அமெரிக்க மக்களைப் போல் தமிழக மக்களும் திரளவேண்டிய தருணம் இது – தோழர்.பாஸ்கர்

தமிழகப் போலீஸானது
போலீஸ்துறை மட்டும் அதனிடம் இல்லாமல்
தமிழக அரசாங்கத்தின் அனைத்து துறைகளும்
அதனிடமே இருக்கின்றன. நீதித்துறை உள்ளிட்டு. 

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் இரு வணிகர்கள் போலீஸின் கொடுஞ்சித்ரவதையில் பலி!

மீண்டும் மீண்டும் கொலைவெறி முகத்தை காட்டிவரும் தமிழக போலீஸின் கொடுங்கோன்மைக்கு எதிராக அமெரிக்க மக்கள் போல் தமிழக மக்கள் எழவேண்டிய தருணமிது!

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் இரு  வணிகர்கள் அண்மையில் போலீஸின் கொடும் சித்திரவதையால் பலியாகியுள்ளது என்பது ஒரு குறியீடே.

இதுதான் தமிழகப் போலீஸின் அசல் முகம்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சி முதற்கொண்டு தமிழகப் போலீஸிடம் தமது அதிகாரத்தை தமிழக அரசாங்கமும் குடிமை அதிகார வர்க்கமும் ‘அவுட்சோர்சிங்’ கொடுத்துவிட்டன.

போலீஸின் தயவின்றி தமது கொள்ளைக்கார ஆட்சியை நடத்துவதற்கு முடியாது என்பதால் இவ்வாறு தமது அதிகாரத்தை ‘அவுட்சோர்சிங்’ செய்துவிட்டனர்.

தமிழகப் போலீஸானது போலீஸ்துறை மட்டும் அதனிடம் இல்லாமல் தமிழக அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் அதனிடமே இருக்கின்றன. நீதித்துறை உள்ளிட்டு.

அதனால்தான் தமிழகப் போலீஸானது சென்னை உயர் நீதிமன்றத்தின் வளாகத்தில் சுமார் பதினொரு ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியையே அடித்தது.

சூடு சொரணையற்ற நீதிபதியோ போலீஸ் துறையை காப்பாற்றவே செய்தார்.

தமிழகத்தில் டிஜிபி இராமானுஜம் நிழல் முதலமைச்சராக அதிகாரத்தில் 2012-ல் அமர்ந்தபின் நகர்ப்புறங்களில் அவசர சிகிச்சை மருத்துவமனைகளும் மருந்தகங்களும் இருக்கிறதோ இல்லையோ, திரும்பும் இடங்களில் எல்லாம் போலீஸ் பூத்துகள் திறக்கப்பட்டன; அப்போதிலிருந்து ஜிகினா விளக்குகள் பொருத்திய நான்கு சக்கர வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் மக்களை அச்சுறுத்தும்படி நடமாடிக் கொண்டிருக்கின்றன. பகலிலும் இரவிலும்.

இவ்வாகனங்கள் தாம் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் ஒலியுடன் வரும்.

இவ்வாகனங்கள் போலீஸ் பூத்களின் அருகிலோ, ஏதோ ஒரு இடத்திலோ நிறுத்தப்படும். இவ்வாறு நிறுத்தப்படும் நான்கு சக்கர போலீஸ் ரோந்து வாகனங்களில் சில நேரங்களில் எவரும் இருக்கமாட்டார்கள்.

ஆளில்லா அவ்வாகனம் ஒரு இடத்தில் நிற்பதே போலீஸின் வேலையை செய்துவிடும்.

தமிழகத்தில் எவரும் போலீஸாக வேலைக்கு சேர்ந்த அடுத்தக் கணமே அவர் சாகும்வரை அவருக்கு இரு சம்பளங்கள் கிடைத்துவிடும்.

அதிகாரபூர்வமற்ற சம்பளமே  அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் எதிர்காலத்தில் பெருந்தொழிலதிபர்களாக போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர்.

தமிழகப் போலீஸுக்கு சட்டம் ஒழுங்கை(?) நிலைநாட்டுவதை/குற்றச்செயல்களை தடுப்பதை/போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் அத்துறைக்கு ஒதுக்கப்படும் எந்தவொரு வேலைப் பிரிவினையைக் காட்டிலும், மாமூல்/இலஞ்சத்தை வாங்குவதும் அபராதத்தை வசூலிப்பதும் வாகனங்களை பறிமுதல் செய்வதும் மக்கள் திரள்களை அடிப்பதும் சித்ரவதை செய்வதும் கொலையைச் செய்வதுமே தலையாயப் பணியாக இருக்கிறது.

தமிழகத்தில் எந்தவொரு மக்கள்/சமூக விரோத தொழிலும் போலீஸுக்கு தெரியாமல்/கூட்டு இல்லாமல் நடக்காது.

இத்தகைய தமிழகப் போலீஸுக்கு ஊரடங்கு என்றால் கரும்புத் தின்னக் கூலி போன்றதே.

இப்போலீஸுக்கு கொரோனாவை ஒழிப்பதைக் காட்டிலும் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதே முக்கியம்.

அதனால்தான் சாத்தான்குளம் படுகொலையை மேற்கொண்டது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கின்போது தமிழகத்தில்தான் அதிகமான கைதுகளும் அபராத வசூலிப்புகளும் வாகனப் பறிமுதல்களும் நடைபெறுகின்றன.

போலீஸானது விற்பனை இலக்குகளைப் போலவே இவற்றை மேற்கொள்கின்றது. இத்தகைய இலக்குகளுக்கு வெகுமதிகளும் பதவி உயர்வுகளும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு செய்யாத தனிநபர் போலீஸாரை அதிகாரவர்க்கம் ஏய்க்கும்.

இந்நிலையில் தனிநபர் போலீஸாரும் இத்தகைய சட்டவிரோத/மக்கள் விரோத நிறுவனமயப்பட்டு மேற்கொள்கின்றனர்.

ஊரடங்கினால் அரசாங்கத்தாலேயே கொரோனாவை ஒழிக்கமுடியாது என்பது உலகெங்கும் குறிப்பாக தமிழகத்திலும் நிரூபணமாகிவிட்டாலும், போலீஸாலும் அவ்வாறே என்பது கண்ணெதிரே நிரூபணமாகிவிட்டாலும், வடசென்னையிலோ கொரோனாவை ஒழிப்பதற்கு கமாண்டாக்கள் இறக்கிவிடப்பட்டு 2/3 நாட்கள் ஆகிவிட்டது.

ஊரடங்கை மீறுவதாக இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீஸ் கடந்த சில நாட்களாக சென்னையில் காய்கறி/பால் விற்பனை வண்டிகளையும் பறிமுதல் செய்துவருகிறது.

இதனால் பால் முகவர்கள் சங்கமானது போலீஸுக்கு பாலை வழங்குவதில்லை என்று இரு நாட்களுக்கு முன் நிலையெடுத்தது. அதனால் போலீஸ் அதிகாரவர்க்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

பால் முகவர்களைப் போல் காய்கறி வணிகர்கள், மளிகை கடை வணிகர்கள் போன்றோரும் போலீஸை புறக்கணிக்கும் போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும்.

தமிழக மக்கள் திரள்கள் இவர்களோடு இணைந்து போராடவேண்டும். அமெரிக்க மக்களைப் போல.

அமெரிக்காவில் தமிழகத்தை காட்டிலும் கொரோனா மரணம் அதிகம் இருந்தாலும் அம்மரணபயத்தை தூக்கியெறிந்து ஊரடங்கின்போது நாடெங்கும் போராடி போலீஸின் கொட்டத்தை அடக்குகிறார்கள்.

அதுபோல் தமிழக மக்களும் தமிழகப் போலீஸின் கொட்டத்தை அடக்குவதற்கான தருணம் வந்துவிட்டது.

மக்களை கொள்ளையடிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட தமிழகப் போலீஸ்துறையானது அதை நிறுவிய காலனிய ஆட்சியாளர்களின் மனநிலையிலேயே இன்னமும் செயற்படுகிறது.

மக்களை சூறையாடிய காலனிய ஆட்சியை இந்தியத் துணைக்கண்டத்தில் முதலில் நிறுவியதில் வன்முறைப் பாத்திரத்தை ஆற்றியது மெட்ராஸ் ரெஜிமெண்ட்டும் சென்னை/தமிழகப் போலீஸே.

அத்தகைய வன்முறை பாத்திரத்தின் இன்றைய தொடர்ச்சியே சாத்தான்குளம் போலீஸின் வெறியாட்டம்.

தமிழக மக்கள் மேலும் சற்று ஏமாந்தால் டிஜிபியே முதலமைச்சர் ஆகிவிடுவார். இப்போதும் நடைமுறையில் அவ்வாறே.

இவ்வாறு போலீஸ் ஆட்சி நடக்கும் தமிழகத்தில்

பால் முகவர்கள் போலீஸுக்கு பால் வழங்குவதில்லை என்ற புறக்கணிப்பு போராட்டத்தை மேலும் முன்னெடுக்கும்விதமாக

தமிழகத்தின் அனைத்து தரப்பு வணிகர்களும் மக்கள் திரள்களும் அமெரிக்க மக்களைப் போல் எழவேண்டிய தருணம் வந்துவிட்டது. அதுதான் சாத்தான்குளம் வணிகர்கள் இருவரின் மரணங்களுக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கும்.

Total Page Visits: 139 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *