அதிகாரம் யாருக்கு? – புதுமைப்பித்தன்: பாகம்- 1

சர்க்கார் இருக்கிறது என்பதால்
அந்த நாட்டுக்கு ஆதிபத்தியமுள்ள ராஜாங்க அந்தஸ்து
இருக்க வேண்டும் என்பதில்லை.
சர்க்கார் ஆதிபத்தியத்தின் அறிகுறி அல்ல;
அன்னிய நாட்டு நலன்கள்
வாய் வைத்து உறிஞ்சும் குழாய்களாக
உபயோகித்துக் கொள்ளுவதற்கு வாய்ப்பாக
அது அகப்பட்டுக் கிடக்கலாம்.

முகப்புச்சாவி

இது அரசியல் சாசனத்தின் சகல அம்சங்களையும் பரிபூரணமாக விவாதிக்கும் புஸ்தகம் அல்ல. இதில் விடப்பட்ட விஷயங்கள் பல. சொல்லப்பட்டவற்றில், பாஷை தெளிவே பிரதான நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியே இது. சாத்தியமானவரை எதிர்மறை ரூபத்தின் சூத்திரபூர்வமாக லட்சண வரம்புகளை விவரித்துக் கொண்டு போவதே நோக்கம்.

அரசியல் கட்டுக்கோப்பு சோதனையில் லட்சியப் பேச்சுக்கு இடம் இல்லை.

கருணை என்ற வார்த்தையின் பொருள் இப்பொழுது கிழங்கு வர்க்கத்தில் அடங்கிவிட்டது. அரசியல் மண்ணில் அது முளைக்காவிட்டால் அதிசயம் இல்லை. முளைக்குமாகில், அதற்குக் காரணம் அரசியலின் தன்மை அல்ல. ஆகையால்தான் சாத்தியமானவரை கட்டுக்கோப்பின் அமைப்பு விவரத்தையும் அதன் திரிபுகளையும் மட்டும் விவரிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.

பரிபாஷை என்பது முதல் அதிகாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக, வசனப்போக்கில் பின்னல்முறை அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.

பரிபூர்ணமான அரசியல் நூல் ஒன்று சமைப்பதற்கு இரண்டு வகையில் இது வழிகாட்டி. ஒன்று, இதில் சாதிக்க முயன்ற பரிசீலனைகள் யாவும் பூர்ண ஆராய்ச்சிக்குப் பீடிகைகள் என்று கருதுகிறேன். இரண்டு, தர்க்க நியாயத்தின் போக்கை விரும்பாதவர்கள், வேறு முறைகளை சோதனை செய்து பார்க்க இது எதிர்மறையில் உதவி செய்யும்.

சிறு வீடு கட்டி விளையாடுவதுபோல, நாம் ஜனநாயக விளையாட்டு விளையாடுவதை நிறுத்தி, பூர்ண ஆதிபத்தியமுள்ள சர்க்காரை ஸாதாபிக்க வகை செய்யும்வரை, மனிதன் இரண்டு காலால் நடப்பவன் என்று சொல்வதற்குச் சமமாகவுள்ள அரசியல் கருத்துக்களைக்கூட தர்க்க நியாயத்தின் அந்தம்வரை சோதித்துச் சொல்ல முடியாது. சோதித்துச் சென்றாலும் மனிதன் இரண்டு காலில் நடக்கும் பிராணிதானா என்று அதிசயப்பட்டு கேட்டுக் கொண்டிருப்பதற்குக் கும்பல் கூடிவிடும்.

 

அதிகாரம் யாருக்கு?

அரசியல் சாஸ்திரப் பயிற்சியினால் ஒருவன் அரசியல்வாதியாகிவிட முடியாது; அரசியல்வாதியின் வேட்கைகளைப் பூர்த்திசெய்யும், அல்லது அவ்வாறு செய்யத் தவறும் சாதனங்களின் நுட்பத் திட்பங்களையும், அவற்றின் வலுவையும், வசதியையும் புரிந்துகொள்ளுவதற்கு அரசியல் நூல் ஒருவாறு பயன்படலாம். புகுந்துள்ள காரியம் பயன்தரத்தக்க வகையில் நடைபெற உபயோகமாகக்கூடிய சாதனம் எது என்பதைத் தெரிந்துகொள்ளுவதற்கு, அதன், அதாவது அக்கருவியின் பல்வேறு உறுப்புகளையும், அதன் சேர்க்கை வகைகளையும் பரிசோதிக்க வேண்டும். அது அரசியல் சாஸ்திர நோக்கம்.

அரசியல் நூல் என்பது அரசின் அல்லது ஆட்சியின் தன்மையை அல்லது இயல்பை வகுத்துக் காட்டும் நூல். அரசு என்பது அரசன், ராஜன் என்ற பாரம்பரிய வாரிசாக வரும் ஒருவனது பொதுச் சேவைத் தன்மையைக் குறிக்கும் ஒரு பதம்; அதாவது அரசனது நிர்வாகம், அதிகாரம், அதிகார வரம்புகள், அந்த அதிகாரத்துக்குரிய துணைக் காரணங்கள் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு பதம். இப்பொழுது இவ்வார்த்தைப் பிரயோகம், அரசனுடன் பூர்வத்தில் கொண்ட தொடர்பை அறுத்துக்கொண்டு ஆட்சி உட்பட மேலே குறிப்பிட்ட சகல அம்சங்களையும் மட்டும் குறிக்கிறது. இதனால்தான் நாம் முடியரசு, குடியரசு, தனியரசு என்றெல்லாம் அரசு என்ற பதத்தை இணைத்து பலவிதப்பட்ட தன்மை வாய்ந்த நிர்வாக வர்க்கங்களை விவரிக்கிறோம்.

திருவள்ளுவர் மன்னராட்சிக்கு படை, குடி, கூழ், அமைச்சு என நான்கு உபலட்சணங்களை விவரிக்கிறார். அதுபோலவே, அரசியல் சாஸ்திரத்திலும் அரசு என்பதற்கு உபலட்சணங்கள் விவரிக்கப்படுகின்றன. அவை தேசம், சமுதாயம், ஆதிபத்திய உரிமை உள்ள ராஜாங்கம், சர்க்கார் என்பவையாகும். சர்க்கார் என்றால் சட்டம் இயற்றும் ஸ்தாபனம், அதை நிர்வகிக்கும் ஸ்தாபனம், அவ்வாறு எழும் சட்டங்களிடையே தோற்றக்கூடிய கலக்கங்களைத் தெளிவுபடுத்தி இன்னதற்கு இன்னதுதான் என்று நிர்த்தாரணம் செய்யும் ஸ்தாபனம் என்று பொருள். இவ்வுபலட்சணங்களின் உட்கிடைகளையும் சற்று தெளிவுபடுத்திக் கொண்டால் பூர்வாங்கமாக பரிபாஷை இன்னது என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.

தேசம்

தேசமாவது என்ன? நீர்மேல் எழுத்துப்போல எல்லை வரம்புகள் உதாசீனம் செய்யப்படும் இக்காலத்தில், சர்வே உத்யோகஸ்தர் மாதிரி பிளான் போட்டுக் காட்ட முடியாது. அரசியல் சாஸ்திரத்தின் முடிபுகளுக்கு ஆதார விவகாரமான ஐரோப்பிய சரித்திரத்தைச் சற்றுக் கவனித்தால் இதன் உண்மை விளங்கும். உதாரணமாக, போலந்து, செக்கோஸ்லோவாகியா முதலிய நாடுகளை எடுத்துக் கொள்ளுவோம். பிற நாட்டு அரசியல்வாதிகளின் வெறிகளும் அபிலாஷைகளுமே அவற்றின் வரம்பை இதுவரை நிர்ணயித்து வந்துள்ளன. அவ்வையார் முற்காலத்தில் சர்வே செய்தது மாதிரியாக, நிர்ணயமாக சொல்லியதுபோல, குறிப்பிட்ட எல்லையடக்கும் நிலப்பரப்பை வைத்து தேசம் என்ற பதத்துக்கு உள்ள பொருட்பொதிவு முழுவதையும் சொல்லுவதென்றால், அது பிசகான வழியிலேயே கொண்டுபோய்விடும். குறிப்பிட்ட ஆசாரம், பழக்க வழக்கங்கள், சமய வழிபாடு, பண்பு முதலியவற்றை வைத்து நிர்ணயிப்பது பொருந்தும் என மேலோட்டமாக பார்த்தால் தெரிகிறது. குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் குறிப்பிட்ட ஆசார அனுஷ்டானங்களை மட்டும் கொண்டவர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வருகிறார்களா என்று பார்த்தால், அவ்வளவு எளிமையான கட்டுக்கோப்பு எங்குமே கிடையாது. இதை நாம் தேசம் என்ன என்பதை நிர்ணயிக்கும் குறியீடாக வகுத்துக் கொண்டால், பூப்பரப்பில் உள்ள சகல தேசங்களும் இதற்கு விதிவிலக்காகவே அமையும்! அரபுகள் வாழ்வது அரேபியா என்று நாம் சொல்லிவிட்டால், அங்கு அவர்களுடைய விதியோடு அறுத்துக்கொள்ள முடியாதபடி தம்மை பந்தப்படுத்திக் கொண்டுள்ள யூதர்களும் கிறிஸ்துவர்களும் அவ்வாறு பாத்யதை கொண்டாடுகிறார்களே? நிற்க, வேறு என்ன விதமாக வகுக்கலாம்? சந்தர்ப்ப விகாரங்களாலும், வாழையடி வாழையாகவும் தம்முடைய பரஸ்பர நல்வாழ்வையே பரம நலமாக கொண்டு, ஒத்த ஜீவன் வசதியைப் பெற்று லட்சிய வேட்கைகளைப் பூர்த்தி செய்துகொள்ளச் சம்மதித்து, அவற்றை நடத்த பூர்ண உரிமை வகித்துவரும் ஒரு சமாஜத்தின் நிலைக்களமே தேசம். இவ்வுரிமை பறிமுதல் செய்யப்படலாம், உதாசீனம் செய்யப்படலாம், அல்லது அடைமானம்கூட செய்யப்படலாம்; ஆனால் அந்த தேசவாசிகளின் அழியாத உயிர் நாடி அது. ரோம் சாம்ராஜ்யம் ஒரு குறிப்பிட்ட பூப்பகுதியில் உள்ள சமுதாயத்தை வேருடன் கெல்லிக் களைந்துவிடச் செய்த முயற்சியே ஐரோப்பிய நாகரிகத்தின் பாரம்பரிய சங்கடமாக, யூதப்பிரச்சினை என்ற ரூபத்தில் மேல் நாடுகளிலே இருந்து வருகிறது; அங்கு காணும் பல தேசங்களின் நிர்வாகிகளுடைய கோபாவேசத்துக்கும் முதலைக் கண்ணீருக்கும் இலக்காக அமைந்த யூதப் புதிர், உயிர்வாழ்வு வேட்கை எவ்வளவு விடாப்பிடியாக வேலை செய்கிறது என்பதைக் காட்டுகிறது.

சமுதாயம்

அடுத்த உறுப்பான சமுதாயம் என்றால் என்ன?  மனிதன் மந்தை மந்தையாக வாழும் பிராணி. இயற்கையின் சிருஷ்டியிலே புறப் பாதுகாப்புகள் சற்றும் இல்லாத ஜீவன் மனிதன்தான். குளம்போ, நகமோ, கோரப்பற்களோ, விஷமோ, வேஷமோ அல்லது ஓடோ, செதிலோ, ஓட்டமோ, வர்ணமோ சற்றும் கிடையாது. ஆனால், அவ்வளவு வசதிகளையும் இயற்கை, உயிர்வாழ்வுக்கு அவசியமான அரண்களாக மற்ற பிராணிகளுக்கு கொடுத்திருக்கிறது. (அல்லது, அம்மாதிரி வேறுபாடுகளை பரிணாம நியதிப்படி வாழ்க்கைப் போரில் வகுத்துக்கொள்ள சந்தர்ப்பம் அளித்துள்ளது என்று வேண்டுமானாலும் ஒப்புக் கொள்ளுவோம்.) ஆனால், மனிதனோ அவ்வளவு வசதிகளையும் தனது மனசையும் புத்தியையும் கொண்டு அமைத்துக்கொண்டால்தான் உயிர் வாழ்வது சாத்தியம்.

மனம் உள்ள பிராணி மனிதன். அதை உபயோகித்து ஆதியிலிருந்தே மனிதன் கும்பலாக வசிக்கப் பழகிக்கொண்டான். இந்த குணம் இவனுக்கு எப்பொழுது ஏற்பட்டுப் படிந்தது. மிருகப் பிராயத்தில் இருக்கும்போதே இந்தப் பழக்கம் படிந்ததா என்பதெல்லாம் மனுஷ வாழ்க்கை நுணுக்கங்களில் கண்டுகொள்ளலாம். கூடி வாழ்வது என்பது பூப்பரப்பு முழுவதிலுமே மனிதக் கும்பலின் குணம். கூடி வாழ்வது என்றால், பக்கத்தில் வாழ்பவனும், தன்னைப் போல் வாழ்வதற்கு சம்மதித்தல் என்கிற அர்த்தம். அதாவது பொதுவாக எந்த அளவு வரை இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து வருவித்து விடாதோ அந்த அளவு வரை பரஸ்பரம் தம்மிடையே அபிலாஷைகளில் உள்ள அற்ப வேறுபாடுகளை விட்டுக்கொடுத்து, அதற்குப் பர்த்தியாக தன்னுடன் ஒத்து வாழ சம்மதித்தவனுடன் பாதுகாப்பு, பசியாறிக் கொள்ளுதல் முதலிய விவகாரங்களில் இணைந்து வேலை செய்ய முற்படுதலேயாகும்.

இந்த ஒரு சம்மதம் குறிப்பிட்ட ஒவ்வொரு மனிதக் கும்பலிடையே குறிப்பிட்ட ஒவ்வொரு வித ஒருமைப்பாட்டையும் அனுஷ்டான வளமுறைகளையும் வளர்க்கிறது. இவைகளை கலாச்சாரம் எனவும் பண்பு எனவும் இரு கூறாகப் பிரித்துக் கூறலாம். கலாசாரம், புற அமைதியையும் ஒழுக்கங்களையும் எடுத்துக் காட்டுவதாகவும், பண்பு என்பது அவற்றிற்கு சூட்சுமமான மன நிலைகளையும், போக்குகளையும் குறிப்பிடுகிறது எனவும் நாம் கொள்ளுவதால் சவுகரியம் உண்டு. இப்படிப்பட்ட தன்மைகள் கொண்டதுதான் ஒரு சமாஜம். உதாரணமாக, ஹிந்துக்கள் என்று அன்னியர் நமக்கு இட்டுள்ள ஒரு விலாசத்தின் கீழ், மூலாதாரம் ஒன்றாகவும் கிளைகள் பலவாகவும் பெற்ற ஆசார அனுஷ்டானங்களையும் கொண்ட உட்பிரிவுகள் பல இருந்தாலும் இமயம் முதல் குமரி வரை காணப்படும் ஒருமைப்பாடும் ஆசார அனுஷ்டானங்களும் நம்மை சகஜமாக்குகிறது. இதேபோல, இங்குள்ள முஸ்லிம்களும் இமயம் முதல் குமரி வரையில் ஒரே தன்மையுடனே காணப்படுகிறார்கள். ஹிந்துதர்மம் என்பதின் தொலைதூரக் கிளைகளான பௌத்தம், ஜைனம் ஆகியவையும் அப்படியே. இவ்வாறே நாம் எவ்வளவோ உதாரணங்களைப் பெருக்கிக்கொண்டு போகலாம். இவ்வளவு சமாஜங்களும் தம்முடைய அபிலாஷைகள், நலபூர்த்திகள் ஆகியவற்றை நிலைக்களமாகக் கொண்டுள்ள பூப்பரப்புதான் இந்தியா தேசம்.

ராஜாங்கம்

மூன்றாவது உறுப்பு ஆதிக்க உரிமையுள்ள ராஜாங்கம். மேலே நாம் குறிப்பிட்ட பூப்பரப்புக்குள் வாழும் சமாஜம் அழிந்து போகாமல் வாழ ஆசைப்படுவது இயல்பு. மனிதனுடைய உயிர் வாழும் வேட்கையே அது. அதற்கு உரியதான சாதனம் ஒன்றை அவன் ஏற்படுத்திக் கொண்டான். குறிப்பிட்ட சமாஜம் அல்லது சமாஜங்களிடையே தனி மனிதர்களின் விவகாரங்களை முறைப்படுத்தவும், வெளி ஆக்கிரமிப்புகளிலிருந்து அகல அல்லது அவற்றைப் பாதுகாத்து நிற்கவும் அமைக்கப்பட்ட சாதனமே ராஜாங்கம். குறிப்பிட்ட சமாஜம் அல்லது சமாஜங்கள் சம்மதித்துக் கொடுத்த அல்லது சம்மதிக்காமல் இழந்த அதிகாரத்தைப் பெற்று, அது அல்லது அவற்றினிடையே உள்ள ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் அதிகாரம் படைத்திருக்கும் சாதனம் ராஜாங்கம். பூர்ண ஆதிபத்தியம் என்பது குறிப்பிட்ட பூப்பரப்பின் மீதும் அதில் வாழும் சமாஜத்தினர் மீதும் வடுப்படாத அதிகாரம் பெற்றிருப்பதேயாகும். பிறநாட்டு தலையீடோ, அதிகாரமோ அதைப் பாதிக்காது. ஆதிபத்தியத்துக்கு வரம்புகள் உண்டா, அப்படி இருக்குமாகில் அதன் தன்மைகள், வயணங்கள் என்ன என்பது பற்றிய சூட்சுமங்களை ஆராயப் புகுந்தால் சோதனை பெரிதுபட்டுவிடும்.

சர்க்கார்

தற்போது அதை நிறுத்தி வைத்துக்கொண்டு சர்க்கார் என்ற பதத்தை எவ்வாறு எந்தப் பொருளில் உபயோகித்து வருகிறோம் என்பதையும் பரிசீலனை செய்துகொள்வது அவசியம். “பிரிட்டிஷ் சர்க்கார்”, “இந்தியா சர்க்கார்”, “சர்க்கார் உத்தரவு”, “சர்க்கார் கட்சி ஜெயித்தது” என்ற பிரயோகங்களில் சர்க்கார் என்ற வார்த்தை ஒரே பொருளில்தான் வருகிறதா? கவனித்துப் பார்ப்போம். ஒரு தேசத்திலே தன் கட்டுக்கோப்பு குலைந்துவிடாமல் இருப்பதற்காக ஆட்சி நடத்தும் ஸ்தாபனம் அல்லது யந்திரத்தைத்தான் நாம் சர்க்கார் என்று குறிப்பிடுகிறோம். சர்க்கார் என்பது நாட்டு மக்களுடன் தொடர்பு கொண்டிருப்பது, பிறநாட்டு ராஜாங்கங்களுடன் உறவு வகிப்பது. வரி வசூல் செய்தல் முதல் விவசாய அபிவிருத்தி, பரிசோதனைக் கூடங்கள் வகுத்து நடத்துவது வரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஆதிபத்தியமுள்ள ராஜாங்க அந்தஸ்து வகிக்கும் அரசின் சார்பாக நிர்வாகம் நடத்தும் யந்திரமே சர்க்கார். ஏதாவது ஒரு ஆட்சி இருந்துதான் ஆகவேண்டும். ஆட்சி மனித பலவீனத்தின் புறச்சின்னம்.

ஆனால் சர்க்கார் இருக்கிறது என்பதால் அந்த நாட்டுக்கு ஆதிபத்தியமுள்ள ராஜாங்க அந்தஸ்து இருக்க வேண்டும் என்பதில்லை. சர்க்கார் ஆதிபத்தியத்தின் அறிகுறி அல்ல; அன்னிய நாட்டு நலன்கள் வாய் வைத்து உறிஞ்சும் குழாய்களாக உபயோகித்துக் கொள்ளுவதற்கு வாய்ப்பாக அது அகப்பட்டுக் கிடக்கலாம். அப்படியாயின் அதன்வசம் ஆதிபத்திய உரிமை என்பது எப்படி இருக்கப்போகிறது? ஆதிபத்தியமானது அடைமானம் செய்யப்பட்டோ அல்லது திவாலாகியோ செல்லுக்கணக்கில் ஏறியிருக்கும்.

இதுவே வேண்டாம். ஸ்தல ஸ்தாபன ஆட்சி என்று ஒரு விலாசத்தை நாம் காண்கிறோம். அதுவும் வரி விதிக்கிறது; குறிப்பிட்ட வரம்புக்குள்ளாக அதுவும் சில காரியங்களைச் செய்ய அதிகாரம் பெற்றிருக்கிறது. அந்த ஸ்தலத்தில் ஓரளவு ஆட்சி நடத்துகிறது என்றே சொல்ல வேண்டும். அதுவும் சர்க்கார்தான். ஆனால் அதன் வசம் ஆதிபத்திய உரிமை கிடையாது. அதற்கு மீறிய அதிகாரம் பெற்ற ஸ்தாபனம் அந்த எல்லை மீதே உண்டு. அதாவது, அது ஆட்சி நடத்தும் வட்டாரத்துக்குள் வேறு ஒரு ஸ்தாபனமும் ஏககாலத்தில் ஆட்சி நடத்துகிறது. அதாவது, அது அமைந்துள்ள நாட்டின் ஆதிபத்திய உரிமையுள்ள அரசின் யந்திரமும் அதே வட்டாரத்துக்குள் அதிகாரம் செலுத்துகிறது.

பாகம் 2 – இல் அடுத்து வருவது: சர்க்காரின் வேலைகள் . . .

Total Page Visits: 149 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *