‘பணமில்லா இந்தியா வேண்டும்’ என்கிறார் பிரதமர் – ராகுல் காந்தி

ஜிஎஸ்டி இழப்பீட்டை மறுப்பதன் மூலம்,
மத்திய அரசு மாநிலங்களைக் கடுமையான
நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.
நிர்மலா சீத்தாராமன் ஜிடிபி சரிவை
“கடவுளின் செயல்” என்று கணித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த கலகங்கள் சற்று ஓய்ந்திருக்கிறது போலும். அதனால், ராகுல் காந்தி மீண்டும் மோடி அரசின் மீது தனது கவனத்தைத் திருப்பி இருக்கிறார். கடந்த சில தினங்களாக மீண்டும் தொடர் வீடியோக்களை வெளியிட்டு, மோடி அரசின் பெருளாதார நடவடிக்கைகள் மீதான சூடான விமர்சனங்களை வீசிவருகிறார்.

கடந்த வியாழக்கிழமை ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவில்:
“பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இந்தியாவின் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் மீதான தாக்குதலாகும், இந்தியாவின் அமைப்புசாரா பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகும்,” என்று கூறியுள்ளார்.

முதல் கேள்வி: இது கருப்புப் பணத்தை அழித்ததா?

பதில்: எதுவும் செய்யவில்லை.

இரண்டாவது கேள்வி: இந்தியாவின் ஏழை மக்களுக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்த நன்மை என்ன?

பதில்: எதுவும் இல்லை. ஆனால், யாருக்கு நன்மை கிடைத்தது. இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர்களுக்கு நன்மை கிடைத்தது. எப்படி எனில், உங்கள் பையில் வைத்திருந்த பணம், உங்கள் வீடுகளில் நீங்கள் வைத்திருந்த பணம், இந்தப் பெரும் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

அது பணமதிப்பிழப்பின் குறிக்கோள்களில் ஒன்றுதான்.

அதனுடைய இரண்டாவது குறிக்கோள்:

கணினி வழியில் பணத்தை துடைத்தெடுப்பதாகும். அமைப்புசாரா பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கும் முறைசாரா தொழில்கள் பணப்புழக்கத்தில்தான் இயங்குகின்றன. சிறிய கடைக்காரர், விவசாயி அல்லது தொழிலாளி என்றாலும் அவர்கள் யாராக இருந்தாலும் பணத்தை வைத்துத்தான் வேலை செய்கிறார்கள். ஆனால், நமது பிரதமரோ பணமில்லா இந்தியா, பணமில்லா இந்துஸ்தான் வேண்டும் என்கிறார்.

பணமில்லா இந்தியாவாக இருந்தால், முறைசாரா தொழில்துறை அழிக்கப்படும். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள், பணத்தை நம்பியுள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் போன்ற, பணமின்றி வாழ முடியாதவர்கள் பாதிக்கப்படுவார்கள்,” என்று மோடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ராகுல் காந்தியின் இந்த வீடியோ வெளியிடப்பதைத் தொடர்ந்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பு தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்;
“காலாண்டு வளர்ச்சி விகிதம் மைனஸ் 23.9 சதவீதமாக குறைந்துவிட்டபோதும். பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் ஏன் இதுவரை பேசவில்லை? மயிலுக்கு உணவளிப்பதும், புகைப்பட படப்பிடிப்புக்கு ஆடைகளை மாற்றுவதும் பொருளாதாரத்தை புதுப்பிக்குமா?”

“பிரதமர் மற்றும் நிதியமைச்சர் இருவரும் இனி ஒரு கணம்கூட பதவியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டார்கள். இந்தப் பொருளாதார சுனாமி வருவது குறித்து சரியான நேரத்தில் எச்சரிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் கவனிக்க மறுத்துவிட்டனர். நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுனர்கள், காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை அவர்கள் நிராகரித்தனர். கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார பேரழிவுக்கு எதிராக ராகுல் காந்தி எச்சரித்தபோது அவர்கள் கேலி செய்தனர். இந்த நாசகரமான அரசாங்கத்தின் பிடியில் இருந்து, இந்தியாவின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் மீட்க வேண்டிய நேரம் இது.”

ரன்தீப் சுர்ஜேவாலா

“மோடி அரசாங்கம் இப்போது கடுமையான “நம்பிக்கை பற்றாக்குறையை” எதிர்கொண்டுள்ளது. மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கேளுங்கள், வங்கிகள் கடன்களையோ அல்லது நிதி உதவிகளையோ நீட்டிக்கவில்லை, நிதி அமைச்சரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்றுதான் அவர்களே உங்களுக்குச் சொல்வார்கள். வங்கிகளுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை, அரசாங்கத்திற்கு ரிசர்வ் வங்கி மீது நம்பிக்கை இல்லை. மாநிலங்களுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை. அவநம்பிக்கை மிகுந்த சூழ்நிலையே நிலவுகிறது. ஜிஎஸ்டி இழப்பீட்டை மறுப்பதன் மூலம், மத்திய அரசு மாநிலங்களைக் கடுமையான நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. அவர்கள் நிதிநெருக்கடி நிலைமைகளை உருவாக்குகிறார்கள். “இந்த வார தொடக்கத்தில் நிர்மலா சீத்தராமன் தொற்றுநோயை ஒரு “கடவுளின் செயல்” என்று கணித்துள்ளார், அதேநேரத்தில் ஜிஎஸ்டி குறைபாடுகளை மாநிலங்களுக்கு ஈடுசெய்யும் பொறுப்பை மறுப்பதற்கான மத்திய அரசின் முடிவாக அறிவித்தார்.”

“சர்வதேச தொழிலாளர் அமைப்பு 40 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவதாகக் கூறியுள்ளது. இந்தப் பொருளாதார வீழ்ச்சியின் நடுவில், 80 லட்சம் பேர் தங்கள் இபிஎஃப்ஒ கணக்குகளில் இருந்து ரூ.30,000 கோடியை திரும்பப் பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏப்ரல் மற்றும் ஜூலை 2020-க்கு இடையில் மாத ஊதியம் பெற்றுவந்த 2 கோடி பேர் வேலை இழந்ததாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்இஇ) தெரிவித்துள்ளது. “அமைப்புசாரா துறையில், பொதுமுடக்க காலத்தில் 10 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டன. நாட்டில் உள்ள 6.3 கோடி எம்.எஸ்.எம்.இ. யூனிட்டுகளில், நான்கில் ஒரு பங்கு மட்டுமே அவற்றின் திறனில் 50 சதவீதத்துடன் இயங்க முடிகிறது. மீதமுள்ளவை மூடப்பட்டிருக்கும் அல்லது நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். “செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சமீபத்திய அறிக்கை, 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மைனல் 10.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.”

“அரசாங்கமானது பொய்கள் மற்றும் பொய்களை விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும், மேலும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி சேனல்களைப் பயன்படுத்தி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் போக்கையும் கைவிடவேண்டும். இந்த நெருக்கடியின் பாதிப்பை உணர்ந்து, பொருளாதாரத்தை எவ்வாறு புதுப்பிப்பது என்ற விவேகமான ஆலோசனையில் கவனம் செலுத்தவேண்டும்,”

இவ்வாறு சுர்ஜேவாலா புள்ளிவிவரங்களுடன், ராகுல் காந்தியின் வீடியோவிற்கு விளக்கமளிக்கும் வகையில், மோடி அரசை விமர்சித்துள்ளார்.

– கொம்புக்காரன்

நன்றி: சதுரங்கம்.காம்

Total Page Visits: 265 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *