நிகழ்காலத்தில் எதிரொலிக்கும் அண்ணாவின் குரல்

‘சி.என்.அண்ணாதுரை என்கிற நான், திராவிட மண்ணில் இருந்து வந்திருக்கிறேன்’
– இது அண்ணாவின் பாராளுமன்ற முதல் உரையின் முதல் வரி.

அண்ணாவின் உரையைக் கேட்டிருக்கக் கூடியவர்கள், அண்ணா என்ற பெயரைப் பார்த்ததும், அவர் குரல் மனதிற்குள் ஒலிப்பதை உணர்வார்கள். அந்த அளவுக்கு அண்ணாவையும் அவர் பேச்சையும் பிரிக்க முடியாது. அவர் தமிழகம் எங்கும் பேசியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அமெரிக்க யேல் பல்கலைக்கழகம் வரை சென்று பேசியிருக்கிறார். அண்ணா தனது சிந்தனைகளை நிறையவே எழுதியிருந்தாலும், அவரது மேடைப் பேச்சு மூலமாகவே, அவரது சிந்தனைகள் மக்களை சென்றடைந்திருக்கிறது.

பெரியார் திராவிட கருத்தியலுக்கும் சிந்தனைக்கும் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கியவர். அவர் திராவிட கருத்தியலை தமிழக மக்களின் பொருன்பான்மை கருத்தியலாக  மாற்றினார். அதே திராவிட கருத்தியலை, தமிழக ஆட்சி அதிகாரத்தின் அரசியல் கருத்தியலாக மாற்றியவர் அண்ணா. தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, இந்தி மொழி திணிப்பு எந்த வடிவத்தில், எத்தனை முறை வந்தாலும், அதை தடுத்து நிறுத்தும் இருமொழிக் கொள்கை, சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கியது. சமூகநீதி, மாநில சுயாட்சி அதிகாரம் என பல திராவிட சிந்தனைகளை அண்ணா தமிழகத்தின் ஆட்சி மரபாக மாற்றினார்.

மத்தியில் ஆளும் அரசுகள் திராவிட சிந்தனைக்கு எதிரான எந்த சட்டத்தை இயற்றி, அதை தமிழகத்தின் மீது திணிக்க முயன்றாலும், அதை தமிழகத்தை ஆளும் கட்சி ஏற்றுக்கொள்ள விரும்பினாலும்கூட, வேறு வழியின்றி அதை எதிர்க்க வேண்டி நிலைக்கு தள்ளப்படுகிறதே, அதற்கு அண்ணா ஏற்படுத்திய திராவிட சிந்தனை ஆட்சி மரபுதான் காரணம்.

அதிமுகவிற்கு எம்ஜிஆர், ஜெயல்லிதா போன்ற வலுவான தலைமையில்லாத நிலையில், தமிழகத்தை ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் அதிமுக ஆட்சி செய்துவருகிறது. அதேநேரம், மத்தியில் இந்துத்துவ பிஜேபி அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவே, அதிமுக, பிஜேபியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மோடியின் இந்த ஒர் ஆண்டு ஆட்சியில் மட்டுமே பலமுறை திராவிடச் சிந்தனை ஆட்சிமரபுக்கு நெருக்கடி வந்துவிட்டது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை, மத்திய பிஜேபி அரசு குறைத்தபோது, அதை எதிர்த்து தமிழக அதிமுக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி தடுத்தது. தற்போது, மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள இந்தி திணிப்புக்கும், மும்மொழிக் கொள்கைக்கும் தமிழக அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இப்படி, திராவிடச் சிந்தனை ஆட்சிமரபுக்கு எதிராக, மத்திய பிஜேபி அரசு நெருக்கடி கொடுக்கும் ஒவ்வொரு முறையும், தமிழக அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதும், வழக்கு தொடுப்பதுமாக சமாளித்து வருகிறது. இதைப் பார்க்கும்போது, அண்ணா இறந்து 50 ஆண்டுகள் கடந்த பின்பும், அவர் ஏற்படுத்திய திராவிடச் சிந்தனை ஆட்சிமரபின் சக்தியை உணர முடிகிறது. இதை அன்றே அண்ணா தீர்க்க தரிசனத்துடன் பேசியிருக்கிறார்.

‘ஓராண்டுக்கு முன் ஆட்சிக்கு வந்தேன். தாய்த் திருநாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களைச் செய்திருக்கிறேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது அவர்களை விட்டு வைக்கலாமா, ஆட்சியைக் கலைக்க வேண்டும்’ என்று நினைக்கிறார்கள். ‘முடியுமா? என்று நான் சவால்விட மாட்டேன். உங்களால் முடியும், ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை
கொண்டு வந்தவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே மக்கள் வெகுண்டெழுவார்களே!’ என்ற அச்சமும் கூடவே எழும் இல்லையா! அந்த அச்சம் இருக்கும் வரையில், இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்!’

இப்படி அண்ணா பேசிய அன்றைய காலக்கட்டத்தைவிட, இன்று இந்துத்துவாவும், பார்ப்பனியமும் அதிக வீரியம் கொண்டுள்ளது. மத்தியில் முழு பலத்துடன் பிஜேபி ஆட்சி செய்கிறது. அனைத்து வடமாநிலங்களும் இந்துத்துவம் பேசும் பிஜேபியை பெருன்பான்மையாக ஏற்றுக் கொண்டுவிட்டன. ஆனால், தமிழகம் இன்னும் ஏற்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் அதிமுகவுடன் கூட்டுசேர்ந்து பிஜேபி களங்கண்டபேதும், ஒரு நாடாளுமன்ற தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை.

இந்துமதம், பார்ப்பனியம் இவை இரண்டிற்கும் ஆணிவேரான ஆரியம், இவை அனைத்தையும், நீண்டகாலமாக எதிர்த்துவரும் வரலாறு கொண்டது தமிழகம். ஏறக்குறைய தமிழகத்தை ஆரிய-திராவிட போர்க்களம் என்றே சொல்லலாம். இன்றைக்கு தன் முழுபலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் இந்துத்துவம், தமிழகத்தின் மீது ஒரு உச்சக்கட்ட கருத்தியல் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. மக்களின் கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து இந்தப் போர் நிகழ்த்தப்படுகிறது. இந்துமத கடவுள் வழிபாட்டை பரப்பி மக்களை வசப்படுத்துவதும், பின்னர் அதை வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதும் பார்ப்பனியத்தின் பரம்பரை இயல்பு.

பார்ப்பனியத்தையும், ஆரியத்தையும் முறியடிக்க கடவுள் மறுப்பு பிரச்சாரம் அவசியம் என்பதை உணர்ந்துதான் பெரியார் அதைச் செய்துவந்தார். இந்துமத சாஸ்திரங்களில் உள்ள ஆபாசங்களையும் அபத்தங்களையும் அம்பலப்படுத்துவது திராவிட இயக்கத்தின் நீண்டநாளைய செயல்முறை. அதன் தொடர்ச்சியாகத்தான் கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தில் இருக்கும் ஆபாசங்களைப் பற்றி வீடியோ வெளியிட்டது. இதை சாக்காக வைத்து, பார்ப்பனியம் இந்துத்துவ போரை தீவிரப்படுத்தி இருக்கிறது. முருகனை தமிழ் கடவுள் என்றும், முருக வழிபாட்டை தமிழர் வழிபாடு என்றும் தமிழ்தேசியவாதிகள் உருவாக்கி வைத்திருக்கும் சூழ்நிலையை, இந்துத்துவ சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. ‘கந்த-சஷ்டி-கவசம்’ என்ற வார்த்தைகளேகூட தமிழ் வார்த்தைகள் இல்லை என்பது தெரியாமல், ஆரிய மாயைக்கு பலியாகிவிட்டனர். தமிழ்த் தேசியவாதிகள்.

கருப்பர் கூட்டம் முருகனை இழிவுபடுத்திவிட்டார்கள். இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டார்கள். கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் தொடர்பு இருக்கிறது என்றெல்லாம் பிஜேபி ஆவேசமாச திமுகவின் மீது குற்றச்சாட்டியது. ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தெரியாமல், திமுகவும் தடுமாறித்தான் போனது. எங்கள் கட்சியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள். நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சியில் என்றெல்லாம் உளறிக்கொட்டியது. கடைசியில், எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு என்ற குறளுக்கு ஏற்ப, 2ஜி ராசா அதாவது ஆ.ராசா, “நாங்கள் இந்துக்கள் என்றால் எங்களை கருவறைக்குள் விடுவீர்களா?” என்று இந்துத்துவவாதிகளுக்கு பதிலடி கொடுத்து விரட்டியபோது, நிகழ்காலத்திலும் அண்ணாவின் குரல் ஒலிப்பதை உணர முடிந்தது.

கடவுள் மறுப்பு கொள்கை என்பது வெகு மக்களின் கருத்தாகவும், வாழ்வியல் முறையாகவும் மாறமுடியாது என்பதை உணர்ந்த அண்ணா, தேர்தல் அரசியலைக் கையிலெடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கியபோதே, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்ளை முழக்கத்தை அறிவித்து, கடவுள் நம்பிக்கையாளர்களையும் திமுகவிற்குள் இருத்திக்கொண்டார். திமுக கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு எதிரான கட்சியல்ல. ஆனால், ஆரியத்திற்கும் வடவர் ஆதிக்கத்திற்கும் எதிரான கட்சி என்பதை, திமுக துவங்கிய முதல் நாள் உரையிலேயே அண்ணா உணர்த்தியிருக்கிறார்.

அதுபோல, அண்ணா எடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு முடிவு, திராவிடச் சிந்தனை கொண்ட தேர்தல் அரசியல். அண்ணா  தேர்தல் அரசியலை தேர்வு செய்து ஆட்சி அதிகாரத்தை அடைந்து, திராவிட ஆட்சிமரபை உருவாக்கவில்லை என்றால், இன்று இந்துத்துவம் தமிழகத்தை முழுவதுமாக ஆட்கொண்டிருக்கும். ஆரியமும், பார்ப்பனியமும் அன்று நாம் பெற்றிருக்கும் பல உரிமைகளைப் பறித்திருக்கும் என்பது மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தை மிகவும் மோசமாக பின்னுக்கு தள்ளியிருக்கும்.

அன்றைக்கே ஆரியமாயை நூலில் அண்ணா எழுதியிருக்கிறார்:

‘ஒரு காலம் இருந்தது. தமிழர்கள் ஆரியரை நடமாடும் நகைப்புக்குரிய உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம் மங்காதிருந்த காலம். ஆரியத்தை கேலிக் கூத்தாக கருதிய காலம்!  இன்றோ, ஆரியரைப் போன்ற புத்திக்கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே தமிழருக்கு சீலத்தையும், சிலாக்கியத்தையும் தரும் என்ற தவறான கருத்து தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீய்த்து வருகின்றன!’

அண்ணாவின் இந்த வார்த்தைகள் இன்றும் தமிழ்ச் சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாகத்தான் ஒலித்துக் கொண்டிகிறது.

– வசீகரன்

நன்றி: சதுரங்கம்.காம்

Total Page Visits: 163 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *