சாத்தான்குளம் படுகொலைகள்: காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்களை கைது செய்! – அ.மார்க்ஸ்

எளிய மக்கள்.
சம்பாதிக்க இருந்த ஒரு பிள்ளையும் கொல்லப்படுகிறான்.
காவல்துறையினர் வந்து வழக்கைக் கைவிடுமாறு மிரட்டல். 
அதோடு அவர்கள் வாயை மூடுவதற்காகாக சில ஆயிரங்கள்,
அல்லது சில லட்சங்கள் தொகை கைமாற்றம்.
என்ன செய்வது. அவன் போனது போனதுதான்.
காவல்துறையை எதிர்த்து நாங்கள் என்ன செய்ய முடியும் . . .
என்கிற லாஜிக்கை அதிகார பலமுள்ள காவல்துறை
தனது அத்துமீறல்களுக்கு
சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

கைதுசெய்யப்பட்ட ஜெயராஜ் (60) ஆசனவாயில் லத்தியைச் செருகிச் சித்திரவதை செய்யப்பட்டதை அடுத்து அடங்காத ரத்தப் பெருக்கில் இறந்துள்ளார். அவரது மகன் பெனிக்ஸ் (31) அடுத்தநாள் காலை நெஞ்சுவலியில் துடித்துச் செத்துள்ளார்.

இவை பச்சைப் படுகொலைகள்.

கொல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் செய்த குற்றம் என்ன தெரியுமா?

லாக்-அவுட்டை மீறித் தங்கள் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்தார்களாம். வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க மட்டும் வேண்டிய ஒரு சாதாரண வழக்கில், ஆசன வாய்க்குள் லத்தியைச் சொருகி சித்திரவதை செய்யும் அளவிற்கு எத்தனை அரக்க மனம் இருந்திருக்க வேண்டும் இந்தக் கொலைகாரர்களுக்கு.

இல்லாவிட்டால், வேறு காரணங்களின் அடிப்படையில் இப்படி தந்தை, மகன் இருவரும் கொல்லப்பட்டார்களா? – என்பது உரிய முறையில் விசாரிக்கப்பட்டுக் கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

மக்கள் திரண்டு போராடியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட இந்தப் படுகொலைகளை கண்டித்துள்ளனர்.

எடப்பாடி அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடெங்கும் எதிர்ப்புகள்

சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகளைக் கண்டித்து சாத்தான்குளம் மட்டுமின்றி தென்மாவட்டங்கள் பலவற்றிலும் பல்வேறு வடிவங்களில் எதிர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளும் சமூக ஊடகப் போராளிகளும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், தட்டார்மடம், நாசரேத், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஆறுமிகனேரி, ஸ்ரீவைகுண்டம் முதலான ஊர்களில் முழுக் கடையடைப்பு நடந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடியில் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் கொலைகாரப் போலீஸ்காரர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

பாளையம்கோட்டையில் சி.பி.எம். கட்சியினர் ஆர்பாட்டாம் நடத்தியுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சிவ சூரியநாராயணன் தலைமையில் கொரோனா கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஆர்பாட்டம் நடந்துள்ளது. நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் இப்படி வழக்குரைஞர் சங்கங்கள் ஆர்பாட்டம் நடத்தியுள்ளன.

நாகர்கோவிலில் செல்போன் விற்பனையாளர்கள் கண்டன ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

முதலமைச்சர் பழனிச்சாமி, காவல்நிலையத்தாரால் கொல்லப்பட்ட தந்தை-மகன் இருவருக்குமாக, ஓவ்வொருவருக்கும் 10 லட்சம் இழப்பீடு, கொல்லப்பட்ட  தந்தை, மகன் இருவரது குடும்பங்களில்  ஒவ்வொருவருக்கு அரசு வேலைகள், நீதிமன்ற விசாரணை முடிவின்படி  கொலைகாரர்களின் மீது நடவடிக்கை ஆகியவற்றை வாக்குறுதிகளாக அளித்துள்ளார்.

இப்படியான அத்துமீறல்களைக் காவல்துறை மேற்கொண்டால் காவல்துறையானாலும் யாரானாலும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மட்டும் முதலமைச்சருக்கு எச்சரிக்க மனம் வரவில்லை.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டு இப்படி நாடே கொந்தளித்தபோது, அடுத்த சில மாதங்களில் அ.தி.மு.க. பெருந்தலைவியும் முதல்வருமான ஜெயலலிதா காவல்துறையினருக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்தது நினைவுக்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, விழுப்புரம் பகுதிக் காவல்துறையினர் திருக்கோவிலூரில் 5 இருளர் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர். நாங்கள் ஆய்வுசெய்து அதை உறுதிப்படுத்தினோம். விழுப்புரம் மாவட்ட காவல்துறை SP-யிடம் பேசியபோது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். என்ன நடந்தது?

முதல்வர் ஜெயலலிதா அந்தப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் நிதி அளித்தார். ஆனால் அந்த 5 சிறுபெண்களையும் கடத்திச் சென்று, அருகில் உள்ள யூகலிப்டஸ் காட்டில் வைத்துப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய போலீஸ்காரர்கள் மீது பெரிய நடவடிக்கை ஏதுமில்லை.

அதுமட்டுமல்லாமஸ், நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் வாக்களிப்பதாகச் சொல்லி அனுப்பிய அந்த எஸ்.பி., அடுத்த ஆண்டில் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட பல வழக்குகளில் இப்படித்தான் ஆகியுள்ளது.

திருத்துறைப்பூண்டி – கீரக்களுவூர் – நங்காளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவரையும் பிடித்துச் சென்று அடித்துத்தான் கொன்றனர். அவர்களது குடும்பத்தார் அழுது புலம்பினர். கொலைகாரர்கள் தண்டனை இல்லாமல் தப்பக் கூடாது என நாங்கள் சென்றபோதும் கதறினர். ஆதாரங்களுடன் கூடிய வலிமையான அறிக்கையை நாங்கள் சமர்ப்பித்தோம்

அடுத்த சில வாரங்களுக்குப் பின் நாங்கள் சென்றபோது கொல்லப்ட்ட  இளைஞனின் உறவினர்கள் எங்களிடம் பேசவே தயாராக இல்லை.

எளிய மக்கள். சம்பாதிக்க இருந்த ஒரு பிள்ளையும் கொல்லப்படுகிறான். இடையில் காவல்துறையினர் வந்து வழக்கைக் கைவிடுமாறு மிரட்டல். அதோடு அவர்கள் வாயை மூடுவதற்காகாக சில ஆயிரங்கள், அல்லது சில லட்சங்கள் தொகை கைமாற்றம்.

என்ன செய்வது. அவன் போனது போனதுதான். காவல்துறையை எதிர்த்து நாங்கள் என்ன செய்ய முடியும் . . . என்கிற லாஜிக்கை அதிகார பலமுள்ள காவல்துறை தனது அத்துமீறல்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

வெறும் இழப்பீடுகள் போதாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். காவல்துறையை எக்காரணம் கொண்டும் தண்டித்துவிடக் கூடாது என்கிற அரசின் தத்துவம் – ஆம் அதை ஒரு தத்துவமாகத்தான் அவர்கள் வைத்துள்ளனர் – அது ஒழிக்கப்பட வேண்டும்.

சாத்தான்குளம் காவல் கொலைகளுக்கான இழப்பீடுகள் என்பன அரசின் பெருந்தன்மையைக் காட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் அல்ல! அரசுகள் தம் குற்றத்தை ஏற்றுப் பணிந்தளிக்கும் அபராதத் தொகை!

ஆம் இப்படி கொலைகளைச் செய்துவிட்டு எந்த வருத்தமோ,  இப்படி இனி செய்யமாட்டோம் என்கிற உறுதியோ இல்லாமல் அரசுகள் காட்டும் இந்தப் “பெருந்தன்மை” அபத்தமானது.

நெல்லிக்குப்பம் சுப்பிரமணி கொலை வழக்குபற்றி உங்களுக்குச் சொல்வது அவசியம்.

சுப்பிரமணி நிரந்தர வேலை இல்லாத ஒரு ஏழைத் தொழிலாளி. நெய்வேலியில் ஏதோ ஒரு வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க அவர் அழைத்துச் செல்லப்படுகிறார். அடுத்த வாரத்தில் ஒரு நாள் இரவு அவர் நெல்லிக்குப்பத்தில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காவல்துறை அவரைக் கூட்டிச் செல்கிறது.

அடுத்த இரண்டொரு நாளில் காவல்துறை அவரது மனைவியை அழைத்துச் செல்கிறது. சுப்பிரமணிக்கு உடம்பு சரியில்லை எனவும், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் எனவும் சொல்லி அழைத்துச் சென்று. மனைவியே கணவரைக் கொண்டுவந்து அட்மிட் பண்ணியது போல அவர் ஜிப்மரில் சேர்க்கப்படுகிறார். அடுத்தநாள் அவர் செத்துப்போகிறார்.

சுகுமாரன், நான், இன்னும் சில தோழர்கள் ஒரு குழு அமைத்து விசாரித்தபோது அது காவல்துறை நடத்திய பச்சைப் படுகொலை என்பது தெரிந்தது. ஏதோ ஒரு திருட்டு வழக்கில் அவர் சேர்க்கப்பட்டு குற்றத்தை ஏற்கச் சொல்லி சித்திரவதை செய்யப்பட்டபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஜிப்மர் சென்று சுப்பிரமணியின் உடலைப் போஸ்ட்மார்டம் செய்த மருத்துவர் அம்புரோஸ் அவர்களைச் சந்தித்தோம். அம்புரோஸ், ஒரு மிக நேர்மையான மருத்துவர். அவர் சொன்னார்: “கேரள நக்சலைட் அரிக்காடு வர்கிஸ் என்கவுண்டர் படுகொலை நடந்தபோது நான் மாணவன். அந்த வழக்கையும் பின்னால் 20 ஆண்டுகள் கழித்து சுட்டுக் கொன்ற காவலர் ராமச்சந்திரன் நாயரே வர்கீசை திருநல்லிக் காட்டில், கட்டிவைத்துச் சுட்டுக் கொன்றதை ஒத்துக் கொண்டார். நீ சுடாவிட்டால் நான் உன்னைச் சுடுவேன் என DSP லட்சுமணா தன்னை மிரட்டிச் சுட வைத்ததையும் அவர் தானாகவே – மனச்சாட்சி உறுத்துதலில் – வந்து சொன்னார். வழக்கு நடந்தது. 2010-இல் கேரள நீதிமன்றங்கள் லட்சுமணாவிற்கு ஆயுள் தண்டனை விதித்தன. அதையெல்லாம் பார்த்தவன் நான்….”

“மன்னிக்க வேண்டும். போஸ்ட்மார்டம் அறிக்கையை நான் உங்களிடம் தரக்கூடாது. நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்ட்மார்டங்களைச் செய்துள்ளேன். நான் உண்மையைத் தவிர வேறு எதையும் எழுதியதில்லை. யாருடைய அழுத்தத்துக்கும் நான் அஞ்சமாட்டேன். போய்வாருங்கள்,” என்றார்.

அவரது அறிக்கை ஆணித்தரமாக இருந்தது.  எங்கள் அறிக்கையும் விரிவாக நடந்த கதையைச் சொல்லியது. கடலூர் ரைட்ஸ் பாபுவின் NGO அமைப்பு ஒன்று பிறகு வழக்கைத் தொடர்ந்தது.

மூன்றாண்டுகளுக்கு முன் தீர்ப்பு வந்தது. வழக்கில் எங்கள் அறிக்கையும் ஒரு முக்கிய சாட்சியம். எங்களின் அறிக்கையை முடிந்தால் இங்கு மீண்டும் பதிவிடுகிறேன்.

காவல் படுகொலை என்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. சரியான தொகை நினைவில்லை. சுமார் 40 இலட்சம்  இழப்பீடு, சுப்பிரமணி விட்டுச்சென்ற மூன்று பச்சிளம் குழந்தைகளுக்கும் கல்வி உதவி முதலான சிலவற்றை அளிக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது.

இவ்வாறு அளிக்கப்படுவது இரக்கம் கருதி முதலமைச்சர்கள் பெருந்தன்மை காட்டும் விஷயமல்ல. அரசு தன் குற்றத்திற்கு தண்டனையாக அளிக்கும் அபராதம்.

இழப்பீடுகள் இவ்வாறு அளிக்கப்பட வேண்டும். இப்படி நீதிமன்றம் குற்றத்தை ஏற்று அபராத இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும் வழக்குகளில் நீதிமன்றம – அவ்வழக்கு ஏற்கனவே எப்படி முடிக்கப்பட்டிருந்தாலும் – மீண்டும் அது கொலை வழக்காக ஏற்று விசாரிக்கப்பட வேண்டும் என தன்னிச்சையாக ஆணையிடவும் வேண்டும்.

Total Page Visits: 143 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *