சாத்தான்குளம் இரட்டைக் கொலை: மாஜிஸ்ட்ரேட் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் – நீதிபதி கே.சந்துரு

காவலில் இருக்கும் எந்தக் குற்றவாளிக்கும்
தன்னை போலீஸ் காவலில் துன்புறுத்தினார்கள் என்று
மாஜிஸ்ட்ரேட்டிடம் சொல்வதற்கான தைரியம் இருக்காது.
குற்றம் சாட்டப்பட்டவரை சோதிக்க வேண்டியது
மாஜிட்ரேட்டின் வேலைதான்.
இச்சம்பவத்தில் நடந்துள்ள போலீஸ் சித்திரவதை என்பது,
தற்போது நடைமுறையில் உள்ள லாக்டவுனால்
மெதுவாக நிறுவப்படுகின்ற
ஒரு புதிய அதிகார கட்டமைப்பின் வெளிப்பாடே ஆகும்.
இப்போது மொத்த அதிகாரமும் போலீஸ் மற்றும்
அதிகாரவர்க்கத்தினர் கையில் உள்ளது.

“நீதித்துறை ஒழுங்கின்மை, கைது நடவடிக்கைக்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியது மற்றும் வழக்கை தவறாக வழிநடத்தியிருப்பது” ஆகியவற்றிற்காக, சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் பி.சரவணன் பதவீ நீக்கம் செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தையும் மகனுமாகிய ஜெயராஜ் மற்றும் இம்மானுவல் பென்னிக்ஸ் ஆகியோர், காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது உச்சநீதிமன்ற விதிமுறைகளை ஏளனம் செய்வதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

“காவல்துறை தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருப்பதும், மாஜிஸ்ட்ரேட்கூட கைது செய்வதற்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் போயிருப்பதும் முதல் பார்வையிலேயே நன்றாகத் தெரிகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் தெரிவிக்கப்படவில்லை என்று சொல்லி சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் தப்பித்துவிட முடியாது,” என்கிறார் சந்துரு.

பென்னிக்சின் நண்பர்களுள் ஒருவரான ராஜ்குமார், “போலீஸ் இருவரையும் மாஜிஸ்ட்ரேட் பி.சரவணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றது. போலீஸ் காவலில் இருக்கும்போது என்ன நடந்தது என்பதை மாஜிஸ்ட்ரேட்டிடம் சொல்லும்படி நாங்கள் பென்னிக்சிடம் கூறினோம். ஆனால், பயந்துபோயிருந்த அவர், தங்களைப் பற்றி மாஜிஸ்ட்ரேட்டிடம் ஏதாவது சொன்னால் தன்னுடைய வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக போலீஸ் தன்னை மிரட்டியதாக சொன்னார்,” என்று கூறியுள்ளார்.

“நீதிமன்றக் காவலில் இருக்கும்போது நான்கு போலீஸ்காரர்கள் பென்னிக்ஸை விடாமல் சூழ்ந்திருந்தனர். அவர்கள் தந்தையையும் மகனையும் இடைவிடாமல் மிரட்டிக் கொண்டிருந்தனர். அதனால், நடந்த விஷயத்தைப் பற்றி மாஜிஸ்ட்ரேட்டிடம் அவர்கள் சொல்லியிருப்பதற்கு நடைமுறை சாத்தியமில்லை,” என்கின்றனர் அவருடைய நண்பர்கள்.

இந்நிலையில்தான், முன்னாள் நீதிபதி சந்துரு, “அவர்கள் கடுமையாக காயமடைந்து, ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால் மாஜிஸ்ட்ரேட் அதுகுறித்து விசாரித்திருக்க வேண்டும். தந்தையும் மகனும் சரியாக எழுந்து நிற்க முடியாத நிலையிலாவது காவல்துறையை நோக்கி அந்த மாஜிஸ்ட்ரேட் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அதுதான் மாஜிஸ்ட்ரேட்டின் வேலை. சட்டத்தையும், இந்திய சாசனத்தையும் கைவிட்டுவிட்ட சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட்டை அவருடைய பதவியில் இருந்து நீக்க வேண்டும்,” என கூறியுள்ளார்.

டி.கே.பாசு எதிராக பெங்கால் மாநில வழக்கில் தரப்பட்ட 11 கட்டளைகள், இந்தியா முழுவதற்குமான வழிகாட்டுதல்களாக உச்ச நீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை நீதிபதி சந்துரு விளக்கியுள்ளார். “காவலில் இருக்கும் எந்தக் குற்றவாளிக்கும் தன்னை போலீஸ் காவலில் துன்புறுத்தினார்கள் என்று மாஜிஸ்ட்ரேட்டிடம் சொல்வதற்கான தைரியம் இருக்காது. குற்றம் சாட்டப்பட்டவரை சோதிக்க வேண்டியது மாஜிட்ரேட்டின் வேலைதான்.

அவர்களைப் பார்க்க ஏன் உடல்நலமில்லாமல் இருக்கிறார்கள் என்றும், காயங்கள் அல்லது ரத்தப்போக்கு ஏன் ஏற்பட்டிருக்கிறது என்றும், ரிமாண்ட் செய்யும் முன்னர் அவர்களுடைய உறவினர்களுக்கு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளதா என்றும், அவர்களுக்கு வழக்குரைஞர் இருக்கிறாரா என்றும் மாஜிஸ்ட்ரேட்தான் கேட்க வேண்டும். இந்த ஆரம்பநிலை அரசியலமைப்பு உரிமைகளை மாஜிஸ்ட்ரேட்தான் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்,” என சந்துரு தெரிவித்துள்ளார்.

மேலும், “இச்சம்பவத்தில் நடந்துள்ள போலீஸ் சித்திரவதை என்பது, தற்போது நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்தினால் மெதுவாக நிறுவப்படுகின்ற ஒரு புதிய அதிகார கட்டமைப்பின் வெளிப்பாடே ஆகும். இப்போது மொத்த அதிகாரமும் போலீஸ் மற்றும் அதிகாரவர்க்கத்தினர் கையில் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கூட அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த இயலாதபடிக்கு, தன்னுடைய வீட்டு வாசலிலேயே முடக்கி வைக்கப்படுகின்ற நிலைதான் தற்போது நிலவி வருகிறது.

இந்நிலையிலும்கூட, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, நாடார் சமுதாயத்தினர் போன்ற சக்திவாய்ந்த வர்த்தகர் சமூகத்தால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனாலும்கூட, இதேபோன்ற அத்துமீறல்கள் மறுபடியும் நிகழலாம் . . . அப்போது நீதிமன்றத்தால்கூட உதவி செய்ய இயலாது,” என்று நீதிபதி சந்துரு திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

Total Page Visits: 170 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *