பதில் சொல்ல விரும்பாத இந்திய பாராளுமன்றம் – வசீகரன்

கேள்வி நேரம் என்பது  அரசாங்கத்தின் செயல்பாட்டை
கேள்விக்கு உட்படுத்தி தவறுகளை திருத்திக்கொள்வதற்கான
பாராளுமன்ற அதிகாரத்தை உள்ளடக்கியது.
பாராளுமன்ற ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளில்
இந்தக் கேள்வி நேரம் மிக முக்கியமானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
அரசாங்கத்தை கூடுதலாக பதிலளிக்க வைக்க இது பயன்படுகிறது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டம் வரும் 14-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர், 30 நிமிடம் கேள்வி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலையில் தொடங்கும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தாமதமாகத் தொடங்குகிறது. அதே கொரோனாவை காரணம்காட்டி கேள்வி நேரத்தையும் குறைத்திருக்கிறது மத்திய பிஜேபி அரசு.

கேள்வி நேரம் என்பது பாராளுமன்ற கூட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். இந்த நேரத்தில் எம்பி-க்கள் அரசாங்கத்தைக் கேள்விகேட்க அனுமதிக்கப்படுவார்கள். பாராளுமன்ற நடைமுறையை எப்படி பிரிட்டிஷ்  ஆட்சியிடமிருந்து, சுதந்திர இந்தியா எடுத்துக்கொண்டதோ, அதுபோலவே, இந்தக் கேள்விநேர நடைமுறையும் பிரிட்டிஷ் அரசிடமிருந்துதான் எடுத்துக்கொள்ளப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பே, பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டமன்றங்களிலேயே, இந்தக் கேள்வி நேரம் நடைமுறையில் இருந்தது. கேள்வி நேரம் என்பது  அரசாங்கத்தின் செயல்பாட்டை கேள்விக்கு உட்படுத்தி தவறுகளை திருத்திக்கொள்வதற்கான பாராளுமன்ற அதிகாரத்தை உள்ளடக்கியது. பாராளுமன்ற ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளில் இந்தக் கேள்வி நேரம் மிக முக்கியமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்தை கூடுதலாக பதிலளிக்க வைக்க இது பயன்படுகிறது. இப்படிப்பட்ட வெளிப்படையான பாராளுமன்ற நடைமுறைதான், பாராளுமன்ற ஜனநாயகத்தின் இதயமாகும்.

இந்திய பாராளுமன்றத்தினுடைய கேள்வி நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு வரலாற்று நிகழ்வாக, முந்த்ரா நிதி ஊழல் சொல்லப்படுகிறது. 1957-ஆம் ஆண்டில், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகம், கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் என்ற தொழிலதிபரின் நிறுவனத்தில் செய்த சந்தேகத்திற்குரிய முதலீடு குறித்து, நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியிடம், கேள்வி நேரத்தைப் பயன்படுத்தி, பீகாரைச் சேர்ந்த மக்களவை எம்.பி.ராம் சுபாக் சிங் கேள்வி எழுப்பினார். இது சுதந்திர இந்தியாவின் முதல் நிதி ஊழலைக் கண்டுப்பிடிப்பதற்கும், நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நேருவின் அமைச்சரவையில் இருந்து பதவி விலகுவதற்கும் வழிவகுத்த தொடர் நிகழ்வாக அமைந்தது. ஒரு பாராளுமன்ற ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு, இந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட்டதே சிறந்த உதாரணமாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலில் சிக்கிய   T.Tகிருஷ்ணமாச்சாரி

இந்தியாவின் கெட்ட நேரம், இப்போது அமைந்திருக்கும் மோடி அரசானது, யாருக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, தன்னை யாரும் கேள்வி கேட்பதையே விரும்பாத அரசாக உள்ளது. அதனால்தான், தன்னை கேள்வி கேட்கும் எல்லோரையும் அது தேசவிரோதி என்கிறது.

அதேசமயம், எதிர்க்கட்சிகளிடம் நரேந்திர மோடி அரசைப் பார்த்துக் கேட்க நூற்றுக்கணக்கான கேள்விகள் இருக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் மோடி அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் பல கேள்விகளை எழுப்பக்கூடியவை. கொரோனா காலத்திற்கு முன்பும், கொரோனா காலத்திலும் ஏற்பட்ட பொருளாதார சரிவு, பெரும் முதலாளிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்தது, புதிய தேசிய கல்விக்கொள்கை, 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுத் திட்டம். இப்படி மோடி அரசின் ஒவ்வொரு திட்டமும் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகின்றன. அதேநேரம், மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான வாய்ப்புகளையும் மத்திய அரசு குறைத்துவிட்டது. ஆனால், மோடி அரசோ தங்களின் எந்த திட்டத்திற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என தானே விளம்பரப்படுத்திக் கொள்கிறது.

மேலும், மோடி அரசை பின் நின்று இயக்கும் இந்துத்துவ சக்திகள், கடந்தகால அரசியல் நிகழ்வுகளையும், கடந்தகால அரசியல் தலைவர்களையும் குற்றம்சாட்டி, மக்களை திசைத்திருப்புகின்றன. இதே வகையில் பேச்சைப் பெருக்கிக் கொண்டே செல்வதன் மூலம், மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, மோடி அரசை நோக்கி கேள்வி எழாமல் பார்த்துக்கொள்கின்றன.

       ரொமிலா தாப்பர்

“கேள்விகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற இப்போதைய சூழல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் அளித்த  பதிலைத்தான் நாம் இப்போது  நினைவுகூற வேண்டியுள்ளது: “இதற்கு உண்மையில் அவர்களுடைய பாதுகாப்பின்மையே காரணம். இல்லாவிட்டால் ‘வாருங்கள், எதிர்க் கருத்துக்களாக இருந்தாலும் பேசுவோம்’ என்றே சொல்வார்கள். இது அவர்களுடைய பலவீனத்தின் வெளிப்பாடு என்றே நினைக்கிறேன்” என்கிறார் ரொமிலா தாப்பர்.

நன்றி: சதுரங்கம்.காம்

Total Page Visits: 78 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *