ராகுல் காந்தியை பற்றிய தவறான மதிப்பீடுகள் – ராஜ்மோகன் காந்தி

சுதந்திரத்திற்காக, சமத்துவத்திற்காக,
இந்தியாவின் சகோதரத்துவத்திற்காக செயல்படுகின்ற யாரும்
இன்றைக்கு என்னுடைய கூட்டாளிதான்.
அவர் காங்கிரசில், கம்யூனிஸ்ட் கட்சியில்,
தேசியவாத காங்கிரசில், திருணமூல் காங்கிரஸில்,
திமுக-வில் என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

ராமச்சந்திர குஹா எனக்கு ஒரு சிறந்த வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல் விமர்சகர் என்பதற்கும் மேலானவர். அவர் எனக்கு ஒரு சிறந்த நண்பர். NDTV.com-இல், எதிர்கால தேசிய அளவிலான தேர்தலில், ராகுல் காந்தியால் நரேந்திர மோடிக்கு மாற்றான காங்கிரஸ் தலைவராக இருக்க முடியாது என்பதற்கு “ஐந்து காரணங்களை” குறிப்பிட்டு, அவர் எழுதியுள்ள கட்டுரைக்கு கருத்து சொல்ல, இந்த நட்பே மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

மோடிக்கு மாற்றான தேர்தல் வேட்பாளர் என ராகுல் காந்தியை பெரிதுபடுத்திக் காட்டுகின்ற கண்ணோட்டத்திற்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என்பதாலேயே,  குஹாவின் கருத்துக்களை சிறுமைப்படுத்தி நான் அவருக்கு பதில் சொல்லவில்லை. 2024-ஆம் வருடம் என்பது வெகுதொலைவில் இருக்கிறது, அச்சமயத்தில் எதிர்கட்சியாக இருப்பதற்கென்று இந்த நாடு தேர்ந்தெடுக்கக்கூடிய பல கட்சிகளுள் ஒன்றாகத்தான் காங்கிரஸ் கட்சியும் இருக்கப்போகிறது. குஹாவின் கட்டுரையுடனான என்னுடைய பிரச்சினைகள் வேறுவிதமானவை.

அவற்றை சொல்வதற்கு முன்பு, குஹா குறிப்பிட்டுள்ள ஐந்து காரணங்களை நான் இங்கே பட்டியலிடுகிறேன். குஹாவின் கூற்றுப்படி முதலாவதாக, ராகுலின் கோஷங்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவை. அடுத்தபடியாக, ராகுலின் பேச்சுத்திறமைகள் பலவீனமானவை, குறிப்பாக அவருடைய இந்தி. மூன்றாவதாக, ஒரு அரசுத் துறையையோ அல்லது ஒரு தனியார் நிறுவனத்தையோ நிர்வாகம் செய்துள்ள அனுபவம் எதுவுமே ராகுலிடம் இல்லை. நான்காவதாக, அவரிடம் தாக்குப்பிடிக்கும் திறனும் தீவிரமான உறுதிப்பாடும் இல்லை. இறுதியாக, குஹாவின் மதிப்பீட்டின்படி, உண்மையான அல்லது கண்டுபிடித்து சொல்லப்பட்ட தோல்விகளுக்கு, எந்த வம்சாவளியினுடைய முன்னோர்களை குற்றம்சாட்ட மக்கள் தயாராக இருந்தார்களோ அந்த வம்சாவளியைச் சேர்ந்த வாரிசாக ராகுல் இருக்கிறார்.

குஹாவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால் “இந்துத்துவத்திற்கு எதிரான போர்” என்று இந்தக் கட்டுரை குறிப்பிடுகின்ற விஷயத்துடன் உள்ள என்னுடைய பிரச்சினை என்பது பிரதானமாக ஒரு தேர்தல் விவகாரமே ஆகும். நாம் மற்றொரு தேசிய தேர்தலை எதிர்கொள்வதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பாகவே, இப்போது நம் கண்களுக்கு முன்னால் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டாக வேண்டும்: அதாவது, நம்முடைய ஜனநாயக மாளிகை தரைமட்டமாகிவிடாமல் பாதுகாத்து வைத்திருக்கின்ற தூண்கள் படிப்படியாக அகற்றப்படுகின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கோடிக்கணக்கானோரின் வாழ்வுடனும் உரிமைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ள முக்கியமான மனுக்களை உச்சநீதிமன்றம் ஒத்திப்போடுவதை நாம் பார்க்கிறோம். அமலாக்கத்துறை அதிகாரிகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்தில் ரெய்டு செய்வதைப் பார்க்கிறோம். முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தால் முடியவில்லை அல்லது அதற்கு மனமில்லை. கொலையாளிகளை தேடுவதை விட்டுவிட்டு கொலையானவரின் வாரிசை காவல்துறை துரத்துவதைப் பார்க்கிறோம்.

அரசுக்கு சொந்தமான ஊடகத்தை பிரதம மந்திரி ஒட்டுமொத்த உரிமை கொண்டாடுகிறார், அரசாங்கமே கட்டணம் செலுத்துகின்ற நாடு முழுவதிலும் உள்ள விளம்பரப் பலகைகளை அவரே ஆக்கிரமித்துள்ளார், ஆனால் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களை மட்டும் சந்திக்க மறுக்கிறார். தனியார்தான் என்றாலும், அரசாங்கத்திற்கு ஒத்து ஊதுகின்ற தொலைக்காட்சி நிறுவனங்கள், இந்த நாட்டின் வான்வெளியை குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிரான நச்சுத்தன்மை வாய்ந்த பகையுணர்ச்சிகளால் நிரப்புகின்றன. சிந்தனையாளர்களின் சுதந்திரத்தை பறிக்குமாறு பல்கலைக்கழங்களுக்கு நெருக்கடி தரப்படுகிறது. மாணவர்கள் வழக்கமாக போலீஸ் தடிகளைக் கொண்டே மற்றவர்களுடன் பொருந்திப் போகுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்படி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

நாம் இந்த யதார்த்தத்தை புரிந்து வைத்திருக்கின்ற அதேநேரத்தில், தேர்தல் சவாலுக்கு தேவையில்லாத மையவாதத்தை ராமச்சந்திர குஹா கொடுக்கிறார். எதிர்கால தேர்தல் போர் நியாயமான ஒன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு அவர் உடன்படுகிறார் போலவும் தெரிகிறது. அது நியாயமாகத்தான் இருக்குமா?

எதிர்க்கட்சிகள் தங்களுக்கான பணத்தை எங்கே தேடுவார்கள்? தொலைதூரத்தில் இருந்தபடியேகூட தொலைக்காட்சி சேனல்களில் நியாயமான விவாதங்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறதா? எதிர்க்கட்சி வேட்பாளர்களும், அவர்களுடைய உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் ரெய்டுகளை எப்படி எதிர்கொள்வார்கள்? வன்முறை மற்றும் கிளர்ச்சியை தூண்டியதாக கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது, அல்லது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? கொலைமிரட்டல் விடுக்கப்பட்டால் என்ன செய்வார்கள்?

இதுவரையிலும் பெரும்பாலான இந்தியத் தேர்தல்கள் மக்களின் அபிப்பிராயத்தை பிரதிபலித்தமைக்காக தேர்தல் ஆணையத்திற்குத்தான் (மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படுகின்ற வாரங்களில் அதனுடைய கட்டுப்பாட்டில் செயல்பட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கும்) மரியாதை செய்ய வேண்டும். எதிர்காலத்திலும் நிச்சயமாக இப்படியே நடக்கும் என்பதை நம்மால் நிச்சயமாக சொல்ல முடியுமா?

2024-ஆம் ஆண்டுத் தேர்தல் அப்படியே நடக்கும் என்று நம்புவோம். ஆனால், முன்னெப்போதையும்விட நம்முடைய உள்ளுணர்வுகள் அச்சமயத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கும், அவை பேச்சுத் திறமைகளைக் காட்டிலும் மிக மிக முக்கியத்துவம் பெற்றிருக்கும். இப்படியான புறம்தள்ள முடியாத தேவையின்போது ராகுல் காந்தி ஒன்றும் குறைந்தவர் அல்ல என்பதற்கு போதுமான ஆதாரம் கிடைக்கும்.

ராகுல் காந்தியைப் பற்றிய தன்னுடைய பகுப்பாய்வில், அரசியல் மற்றும் வரலாற்று ஆளுமைகளிலேயே பழுத்த சிந்தனையாளரான குஹா இந்த குணாம்சத்தையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நியாயத்திற்காவது, ராகுல் உருவாக்கியுள்ள சூட்-பூட்-கி-சர்க்கார் என்ற கோஷம் ரொம்பவே பயன்தரக்கூடியதான் என்பதையும் குஹா ஒப்புக்கொண்டிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். சௌக்கிதார் சோர் ஹை என்ற ராகுலின் கோஷம் ஒரு வெற்றிகரமான கோஷமாக நிரூபிக்கப்படாத, அவருடைய ஆதரவாளர்கள் பலராலுமே ஏற்றுக்கொள்ளப்படாத அதேநேரத்தில், உற்பத்தி செய்யப்பட்ட, ஒரு மனிதனுக்கும் மேலானவர் மேலான மோடி என்ற பிம்பத்தை (சொல்லக்கூடிய அளவிலான இந்தியர்களாவது) சேதப்படுத்துதற்குத் தேவையான முக்கியப் பங்கை ராகுல் ஆற்றியிருக்கிறார்.

ஒரு அரசியல்வாதியை வீழ்த்துவதென்பது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாத, சொல்லப்போனால் ஒரு தேவையான வேலையும் ஆகும், ஆனால் இன்றைக்குள்ள இந்தியாவில், நம்மை நாமே முக்கிய விமர்சகர்களாக கருதிக்கொள்கின்ற நாம் எல்லோருமே நம்முடைய பாத்திரத்தை மறு-ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

ஜனநாயகம், கருத்து வேற்றுமை, மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்தன்மை ஆகியன அளப்பரிய மூலாதாரங்களால் இடைவிடாமல் தாக்குதலுக்கு உள்ளாவதால், இந்த மதிப்பீடுகளை நேசிப்பவர்கள் இவற்றைப் பாதுகாப்பதற்காக நேர்மையாக போராடக்கூடியவர்களாக தனிநபர்களை உருவாக்குவதன் மூலம் அவற்றின் நோக்கங்களுக்கு ஆதரவாய் விளங்குவார்கள். ஒட்டுமொத்தமாக காங்கிரசிலோ அல்லது எதிர்க்கட்சியிலோ உண்மையாக சண்டை போடுகிறவர் நிச்சயமாக ராகுல் மட்டுமே இல்லைதான்.

ஆனால் அவர் சண்டையிடுவது சர்வ நிச்சயமாகத் தெரிகிறது. அதற்காகவே எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது. அவர் மாதா மாதம், வருடா வருடம் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார். இதற்காகவே நான் அவரை பெரிதும் மதிக்கிறேன்.

சுதந்திரத்திற்காக, சமத்துவத்திற்காக, இந்தியாவின் சகோதரத்துவத்திற்காக செயல்படுகின்ற யாரும் இன்றைக்கு என்னுடைய கூட்டாளிதான். அவர் காங்கிரசில், கம்யூனிஸ்ட் கட்சியில், தேசியவாத காங்கிரசில், திருணமூல் காங்கிரஸில், திமுக-வில் என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அவர் சிவசேனாவில் இருக்கலாம், முஸ்லீம் லீகில் இருக்கலாம். அல்லது பிஜேபியில் அல்லது ஐக்கிய ஜனதா தளத்தில் இருக்கலாம். அதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. அவர்கள் பணக்காரர்களாக இருக்கலாம் அல்லது ஏழைகளாக இருக்கலாம், தலித் அல்லது பிராமணராக அல்லது ராஜ்புத்தாக அல்லது ஓபிசியாக அல்லது என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். அதெல்லாம் விஷயமே அல்ல. இந்து, சீக்கியர், முஸ்லீம், கிறிஸ்துவர், நாத்திகர், எது வேண்டுமானாலும் இருக்கலாம். அவையும் ஒரு பொருட்டே அல்ல.

அநாமதேயர், பெயர் தெரியாதவர், அல்லது ஒரு வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் விஷயமே அல்ல. இந்தியாவில் சுதந்திரத்திற்காக, சமத்துவத்திற்காக, சகோதரத்துவத்திற்காக செயல்பாடுகின்ற எவரிடமும், ஒவ்வொருவரிடமும் நான் வேர்கொண்டிருப்பேன். அத்துடன், இவர்கள் அனைவருக்கும் இடையிலான பரஸ்பர நன்மதிப்பிற்காக நான் சத்தமின்றி பிரார்த்தனை செய்வேன்.

நேரம் வரும்போது வெகுமக்கள் அழுத்தம் என்பது அரசியல் ஒருங்கிணைதலுக்கு வற்புறுத்தும், ஆதிக்கத்திற்கும் எதேச்சதிகார்த்திற்கும் எதிரான ஒரு தேர்தல் கூட்டணியை வழிநடத்த சரியான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சோதனைப் போட்டிகளுக்கு இன்னும் கொஞ்ச காலம் இருக்கிறது, ஆனால் முக்கியமான போட்டிகள் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்று விளையாடக்கூடிய களம் கடுமையானது, ஒளி மங்கிப்போயிருக்கிறது, காற்றுக்கும் மழைக்கும் வாய்ப்பிருக்கிறது, நடுவர்கள் எந்தளவுக்கு பாகுபாடற்றவர்கள் என நமக்குத் தெரியாது. ஆனால், ராகுல் காந்தி துணிவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

தமிழில்: மர்மயோகி

நன்றி: ndtv.com

கட்டுரையாளர் ராஜ்மோகன் காந்தி,  மகாத்மா காந்தியின் பேரன். 1989-இல் ராஜீவ் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்டவர். அமெரிக்காவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Total Page Visits: 338 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *