கு வருமானமும் இல்லை. நாட்டில் பாதுகாப்பும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை. கேள்விகளுக்கு பதில்களும் கிடைப்பதில்லை” என்று ஆட்சிக்கு வந்தால் தாங்கள் செய்வதாக பிஜேபி வாக்குறுதியளித்த விசயங்களை நினைவூட்டியுள்ளார்.

ராகுலின் இந்த ட்வீட்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லாப் கூறியதாவது;

“ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம்(ஆர்ஆர்பி), குரூப் பிரிவில் 1,03,760 காலியான பணியிடங்களுக்கான அறிவிப்பை 23 பிப்ரவரி, 2019 அன்று வெளியிட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னர் வந்த இந்த அறிவிப்பால், மில்லியன்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால், 18 மாதங்கள் கடந்த பின்னரும், இதுவரை தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. 1.16 கோடி விண்ணப்பதாரர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணமாக ரூ.500 கோடி வசூலித்திருக்கிறது ஆர்.ஆர்.பி.”

“பிப்ரவரி 28, 2019 அன்று 35,277 என்டிபிசி (தொழில்நுட்பமற்ற பிரபலமான பிரிவுகள்) காலியிடங்களுக்கு ஆர்ஆர்பி மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இதற்கும்கூட தேர்வுத் தேதிகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்தத் தேர்வுக்காக 1.26 கோடிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, இதிலும், ஆர்ஆர்பி ரூ.500 கோடியை தேர்வுக் கட்டணமாக வசூலித்திருக்கிறது.”

“மேலும், ஆர்ஆர்பி, பிப்ரவரி 3, 2018 அன்று, உதவி ரயில் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பதவிகளில் 64,371 காலியிடங்களை நிரப்ப ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதற்கான தேர்வும் நடத்தப்பட்டது, ஆர்ஆர்பி-இன் இறுதி முடிவுகள் மற்றும் தகுதிப் பட்டியலும் டிசம்பர் 12, 2019 அன்று அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டன, ஆனால் வெற்றிபெற்ற தேர்வாளர்களுக்கு இன்னமும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை, அவர்கள் வேலையில் சேர்வதற்காக காத்திருக்கிறார்கள்.”

”2018 ஆம் ஆண்டில் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுக்கு ஆஜரான விண்ணப்பதாரர்கள் நம்பிக்கையிழந்து காத்திருக்கிறார்கள்.”

“அடுக்கு I மற்றும் அடுக்கு II தேர்வுகளைத் தொடர்ந்து, அடுக்கு III தேர்வு 2019 டிசம்பரில் நடைபெற்றது. குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவுகளில் 11,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட இருந்தன. ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பிறகும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.”

“இந்தத் தேர்வுகளில் கலந்துகொண்ட பெரும்பாலோர் வசதியான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் அல்ல. இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் 2.15 லட்சம் காலியிடங்கள். இந்த அறிவிப்புகளில் பெரும்பாலானவை தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஏன் வெளியிடப்பட்டன? இந்த வேலைகள் உண்மையிலேயே இருக்கிறதா அல்லது வாக்காளர்களை ஈர்ப்பதற்காக ‘எல்லோருடைய கணக்கிலும் ரூ .15 லட்சம் போடப்படும்’ என்ற வாக்குறுதியைப் போன்று இவைகளும்  ஒரு அரசியல் வித்தைதானா? ”

“இந்த ஆண்டு காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் இப்போது நடைபெறுமா அல்லது இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுமா? ஏன் நிலையான காலக்கெடு இல்லை?” என்று மோடி அரசின் வேலைத்தேர்வு குளறுபடிகள் பற்றிய புள்ளிவிவரத்துடன் குற்றம்சாட்டியதோடு, கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு நெருக்கடி குறித்து காங்கிரஸ் கட்சி எடுத்துரைத்து வருவதையும் வல்லப் நினைவூட்டினார்.

“ரயில்வேயின் மோசமான நிதி நிலைமை காரணமாக ஆள்சேர்ப்பு செய்யப்படவில்லையோ என்ற சந்தேகத்திற்கு பதிலளித்த வல்லப்: “அப்படியென்றால் காலியிடங்கள் ஏன் அறிவிக்கப்பட்டன? இந்த மாணவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் தேர்வுக் கட்டணத்தை மிகுந்த சிரமத்துடன்தான் செலுத்தியிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 64,000 இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ‘கோலாபுரி செருப்புக்களை’ விற்பனை செய்வதில் மும்முரமாக இருக்கும் ரயில்வே அமைச்சர் (பியூஷ் கோயல்) இந்தக் கேள்விக்கு பதிலளித்தாக வேண்டும். ”

“நாம் அரசாங்கத்திடமிருந்து வெறும் அலங்கார சொற்களையும், சாக்குபோக்குகளையும் மட்டுமே பெறுகிறோம். இப்போது பார்த்தால், அவர்கள் உருவாக்கிய இந்தக் குழப்பத்திற்கு அவர்களே கடவுளைக் குற்றம் சாட்டுகிறார்கள்,” என்று கூறினார்.

காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஒரு வீடியோ செய்தியில்; “கடின உழைப்பு மற்றும் மோசடி வேலைகளை வேறுபடுத்திப் பார்க்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், சாதாரண மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கும் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி கடினமாக உழைத்ததைப் பார்த்தோம். தற்போதைய ஆட்சியில் நடந்த மோசடி வேலைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை மைனஸ் 23.9 சதவீதமாக குறைத்துள்ளன. ஆனால், அம்பானி மற்றும் அதானியின் சொத்துக்கள் 35 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன. ஏழைகளுக்காக வேலைசெய்யும் ஒரு அரசாங்கத்தை நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது தங்களது பெருமுதலாளி நண்பர்களுக்காக வேலை செய்யும் ஒரு அரசாங்கம் வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளார்.

கொம்புக்காரன்
நன்றி: சதுரங்கம்.காம்
Total Page Visits: 46 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *