ராம் மனோகர் லோகியா: ஒரு சோசலிச காந்தியவாதி: – இரா.மனோகரன்

இதுவரை சமத்துவம் கோரியவர்கள்கூட
இன்றைக்குள்ள நிலையைப் பார்த்து,
சமத்துவத்திற்காக போராட ஆரம்பித்தால்
சமுக சீர்குலைவு ஏற்படும் எனப் பயந்து,
இப்போதுள்ள முறையே நீடித்தால் போதும் என்று
நினைக்கத் தொடங்கிவிட்டனர்

– லோகியா

ராம் மனோகர் லோகியா ஒரு சோசலிச சிந்தனை கொண்ட காந்தியவாதி. முதல் பார்வைக்கு இது முரண்பட்ட கருத்தாக தோன்றினாலும், அதுதான் அவரது ஆளுமையின் வடிவம். லோகியா ஜெர்மனியில் படித்தபோதே, காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை அடிப்படையாக வைத்து, காந்தியின் பொருளாதார சிந்தனைகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்தியாவிற்கு வந்ததும், காங்கிரஸில் இணைந்து சைமன் கமிஷன் வருகைக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டார்.

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூரில், காங்கிரஸ் தலைவர் ஹிராலாலுக்கும் ஆசிரியை சாந்தாவுக்கும், 1910-ஆம் ஆணடு மார்ச் 23-ஆம் தேதி லோகியா பிறந்தார். இளம் வயதிலேயே தாயை இழந்த லோகியா, ஜெயின்  சமூகத்தைச் சேர்ந்தவர். காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் படிப்பை முடித்து, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை நிறைவு செய்தார். ஜெர்மனிக்கு சென்று படிக்க வேண்டும் என்பதற்காகவே ஜெர்மன் மொழியைப் பயின்று, ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேல்படிப்பைப் படித்தார்.

லோகியா ஐரோப்பியாவில் இருந்த காலத்தில், லீக் ஆஃப் நேஷன்ஸ் எனப்படும் நாடுகளின் கூட்டமைப்பு ஜெனிவாவில் கூடியது. அதற்கு பிகானீர் ராஜாவின் பிரதிநிதியாக லோகியா சென்றார். அவர் கூட்ட அரங்கிற்குள்ளே அனுமதிக்கப்படாமல், வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த வாயில் அருகிலேயே லோகியா ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அது அந்நாட்டு பத்திரிக்கைகளில் செய்தியாக வெளிவந்தது. மேலும், பத்திரிக்கைகளில்  கடிதம் மூலம் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜெனீவாவில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பை அம்பலப்படுத்தினார். அதன்மூலமாக, இந்தியாவில் லோகியாவின் புகழ் பரவியது.

1932-ல் இரண்டாம் உலகப்போர் துவங்கியபோது, பிரிட்டிஷ் அரசை ஆதரிக்கலாமா? ஆதரிக்கக் கூடாதா? என்பது தொடர்பாக, காங்கிரஸில் இரு வேறு கருத்துக்கள் நிலவின. ஒன்று பிரிட்டிஷ் அரசை ஆதரிப்பது. காந்தி இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார். மற்றொன்று, பிரிட்டிஷ் அரசை ஆதரிக்காமல், போரைப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம், இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் அரசை வெளியேற வைப்பது. லோகியா இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார். காந்தியின் அரிஜன் இதழில், இந்தக் கருத்தை முன்வைத்து லோகியா எழுதிய கட்டுரைக்காக, ராஜதுரோக வழக்கில் லோகியா இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், காங்கிரஸுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில், காங்கிரஸ் தலவர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டபோது, லோகியாவும் விடுதலையானார்.

இந்த சந்தர்ப்பத்தில், காந்திக்கும் லோகியாவுக்கும் இடையே, பத்திரிக்கையின் வாயிலாக விவாதம் நடந்தது. காந்தி, தான் போரை விரும்பவில்லை என்ற அர்த்தத்தில், ‘பிரிட்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே கட்டிடத்தின் மீது குண்டு விழுவதை நான் விரும்பவில்லை’ என்று எழுதினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் லோகியா, ‘வெஸ்ட் மினிஸ்டர் அபே கட்டிடத்தின் மீது குண்டு விழுவதை நீங்கள் விரும்பாததைப் போலவே, ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக்கழகக் கட்டிடத்தின் மீது குண்டு விழுவதையும் நான் விரும்பவில்லை’, என்று எழுதினார்.

ஜெர்மானியக் கல்வி லோகியாவிற்கு சோசலிச சிந்தனையை வழங்கியிருந்தது. இந்தியாவுக்கு வந்ததும் காங்கிரஸில் இணைந்த லோகியாவுக்கு, காங்கிரசிற்குள் நிலவிய நிலவுடமையாளர்கள் சார்புப் போக்கு ஏற்புடையதாக இல்லை. தனது கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், 1934-ல் காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே, காங்கிரஸ் சோசலிசக் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினார். அதற்காக காங்கிரஸ் சோசலிஸ்ட் என்ற பத்திரிக்கையும் நடத்தினார்.

1941-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் துவங்கியதும், காந்தி, நேரு, பட்டேல், ஆசாத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். லோகியா தலைமறைவானார். ரகசியமாகத் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகிக்கும் குழுவில் இயங்கினார். மேலும், உஷா மேத்தா என்பவருடன் சேர்ந்து, மும்பையில் காங்கிரஸ் ரேடியோ என்ற ரகசிய வானொலியை, மூன்று மாதங்கள் வெற்றிகரமாக நடத்தினார். சுதந்திரப் போரில், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். கூடவே, காங்கிரஸ் கட்சியின் மாதாந்திரப் பத்திரிக்கையான ‘இன்குலாப்’ இதழை, அருண் ஆசாத் அலியுடன் இணைந்து வெளியிட்டு வந்தார்.

மும்பையில் லோகியாவின் நடமாட்டத்தை மோப்பம் பிடித்த போலீஸ், அவரை சுற்றி வளைத்தபோது, மாறுவேடத்தில் தப்பித்து கொல்கத்தா சென்றார். பின்பு, அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் சென்ற லோகியா, அங்கு நேபாள புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அங்கிருந்து நாடு திரும்பியதும், 1944-ல் மும்பையில் கைது செய்யப்பட்ட லோகியா, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக் கொடுமைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், காந்தியின் தலையீட்டால் லோகியா விடுதலைச் செய்யப்பட்டார்.

1947-ல் நாடு விடுதலை அடைந்தபோது, பிரிவினையும் கூடவே வந்தது. அது இந்து-முஸ்லீம் கலவரத்தை ஏற்படுத்தியது. நாட்டை மதரீதியாக பிளவுபடுத்துவதை லோகியா கடுமையாக எதிர்த்தார். நாடே விடுதலையைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, இந்து-முஸ்லீம் கலவரம் நடந்துகொண்டிருந்த பகுதிகளில் லோகியா பயணம் செய்துகொண்டிருந்தார். கல்கத்தாவும் நவகாளியும் பெரும் கலவர பூமியாகி இருந்தது. அங்கு நேரடியாகச் சென்று, இந்து-முஸ்லீம் இருதரப்பிலும் சமாதானம் பேசி, அமைதியைக் கொண்டு வந்தார் லோகியா.

காந்தியின் மறைவுக்குப்பின் காங்கிரஸில் இருந்து வெளியேறிய லோகியா, பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். அதன்பின், இறுதிக்காலம் வரை நேருவின் சோசலிச பிம்பத்தை உடைப்பவராகவே செயல்பட்டார் லோகியா.

மார்க்சியம் என்ற பெயரைக் கேட்டதுமே அதை எதிர்ப்பவர்கள் உண்டு. அதைப் புரிந்துகொள்ளாமல் எதிர்ப்பவர்களும் உண்டு. மார்க்சியத்தை புரிந்துகொண்டதால் ஏற்பட்ட பயத்தின் விளைவாக எதிர்ப்பவர்களும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் மத்தியில் மார்க்சியத்தை பரிசீலனை செய்தவர் லோகியா. அரசியல் தலைவன் என்பவன் வெறுமனே ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவனாக மட்டும் இருந்தால் போதாது. அவனுக்கு என்று தனியாக சமுதாயம் பற்றிய சிந்தனை, வரலாறு பற்றிய அறிவு, எதிர்காலம் பற்றிய முன்னுணர்வு ஆகியவை இருக்க வேண்டும். அந்த வகையில் லோகியாவிடம் இவை அனைத்தும் இருந்தன.

1985-வாக்கில் லோகியாவின் காலச்சக்கரம் என்ற நூலை சமுதாயப் பிரசுராலயம் தமிழில் வெளியிட்டுள்ளது.

லோகியாவின் அந்த நூலில் இருந்து சில வரிகள்:

  • ‘போராட்டமின்றி புதிதாக எதுவும் பிறப்பதில்லை.’
  • ‘வர்க்கங்களுக்கு இடையேயான போராட்டம் சரித்திரம் பூராவும் நிகழ்ந்திருக்கிறது.’
  • ‘மார்க்ஸ் அடிமைகளுக்கு நல்ல காலம் நெருங்கிவிட்டது என்று நிரூபிப்பதில் வெற்றிப் பெற்றுவிட்டார்’.
  • ‘சாதி அஸ்திவாரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சமுதாயம் எதுவும் நீதியின் நிலைக்களனாக விளங்க முடியாது.’
  • ‘இன்றைய நாகரிகத்தின் மற்றொரு விளைவு, தனிமனிதர்களுடைய மனதை பாதித்து, அவர்கள் நல்ல வழியில் சிந்திக்க முடியாமல் செய்துவிட்டது.’
  • ‘இன்றைய நாகரீகம் தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் அழிந்துபோவது நிச்சயம்.’

மேலும், அந்த நூலில் லோகியா சாதியைப் பற்றிக் கூறியிருப்பதும் கவனிக்கதக்கது. ‘வர்க்கம் என்பது இஷ்டப்படி உயரவோ, தாழவோக்கூடிய சாதி. சாதி என்பது  இஷ்டப்படி உயரவோ, தாழவோ முடியாத வர்க்கம். ஒருவனின் வருமானமும் அந்தஸ்த்தும் உயர்வதன் மூலம், அவன் உயர்ந்த சாதிக்காரனாக மாறிவிடுவதில்லை,’ என்கிறார் லோகியா.

அத்துடன், ‘வர்க்கப் போராட்டம் தாங்கமுடியாத அளவுக்கு வந்தவுடன் சாதி நிர்ணய வழியைக் காட்டி, அதை அடக்கிவிடுவது ஒவ்வொரு சமுதாயத்திலும் நடந்திருக்கிறது. இதுவரை சமத்துவம் கோரியவர்கள்கூட இன்றைக்குள்ள நிலையைப் பார்த்து, சமத்துவத்திற்காக போராட ஆரம்பித்தால் சமுக சீர்குலைவு ஏற்படும் எனப் பயந்து, இப்போதுள்ள முறையே நீடித்தால் போதும் என்று நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

அவர்களுடைய  தற்போதைய அந்தஸ்து மற்றும் வருமானம் ஆகியவைகளுக்கு ஆபத்து வராமல் பாதுகாக்கக்கூடிய ஒரு சமூகம் அவர்களுக்கு வேண்டும். அப்படிப்பட்ட பாதுகாப்பை அளிக்கக்கூடியது மதமோ, பகுத்தறிவு இயக்கமோ எதுவாக இருந்தபோதிலும், அதை அவர்கள் ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள்,’ என  அன்றைய ஐரோப்பியவின் சமூக சூழ்நிலைப் பற்றி லோகியா இவ்வாறு எழுதுகிறார்.

மேலும், ‘அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையின் விளைவாகத் தோன்றியதுதான் ஜெர்மனியில் இட்லரின் நாஜி இயக்கமும், ரஷ்யாவின் கம்யூனிச இயக்கமும்’ என்றும் எழுதியுள்ளார். பாசிசம் உருவாக பின்னணியாக இருந்த சமுக சூழ்நிலைப் பற்றி, அந்தோணியோ கிராம்சியின் சிந்தனைகளுக்கு நெருக்கமாக வருகிறது லோகியாவின் இந்தப் பார்வை. அதேவேளையில், இன்றைய இந்திய மத்தியதர வர்க்க மக்களின் மனநிலையைப் புரிந்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

‘விஞ்ஞானரீதியான முறைகள் நல்லதா, கெட்டதா என்பது, அதைப் பயன்படுத்தும் விதத்திலேயே இருக்கிறது,’ என்று தனது விஞ்ஞானம் பற்றிய பார்வையை தெளிவுபடுத்துகிறார். அறிவியல் தொழில்நுணுக்க வளர்ச்சி, மனித மனங்களை மாற்றிவிட்டதையும், அவை தனி மனிதர்களை மிகுந்த சுயநலமிகளாக மாற்றி சமூகம் பற்றிய உணர்வே இல்லாமல் செய்துவிட்டது என்பதையும் கண்டு லோகியா வேதனையடைவதைப் பார்க்கையில், இற்றைய சந்தைக் கலாச்சார மனநிலையின் ஆரம்ப அறிகுறிகளை, லோகியா அன்றே அடையாளம் கண்டிருப்பது தெரிகிறது.

தொழில் நுணுக்க உதவி என்பது பரஸ்பரம் கொடுப்பதும் பெறுவதுமாக இல்லாமல், வளர்ந்த நாடுகள் தங்களின் தொழில் நுணுக்கங்களை வளர்ந்து வரும் நாடுகள் மீது பலவந்தமாக திணிப்பதாக உள்ளது. அதன் பின்னால், ராணுவக் கூட்டுறவு இருக்கிறது. ஐரோப்பிய அறிவியலும், விவசாயமும் எல்லா நாட்டிற்கும் பொருந்தும் என்பது சரியல்ல என்றும் லோகியா எழுதியிருக்கிறார். இன்று அமெரிக்கா உலகமயமாக்கல் என்ற பெயரில் செய்துவரும் அடாவடித்தனங்களை லோகியாவின் இந்தக் கருத்து நமக்கு நினைவூட்டுகிறது.

அரசியலுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த லோகியா, காந்தியைத் தனது ஆதர்ச குருவாக ஏற்றுக்கொண்டவர். அதனால், தனது இறுதிக்காலம் வரை பதவி ஆசையின்றி வாழ்ந்தார். இளம் தலைமுறை இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் விவாதித்தப்படி தனது கடைசி காலத்தை கழித்த லோகியா, 1967- அக்டோபர் 12-ல், புது டெல்லியில் இயற்கை எய்தினார்.

லோகியாவின் சிந்தனைப் போக்கில் ஊசலாட்டங்கள் இருந்தபோதிலும், அவை மனித  சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட மனிதரின் சிந்தனையாகவே தோன்றுகின்றன. சரித்திரம், நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மனிதகுல இலட்சியங்கள் பற்றிய லோகியாவின் பார்வைகளும், முன்னுணர்வுகளும் இன்றைக்கும் நினைவுகூரத்தக்கவை.

Total Page Visits: 338 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *