விநாயகர் ஊர்வலத்திற்கு தடை – மத்திய அரசுக்கு தமிழக அரசு வைத்த செக்

இந்தியா முழுவதிலும் இந்துத்துவ அரசியல்
மிகவும் சக்தி வாய்ந்த இயக்கமாக
உருவெடுத்திருக்கும் இந்த காலகட்டத்தில்,
விநாயகர் ஊர்வலத்தை எடப்பாடி அரசு தடை செய்திருப்பது
இந்துத்துவ அமைப்புகளை
கடுங்கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி முடிந்து சில நாட்கள் கடந்துவிட்டது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டை முன்னிட்டு, எடப்பாடி அரசு விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதித்துவிட்டதால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அமைதியாக கடந்து சென்றுவிட்டது. கடந்த ஆண்டுகளில் இதே விநாயகர் சதூர்த்தி மூன்று நாட்களுக்கு தமிழகத்தை பரபரப்பாக்கிவிடும். தமிழக காவல்துறைக்கு மூன்று நாட்களும் விநாயகர் ஊர்வலத்திற்கு பாதுகாப்பளிப்பதே வேலையாக இருக்கும்.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்தை மையமாக வைத்தே இந்துத்துவ அரசியல் வளர்க்கப்பட்டு வருகிறது. 90-களில் மாநகரங்களில் தொடங்கிய விநாயகர் ஊர்வல கலாச்சாரம், மெள்ள மெள்ள நகரங்களுக்குப் பரவி தற்போது கிராமங்கள் வரை சென்றுவிட்டது.

முதலில் பாமர மக்களின் வழிபாட்டு உணர்வை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட விநாயகர் ஊர்வல நிகழ்ச்சிகள், கட்சி சார்பற்ற நிகழ்ச்சிகள் போன்றே நடத்தப்படும். ஆனால், இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பின்னணியில் இருந்து ஒருங்கிணைத்து, இந்த நிகழ்ச்சிகள் தானாக மக்களால் நடத்தப்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குவார்கள். மேலும், விநாயகர் ஊர்வலங்கள் செல்லும் பாதையில் இருக்கும் முஸ்லீம் மற்றும் கிருஸ்துவர்  வழிபாட்டு தலங்களைக் கடந்து செல்லும்போது மோதல் ஏற்படுவதற்கான சாத்தியங்களை உருவாக்குவார்கள்.

இப்படித்தான் கோயம்புத்தூரிலும் சென்னையிலும் இந்து-முஸ்லீம் கலவரங்கள் நடந்தன. அதன்பின், விநாயகர் ஊர்வலம் என்றாலே இந்து-முஸீலீம் கலவரம் என்பதாக மாறி, முழு காவல்துறையும் காவல்காக்க வேண்டிய நிலை எற்பட்டுவிட்டது.

இந்தியா முழுவதிலும் இந்துத்துவ அரசியல் மிகவும் சக்தி வாய்ந்த இயக்கமாக உருவெடுத்திருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் மட்டும் எதிர்பார்த்த அளவு வளர முடியவில்லையே என்ற கோபம், இந்துத்துவ அமைப்புகளிடம் இருந்து வெளிப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்தை எடப்பாடி அரசு தடை செய்திருப்பது இந்துத்துவ அமைப்புகளை கடுங்கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

ஏற்கனவே, எவ்வளவு முயற்சி செய்தாலும், தமிழகத்தில் இந்துத்துவ அரசியல் எடுபடாமல் போவதற்கு காரணமான திராவிட சிந்தனையின் மீது ஆர்எஸ்எஸும் பிஜேபியும் ஆத்திரம் கொண்டுள்ளன. அதனால், திராவிட சிந்தனை மீதும், பெரியார் மீதும் கேவலமான விமர்சனங்களை வாரியிறைக்கிறார்கள். இது ஊடகங்களிலும், சமுக வலைதளங்களிவும் உச்சகட்ட கருத்தியல் போராக நடந்துவருகிறது. இந்த சூழ்நிலையில், விநாயகர் ஊர்வலத்திற்கு எடப்பாடி அரசு தடைவிதித்ததை பிஜேபி தங்களுக்கு ஏற்பட்ட தோல்வியாக கருதுகிறது. மேலும், ஒரு பிரமாண்டமான இந்துத்துவ அரசியல் நிகழ்ச்சி ஒன்று தடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து அதிமுக மீது சீறிப்பாய்கிறது பிஜேபி.

ஒருநாளும் மதுக்கடைகளுக்கு எதிராக போராடாதவர்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும்போது, விநாயகர் ஊர்வலத்திற்கு அரசு ஏன் தடைவிதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். வழக்கை திரும்பப் பெறாவிட்டால், அதிக அபராதம் விதிக்க வேண்டிவரும் என்று நீதிபதிகள் எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்தார்கள்.

இதையடுத்து, பிஜேபியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து, விநாயகர் ஊர்வல தடையை நீக்கும்படி கேட்டுக்கொண்டபோதும். எடப்பாடி தடையை நீக்க மறுத்துவிட்டார். அதன்பின், இந்து முன்னணி தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தப்படும் என அறிவித்தது. அதைத் தொடர்ந்து, பிஜேபி தலைவர் எல்.முருகன், விநாயகர் ஊர்வல விவகாரத்தில் இந்து முன்னணி எடுக்கும் எந்த முடிவையும் பிஜேபி ஆதரிக்கும் என்று அறிவித்தார். மற்றொரு தலைவரான எல்.கணேசன், விநாயகர் ஊர்வலத்தை தடைசெய்தால், அதிமுக இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்று எச்சரித்தார். இவை எதற்கும் அசராத எடப்பாடி அரசு, தடையை மீறி வைக்கப்பட்ட ஒருசில விநாயகர் சிலைகளையும் காவல்துறையைக் கொண்டு அப்புறப்படுத்தி, கட்டுப்படுத்திவிட்டது. இந்த விசயத்தில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல், கைகட்டி நின்றது பிஜேபியும் இந்து முன்னணியும்.

விநாயகர் ஊர்வல விவகாரம் வருவதற்கு முன்பே, அதிமுக-பிஜேபி உரசல் துவங்கிவிட்டது. மத்திய பிஜேபி அரசு கொண்டுவரும் திராவிட இயக்க சிந்தனைகளுக்கு எதிரான திட்டங்களை தமிழக அதிமுக அரசு எதிர்த்து வருகிறது. திராவிட சிந்தனைக்கு எதிரான ஆர்எஸ்எஸின் கருத்தியல் போருக்கும் அதிமுகவிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பல வகையிலும் தங்களின் உதவியை எதிர்பார்த்து ஆட்சி நடத்தும் அதிமுக, தங்களுக்கு அனுசரனையாக இல்லாததால், ஆத்திரமடைந்த பிஜேபியினர் அதிமுகவை வரம்புமீறி விமர்சித்து வருகின்றனர்.

கூட்டணியில் இருக்கும்போதே, தமிழக பிஜேபி தலைவர்கள் அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வருவது பற்றி, டெல்லியில் உள்ள பிஜேபி தலைவர்களிடம் பேசுவதற்காக அதிமுக முயற்சி செய்தது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும் தங்கமணியும் டெல்லி செல்ல விமான டிக்கெட் வரை போடப்பட்டுவிட்டது. ஆனால், டெல்லியில் இருந்து சிக்னல் கிடைக்காததால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதன் பின்னர்தான் விநாயகர் ஊர்வல தடையை உறுதிசெய்து பிஜேபி-க்கு செக் வைத்தார் எடப்பாடி.

கொம்புக்காரன்

நன்றி: சதுரங்கம்.காம்

Total Page Visits: 61 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *