மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக்கணிப்பு பித்தலாட்டங்கள் – வசீகரன்

கொரோனா பரவலைக் காரணம் காட்டி
அமெரிக்கா, சீனாவுக்கு நெருக்கடி தருகிறது.
இந்தியா, அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது.
இதுதான் தற்போதைய
எல்லைப் பிரச்சினையின் மூலக்காரணம்.
ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடியின் செல்வாக்கை அளவிடும் ஒரு கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்படுகிறது. அதை சி-வோட்டர் என்னும் நிறுவனம் செவ்வனே செய்துவருகிறது. இந்த கொரோனா பரவல் காலத்தில் மட்டும், சி-வோட்டர் நிறுவனம் மூன்று முறை, மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக கருத்துக்கணிப்பு என்ற பெயரில் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
கடந்த மே மாதத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில், உலக தலைவர்களிலேயே மோடி முன்னிலை வகிப்பதாக, ஒரு கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது. அதற்கு நேரெதிராக, உலகிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணரும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அடுத்து வந்த ஜூன் மாதம், கொரோனாவை முன்னிட்டு, முதற்கட்டமாக ஊரடங்கை அமல்படுத்தியதற்காக, மோடியை நாட்டின் 92 சதவீதம் பேர் ஆதரிப்பதாக, ஒரு கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது. அதற்கு அடுத்தடுத்த கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தலின்போது மோடியின் செல்வாக்கு சற்று சரிந்தாலும், இறுதியில், 62 சதவீதம் பேர் மோடியை ஆதரிப்பதாகவும் அந்தக் கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனாவை கட்டுப்படுத்த கைத்தட்டுவது, விளக்கு ஏற்றுவது, ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவுவது, பிரணாயனம் செய்வது போன்ற சடங்குகளைச் செய்ய, மக்களுக்கு அறிவுரை வழங்குவதை தவிர, மோடி உருப்படியாக எதையும் செய்துவிடவில்லை. மாநில அரசுகள்தான் கொரோனாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. மாநில அரசுகளுக்கு தேவையான நிதியுதியையும் மோடியின் மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்க்கை. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி, மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்து குடியேறியுள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல அவகாசம் வழங்காமல், அவர்களின் வருவாய் இழப்பை ஈடுகட்ட எந்த நிதியுதவியும் செய்யாமல், மோடி அரசு அவசரமாக ஊரடங்கை அமல்படுத்தியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னால், அவர்கள் பெரும் திரளாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டபோதும், எந்த உதவியும் செய்யாமல் மத்திய அரசு வேடிக்கைப் பார்த்தது. அதனால், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனார்கள். இந்த லட்சணத்தில், ஊரடங்கை அமல்படுத்தியதற்காக, மோடியை மக்கள் ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில், இந்திய-சீன எல்லைப் பிரச்சினைக்கு தாவியிருக்கிறது சி-வோட்டர் நிறுவனம். கடந்த ஜூன் 25-ஆம் தேதி, இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில்; ‘சீனாவை எதிர்கொள்ளும் திறன் பிரதமர் மோடிக்கு உள்ளது,’ என்று 72 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தற்போதைய இந்திய-சீன எல்லைப் பிரச்சனையே மோடி அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீண்ட காலமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் சச்சரவு இருந்து வந்தபோதும், சமீபத்தில் அமெரிக்காவுடன் இந்தியா காட்டிவரும் நெருக்கமும், அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்ப சீனா மீது இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளுமே தற்போதைய எல்லைப் பிரச்சினைக்கு காரணமாகத் தெரிகிறது. கொரோனா பரவலைக் காரணம் காட்டி அமெரிக்கா, சீனாவுக்கு நெருக்கடி தருகிறது. இந்தியா, அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது. இதுதான் தற்போதைய எல்லைப் பிரச்சினையின் மூலக்காரணம். இந்நிலையில், சி-வோட்டர் நிறுவனம், மோடி சீனாவை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர் என்று கருத்துக்கணிப்பு வெளியிடுகிறது.
இந்த கருந்துக்கணிப்புகள் எங்கு, எப்போது, யாரிடம் நடந்தப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், நாம் அந்த முடிவுகளை மட்டும் ஊடகங்கள் வழியாகப் பார்க்கிறோம்.
சி-வோட்டர் நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு கருத்துக்கணிப்பு முடிவிலும், ராகுல் காந்திக்கு ஆதரவு மிகமிக குறைவு என்ற தகவலையும் சேர்த்தே வெளியிடுகிறது. தேர்தல் சூழல் இல்லாத நேரத்தில், எந்த அதிகாரம் கொண்ட பதவியிலும் இல்லாத ராகுல் காந்தியைப் பற்றி, எந்த அடிப்படையில் இவர்கள் கருத்துக்கணிப்பு நடத்துகிறார்கள்? இத்தகைய நம்பகத்தன்மையற்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை, நடுநிலையாளர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் முன்னணி ஊடகங்களும் வெளியிடுகின்றன என்பதேதான் வேதனைக்குரியது.
ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுவதின் மூலம் அதை உண்மையாக்கி விடமுடியும் என்று நம்புவது பார்ப்பனியம். இந்த சூத்திரத்தை பார்ப்பனியம் இந்திய துணைக்கண்டத்தில், இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களாக, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது. அதன் தொடர்ச்சிதான், தொடர்ந்து வெளிவரும், மோடியின் செல்வாக்கை உயர்த்திக்காட்டும் கருத்துக்கணிப்புகள்.
நன்றி: சதுரங்கம்.காம்