பேஸ்புக் தன் வியாபாரத்திற்காக இந்திய ஜனநாயகத்தை பலிகேட்கிறது – ராணா அயூப்

இந்தக் கட்டுரையின் ஆசிரியர் ராணா அயூப்

இவர் 2002-ம் ஆண்டு முதல் 2010 வரை குஜராத்தில் நடந்த படுகொலைகள், போலி என்கவுன்டர்கள் குறித்து உண்மையை வெளிக்கொண்டு வர தன் உயிரையும் துச்சமாக நினைத்து புலனாய்வுப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்.
இவர் தெஹல்கா இதழில் பணியாற்றிய காலத்தில், 2002-ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக குஜராத்தில் நடந்த படுகொலைகள் குறித்து `Gujarat Files: Anatomy of a Cover Up என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். குறிப்பாக, தன் பெயரை மைதிலி என மாற்றிக்கொண்டதோடு உருவத்திலும் மாற்றங்கள் செய்துகொண்டு, `undercover journalism’ மேற்கொண்டு சட்ட விரோதக் கொலைகள் மற்றும் மதவாத வன்முறைகள் குறித்த உண்மைகளையும் தான் வெளியே கொண்டு வந்த விதத்தை அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.
இவரது தைரியத்தைப் பாராட்டி இவருக்கு `மெக்கில் விருதை’ அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
இந்தியாவில் 40 கோடி மக்களால் பயன்படுத்தப்படுகின்ற
ஒரு சமூக வலைதளமும் அதன் செயலியும்
வெறுப்புக் குற்றங்களுக்கு
எண்ணெய் வார்க்கின்ற
பொய்ச் செய்திகளை
தொடர்ந்து பரப்பி வருகிறது.

ஆகஸ்ட் 14 அன்று, இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு-நிரம்பிய தேசியவாதத்திற்கு உதவுவதிலும் ஊக்குவிப்பதிலும் பேஸ்புக்கிற்கு உள்ள பங்கு குறித்து குற்றம்சாட்டும்படியான ஒரு கட்டுரையை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பதிப்பித்தது. தவறான தகவல்களை வெளியிடுதல், மிரட்டல்கள், மதவெறி மற்றும் துன்புறுத்தல் ஆகியவை இந்த சமூக வலைதளத்தில் எந்தளவுக்கு பெருகிப் போகியிருக்கின்றன என்பதை, மிக நெருக்கமாக சென்று ஆவணப்படுத்தி வந்த பல செயல்பாட்டாளர்களுக்கும், இந்தக் கட்டுரை மிகவும் தேவைப்பட்ட ஒரு விவாதத்தை பற்றவைத்துவிட்டது.

இந்த வெளிப்படையான அறிக்கையில், இந்தியாவில் உள்ள பேஸ்புக்கின் பொதுக்-கொள்கை நிர்வாகி அன்க்கி தாஸின் பங்கு குறித்து ஆராயப்பட்டுள்ளது. மேலும், ரோஹிங்யா புலம்பெயர் முஸ்லீம்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் எனவும், முஸ்லீம்களை தேசதுரோகிகளாக முத்திரை குத்தி அவர்களுடைய மசூதிகளை அழிக்க வேண்டும் எனவும் மிரட்டிய, மோடியினுடைய பிஜேபி கட்சியின் உறுப்பினரான டி.ராஜா சிங்கின் வலைப்பக்கத்தை நீக்குவதற்கு, இந்த சமூக ஊடக ஜாம்பவான் மறுப்பு தெரிவித்துள்ளதும்கூட இந்த அறிக்கையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள பணியாளர்கள் தாஸ் குறித்து கூறுகையில், அவர், “திரு.மோடியின் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளின் விதிமீறல்களை தண்டிப்பது இந்த நாட்டில் நம்முடைய நிறுவனத்திற்கான தொழில் வாய்ப்புகளை சேதப்படுத்தும்,” என்று கூறியதாக தெரிவித்துள்ளதையும் இந்தக் கட்டுரை குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

இந்த அறிக்கை அன்க்கி தாஸின் முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அவர் முன்பு ஒருமுறை இந்திய முஸ்லீம்களை பாரம்பரியமாகவே ஒரு “ஒழுங்கீனமான சமூகம்” என்றும் அவர்கள் “மதம் மற்றும் ஷரியா சட்டத்தை அமல்படுத்துதல் ஆகியவற்றை தவிர்த்து எத்தகைய தூய்மையும் அற்றவர்கள்” என்றும் குறிப்பிடுகின்ற பேஸ்புக் பதிவை பகிர்ந்திருக்கிறார்.

ஆனால் பேஸ்புக் பற்றி எவ்வளவுதான் குற்றச்சாட்டுகள் வெளிவந்தாலும், பல பேஸ்புக் பயனர்களுக்கு இவை எதுவுமே ஆச்சரியப்படுத்துவதாக தெரியவில்லை. 2014-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு இட்டுச்சென்ற மோடியின் பிரச்சாரமானது வெட்கமே இல்லாமல் பொய்ச் செய்திகளையும், இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லீம்களை தாக்கி நடத்தப்பட்ட பிரச்சாரத்தையுமே நம்பியிருந்தது. அதற்கு முன்பே 2013-இல் “மோடியின் வழிமுறை” என்று தலைப்பிட்ட கவர் ஸ்டோரியை தெஹல்கா பத்திரிக்கைக்காக நான் எழுதியிருந்தேன், அதில் இந்து தேசியவாதிகள் மற்றும் அவர்களுடைய மோதலை ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் – கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து – பேஸ்புக் ஆற்றியுள்ள முக்கிய பங்கு குறித்து நான் ஆராய்ந்திருந்தேன்.

பல வருடங்களுக்குப் பின்னர் இப்போது வரையிலும், கபில் மிஸ்ரா போன்ற பிஜேபி தலைவர்களுடைய சரிபார்க்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களும், முரண்பட்ட குரல்களும் தொடர்ந்து பதிவிடப்பட்டுத்தான் வருகின்றன. இந்த வெறுப்புத்தான் இறுதியில் பயங்கர வன்முறையாக மாறியது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியத் தலைநகரம் தன்னுடைய பல தசாப்தங்களில் பார்த்திராக வகையில், மிக மோசமான வகுப்புவாத கலவரத்தில் நிறைய பேரை பலிவாங்கிய டெல்லி முஸ்லீம்களுக்கு எதிரான கலவரமே இதற்கு சரியான உதாரணம்.

இன்ஸ்டாகிராமில், 34 லட்சம் பேர் பின்தொடர்கின்ற, தன்னுடைய தேசியவாத பதிவுகளுக்காக பெயர்பெற்ற ஒரு சரிபார்க்கப்பட்ட கணக்காகிய @HindustaniBhau என்ற பக்கம் சமீபத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்கு அறைகூவல் விடுக்கும் பதிவை வெளியிட்டிருந்தது, அதில் இந்து நம்பிக்கைக்கு எதிரானவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்ற ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தன்னுடைய கட்டுரையை பதிப்பித்த சில நாட்களுக்குப் பின்னர், பெரும் ஆளுமைகள் பலருடைய எதிர்ப்பை அடுத்து இன்ஸ்டாகிராமில் இருந்து அந்தப் பக்கம் நீக்கப்பட்டது. ஆனால் இதேபோன்ற கருத்துக்களை சுமந்து வருகின்ற ஆயிரக்கணக்கான கணக்குகள் பல பயனர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களால் புகார் அளிக்கப்பட்ட பின்னரும் சமீபத்திய வருடங்களில் பெருகிப் போய்விட்டன.

வெறுமனே சில வாரங்களுக்கு முன்புதான், என்னை பாலியல் பலாத்காரம் செய்வது போன்றும், எனக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்றும் சித்தரிக்கப்பட்ட கிராபிக் படங்களை நூற்றுக்கணக்கான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பதிவிட்டிருந்தனர். அந்தப் பதிவுகள் நீக்கப்படவே இல்லை. 2018-ஆம் ஆண்டில்,  சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதியும், இப்போது உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் உள்ள யோகி ஆதித்யநாத் கி சேனா, அல்லது யோகி ஆதித்யநாத் ஆர்மி என்ற பேஸ்புக் பக்கம், மோடி அரசு குறித்த என் விமர்சனத்திற்கு பதிலடியாக என்னுடைய முகத்தை வைத்து சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோவை பதிவு செய்திருந்தது. அந்த ஆபாச வீடியோ இன்னமும் பேஸ்புக்கில் இருக்கிறது, இந்த வலைதளத்தில் அதனுடைய சர்குலேஷன் பலமடங்காக பெருகிப் போயிருக்கிறது.

வெறுப்பு பிரச்சாரகர்களை கேள்விக்கு உட்படுத்தும் நோக்கமோ, பயனர்களுடைய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கமோ பேஸ்புக்கிற்கு இல்லை என்பது தெளிவாகவேத் தெரிகிறது.

மோடி அதிகாரத்திற்கு வந்த இரண்டே மாதங்களுக்குள், ஜூலை 2014-இல் பேஸ்புக்கின் முதன்மை செயல்துறை அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க், அங்கித் தாஸுடன் சேர்ந்து மோடியை சந்தித்தார். இந்து தேசியக் கட்சியின் நிறமாகிய காவிநிறத்தில் உடை அணிந்திருந்த சாண்ட்பெர்க், மோடிக்கு தன்னுடைய லீன் இன் என்ற புத்தகத்தை பரிசளித்தார், அத்துடன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் மோடியை பெண்களின் உரிமைக் காவலன் என்று அழைத்தார் – அதே நேரத்தில்தான் அவருடைய கட்சித் தலைவர்கள் சாண்ட்பெர்க்கின் வலைதளத்தை பெண்களை இழிவுபடுத்தவும், அவர்களுடைய வாயை மூட வைக்கவும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். மறு வருடமே மோடி சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு (Silicon Valley) சென்றபோது, மார்க் ஜக்கெர்பெர்க் ஒரு கூட்டத்தை நடத்தினார், ஆனால் அவருடைய வலைதளத்தில் மோடியின் கட்சி மற்றும் அவரது தொண்டர்களால் தவறான தகவல்களும் வெறுப்புப் பேச்சுக்களும் பரப்பப்படுவது குறித்தோ, அல்லது காஷ்மீரில் இணையத்தள இணைப்பு தொடர்ந்து தடைசெய்யப்படுவது குறித்தோ அல்லது கருத்து சுதந்திரத்தின் மீது வெட்ககரமான தாக்குதல் நடத்தப்படுவது குறித்தோ கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அப்போதில் இருந்தே பேஸ்புக் இந்த ஆட்சிக்கு இணங்கிப்போவதில்தான் முனைப்பு காட்டி வந்திருக்கிறது. பெயர் தெரிவிக்க விரும்பாத, எதிர் நடவடிக்கைக்கு உள்ளாக விரும்பாத ஒரு பேஸ்புக் நிர்வாகி இந்த நிலையைப் பற்றிப் பேசியபோது, 2017-ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனமானது வலதுசாரி சிந்தனை கொண்ட முக்கிய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் முன்னாள் பத்திரிக்கையாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது என என்னிடம் கூறினார். “மோடியின் பிம்பத்தை ஒரு தொலைநோக்கராகவும், டிரம்பிற்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் இருக்கும் உலகத் தலைவராகவும் உயர்த்துவதற்கு பேஸ்புக் விரும்புகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை,” என்றார் அந்த டெல்லியைச் சேர்ந்த நிர்வாகி.

29 கோடி பேஸ்புக் பயனர்களைக் கொண்ட இந்தியா ஒரு முக்கியமான சந்தையாக பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்த வலைதளம் சீனாவில் தடைசெய்யப்பட்ட பின்னர் அப்படிப்பட்ட சூழல்தான் நிலவி வருகிறது. ஆனால் தன்னுடைய மிகப்பெரிய சந்தைப் பங்கை தேடும் முயற்சியில், மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்று, அரசியல் ஆதாயம் மற்றும் அரசியல் கட்டுப்பாட்டிற்காக பொய்களையும் வெறுப்பையும் பரப்புகின்ற அதிகாரம்மிக்க தலைவர்களுக்கு உதவி செய்வதில் பேஸ்புக்கிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஒரு சமூக வலைதள நிறுவனம் இந்திய தொலைத் தொடர்புத்துறை பங்குகளில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்கிறது, இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களால் பயன்படுத்தப்படுகின்ற அதனுடைய வாட்சப் செயலியானது வெறுப்புக் குற்றங்களுக்கு எண்ணெய் வார்க்கின்ற பொய்ச் செய்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களால் நடத்தப்பட்ட வாட்சப் உரையாடல்களில்தான் திட்டமிடப்பட்டது, அந்த உரையாடல்களில்தான் இந்துக்கள் எப்படி முஸ்லீம்களை எரித்தார்கள் என்பது குறித்தும், அவர்களுடைய உடல்களை எப்படி சாக்கடைகளில் வீசியெறிந்தார்கள் என்பது குறித்தும் பதிவாகியுள்ளன. ஏனென்றால், அந்த வாட்சப் பதிவுகள் அழிக்கப்பட்டுவிட்டன, எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால், நம்முடைய சிலிக்கான் பள்ளத்தாக்கு மேற்பார்வையாளர்கள் இந்த சமூக வலைதளம் இந்திய ஜனநாயகத்தை தொடர்ந்து பலவீனமாக்கி வருவது குறித்து எந்தவித உணர்ச்சியும் அற்றவர்களாக இருக்கிறார்கள். ஒருகாலத்தில் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் பரப்ப உதவி செய்துவந்த ஒரு வலைதளம், இப்போது பாசிசத்தை நிறுவி, அதை ஊக்கம்பெறச் செய்யும் கருவியாக செயல்பட்டு வருகிறது. உலகின் மற்ற பகுதிகளைப் போன்றே இந்த வலைதளத்தின் அடிப்படை நோக்கம் குறித்த எத்தகைய புரிதலும் இல்லாத, விளிம்புநிலை மக்களைப் பயன்படுத்தி இந்தியாவிலும் தொடர்ந்து செழிப்புற்று வருகிறது பேஸ்புக்.

தமிழில்மர்மயோகி

நன்றி: washingtonpost.com

Total Page Visits: 346 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *