சங்கர் வழக்கில் தீர்ப்பும், நீதியும்! – வழக்குரைஞர் தி.லஜபதி ராய்

சின்னசாமியின் தீர்ப்பு சட்டப்படி சரியா?
என்ற கேள்விக்கு கற்றறிந்த வழக்கறிஞர் மத்தியில்
இருவேறு கருத்துக்கள் இருக்கும்.
ஆனால் அத்தீர்ப்பு நீதி வழங்கியதா? என்றால்,
இல்லை என அறுதியிட்டுக் கூற முடியும்!

22.03.2020 அன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளான, திருவாளர்கள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.நிர்மல் குமார் ஆகியோரின் அமர்வு, சங்கர் – கௌசல்யா வழக்கு என தமிழகம் முழுக்க அறியப்படும் சின்னசாமி மற்றும் பலர் எதிராக உடுமலைபேட்டை துணை கண்காணிப்பாளர் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

  1. விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகள் சின்னசாமி ஏ1, ஜெகதீசன் ஏ4, மணிகண்டன் ஏ5, செல்வகுமார் ஏ6, கலை  ஏ7, மதன் ஏ8 ஆகியோருக்கு மரண தண்டனையும்,
  2. அன்ன லட்சுமி ஏ2, பாண்டிதுரை ஏ3, பிரசன்ன குமார் ஏ10 ஆகியோருக்கு விடுதலையும்,
  3. குற்றவாளி ஏ9 க்கு ஆயுள் தண்டனையும்,
  4. ஏ11 க்கு ஐந்து வருட சிறை தண்டனையும் வழங்கியது.

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான மேல் முறையீட்டில் குற்றவாளிகள் நான்கு முதல் எட்டு வரையிலான ஐந்து கூலிப்படையினரது மரணதண்டனை 25 வருடங்களாக குறைக்கப்பட்டது.

முதல் குற்றவாளி சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார்.

குற்றவாளிகள் 9 மற்றும் 11 ஆகியோரது மேல்முறையீடுகள் ஏற்கப்பட்டு அவர்கள்  விடுதலை செய்யப்பட்டனர்.

ஏ2, ஏ3, ஏ10 ஆகியோரது விடுதலைக்கெதிரான அரசின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் முதல் குற்றவாளி சின்னசாமி எட்டாவது குற்றவாளியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதைப் பதிவு செய்கிறது.

குற்றவாளிகள் ஏ4 ஜெகதீசன்  மற்றும் ஏ6 செல்வகுமார்  ஆகியோர், கொலை செய்யப்பட்ட  சங்கரை சாதியைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தியதாக தங்கள் தீர்ப்பின் 226- ஆவது பத்தியில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இது தவிர வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் மிக முக்கிய  எட்டாவது பிரிவின் துணை கொண்டு ஏ4 முதல் ஏ8 உட்பட 5 குற்றவாளிகள் மீதான விசாரணை நீதிமன்றத்தின் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ஏ4 ஜெகதீசன், ஏ5 மணிகண்டன், ஏ6 செல்வகுமார், ஏ7 கலை, ஏ8 மதன் ஆகியோர் வன்கொடுமைச் சட்டத்தின் 3(2)(5a) பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்தது.

ஏ 1 சின்னசாமி மற்றும் ஏ 2 அன்னலட்சுமி ஆகிய இருவரும் ஏ4 செல்வகுமாருக்கு ரூபாய் ஐம்பதாயிரத்தை வங்கி பண இயந்திரத்தில் இருந்து எடுத்துக் கொடுத்ததை சட்டப்படியான சாட்சியமாக நீதிமன்றம் கருதவில்லை.

ஏ4 ஜெகதீசன், ஏ5 மணிகண்டன், ஏ6 செல்வகுமார் மற்றும் ஏ8 மதன் ஆகியோர் அரசு சாட்சிகள் 14 மற்றும் 15 ஆகியோர் ஏ1 சின்னசாமி ஏற்பாடு செய்த பாக்யா விடுதியில் தங்கியதாக கூறியதை நிராகரித்த உயர் நீதிமன்றம், ஏ1 சின்னசாமி ஏ8 மதன் என்ற மைக்கேலுடன் தொலைபேசியில் பேசியதை ஒத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், ஏ6 செல்வகுமார் , ஏ8 மதன், மற்றும் ஏ9 ஆகியோர் பலமுறை ஏ1 சின்னசாமியிடம் பேசிய தொலைபேசி எண் பதிவுகளைப் பற்றி கூறிய சாட்சியத்தை சான்றியல் சட்டத்தின்பாற்பட்டதல்ல எனக் கூறிய உயர்நீதிமன்றம், கொலையாளிகளுக்கு பதிவு செய்யப்படாத பஜாஜ் டிஸ்கவர் மோட்டார் சைக்கிளை ஏ1 சின்னசாமி வழங்கிய சாட்சியத்தையும், ஏ1 சின்னசாமி கொலை நடந்த நாளன்று தனது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து நோட்டம் பார்த்ததையும் நிராகரித்தது.

மேற்சொன்ன சாட்சியங்கள் மற்றும்  தொலைப்பேசி தொடர்புகள் ஆகியவற்றை, இந்திய  சான்றியல்  சட்டம் 65பி-யின்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்தீர்ப்புகளின் அடிப்படையில் கூறிய உயர்நீதிமன்றத்தின் கூற்று சற்று நெருடவே செய்யும். ஏனெனில் அதே தீர்ப்பில் பத்தி 265-இல்    சான்றளிக்கும் நபர்களின் நம்பகத்தன்மை(Credibility) குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவு செய்வதை மேல்முறையீட்டு நீதிமன்றம் எளிதாக மாற்றாது என்ற முன்தீர்ப்பையும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. எனவே, ஏ1 சின்னசாமிக்கு வழங்கப்பட்ட தண்டனையை இரத்து செய்தது சட்டத்தின்பாற்பட்டதல்ல எனக் கருத முடியும்.

இவ்வழக்கில் மிக மிக முக்கியமான சட்டப்பிரிவு வன்கொடுமைச் சட்டத்தின் பிரிவான 8 (a ) மற்றும் 8(b) ஆகியன

Scheduled castes and Scheduled tribes (prevention of atrocities) Act ,1989

Presumption as to offences.- In a prosecution for an offence under this chapter if it is proved that-

8(a) the accused rendered any financial assistance to a person accused of or reasonably suspected of, committing, an offence , the special court shall presume unless the contrary is proved that such person had abetted the offence

8(b)a group of persons committed an offence under this chapter and if it is proved that the offence committed was a sequel to any existing dispute regarding land or any other matter , it shall be presumed that the offence was committed in furtherance of the common intention or in prosecution of the common object.

மேற்சொன்ன பிரிவுகளில் 8(a)-இன்படி குற்றம் சாட்டப்பட்டவர் பொருளாதார உதவி செய்தாலோ அல்லது செய்ததாக நியாயமான சந்தேகம் எழுந்தாலோ குற்றம் சாட்டப்பட்டவர் அக்குற்றத்திற்கு உடந்தையாவார் எனக் கருதமுடியும், சின்னசாமி வழக்கில் 50,000 ரூபாய் பணம், ஏ1 சின்னசாமி மற்றும் ஏ2 அன்னலட்சுமி ஆகியோரது வங்கிக் கணக்கில் எடுக்கப்பட்டு ஏ4 ஜெகதீசனிடம் கொடுத்ததாக நியாயமான சந்தேகம் எழுப்பும் சாட்சியம் உள்ளது.

மேலும் 8(b)-இன்படி குற்றம் செய்த நிகழ்வானது ஏற்கனவே இருக்கும் தகராறின் தொடர்ச்சியாக இருந்தால் அக்குற்றம் பொது நோக்கத்திற்காக செய்பட்டது என அனுமானிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சின்னசாமி வழக்கில் மிக முக்கியமான இச்சட்ட பிரிவுகள் குறித்து எவ்வித விவரணைகளையும் நீதிமன்றம் வழங்காதது வியப்பளிக்கிறது, ஏனென்றால் அவ்வழக்கின் நிகழ்வு ஏற்கனவே நடந்த தகராறுகளின் தொடர்ச்சியாக நடந்தததற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதை உயர்நீதிமன்றம் கண்டிருக்கின்றது.

முதலாவதாக சங்கருக்கும் கௌசல்யாவுக்கும் பழனி கோவிலில் 12.07.2015 அன்று திருமணம் முடிந்த பின்னர், அன்றே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களது  பாதுகாப்பிற்காக ஒரு முறையீட்டை ஆவணம் எண் ஒன்றாக நீதிமன்றம் பதிவு செய்துள்ளது, அதே நாள் கௌசல்யாவின் ஏ2 அன்னலட்சுமி, கௌசல்யாவின் பாட்டி மற்றும் அத்தைகள் தகராறு செய்து, கௌசல்யா அணிந்திருந்த நகைகளை கழற்றி பெற்றுக்கொண்டதை  உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடுகிறது.

கௌசல்யாவை ஏ1 சின்னசாமி, ஏ2 அன்னலட்சுமியும், அவர்கள் நண்பர் ஒருவரும்  பலவந்தமாக கடத்தி சென்றது குறித்து சங்கரின் புகாரின் அடிப்படையில், மடத்துக்குளம் காவல் நிலையத்தில் குற்ற எண் 320/2015 என்ற வழக்கு பதியப்பட்டு, கௌசல்யாவை சங்கருடன் அனுப்பி வைத்தது குறித்த  அறிக்கை உடுமலைப்பேட்டை  குற்றவிவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையும் கருத்தில் கொள்ளும்  உயர் நீதிமன்றம், வன்கொடுமை  சட்ட அனுமானத்தை கருத்தில் கொள்ளவில்லை.

இதுதவிர 11.07.2015 அன்று தனது மகளை சங்கர் கடத்தியதாக ஏ1 சின்னசாமி குற்ற எண் 647/2015 என்ற முதல் தகவல் அறிக்கை பழனி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. கௌசல்யா தான் காதல் திருமணம் செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து அவ்வழக்கு முடிவுக்கு வந்தது.

மேற்சொன்ன நிகழ்வுகள், காவல் நிலைய சண்டைகள் குறித்து அரசு சாட்சி எண் 1 கௌசல்யா விளக்கமாக சாட்சியமளித்துள்ளார். அந்த சாட்சியம் மேற்சொன்ன காவல் நிலைய நீதிமன்ற ஆவணங்கள் மூலம் உறுதி பெறுகிறது.

மரியாதைக்குரிய நீதிபதி சந்துரு அவர்கள் குறிப்பிட்டதைப்போல, கௌசல்யாவின் முழு சாட்சியமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் .

சட்டப்படியான அனுமானம் குறித்து பத்திகள் 265 மற்றும் 266-களில்

1.குரே லால் வழக்கு 2008(10)scc450

2.சந்திரப்பா வழக்கு 2007(4)scc415

3.தாரா சிங் வழக்கு 2011(2)scc490

4.பன்னா ரெட்டி வழக்கு 2018(5)scc790

ஆகியவற்றை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. ஆனால் அவை அனைத்துமே ஏ2 அன்னலட்சுமி உட்பட மற்றும் இருவரின் விடுதலையை எதிர்த்து அரசு செய்த மேல்முறையீட்டு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையானால் அவர் நிரபராதி என்ற அனுமானத்தின் அடிப்படையில், வழக்கை அணுக வேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் தீர்ப்புகள்.

ஆனால் மேற்சொன்ன 2011-ஆம் ஆண்டு  தீர்ப்பில் ரபீந்தர் குமார் பால் என்ற தாராசிங்,  ஆஸ்திரேலிய இறைப்பணியாளர் கிரகாம் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட வழக்கில் பத்தி 96-இல், உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்:

‘இன்னொரு மதத்தை அல்லது சாதியைச் சேர்ந்த ஒருவரது உயிரை எடுப்பது சமூகத்தில் பெரும்பான்மையோர் மீது  பயங்கரமான வினைகளை உண்டாக்கும். அது நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதைகளின் கனவாகிய, ஒழுங்கான சமூகத்தின் வேர்களை தாக்கி அழிக்கும்.’

தாராசிங் தீர்ப்பின் 94-ஆவது பத்தியை மட்டும் கருத்தில் கொண்ட உயர்நீதிமன்றம் 96-ஆவது பத்தியை  கவனிக்காமல் விட்டிருப்பது வியப்பளிக்கிறது.

கூலிப்படையினர் செய்த கொலையில் சங்கர் பட்டியல்  சாதியைச் சேர்ந்தவர் எவ்வாறு ஏ1 சின்னசாமி கூறாமல் ஏ4 ஜெகதீசனுக்கும், ஏ6 செல்வகுமாருக்கும் தெரியும் என்ற வினாவிற்கு விடையில்லை. ஆனால், ஏ4 மற்றும் ஏ6 சாதியை சொல்லியதாக உயர்நீதிமன்றம் கண்டுள்ளது.

எய்தவன் இருக்கும்போது சாதி அம்புகள் மட்டுமே தண்டனைக்கு உள்ளாகியுள்ளன.

தனது கல்வியால் எல்லா சாதிகளும் சமம் என்ற அறிவுடன், எளிதாக சாதியைத் தாண்டி வாழ்க்கையை தொடங்கிய துணிச்சலான பெண்மணியான கௌசல்யாவையும், முதல் தலைமுறை பட்டதாரியான சங்கரையும், வெட்டிக்கொன்ற சாதி பொறுக்கிகள் நிறைந்த நம் சாக்கடை சமூகத்தில் கௌசல்யாவின் துணிச்சல் பாராட்டுக்குரியது. விசாரணை அதிகாரிகளும் திறம்பட தங்கள் பணியைச் செய்துள்ளதைக் காண முடியும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 372-இன்படி பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும், சின்னசாமி வழக்கில் கௌசல்யா மேல்முறையீடு செய்யப் போதுமான காரணங்கள் உள்ளன!

குற்றவியல் சட்டவியலில் நிபுணத்துவம் வாய்ந்த இருநீதிபதிகளுமே வன்கொடுமைச் சட்டத்தின் 8(a) மற்றும் 8(b) பிரிவுகளை கருத்தில்கொள்ளாமல், அது குறித்து இவ்வழக்கின் பொருண்மைகளோடு பொருத்தாமல்  தீர்ப்பளித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

சின்னசாமியின் தீர்ப்பு சட்டப்படி சரியா?  என்ற கேள்விக்கு கற்றறிந்த வழக்கறிஞர் மத்தியில்  இருவேறு கருத்துக்கள் இருக்கும். ஆனால் அத்தீர்ப்பு நீதி வழங்கியதா? என்றால், இல்லை என அறுதியிட்டுக் கூற முடியும்!

மரபணு குறித்த எவ்வித ஆய்வுகளும் இல்லாத காலத்தில் இயற்றப்பட்ட மனுவின் சட்டங்கள் மனிதர்களில் பாகுபாடு கண்டது.

மனித இனம் ஒன்று என்ற தற்போதைய மரபணு முடிவுகளை ஒத்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ஐக்கிய நாட்டு சபையில் அடிக்கடி ஒலிக்கும் கனியன் பூங்குன்றனாரின் வரிகளை தனது தீர்ப்பில் பொறித்து, இறவா வரம் பெறும் வாய்ப்பினை இரு நீதிபதிகளும் தவறவிட்டார்கள் என்றே கருதுகின்றேன்!

Total Page Visits: 132 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *