தமிழ் சினிமா Vs. அயல் சினிமா எனும் அபத்தங்கள் – தீபக்

ஒருசில தயரிப்பாளர்கள் மட்டும்தான்
கதையை நம்பி தைரியமாக தயாரிப்பில் இறங்குகிறார்கள்.
இத்தனையும் தாண்டி நீங்கள் எடுத்தால்
நம் திரையரங்கு உரிமையாளர்கள்
ஹீரோக்களின் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள்.

தொடர்ந்து சர்வதேச சினிமாக்களை பார்க்கும் பலபேர் கேட்கும் கேள்வி, சொல்லப்போனால் சினிமாத்துறையில் இருப்பவர்கள்கூட கேட்கும் கேள்வி. ஏன் தமிழ் சினிமாவில் இந்தமாதிரி படங்கள் வருவதில்லை? எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது.

கடந்த 12 வருடங்களாக, தென்னிந்தியத் திரைப்படத் துறையிலும் உதவி கேமராமேனாக தொடங்கி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறேன். நானும் ஒருவகையில் தமிழ் சினிமாவில் தொழிலாளியாக இருப்பதால், என்னுடைய அனுபவத்தில் இருந்து இதற்கான பதிலை இங்குப் பதிவு செய்கிறேன்.

யூரோப் என்று நினைக்கிறேன். அங்கு 2018-இல் ஒரு கட்டுரை வெளியானது. அதில் லத்தீன் அமெரிக்கா சினிமாக்களை நோக்கி ஒரு கேள்வி இருந்தது. ‘City of god’ படம் முதற்கொண்டு பல படங்களை கிழித்துத் தொங்கவிட்டனர். அதில், கொடூரமான அரசியல் சூழ்நிலையில் வாழும் மக்களின் தினசரி வாழ்க்கையில் ஏவப்படும் வன்முறையால் சீரழியும் இளைஞர்களின் வாழ்வியலை, தவறான அரசியலோடு, அவர்களுடைய வாழ்வில் இருக்கும் உணர்வுகளை ‘Romanticise’ செய்து பார்க்கும் படங்கள்தான் அதிகம் என்று கூறி இருந்தனர்.

அதேவேளையில், இங்கு மாற்று சினிமாவை நாங்கள் உருவாக்குகின்றோம் என்ற பெயரில், தலித் மக்களின வாழ்வியலையும் மற்றும் சிறுபான்மையினரின் வாழ்வியலையும் எந்த ஒரு புரிதல் மற்றும் பொறுப்புமின்றி, தான் நினைக்கும் காட்சிப் பொருளில் அவர்களை வைத்து எடுக்கும் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கின்றது தமிழ் சினிமா. இங்கு டப்பிங்களிலும், எடிட்டிங் டேபிளிலும் உருவாகும் படங்கள்தான் அதிகம். இதை நாம் மறுப்பதற்கு இல்லை.

விஷயத்துக்கு வருகிறேன். . .

அமெரிக்காவில் LA சினிமா வணிகத்துக்கும, NYC சினிமா வணிகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. காரணம் LA, NYC  – இயக்குனர்கள், நடிகர்கள் அவர்களுடைய வியாபாரம் கொண்டு மாறுபடுகிறது. எனக்குத் தெரிந்து அமெரிக்க சினிமாவில்  மனித உணர்வையும், கறுப்பின மக்களின் அரசியலையும் பேசும் படங்கள் மட்டுமே வருவதில்லை. வியாபாரத்தை முன்வைக்கும் திரைப்படங்கள்தான் அதிகமாக எடுக்கப்படுகிறது.

நமக்கு  இந்தியாவுடைய சினிமா வர்த்தகம் பற்றிய புரிதல் முதலில் வேண்டும். சமீப காலமாக இங்கு மூன்று மாநிலங்களுடைய (ஹிந்தி, தமிழ், & தெலுங்கு) படங்கள் முழுக்க முழுக்க வர்த்தக நோக்கில்தான் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுவும்கூட,  இயக்குநர்களைவிட பல ஹீரோக்கள் கையில்தான் இந்த வியாபார முடிவு இருக்கிறது.

இதில் நீங்கள் குறிப்பிடும் தமிழ் சினிமாவை மட்டும் இங்கு பார்ப்போம். இங்கு யாரும் நீங்கள் சொல்வதுபோல் வணிகத்தை மட்டுமே மய்யமாக வைத்து சினிமாவை எடுக்கும் நோக்கில் வருவதில்லை. அனைவரும் நல்ல திரைக்கதையைக் கொண்ட சினிமாவை எடுக்கும் ஆசையில்தான் சினிமாத்துறைக்கு வருகிறார்கள். ஆனால் நீங்கள் நினைப்பது போல், இங்கு அவ்வளவு சுலபமாக ஒருவர் நினைக்கும் திரைக்கதையை அப்படியே உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கினாலும் அந்தப் படைப்பை திரைக்கு கொண்டுவருவதில் அவ்வளவு சிக்கல்கள் உள்ளன. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் திரைத்துறையில் இருப்பவர்களே மலையாளம் சினிமாவை போல் நாம் ஏன் எடுப்பதில்லை என்று கேட்கிறார்கள். அதனுடைய வர்த்தகத்தைவிட நம்மளுடைய வர்த்தகம் பலமடங்கு அதிகம். அதற்காக யாரும் வேண்டுமென்றே இந்த மாதிரி படங்களை எடுப்பதில்லை. உதாரணத்துக்கு, தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு செலுத்தும் உழைப்பை தெலுங்கு சினிமாவில் பாடல் காட்சிக்கும், சண்டை காட்சிக்கும் செலுத்துவார்கள். காரணம் அங்கு இருக்கும் வியாபாரம், போட்டி, ரசனை, இன்னும் நிறைய இருக்கிறது.

ஆனால் ஒருசில தயரிப்பாளர்கள் மட்டும்தான் கதையை நம்பி தைரியமாக தயாரிப்பில் இறங்குகிறார்கள். இத்தனையும் தாண்டி நீங்கள் எடுத்தால் நம் திரையரங்கு உரிமையாளர்கள் ஹீரோக்களின் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். இதனை சமீபத்தில் உடைத்தது நயன்தாரா அவர்கள். இதை நாம் அவ்வளவு எளிதாக கடந்து போய்விட முடியாது.

காலம் காலமாக முக்கியமான நாளில் வரும் படங்களுக்கு ஹீரோ முகத்தை மட்டும்  போஸ்டரில் பார்த்துவந்த நமக்கு சிலவருடத்துக்கு முன் நயன்தாராவின் முகம் ஹீரோக்களுக்கு நிகராக ஒட்டப்பட்டது. போஸ்டர் எப்போதுமே நடிகர்களுக்கு ஒரு கர்வமான ஆயுதம். திரையில் ஆண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவந்ததை அவர் உடைத்தார். இதனால் தென்னிந்தியாவில் அடுத்தடுத்து பல படங்கள் பெண்களை மையமாக வைத்து வரத்தொடங்கின. வியாபாரரீதியிலும் வெற்றி பெற்றன.

சில புது இயக்குனர்கள் பல தடைகளைத் தாண்டித்தான் புதுமுக நடிகர்கள், வியாபாரம் இல்லாத நடிகர்களை வைத்து எடுக்கும் நல்ல திரைப்படத்தை திரைக்கு கொண்டுப்போக வேண்டும் என்றால், அவர்களுக்கு பெரிய தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் நடிகர்கள் அல்லது இயக்குநர்களின் தயாரிப்பு நிறுவனம் தேவைப்படுகிறது. இங்கு ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு குறைந்தது 1 கோடியில் இருந்து விளம்பரத்துக்கு செலவு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்த, ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை

அனைத்து திரையரங்குகளுக்கு கொண்டுசெல்ல அவருக்கே பல சிக்கல்கள் ஏற்பட்டது. இன்னும் கொடுமை என்னவென்றால் சில ஹீரோக்களால் பல நல்ல திரைக்கதைகள் குப்பையாக எடுக்கப்படுகிறது, காரணம் அவர்களுக்கான வியாபாரம் என்ற பெயரில் நல்ல திறமையான இயக்குனர்களை தொலைத்துவிடுகிறார்கள். அப்புறம் எங்கிருந்து நல்ல படைப்பு வரும்? ஆனாலும் இந்தத் தடைகளையும் தாண்டி பல நல்ல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

அடிப்படையான ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், வியாபாரரீதியில் இருக்கும் சினிமாத்துறையில் அந்தந்த நிலத்துக்கான அரசியலையும், ரசிகர்களையும், பார்வையாளர்களையும் முன்வைத்துத்தான் ஒரு திரைப்படம் உருவாகும். அதுவும் வியாபாரரீதியில் ஹீரோக்களின் ஆதிக்கத்தில் இருக்கும் தமிழகம் போன்ற திரைத்துறையில் பெரிய இயக்குனர் நினைக்கும் படத்தை எடுப்பதே பெரிய சவாலாக இருந்து வருகிறது. அதுவும் ஒரு பெரிய நடிகரின் படம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றால், தயாரிப்பாளர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நிஜத்தில் நடப்பது வேறு, அந்தப் படத்தின் வியாபாரத்தை நம்பி இருக்கும் பல நல்ல திரைக்கதையில் உருவாகிய படங்களும், சிறு வியாபாரத்தை வைத்து எடுக்கும் படங்கள் அனைத்தும் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவுக்கு பாதிக்கப்படும். இன்னும் சொல்லப் போனால் பல படங்கள் திரைக்கு வருவதே சாத்தியம் அல்லாமல் போகும். அதனாலதான் திரைத்துறையினர் பெரிய நடிகர்களின் படங்கள் புடிக்கிறதோ இல்லையோ, அதிலும் புது இயக்குனர்கள் அந்தப் படங்கள் கண்டிப்பாக ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.

சமீபத்தில் ஒரு பெரிய நடிகர் தேர்ந்தெடுத்த இயக்குநரால் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளிவந்த படம் பெரிய நஷ்டம் அடைந்தது. இதனால் இரண்டு மூன்று நல்ல திரைப்படங்கள் ஒரு வருடம் ஆகியும் வெளியில் வரமுடியாத சூழல் இருக்கிறது. அந்த இயக்குனரின் நிலைமையை நாம் யோசித்துப் பார்த்தாலே மனச்சோர்வுக்கு போய்விடுவோம். அவருக்கு எப்படி இருக்கும், அவர் ரசித்து ரசித்து உருவாக்கிய படம் திரைக்கு வராமல் இருப்பது.  பாலிவுட், டோலிவுட் முதற்கொண்டு இதுதான் நடந்து வருகிறது.

நீங்கள் சொல்லும் சீரழிவு சினிமாக்கள் வருடத்துக்கு அதிகமாக திரைக்கு வந்தால்தான், திரைக்கதையை மய்யமாக்க் கொண்ட படங்கள் வர முடியும். காரணம் பெரிய வர்த்தக சினிமாவின் வெற்றியில்தான் சிறு படங்களுக்கான பணப்புழக்கம் எளிதாக உருவாகும். சினிமாவில் 24craft இருக்கிறது. இதில் இருப்பவர்கள் அனைவரும் வியாபார சினிமாவை நம்பி மட்டுமே இருக்கிறார்கள். ஒரு படத்தில் 4 fight, 5 song இருந்தால் மட்டுமே ஆர்ட் அசிஸ்டன்ட் முதற்கொண்டு அனைவருக்கும் சாப்பாடு போடும் அந்த அக்கா வரை தினசரி வாழ்க்கையை நடத்த முடியும். இது நீங்கள் எதிர்பார்க்கும் சினிமாவால் 365 நாளும் அவர்களை வாழவைக்க முடியாது. இங்கு ஹரி, சுந்தர் சி, பாண்டியராஜ் போன்ற இயக்குனர்களின் படங்கள் மிக அவசியம். அதுவும் வர்த்தகரீதியில் வெற்றிபெற்றால்தான் பல சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்க முடியும்.

மிடில் ஈஸ்ட் நாடுகளிலும், ஆப்பிரிக்கா நாடுகளிலும் பாலிவுட் படங்ககளுக்கு மிகப்பெரிய வியாபாரம் உள்ளது. அதற்காக அவர்கள் உருவாக்கும் படங்களை நம் படங்களோடு கதையிலும் சரி, வியாபாரத்திலும் சரி  ஒப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு தெளிவாகத் தெரியும் எதை கொண்டாடணும், எந்தப் படத்தை கேள்விகேட்கணும் என்று. நாம் அந்த இடத்துக்கு இன்னும் வரவில்லை. நேர்மையான அரசியலை பேசும் படங்கள் வெளிவராமல் இருப்பதற்கு   இதுவும் ஒரு காரணம்.

இந்த வியாபார சூழல்களைத் தாண்டி பிற மாநிலத்திலும் தமிழகத்திலும் முடிந்தவரை நல்ல திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. என்னமாதிரி நல்ல திரைக்கதையை அவர்கள் எழுதினாலும் படத்தை ரிலீஸ் செய்யக்கூடிய தயாரிப்பாளர் தேவைப்படுகிறது. இதில் எங்கே சோதனை முயற்சிப் படங்கள், சமூகம் சார்ந்த படங்கள், மனித உணர்வுப் படங்களை அவர்களால், எந்த மனநிலைமையில் எழுத முடியும். இதுதான் நடைமுறை சாத்தியம். இல்லையென்றால் எளிதாக ஒன்று செய்யமுடியும் ‘காக்கா முட்டை’ மணிகண்டன், வெற்றிமாறன், ராஜு முருகன், வசந்த பாலன் போன்றவர்கள்போல் அரைகுறை  அரசியல் அறிவோடு, மனித உணர்வுகளை தவறான புரிதலோடு படங்கள்  எடுக்கலாம். இருக்கவே இருக்கிறார்கள்  நம் தோழர்கள் கண்மூடித்தனமாக கொண்டாடுவதற்கு.

கடந்த மூன்று வருடங்களாக நானும் நண்பர் முத்துவேல் இருவரும் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கிய திரைக்கதையை  முன்னணி கதாபாத்திரத்துக்காகவும் தயாரிப்பாளருக்காகவும் எந்த ஒரு திருத்தமும் செய்யாமல் எடுப்பதற்காக, இந்த வியாபார சந்தையில்  போராடிக் கொண்டிருக்கின்றோம். இதுதான் சினிமா. இதேமாதிரி பலபேர் போராடிக் கொண்டிருப்பார்கள்.

நண்பர் Nilavazhagan Subbiah அவர்களுக்கு.

இது உங்களுடைய நேற்றைய பதிவில் இருந்து. . .

நல்ல சினிமா வளர்ந்த நாடுகளில் மட்டுமே சாத்தியம், தமிழ்நாட்டில் வணிக சீரழிவு சினிமாதான் எடுக்க முடியும் என்பவர்கள் பார்க்க வேண்டிய முக்கியமான செனெகல் நாட்டுத் திரைப்படம்.

நீங்கள் பல வருடங்களாக இதை தொடர்ந்து கூறிவருகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பார்க்கும் சர்வதேச படங்களை எடுக்கும் நாடுகளில், வர்த்தக சீரழிவு ரீதியான படங்கள் எடுப்பதில்லையா? இல்லை முழுக்க முழுக்க தெளிவான சமூக அரசியல் புரிதல் மற்றும் மனித உணர்வு பற்றிய படங்கள் மட்டும்தான் எடுக்கிறார்களா? நீங்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், எங்கும் படம் எடுப்பவர்கள் அவர்களுடைய படைப்பை ஏதோ ஒரு வகையில் வர்த்தகரீதியில்தான் அணுக வேண்டியிருக்கும். இதுதான் உண்மை. அது சிலி நாட்டில் தொடங்கி தாய்லாந்து சினிமாவரை இந்த வடிவத்தில்தான் நடக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்திற்க்காக ஒன்றை உருவாக்கினால்தான் கலைக்கான ஒன்றை உருவாக்க முடியும்.

நீங்கள் என்னவென்றால் செனெகல் நாட்டில் உருவாகிய ‘Felicite’ திரைப்படத்தை இங்கு இருக்கும் வியாபார சினிமாவுடன் ஒப்பிட்டு அனைத்து படைப்பாளிகளையும் முட்டாளாய்ப் பார்ப்பது என்னமாதிரி பார்வை என்று தெரியவில்லை.

நீங்கள் பேசுவதற்காக Alice Rohrwacher-இன் ‘Happy as Lazzaro’ மற்றும்  Mati Diop-இன் ‘Atlantics’ திரைப்படங்களை, பிரதான சினிமாவோடு நானும் ஒப்பிட்டு பேசினால், அது அந்தப் படைப்புகளின் ஆத்மாவை கொலை செய்வதுபோன்றதுதான்.

‘நசிர்’ திரைப்படத்தை தமிழ் சினிமாவின் parallel cinema என்ற பெயரில் கண்மூடித்தனமாக கொண்டாடிவிட்டு, நீங்கள் பிரதான தமிழ் சினிமாத்துறையை கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம். உண்மையில் எந்த ஒரு அரசியல் புரிதல் இல்லாமலும், மனித உணர்ச்சிகளை வெறும் காட்சிப்பொருளாக பார்த்த ‘நசிர்’ இயக்குனரிடம்தான் நீங்கள் இந்த கேள்வியை முதலில் கேட்க வேண்டும். இந்த மாதிரி  ‘Felicite’ போன்ற நேர்மையான படங்களை எப்போது நீங்க எடுப்பீர்கள் என்று.

இங்கு வெற்றிபெறுபவர்கள் பலபேர் அவர்களுக்கு பிடிக்காததையே செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த தமிழ் சினிமாத்துறையில் நான் முதற்கொண்டு இங்கு பலபேர் அவர்களுடைய அரசியலில் இருக்கும் உணர்வை குறைந்தபட்சம் படைப்பில் உருவாக்குவதற்காக காத்திருந்து, ஏதோ ஒரு நம்பிக்கையில் இந்த வியாபார சினிமாக் கடலில் தினம் தினம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

Total Page Visits: 142 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *