‘கடனிலிருந்து விடுதலை’: மேற்கு வங்கத்தில் ஒரு புது இயக்கம் – தோழர்.மதிவாணன்

நுண்கடன் நிறுவனங்களிடம் இருந்து
கடன்பெற்ற பெண்கள்,
இன்று, கந்துவட்டியிலிருந்து விடுதலை
என்ற இயக்கமாக அணிதிரண்டு வருகின்றனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த வங்கியாளரும் சமூக தொழிலதிபருமான மொகமத் யூனூஸ் என்பவருக்கு 2006-ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. நுண்-கடன் அல்லது நுண்-நிதியுதவி என்ற புதிய கருத்தாக்கத்தை உருவாக்கியதற்காக அவருக்கு இப்பரிசு அளிக்கப்பட்டது. 1883-ல் அவர் உருவாக்கிய கிராமின் வங்கியும், அவரும் கூட்டாக இந்த நோபல் பரிசைப் பெற்றனர்.

கிராமப்புர கந்து வட்டியிலிருந்து பெண்களை விடுதலை செய்வதும், அவர்கள் கூட்டாக தொழில் செய்வதற்கு உதவியாகக் கடன் அளிப்பதும்தான் மொகமத் யூனூஸ் உருவாக்கிய கருத்தாக்கம். யூனூஸ் உருவாக்கிய கருத்தாக்கத்தின் அடிப்படையில் எழுந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் (Micro Finance Institutions-MFIs), வளரும் நாடுகள் பலவற்றிலும் பெண்களுக்குக் கடன் அளிக்கும் அமைப்புகளாக செயல்படத் துவங்கி, இன்று மறுபடியும்  கந்துவட்டி கொடுமையை பெண்கள் மீது திணிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன.

நுண்கடன் நிறுவனங்களிடம் இருந்து கடன்பெற்ற பெண்கள், இன்று, கந்துவட்டியிலிருந்து விடுதலை என்ற இயக்கமாக அணிதிரண்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெறுவதைப் பார்ப்போம்:

தற்போது நிலவும் லாக்டவுன் நிலைமையிலும்கூட, ஆயிரக்கணக்கான பெண்களாக அணிதிரளும் ஆர்ப்பாட்டங்களை ஹூக்ளி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கந்துவட்டி கடன் ஒழிப்பு இயக்கம் நடத்திவருகிறது.  கடன் வாங்குவது, அதனைத் திரும்பக் கட்டுவது, பின்னர், கடனை அடைக்க முடியாமல், மற்றொரு குழு கடன் வாங்கி பழைய கடனைக் கட்டுவது என்பதாக பெண்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. கொரோனா லாக்டவுன் போடப்பட்ட பின்னர், வருமானம் இல்லை, செலவு மட்டும் நிரந்தரம் என்ற நிலை ஏற்பட்டது. எப்படியோ கடன் கட்டிவந்த பெண்கள், இனிமேலும் கடன் கட்ட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் விளைவாக உருவானதுதான் கந்துவட்டி கடன் ஒழிப்பு இயக்கம்.

குழு கடன் நிறுவனங்கள் கிராமப்புர பெண்கள் குழுக்களுக்கு மிக எளிய வகையில் கடன் தருகின்றன. கடனை வாங்கும் பெண்கள் அதனை குடும்பத்தில் உள்ள ஆண்களிடம் கொடுத்துவிடுகின்றனர். சிறு வியாபாரம், விவசாயம், வீடு கட்டுதல், அவசர செலவுகள், வழக்கமான வீட்டுத் தேவைகள் என்று கடன் தொகை செலவாகிவிடுகிறது. கடனைத் திரும்ப வசூல் செய்வதில் MFI நிறுவனங்கள் என்று அறியப்படும் குழு கடன் நிறுவனங்கள் சாதனை படைத்துள்ளன. அதற்குக் காரணம், குழுவில் உள்ள பெண்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் நிர்ப்பந்தமே. கிராமப்புர பெண்களின் வரவு குறைவாகவும் செலவு அதிகமாகவும் இருப்பதால், விரைவில், கடனை அடைக்க கடன் வாங்கும் நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனர். இறுதியாக கடன் வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.

இப்பிரச்சனையைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்:

தாத்பூர் என்ற ஊரைச் சேர்ந்த அஸ்மா பேகம், ஹூக்ளி மாவட்டத்தின் முன்னோடி MFI-யான பந்தன் என்ற நிறுவனத்திடமிருந்து ரூபாய் 40,000 கடன் வாங்கினார். அதனை 18 மாதங்களில் திரும்பச் செலுத்த வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூபாய் 3,024 அவர் கட்ட வேண்டும். அப்படிப் பார்த்தால் அவர் 18 மாதங்களுக்கு 14,432 ரூபாய் வட்டியாகக் கட்ட வேண்டியிருக்கும். மேலும், ரூபாய் 2500-ஐ காப்பீட்டுக்காக கட்ட வேண்டும், அது கட்டாயமானதாகும். ஆண்டு வட்டி விகிதம் மலைக்க வைக்கும் அளவுக்கு 24 சதவிகிதமாகும்.

கோலிஜோட் என்ற ஊரைச் சேர்ந்த ரெஹ்னா சுல்தான் என்ற பெண்மணி, பந்தன் என்ற நிறுவனத்திடமிருந்து ரூபாய் 1 லட்சம் கடனாகப் பெற்றார். ஒவ்வொரு வாரமும் ரூபாய் 1,150 என்ற கணக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் கடன் கட்ட வேண்டும்.

பல்வேறு வகையான வருமானங்களைக் கொண்டும்  கடன் கட்டுவது நடக்கும். அவை அனைத்தும் ‘லாக்’ ஆகிவிட்டன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பலரும் வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலைசெய்து வீட்டுக்குப் பணம் அனுப்புவார்கள். லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்பு  வேறு மாநிலத்தில் வேலை செய்தவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர். ஊரில் சுத்தமாக வேலை இல்லை. இறுதியாக தவணையைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

மூன்று மாத லாக்டவுன் காலத்திற்கும் கடன் வசூலுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. ஆனால், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் அதனை சட்டை செய்யவில்லை. தொடர்ந்து மிரட்டல் விடுத்து தவணைகளை வசூல் செய்து வருகின்றனர்.

இந்தப் பின்புலத்தில்,  கந்துவட்டியிலிருந்து விடுதலை என்ற அறைகூவல், அல்லது கடன் தள்ளுபடி இயக்கமானது பெண்களின் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்று வளர்கிறது. அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கத்தின் (All India Agricultural and Rural Labour Association) கடன் ரத்து கமிட்டி இதற்கான முயற்சிகளைத் துவங்கியது. அது கிராமங்கள் அனைத்திலும் கூட்டங்களை நடத்தி வருகிறது.

மாவட்டத்தில் லாக்டவுன் அமலில் இருக்க, கொரோனா பரவல் என்ற அச்சம் மனதில் இருக்க, போல்பா தத்பூர் யூனியனில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு, குழு ஒன்றுக்கு 2 பெண்கள் மட்டுமே வரவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்தில் 3,000 பெண்கள் திரண்டனர்.

கடன் பெற்றுள்ள பெண்கள் அனைவரும் தங்கள் கடன் விவரங்களை ஒரு படிவத்தில் குறித்து அளிக்க வேண்டும் என்று  கடன் ரத்து கமிட்டி கோரிக்கை விடுத்திருந்தது. இதுவரை 30 ஆயிரம் மனுக்கள் வந்து குவிந்துள்ளன. பெண்கள் அளித்த படிவங்களில் இருந்த விவரங்களைத் தொகுத்து மத்திய நிதியமைச்சருக்கும், மாநில நிதியமைச்சருக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. முதலமைச்சருக்கும், பிரதம மந்திரிக்கும் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கமும் நடைபெறுகிறது.

கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்கு மூன்று முக்கியமான காரணங்களை கடன் ரத்து கமிட்டி முன்வைக்கிறது: 

(I) லாக்டவுன், கோவிட் பொருளாதாரத் தாக்கத்தின் காரணமாக வருமானம் இல்லை. கடனைக் கட்ட வழியில்லை.

(ii) பெருமளவு கடன் வாங்கும் பெரிய நிறுவன அதிபர்களுக்கு கடன் தள்ளுபடி திட்டங்களை அரசு அறிவித்தபடியே இருக்கிறது. அப்படியிருக்க, சிறிய அளவு கடன் வாங்கியுள்ள பெண்களுக்கு ஏன் கடன் தள்ளுபடி செய்யக் கூடாது?

(iii) குழுக் கடன் வாங்கியுள்ள பெண்கள் இதுவரை கடன்களை முறையாக உரிய காலத்தில் செலுத்தி வந்துள்ளனர். ஆனால், லாக்டவுன் அறிவித்த பின்னர், வருமானமின்மையால் கடனைக் கட்ட முடியவில்லை. எனவே, லாக்டவுன் அறிவித்த அரசே கடன் கட்டும் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இந்த கந்துவட்டி கடனிலிருந்து விடுதலை இயக்கம் காட்டுத் தீ போல ஹூக்ளி மாவட்டத்தில் பரவி வருகிறது. இந்த மாவட்டத்தின் விவசாயக் குடும்பங்கள் சமீபத்திய ஆம்பன் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கடன் வலையில் சிக்கியுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயப் பெண்களும் MFI-யால் பாதிக்கப்பட்ட பெண்களின் இயக்கத்தோடு சேர்ந்துகொள்கின்றனர்.

பெண்களின் ஒற்றுமை அதிகரித்து வருவது கந்துவட்டி கொடுமைக்காரர்களை அச்சுறுத்தும் இயக்கமாக வளர்ந்து வருகின்றது.

(CPI ML கட்சியின்

Liberation   (ஜூலை, 2020) இதழில்

வெளிவரவிருக்கும் கட்டுரையை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை.

ஆங்கில மூலத்தை எழுதியது

தோழர்.சஜல் அதிகாரி)

Total Page Visits: 252 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *