தீர்ப்புக்கள்தான் நீதிமன்றத்தின் மரியாதை, கண்டனங்கள் அல்ல: அருந்ததி ராய்

நவீன காலத்து இந்தியா எப்படி செயல்படுகிறது
– அல்லது எப்படி செயல்படாமல் இருக்கிறது
என்பதைப் புரிந்துகொள்ள விரும்புகின்ற எவரும்
கட்டாயம் படிக்க வேண்டிய
ஒரு நினைவுச்சின்ன பொது ஆவணம்தான்
பிரசாந்த் பூஷண் அளித்துள்ள பிரமாண பத்திரம். 

வணக்கம்.

2020-ஆம் ஆண்டு இந்தியாவில், மைனஸ் 23.9 ஜிடிபி நிலவுகின்ற யுகத்தில், மிகவும் பழமையான பேச்சுரிமை குறித்து விவாதிப்பதற்கு நாம் கூட வேண்டியிருப்பது பரிதாபத்திற்குரிய விஷயம்தான் – இந்தப் பேச்சுரிமைதான் ஜனநாயகம் செயல்படுதற்கு மிகவும் அடிப்படையான அம்சமாக விளங்கி வந்திருக்கிறது.

மற்றொருபுறம், நாம் எல்லோருமே ஒன்றுதான் என்று நம்மை நாமே அழைத்துக்கொள்வதை இனிமேல் விட்டுவிட வேண்டியதுதான் போலிருக்கிறது – ஏனென்றால், பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் நாம் மண்டியிட்டுத்தான் கிடக்கிறோம். கடந்த சில வருடங்களில் நம்முடைய நாடு – திடீரென்று எந்தவித விளக்கமும் தரப்படாமல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம், முரட்டுத்தனமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கம், குடிமக்கள் சீர்திருத்த சட்டத்தின் வழியாக நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிகள், குளறுபடியான கொரோனா பொதுமுடக்கம் – இப்படி செயற்கையாக தூண்டப்பட்ட மாரடைப்புகளால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்த மாரடைப்புகள் எப்போதும் சத்தமில்லாத தாக்குதல்களாகத்தான் இருந்திருக்கின்றன – நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சாதாரணமாக நடப்பது போன்று அவை முன்பே இருந்துவந்த நோய் எனும் முகமூடி அணிந்திருந்தன. இந்த வகையில் நம்முடைய நாட்டின் நோய் என்னவென்றால் இரைச்சலான இடைவிடாத பிரச்சாரமும், இந்தச் சரிவை தடுப்பதற்கு அரசு இயந்திரங்கள் கடமையாற்றத் தவறியதும்தான். இதில் நீதித்துறையும் அடங்கும். நம்முடைய இதயம் நின்றுபோய்க் கொண்டிருக்கிறது. நிறைய கல்வியாளர்கள், செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அறிஞர்கள் போன்று, நம்முடைய நிலை குறித்து நமக்கு நீண்டகாலமாக எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்த மருத்துவர்களுள் ஒருவர்தான் பிரசாந்த் பூஷண். அவரையே காயப்படுத்தும் அளவுக்கு இப்போது அவரையும் குற்றவாளி ஆக்கிவிட்டார்கள்.

தோல்விப் பட்டியல்

குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான சட்டப்பூர்வ வாதங்களுக்கும் அப்பால், இந்த 2020-ஆம் வருடத்திய நீதிமன்ற கண்டனத்திற்கு அளித்துள்ள தன்னுடைய நீளமான பதிலில், இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக செயல்படுவதிலும், உயிர் வாழ்வதற்கும் சுதந்திரத்திற்கும் உண்டான குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும், குறுக்கு புத்தியுள்ள பெரும்பான்மைவாதத்தை நோக்கி அது சாய்வதைத் தடுப்பதிலும், செயல்பாடின்மை மற்றும் அலட்சியம் ஆகிய வகைகளில் உச்சநீதிமன்றம் தோல்வி அடைந்துவிட்டது என்பதை நிறுவுவதற்கு எண்ணிறைந்த விஷயங்களை பிரசாந்த் பூஷண் பட்டியலிட்டிருக்கிறார்.

இவற்றில் அடங்கக்கூடியவை என்று பின்வருவனவற்றை சொல்லலாம்: கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வாக்கில், சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான காஷ்மீரி மக்களில் சிலருடைய உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்கள், இணையத்தள முடக்கம் (என்னுடைய பார்வையில் இது மனிதகுலத்திற்கே எதிரான குற்றமாகும்), அசாமில் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பை மேற்கொள்வதில் உச்சநீதிமன்றத்தின் பங்கு (இது பல்லாயிரக்கணக்கான மக்களை இந்தப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும், அந்த மக்களின் வெளியில் சொல்ல முடியாத பாதிப்புகளுக்கும் காரணமாக அமைந்தது), ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வளாகங்களில் காவல்துறையாலும் இடதுசாரி குண்டர்களாலும் நடத்தப்பட்ட தாக்குதல், நீதிபதி லோயாவின் மர்ம மரணம், ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் அரசாங்கத்தை சுற்றியிருக்கும் ஊழல், பொதுமுடக்கத்தின்போது தங்களுடைய கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நூற்றுக்கணக்கான, சிலசமயம் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு கால்நடையாகவே செல்ல வேண்டியிருந்த, பல லட்சம் மக்களின் படுபயங்கரமான இடப்பெயர்வில் இருந்து, தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு குறுக்கிட மறுத்த நீதிமன்றத்தின் செயல்.

பிரஷாந்த் பதிலளித்துள்ள பிரமாண பத்திரத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சிலர் பெயர் குறிப்பிட்டு அவர்கள் சம்பந்தப்பட்டுள்ள வெறுக்கத்தக்க ஊழல் குற்றச்சாட்டுகள் பலவும் விவரமாக தெரிவிக்கப்பட்டிருந்தன. நவீன காலத்து இந்தியா எப்படி செயல்படுகிறது – அல்லது எப்படி செயல்படாமல் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விரும்புகின்ற எவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நினைவுச்சின்ன பொது ஆவணம்தான் அந்தப் பிரமாண பத்திரம்.

ஆனால், இப்போது பிரஷாந்த் குற்றவாளியாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார், இந்த விஷயங்களை எல்லாம் நம்மால் தேடிப்பார்க்காமலோ, கேள்வி கேட்காமலோ அல்லது இவற்றைப் பற்றி எழுதாமலோ இருக்க முடியாது. நாம் அவருடைய உதாரணத்தைப் பின்பற்றியாக வேண்டும், அவர் வெளிப்படுத்தியுள்ள துணிச்சலின் மீது நம்மை கட்டமைத்துக்கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தை “அவதூறு செய்தது” மற்றும் “அதன் கண்ணியத்தை தரம்தாழ்த்தியது” ஆகியவற்றிற்காக பிரஷாந்த் பூஷணை குற்றவாக்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அவருக்குத் தரப்பட்ட தண்டனையின் அளவு – ஒரு ரூபாய் அபராதம் என்ற குறியீட்டுரீதியான தண்டனை – ஆகியவற்றுக்கு இடையில் ஒரு முழு பூசணிக்காய் மறைக்கப்பட்டிருக்கிறது. பிரஷாந்த் இந்த தண்டனையை எதிர்க்க திட்டமிட்டிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான், ஏனென்றால் இந்த தீர்ப்பு நிலைபெற்றிருக்கும் வரையில், புகழ்பெற்ற குடும்பங்களைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களாக பிரபலமடைந்திராத நமக்கு, மிகவும் ஆபத்தான ஒரு சூழ்ச்சி வலையாகத்தான் அது இருக்கப் போகிறது.

சமீபத்திய வருடங்களில், வேறு சிலரும்கூட நீதிமன்ற அவமதிப்புக்கு தண்டனை பெற்றிருக்கிறார்கள். இவர்களில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி – ஒரு தலித் நீதிபதி – கர்ணனும் அடங்குவார். அவர் சட்ட அவமதிப்பின் வேறு ஒரு பிரிவின் கீழ் – அதாவது நீதித்துறை நிர்வாகத்தில் குறுக்கிட்டதற்காக – ஆறுமாதம் சிறை என்று தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதியான மாத்யூஸ் நெடும்பாராவுக்கு 2019-ஆம் ஆண்டில், “கண்டிக்கத்தக்க குற்றச்சாட்டுகள்” மற்றும் நீதிமன்றத்தை “ஆக்கிரமிப்பு” செய்ய முயற்சி செய்தது ஆகியவற்றிற்காக தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு இடைநீக்கத்துடன் கூடிய மூன்றுமாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஒரு வருடத்திற்கு நீதிமன்றத்தில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது. இவை இரண்டில் எந்த ஒன்றிற்குமே குறியீட்டு தண்டனைகள் என்ற வாய்ப்பு தரப்படவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற வகையிலும், தன்னிச்சையான பொதுமக்கள் ஆதரவு என்ற வகையிலும் வெவ்வேறு நபர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு விதமான நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

மேல்-சாதி ஆணாதிக்க வாடை

என் விஷயத்தில் சொல்ல வேண்டுமானால், 2002-ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பிற்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி வரம்புமீறிய, ஆபாசமான மற்றும் அவதூறான ஒன்றாக இருந்ததை நான் தெரிந்துகொண்டேன். நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய “குற்றங்கள்” எந்த வகையிலும் ஒரேமாதிரியானவை அல்ல என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது, பிரசாந்தின் பொதுச்சேவை சாதனை இவை எல்லாவற்றிலும் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது.

இருந்தாலும், இந்த விஷயங்களில் எல்லாம் மேல்சாதி ஆணாதிக்கத்தின் வாடை நிச்சயமாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்காமல் விடமுடியாது. நம்முடையதைப் போன்ற சமத்துவமற்ற, சாதியை சுமந்திருக்கின்ற மற்றும் ரொம்பவே பாலியல் பாகுபாடு கொண்ட சமூகத்தில், எல்லா வகையான பாகுபாடுகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நீதிமன்றங்களுடைய கடமை மட்டுமல்ல, நம் எல்லோருடைய கடமையும் ஆகும்.

“நீதிமன்றத்தை அவதூறு செய்தல்” மற்றும் “அதன் கண்ணியத்தை தரம்தாழ்த்துதல்” ஆகிய பிரிட்டிஷ் காலத்து கருத்தாக்கங்களை வைத்துக்கொண்டு, சட்ட அவமதிப்பில் உள்ள பிரிவை ரத்து செய்வதன் மூலம் நீதிமன்ற அமைப்பு தன்னுடைய அதிகாரத்தைக் குறைத்துக்கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது – சொல்லப்போனால், தன்னுடைய தீர்ப்புக்களின் மூலமாகத்தான் மரியாதையைப் பெற முடியுமே தவிர, இப்படிப்பட்ட கேலிக்குரிய சட்டத்தின் மூலமாக அல்ல என்பது அந்த நீதிமன்ற அமைப்புக்கே நன்றாகத் தெரியும்.

இந்த சட்டம் நீக்கப்படுவதற்கான வாய்ப்பில்லை என்ற நிலையில், அதனை தேவையற்ற ஒன்றாக மாற்றுவதற்கு நாம்தான் கடுமையாக முயற்சித்தாக வேண்டும். வேண்டுமென்றோ, தேவையில்லாமலோ நீதிமன்றத்தை அவமதிக்காமல், பிரசாந்த் பூஷணைப் போன்று நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களுடைய தீர்ப்புக்களை மனசாட்சியுடனும் பொறுப்புணர்வுடனும் நம்முடைய மனதில் உள்ளதைப் பேசுவதன் மூலம் நம்மால் அதை செய்ய முடியும்.

நன்றி.

தமிழில்: மர்மயோகி

Source Credit: https://scroll.in/ 

Total Page Visits: 118 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *