பீமா கொரேகான் வழக்கு – அ.மார்க்ஸ்

இன்றைய பேஷ்வா ஆட்சியாக உருப்பெற்றுள்ள 
இந்துத்துவ முரடர்களின் ஆட்சியை
தலித்கள் கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம்தான்.
ஆனால், இப்படிப் பழம் வீரக் கதைகளைப் பேசி
இப்படியான இன்றைக்குப் பொருந்தாத புனைவுகளுக்குள்
நெருப்புக் கோழிகள் போலத்
தலையைத் திணித்துக் கொள்வது ஆபத்தானது.

– ஆனந்த் டெல்டும்டே

பீமா கொரேகான்: இந்த வழக்கிற்கு எதிராக ரொமிலா தாபர் முதலான அறிஞர்கள் தொடுத்த வழக்கொன்றின்  விசாரணையில், நீதியரசர் சந்திரசூட் சுட்டிக் காட்டி மாற்றுக்கருத்து குறிப்பு (Dissent Note) இட்டபோது அவர் சொன்ன காரணங்கள்!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லக்கா, வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃப்ரெய்ரா, வரவரராவ் ஆகிய ஐவர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் தகர்த்து, அவர்களை உடனே விடுதலை செய்யச் சொல்லி, உலக அளவில் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ரொமிலாதாபர் மற்றும் பொருளியல் வல்லுனர் பேரா பிரபாதப் பட்நாயக், மூத்த பொருளியல் அறிஞர் தேவகி ஜெயின், காமன்வெல்த் மனித உரிமை அமைப்பின் மூத்த ஆலோசகர் மாஜா தாருவாலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை, சென்ற செப்டம்பர் 2018-ல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.

அது மட்டுமல்ல, மகாராஷ்டிர காவல்துறை இதை விசாரணை செய்தால் இவ்வழக்கில் நீதி கிடைக்காது என்பதால் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க வேண்டும் என்கிற இந்த அறிஞர்களின் கோரிக்கையையும் அது தூக்கி எறிந்தது.

எனினும் தீபக் மிஸ்ரா உள்ளிட்ட இரு பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பிற்கு மாறாக நீதியரசர் சந்திர சூட் முன்வைத்த மாறுபட்ட கருத்துக்கள் பா.ஜ.க. அரசும் அவர்களின் காவல்துறையும் எத்தனை வன்மமாக கருத்து மாறுபடும் அறிவுஜீவிகளைக் கையாளுகின்றனர் என்பதற்குச் சான்றாக அமைகின்றன. அவரது தீர்ப்பின் ஒரு சில அம்சங்கள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன.

நீதியரசர் சந்திரசூடின் தீர்ப்புக் குறிப்பிலிருந்து: 

 1. இந்த நீதிமன்றம் 2019 ஆகஸ்ட்-29 அன்று மகாராஷ்டிர அரசு மற்றும் இதர பிரதிவாதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என முடிவெடுத்த அடுத்த சில மணி நேரங்களில், புனே காவல்துறை இணை ஆணையர் ஷிவார்ஜிராவ் ஓத்கே, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். கைது செய்யப்பட்ட ஐவரையும் புனே கொண்டுசெல்லக் கூடாது எனவும், இவர்கள் தத்தம் வீடுகளிலேயே காவலில் வைக்கப்பட வேண்டும் எனவும் இந்த நீதிமன்றம் யாரைச் சொன்னதோ, அவர்கள் ஐவர் மீது மேலும் அதிகமான குற்றங்கள் செய்துள்ளதற்கான சான்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார். இவரது இந்தச் செயல் மிகவும் கவலைக்குரிய ஒன்று. நீதிமன்றம் அன்று இட்ட ஆணைக்குப் பதிலளிக்கும் முகமாக எலக்ட்ரானிக் ஊடகத்தை இப்படிப் பயன்படுத்தியுள்ளார் இந்த ஜாயின்ட் கமிஷனர்.
 2. வழக்கு தொடர்பான இப்படியான சர்ச்சைக்குரிய தகவல்களை இந்த ஜாயின்ட் கமிஷனரும், சட்டம் ஒழுங்கு டிஜிபி-யும் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். நடுநிலையான விசாரணை என்பது இதன் மூலம் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. விசாரணை நடந்து கொண்டுள்ளபோதே பொதுக் கருத்தில் இப்படியான ஐயங்களை விதைப்பது, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மரியாதையைக் குறைக்கும் வண்ணம் கருத்தை உருவாக்குவது என்பதெல்லாம் விசாரணையின் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. குற்றத்தை உறுதி செய்வதோ தீர்ப்பளிப்பதோ போலீசின் வேலையல்ல. துரதிர்ஷ்டவசமாக இப்படியான நடவடிக்கை (நீதிமன்ற விசாரணைக்கு அப்பால்) ஒரு மீடியா விசாரணைக்கு (Media Trial) இன்று வழிவகுத்துள்ளது.
 3. சுதா பாரத்வாஜ் தோழர் பிரகாஷுக்கு எழுதிய கடிதம் என ஒன்று மீடியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்துக் காத்திரமான பல கேள்விகள் உள்ளன. தேதியில்லாத கடிதம் அது. ஈமெயில் தலைப்பு விவரமும் அதில் இல்லை. இந்தக் கடிதம் பொய்யாக உருவாக்கப்பட்டது என்கிற கருத்துடன் ஒரு அறிக்கை நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. யாரோ மராத்தி மொழியை விவரமாகப் பேசக்கூடிய ஒருவர் இட்டுக்கட்டிச் செய்த வேலைதான் இக்கடிதம் என அது கூறுகிறது. இக்கடிதத்தில் 17 இடங்களில் தேவநாகிரி எழுத்துக்களில் சொற்கள் எழுதப்பட்டுள்ளன. சுதா பாரத்வாஜ் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் அல்ல. மராத்தி பேசுபவரும் அல்ல. மராத்தி மொழி இலக்கண விதிகளுக்கிணங்க தேவநாகிரி எழுத்துக்களில் அவர் எழுதியிருப்பதற்கு வாய்ப்பில்லை.
 4. CrPC 41-B-யின்படி ஒருவரைக் கைது செய்யும்பொது அதற்கு சாட்சியாக நிறுத்தப்படுபவர் ஒரு சுதந்திரமான நபராக இருக்க வேண்டும். ஆனால் இங்கு காட்டப்படும் இரு சாட்சிகளும் புனேயிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். புனே முனிசிபல் கார்பொரேஷனில் பணி செய்பவர்கள்.
 5. நீதியின் மேல் உள்ள பற்றின் அடிப்படையிலும், புலனாய்வு செய்யப்படும் விதத்தில் தீவிரமான ஐயங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் இந்தப் புலனாய்வை ஒரு சிறப்புப் புலனாய்வு முகமை அல்லது குழுவிடம் ஒப்படைப்பது அவசியம் எனக் கருதுகிறேன். அப்போதுதான் இவ்வழக்கில் எவ்வித சமரசத்துக்கும் ஆட்படாது நீதி கிடைக்கும்.
 6. ஐவர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியுள்ள இம்மனுதாரர்கள் யாரோ முகவரி அற்றவர்கள் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகவோ, அரசியல் காரணங்களுக்காகவோ இவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள் என யாரும் சொல்ல இயலாது. இவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அவர்களின் கண்ணியத்தைப் பாதித்துள்ளது என்பதில் ஐயமில்லை. இதனை எந்த இழப்பீடும் ஈடுசெய்துவிட இயலாது. இந்தப் புலனாய்வு பொருளற்றுப் போகாமல் இருக்க வேண்டுமானால் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் இவ்வழக்கு விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து.

பீமா கொரேகான் நிகழ்வை ஏற்காத ஆனந்த் டெல்டும்டே இன்று அதை ஆதரித்தார் எனச் சொல்லி கைது செய்யப்பட்டுள்ள கொடுமை!

இன்று வரவர ராவ் முதலான 11 பேர்கள் இந்த “பீமா கொரேகான்” வழக்கில்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் எழுத்தாளரும் மிக முக்கியமான சில நூல்களின் ஆசிரியருமான ஆனந்த டெல்டும்டே-யும் ஒருவர். இதில் மிகவும் வேதனை அல்லது வேடிக்கை என்னவென்றால், ஆனந்த் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல், கோட்பாட்டுரீதியாக பீமா கொரேகான் நிகழ்வைக் கொண்டாடுவதையே விமர்சித்தவர் அவர். எந்த ஒரு நிகழ்வை விமர்சித்தாரோ அதை ஆதரித்தார், அதில் பங்குபெற்றார் என சிறையில் உள்ளார்.

பீமா கொரேகான் போராட்டம் குறித்து ஆனந்த் டெல்டும்டே ஓராண்டுக்கு முன் எழுதிய இக்கட்டுரை, இன்றைய மோடி அரசு அவர் மீது சாட்டும் குற்றச்சாட்டு அபத்தமானது என்பதற்குச் சான்று பகர்கிறது. 

 • பீமா கொரேகான் எனும் புனைவு எந்தப் ‘புனைவை’ அது தாண்டிவர விரும்புகிறதோ அதை வலுப்படுத்தவே செய்கிறது.
 • இந்துத்துவ சக்திகளை எதிர்ப்பதற்கான உறுதி பாராட்டற்குரியதே. ஆனால் அதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தப் புனைவு பெரிய அளவில் எதிர்மறை விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.
 • பேஷ்வா எதிர்ப்பு பிரிட்டிஷ் படையில் தலித்கள் அதிகமாக இருந்தது உண்மைதான். பீமா நினைவுச் சின்னத்தில் அந்தப் போரில் கொல்லப்[பட்ட  49 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில்  22 பேர்கள் தலித்கள்தான் என்பது அவர்களின் பெயர்களிலிருந்து தெரிகிறது. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்தியக் கம்பெனி படையில் அதிக அளவில் தலித்கள் பங்குபெற்றது தீண்டாமையை அல்லது பேஷ்வாக்களை எதிர்த்து அல்ல, அப்படிச் சொல்வது அபத்தம். இன்றைய அரசியல் சூழல் அல்லது இன்றைய தலித் அரசியலுடன் அதை இணைத்துப் பார்க்கக் கூடாது. அன்றைய சூழலில் கிழக்கிந்தியக் கம்பெனி படையில் சேர்ந்தால் நல்ல ஊதியம் கிடைக்கும் என்கிற நிலை இருந்ததாலும், அதில் எளிதில் சேர முடிந்ததாலும் தலித்கள் அதிக அளவில் அதில் சேர்ந்தனர். மற்றபடி பேஷ்வா படைகளிலும் தலித்கள் இருக்கவே செய்தனர்.
 • அது மட்டுமல்ல பேஷ்வா படைகளில் இருந்த மூன்று ரெஜிமென்ட்களிலும் மூன்றில் ஒரு பகுதி அரேபிய முஸ்லிம்களால் நிரம்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் பொருள், முஸ்லிம்கள் பேஷ்வாக்களின் இந்துத்துவ ஆட்சியை ஆதரித்தார்கள் என்பதல்ல.அப்படித்தான் பிரிட்டிஷ் படையில் தலித்கள் இருந்ததையும் பார்க்க வேண்டும்.
 • மற்றபடி இன்றைய அரசியல் மதிப்பீடுகளை பண்டைய வரலாற்று நிகழ்வுகளில் கொண்டு திணிப்பது எல்லாம் அபத்தம். அது இன்றைய தலித் சமூகத்தை இந்த அடையாள அரசியல் எனும் சதுப்பு நிலத்திற்குள் மேலும் மூழ்கடிக்கவே பயன்படும்.
 • பீமா கொரேகான் போராட்டம் என்பது இரு பெரும் சக்திகளுக்கிடையே நடந்த அதிகாரப் போராட்டம். தேசபக்தி, தலித் அரசியல் முதலான கருத்தாக்கத்திற்கு எல்லாம் இதில் எந்த இடமும் இல்லை. அம்பேத்கர் அந்தப் போருக்கு நூறாண்டுகளுக்குப் பின்னர், தன் அரசியலுக்குப் பயன்படுத்துவதற்காக அதை ஒரு புனைவாக்கினார். அரசியல் திரட்டல்களுக்குப் புனைவுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் அவர் அதைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அது இறுகி ஒரு புனைவான பின்பு, இன்றைய சூழலில், அதையே பயன்படுத்துவது இன்றைய அரசியலுக்கு உதவாது.
 • இன்றைய பேஷ்வா ஆட்சியாக உருப்பெற்றுள்ள இந்துத்துவ முரடர்களின் ஆட்சியைக் கடுமையாக தலித்கள் எதிர்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால் இப்படிப் பழம் வீரக் கதைகளைப் பேசி இப்படியான இன்றைக்குப் பொருந்தாத புனைவுகளுக்குள் நெருப்புக் கோழிகள் போலத் தலையைத் திணித்துக் கொள்வது ஆபத்தானது.

பீமா கொரேகான்/எல்கார் பரிஷத் கூடுகையின் மீது ஆனந்த் அப்போதே விமர்சனங்கள் வைத்ததற்கு ஒரு முக்கியச் சான்று இக்கட்டுரை. அவர்மீது வழக்கு தொடரப்பட்டபோது அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையிலும் ஆனந்த் இதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Total Page Visits: 408 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *