‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி

பிஜேபி எப்படி தன்னுடைய கட்சியின்
பொறுக்கித்தனமான ஐடி பிரிவுக்கு
பொறுப்பேற்க இயலாதோ அதேபோன்றுதான்
என்னைப் பின்தொடர்கிறவர்கள்
தனிப்பட்ட முறையில் பதில் தாக்குதல் நடத்தினால்
என்னாலும் பொறுப்பேற்க இயலாது.

– சுப்ரமணியன் சுவாமி

தன்னுடைய சொந்தக் கட்சியையே உள்ளபடி விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமடைந்திருக்கும் ஒரு மூத்த பிஜேபி உறுப்பினர், இந்த வாரத்தில் போதுமான அளவுக்கு வேட்டு வைத்திருக்கிறார். வழக்கறிஞரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி கறுப்பாட்டை குறிவைத்திருக்கிறார். பிஜேபியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மால்வியா நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இப்படி அவர் போட்ட டிவீட் சில நிமிடங்களிலேயே வைரலாகிப்போனது, விமர்சகர்கள் ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். போலி டிவீட்களையும், வாட்சப் செய்திகளையும் பயன்படுத்தி தனக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்துவருவதாக மால்வியா மீது சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். “பிஜேபி ஐடி பிரிவு பொறுக்கியாக மாறிவிட்டது. அதனுடைய உறுப்பினர்களுள் பலர் போலி டிவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி என்மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகிறார்கள்,” என்று பதிவிட்டுள்ள சுவாமி, “பிஜேபி எப்படி தன்னுடைய கட்சியின் பொறுக்கித்தனமான ஐடி பிரிவுக்கு பொறுப்பேற்க இயலாதோ அதேபோன்றுதான் என்னைப் பின்தொடர்கிறவர்கள் தனிப்பட்ட முறையில் பதில் தாக்குதல் நடத்தினால் என்னாலும் பொறுப்பேற்க இயலாது,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த டிவீட் வெளிவந்த சிலநிமிடங்களிலேயே அவரைப் பின்தொடர்கிறவர்கள் இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கினர். மால்வியா மீதும், அவர் தலைமை ஏற்றுள்ள ஐடி பிரிவு மீதும் தங்களுடைய சொந்தக் கருத்துக்களையும் அவர்கள் பதிவிடத் தொடங்கிவிட்டனர். இவற்றில் பலவற்றையும் மறு டிவீட் செய்துள்ள சுவாமி, மால்வியாவின் “தாக்குதல்களை” புறம்தள்ளிவிடும்படி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு அளித்துள்ள பதிலில், ஐடி பிரிவின் தலைவரை பெயர் குறிப்பிட்டு அவரை நீக்கும்படியும், ஒட்டுமொத்தமாக ஐடி பிரிவையே நீக்கிவிடும்படியும் வலியுறுத்தியுள்ளார் என்பதுடன், “நான் வேண்டுமானால் புறம்தள்ளிவிடுகிறேன், ஆனால் பிஜேபி அவர்களை நீக்கியாக வேண்டும். அசிங்கத்தைக் கொண்டு கலவரம் செய்வதே மால்வியாவின் குணமாக இருக்கிறது. நாங்கள் மரியாதை புருஷர்களைக் கொண்ட கட்சி, ராவணனையோ அல்லது துச்சாதனனையோ கொண்ட கட்சி அல்ல,” என்று கூறியுள்ளார்.

பிஜேபி கட்சிக்குள் உள்ளடி வேலை செய்கின்ற ஒருவரை சுவாமி வெளிப்படையாக பெயர் சொல்லி குறிப்பிடுவதும், சமூக வலைதளத்தில் வெகுமக்கள் பார்வைக்கு கட்சி முன்னிலையில் இருப்பதாக தெரிகின்ற ஐடி பிரிவை கலைத்துவிடும்படியும் வலியுறுத்துவது இது வேண்டுமானால் முதல்முறையாக இருக்கலாம். ஆனாலும், இந்த விவகாரம் மற்றும் தனக்கு எதிராக செய்யப்படும் “வெறுப்பு பிரச்சாரம்” குறித்த சுவாமியின் குற்றச்சாட்டுகள் கொஞ்ச காலமாகவே புகைந்துகொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பின்தொடர்கிறவர்களில் ஒருவர், “2014-இல் தேர்தல் வியூக செயல்பாட்டுக் குழுவிற்கே தலைவராக மோடியால் நியமிக்கப்பட்ட டாக்டர்.சுவாமிக்கு எதிராக, பிஜேபியின் ஐடி பிரிவுக்கு தலைமையேற்றுள்ளதாக சொல்லப்படும் மால்வியாவால், இருபதாண்டுகளுக்கு முந்தைய வீடியோக்களை சுற்றுக்கு விட்டு அவருக்கு எதிராக எப்படி தவறான தகவல்களைப் பரப்ப முடிகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சிக்குள் உள்ளடி வேலை செய்பவரை ‘வெளியேற்றும்படி’ சுவாமி வலியுறுத்துகிறார். என்பதாலேயே சமூக ஊடகத்தின் மையமாக இருக்கிறார். அதேநேரத்தில், பல்வேறு விவகாரங்களிலும் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு அவர் தயக்கம் காட்டியதே இல்லை. தொடர்ந்துகொண்டே இருக்கின்ற மிகவும் பதட்டமான இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில், “அடுத்த வாரம் நடைபெற இருக்கும் சீன வெளியுறவு அமைச்சருடனான நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சரின் சந்திப்பை இந்தியா ரத்து செய்ய வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதியை காலிசெய்யும்படி சீனாவிடமே இந்தியா கேட்டு வருவதாலும், சீனா அந்தப் பகுதியை இந்தியப் பிரதேசமாகவே அங்கீகரிக்காமல், அதிலிருந்து காலிசெய்ய மறுப்பதாலும் இந்தப் பேச்சுவார்த்தை பயனற்றது,” என்று சுவாமி கூறியுள்ளார்.

கடந்த மாதம், கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஆதரவாக நீட் நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து “அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை” எடுத்துள்ளார். பிரதமர் அலுவலகத்திற்கு தொலைப்பேசி அழைப்பு மூலமாக, இந்த விஷயம் குறித்து தனிப்பட்ட முறையில் முறையீடு செய்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து செய்துள்ள டிவீட்டில்: “கொரோனா தொற்றுக்கள் அதிவேகமாக பரவிக் கொண்டிருப்பதற்கு நடுவில் ஜேஇஇ/நீட் நுழைவுத் தேர்வுகளை நடத்துவது, பொதுமுடக்கத்தின் விளைவுகளை மறைப்பது, பொருளாதார சீர்குலைவு, பருவமழைக் காலம், சீன டிராகன் நம்முடைய பிரதேசத்தில் கொக்கரிப்பது, பாலிவுட்டில் திருடர்களும் கொலைகாரர்களும் நிரம்பியிருப்பது என, இவையெல்லாம் ஜாலியன்வாலா பாகில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படதைப் போன்றே இருக்கிறது,” என பதிவிட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சகத்தால் தயாரிக்கப்படுகின்ற திரைப்படங்கள் குறித்து அவருக்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட கருத்து இருந்து வந்திருக்கிறது. சி சண்டே கார்டியன் ஊடகத்திற்கு அளித்துள்ள வாராந்திர நேர்காணலில், இந்திய பொருளாதார நிலை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ள “கடவுளின் செயல்” என்ற கருத்துக்கு “நல்லவேளையாக அவர் என்னை குற்றம்சாட்டவில்லை,” என்று நக்கலடித்திருக்கிறார் சுவாமி.

வலதுசாரி ஆதரவுள்ள pgurus.com என்ற பிளாக்ஸ்பாட் தளம்,“சில ஐடி பிரிவு ஊழியர்கள் முதல் வேலையில்லாத குடும்பத்தலைவர்கள் வரை இந்த சந்தேகத்திற்குரிய கும்பலில் இருக்கிறார்கள். நவீன வலதுசாரிகள் என சொல்லிக்கொள்ளும் ஒரு பிரிவு சுப்ரமணியன் சுவாமி மீது அவ்வப்போது நஞ்சை உமிழ்ந்து வருகிறது. அதனுடைய விவரிப்புகள் எப்போதுமே, ‘சுப்ரமணியன் சுவாமி Vs அடல் பிஹாரி வாஜ்பாய்’ என்றோ, அல்லது ‘அடல் பிஹாரி வாஜ்பாய் அரசை சுவாமி எப்படி கவிழ்த்தார்’ என்று ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். சுவாமியும் வாஜ்பாயும் பிரபலமான அரசியல் எதிரிகள், ஜனசங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான சுவாமியை, 1980-இல் பிஜேபி உருவானபோது அதில் சேருவதற்கு தடையாக அமைந்தது இந்த விரோதம்தான். ஜனதா கட்சியிலேயே இருந்துவிட்ட சுவாமி, 1999-இல் வாஜ்பாய் அரசாங்கம் கவிழ்வதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். 1998-இல் வாஜ்பாய் பிரதமரானவுடன் அவர் சுவாமிக்கு செய்தது என்ன தெரியுமா? முதலில், அவர் சுவாமியை தன்னுடைய அமைச்சரவையில் இருந்து தள்ளியே வைத்திருந்தார், பதவியேற்ற ஐந்தே நாட்களுக்குள் ஜனதா கட்சியின் கணக்குகள் மீது வருமானவரி சோதனைக்கு உத்தரவிட்டார், என்றாலும் அதில் ஏதும் சிக்கவில்லை. ஆனால், வலதுசாரி ஆட்கள் அவரை வாஜ்பாயின் முதுகில் குத்தியவர் என்று சொல்லிக்காட்டுவதில் சோர்வடைவதே இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளது.

“சுவாமி நேருக்கு நேராகத்தான் வாஜ்பாயின் நெஞ்சில் குத்தினார். சொல்லப்போனால், வாஜ்பாய் ஆட்சி காலத்தின்போது, ஆர்எஸ்எஸ் எப்போதுமே வாஜ்பாயின் பக்கம் சாய்ந்ததால், சுவாமிக்கும் ஆர்எஸ்எஸ்-க்குமே பிரச்சினை இருந்து வந்தது. 2003 ஆண்டுவரை, ஆர்எஸ்எஸ் தலைவர் ராஜூ பையாவுக்கும் சுவாமிக்கும் இடையில்கூட பிரச்சினைகள் இருந்து வந்தன. கே.எஸ்.சுதர்சன் ஆர்எஸ்எஸ் தலைவரானபோதுதான் எல்லாப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்தன. சுதர்சனும், விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் அசோக் சிங்காலும்தான் சுப்ரமணியன் சுவாமியை சங்க பரிவாரத்திற்கு திரும்ப அழைத்துவந்து, சேதுசமுத்திர திட்டம் உட்பட பல வழக்குகளிலும் அவருக்கிருந்த சட்டத் திறமையை பயன்படுத்திக்கொண்டனர்,” என்று அந்த பிளாக்ஸ்பாட் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதே பிளாக்ஸ்பாடில் “2012-2014 காலகட்டத்தில்தான் பணம் வாங்கிக்கொண்டு டிவீட் செய்பவர்கள் சங்கப் பரிவாரம் மற்றும் பிஜேபி ஆகியவற்றோடு தொடர்புகொள்ளத் தொடங்கினர், சிலர் பிஜேபி அதிகாரத்திற்கு வந்த பின்னரும் அதிலேயே இருந்துவிட்டனர். இவர்களில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், புரோக்கர்கள், பங்கு விற்பனையாளர்கள் போன்றோர் பணம் பெற்றுக்கொண்டு டிவீட் செய்து வருகின்றனர். பிரெஸ்ட்டிடியூட் என்பதைப் போன்று இவர்கள் டிவிட்டிடியூட்கள் ஆவர். சில வலதுசாரி ஆட்கள் இப்போது ரிபப்ளிக் செய்திசேனலின் அர்னாப் கோஸ்வாமியை பாராட்டி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின்போது இதே அர்னாப்தான் ஒரு முழு அடிமையாக இருந்தார் என்பதையும், பிஜேபி தலைவர் நிதின் கட்கரிக்கு எதிராக எல்லாவிதமான அவதூறுக் கதைகளையும் அவிழ்த்துவிட்டவர் என்பதையும், மோடிக்கு எதிரான போலி என்கவுண்டர் கதைகள் மற்றும் சுஷ்மா சுவராஜுக்கு எதிரான போலிக் கதைகளை கட்டியவர் அர்னாப்தான் என்பதையும் இவர்கள் மறந்துவிட்டனர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஜேபி உண்மையில் சுவாமிக்கு அடிபணியுமா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், ஏற்கனவே மிகுந்த கோபத்தில் இருக்கும் சுவாமியை அந்தக் கட்சி மேலும் கோபப்படுத்த விரும்பாது என்பது மட்டும் தெளிவு. ஒருவேளை, அந்தக் கட்சியின் சமூக ஊடக உறுப்பினர்கள்தான் சீக்கிரத்திலேயே கலைந்துபோக வேண்டியிருக்கும் போல் தெரிகிறது.

தமிழில்: மர்மயோகி

நன்றி: https://sabrangindia.in/

Total Page Visits: 1955 - Today Page Visits: 27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *