குழந்தைகளுக்கான சோவியத் இலக்கியம் – தீபலட்சுமி

குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கத்தான் வேண்டும்.
அவற்றின் மதிப்பு என்பது,
அவற்றின் விலைச்சீட்டில் குறிக்கப்படுவது அல்ல
என்ற தெளிவிருந்தால்,
குழந்தைகளை ஓரளவு நுகர்வு வெறியிலிருந்து காப்பாற்றலாம்.

குழந்தைகளுக்குத் தற்காலத்தில் பிரபலமாக உள்ள எந்தச் சிறுவர் புத்தகங்களையும் வாங்கித் தருவதில் சின்னத் தயக்கமுண்டு.

ஜெரோனிமோ ஸ்டில்டன், டைரி ஆஃப் அ விம்பி கிட் போன்ற புத்தகங்கள் எல்லாமே விலை உயர்ந்தவை. அது மட்டுமல்ல, அவற்றின் முதன்மையான நோக்கம் வியாபாரமாக அமைந்திருப்பதால் அனிச்சையாக ஒரு ஒவ்வாமை ஏற்படுகிறது அவற்றின் மீது.

நுகர்வுக் கலாசாரத்தின் கோரப்பிடி உலகமெங்கும் பலரூபங்களில் நம் குழந்தைகளை அல்லவா பெரிதும் குறிவைக்கின்றன? புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆனாலும், குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கத்தான் வேண்டும். புத்தகங்களைப் பொருத்தவரை அவற்றின் மதிப்பு என்பது, அவற்றின் விலைச்சீட்டில் குறிக்கப்படுவது அல்ல என்ற தெளிவிருந்தால், குழந்தைகளை ஓரளவு நுகர்வு வெறியிலிருந்து காப்பாற்றலாம்.

பழைய புத்தகக் கடைகளில் சல்லடை போட்டுத் தேடினால் எனிட் ப்ளைடன் என்கிற மிகப்பிடித்த பிரிட்டிஷ் எழுத்தாளரின் கதைப் புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனாலும் அவற்றில் ஆங்கிலேயர்களின் மேட்டிமையும், அமெரிக்க நாட்டின் மீதான மோகமும், இனவெறியும், பெண்கள் குறித்து மறுக்க முடியாத பிற்போக்குத்தனமும் விரவிக்கிடப்பதை இப்போது உணர முடிகிறது.

எனிட் ப்ளைட்டன் புத்தகங்களும் ஆர்ச்சி காமிக்குகளும் கவர்ந்து இழுத்தாலும், உயர்ந்த விலை காரணமாய் அவை எட்டாக்கனிகளாய் இருந்தபோது, எளிதில் வாங்கக் கூடிய ஆங்கிலப் புத்தகங்களாய் இருந்தவை ருஷ்யப் பதிப்பகங்கள் பதிப்பித்த ஏராளமான புத்தகங்களும் சஞ்சிகைகளும்தான். மிஷாவை மறக்க முடியுமா?

நான் படித்து மகிழ்ந்த ஒரு புத்தக உலகம், என் தனிமையையும் வெறுமையையும் போக்கிய அந்தப் பொக்கிஷம், உடல்சுகமில்லாத ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்கு நட்புக்கரம் நீட்டிய பொம்மைப் பையன், அல்யோனுஷ்கா, ஈவானுஷ்கா, மாஷா, முதலை விழுங்கிய சூரியன், குட்டிக் கரடி மிஷா எல்லாரும் எங்கே போனார்கள்?  செர்யோஷா, மாஷா, அல்யோனுஷ்கா போன்ற பெயர்கள் எல்லாம் அந்நியமாகவே இல்லாது தோழமைக்கும் விளையாட்டுக்கும் உகந்ததாய் நெருங்கி இருந்தன.

ஆர்தெக் குழந்தைகள் முகாமுக்குச் சென்றுவரப் பரிசு அறிவிக்கப்பட்டு ஓவியப் போட்டிகள் நடைபெறும். பெரிய வகுப்பு வந்ததும் கலந்துகொள்ள வேண்டும்; எப்படியாவது அப்போட்டியில் வென்று, அங்கு போக வேண்டும் என்பது குழந்தைப் பருவத்தின் ஏக்கக் கனவு.

பள்ளி ஆண்டு விழாவில் பரிசுகளாக விலை மிகக் குறைந்த அந்தப் புத்தகங்களைத்தான் அள்ளி வழங்குவார்கள். ஒருமுறை ஒரே புத்தகம் தமிழ்க் கட்டுரை போட்டிக்குத் தமிழ்ப் பதிப்பும், வேறு ஏதோ போட்டியில் வென்றதற்காக அதன் ஆங்கிலப் பதிப்பும் பரிசாகக் கிடைத்தது வேடிக்கையாக இருந்தது. அக்கா அண்ணனும்கூட எனக்கு முன்பே பல புத்தகங்களை இதுபோல் சேகரித்து வைத்திருந்தனர். பலகாலம் வரை வைத்திருந்த தொகுப்புகளில் மிகச்சிலவே காலத்தைக் கடந்து கையில் இருக்கின்றன. ஆனால் சிலர் இப்பொக்கிஷங்களைக் கவனமாகச் சேமித்திருப்பதை அறிய மகிழ்ச்சியாய் இருக்கிறது.

  1. சரவணன் என்பவரது வலைப்பதிவு
  2. எழுத்தாளர் ரஞ்சனி பாசு சோவியத் புத்தகங்கள் குறித்து ஏழு நிறப்பூ என்றொரு கிண்டில் புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.

உலகில் உள்ள பொம்மைகள் எல்லாம் கிடைப்பதோ, கேட்டவுடன் விரும்பும் பொருட்கள் கிடைப்பதோ, நினைத்த இடத்துக்குச் செல்வதோ தராத மகிழ்ச்சி, தோழன் ஒருவனுக்கு உடல் நலனை அளிப்பதில் கிடைக்கிறது என்பதுபோல், எல்லாக் கதைகளுமே பேராசையினால் வரும் துன்பங்களை இடித்துரைப்பதாகவே இருக்கும். இக்கதைகள் குழந்தைகளுக்குச் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பரிவன்புடன் புகட்டுவதாகவே இருக்கும்.

இன்னொரு கதை; டண்ட்ரா பனிப்பாலையில் மகனையும் மகளையும் வளர்க்கப் போராடும் தாயைப் பனிப்புயல் அரக்கன் தூக்கிச் சென்றுவிடுவான்.

அதுவரை அம்மா என்ன வேலை சொன்னாலும் செய்யாமல் சோம்பேறியாய்த் தூங்கிக் கொண்டிருக்கும் சிறுவனும், அழகான தன் தலைமுடியை அலங்காரம் செய்வதிலேயே நேரம் போக்கிக் கொண்டிருக்கும் சிறுமியும் பலநாள் போராடி, பனிப்புயல் அரக்கன் சிறைவைத்திருக்கும் அம்மாவை மீட்கும் மாயாஜாலக் கதை. அதன் இறுதியில், அம்மா இருக்கும் மலைக்குன்றுக்கும் இவர்களுக்கும் இடையே இருக்கும் பாதாளத்தைத் தாண்டுவதற்காகத் தன் தலைமுடியை வெட்டிப் பாலம் செய்வாள் சிறுமி. அந்தக் கதைக்குத் துணையாய் இருந்த படங்கள் பிரமிப்பூட்டுபவை. துணிச்சல், சாகசம், வெற்றி இவை அனைத்துக்கும் பேரன்புதான் அடிப்படை என்பதைச் சொல்லும் வகையில் அமைந்த அருமையான கதை.

வென் டாடி வாஸ் அ லிட்டில் பாய் (When daddy was a little boy) கதையில், யாருக்கும் கொடுக்காமல் தானே தனது விலை உயர்ந்த அழகிய பந்து விளையாடும் சிறுவனை ஏமாற்றிப் பந்தைக் காரின் சக்கரங்களுக்கடியில் தூக்கி எறியச் செய்து விடுவார்கள் நண்பர்கள். அழுது கொண்டிருக்கும் அவனைத் தேற்றும் பக்கத்து வீட்டுக்காரர், ”தனியாக, சுயநலமாய் விளையாடுவதில் என்ன மகிழ்ச்சியைக் கண்டாய்? பார், நீ எல்லாருடனும் சேர்ந்து விளையாடி இருந்தால், பந்தும் இருந்திருக்கும், உனக்கு நண்பர்களும் இருந்திருப்பார்கள்” என்று அறிவுறுத்தி இன்னொரு சாதாரண பந்து வாங்கித் தருவார். யாரிடமும் இல்லாத, கண்ணை உறுத்தும் பொருளை வைத்திருப்பதால் உண்டாகும் கேடுகளை இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா?

இவை தவிர மிஷா சஞ்சிகையில் வந்த கதைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பாகவே இருக்கிறது.

இந்தக் கனவுலகத்தின் நிழல்கள்கூட அரிதாகவே இப்போது இணையத்தில் தென்படுகின்றன. நம் தலைமுறையின் ஏக்கப் பெருமூச்சில் கரைந்து போன பெருங்கனவுதான் சோவியத் யூனியன் என்றாலும், அந்தக் கனவின் மிச்சத்தையாவது நம் குழந்தைகளுக்குக் கடத்த வேண்டிய கடமை நமக்கு உண்டல்லவா?

அந்தக் கதைகளில் பலவும் பசுமையாக நினைவில் இருப்பதால் இப்போதும் குழந்தைகளுக்கு அவ்வப்போது சொல்வதுண்டு. அவர்கள் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களின் கதைகளைவிட நாம் சொல்லும் கதைகளை அதிகம் விரும்புவார்கள்தானே?

Total Page Visits: 204 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *