வெளியுறவுக் கொள்கையில் மோடிதான் முதலில், பிறகுதான் இந்தியா: ஷிவம் விஜ்

வெளிநாட்டு உறவுகளை
உங்களுடைய உள்நாட்டு அரசியலின்
ஒரு துணைப்பிரிவுதான் என்று
நீங்கள் நினைத்துக் கொண்டால் என்னவாகும்
என்பதைத்தான் இப்போது தெரிந்து கொண்டிருக்கிறோம்.

டொனால்டு டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் தன்னுடைய வெளிவரவிருக்கும் புத்தகத்தில், அமெரிக்க அதிபர் தன்னுடைய மறுதேர்தல் விவகாரத்தில் சீனாவின் உதவியை நாடியுள்ளது பற்றி வெளிப்படுத்தியுள்ளார். இப்படி வெளிவந்துள்ள இதுவும், வேறுபல விஷயங்களும் கவலைக்குரியவைதான் என்றாலும், ஆச்சரியப்பட வேண்டியதல்ல. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை டிரம்ப் தன்னுடைய சொந்த அரசியல் நிலைப்பாட்டை உயர்த்திக்கொள்ளப் பயன்படுத்துகிறவர் என்பது தெரிந்த விஷயம்தான்.

டிரம்பை காட்டிலும் அளந்துபார்ப்பதற்கு கடினமானவர்தான் என்றாலும், இந்தியப் பிரதம மந்திரி மோடியும் இதையேத்தான் செய்து வருகிறார்: அதாவது, வெளியுறவுக் கொள்கையை தன்னுடைய சொந்த நலன்களுக்காக பயன்படுத்துவது. எளிமையாக சொன்னால், மோடி முதலில், பிறகுதான் இந்தியா என்பதே அவருடைய வெளியுறவுக் கொள்கை.

மோடி முதல்முறையாக 2014-இல் அதிகாரத்திற்கு வந்தபோது, சர்வதேச உறவுகளில் அவர் காட்டிய பேரார்வம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்ததே அரசியல் அபாயத்தின் மூலாதாரமாகவும் மாறிப்போனது. ஆனால், இந்த விஷயத்தில் மோடி குறித்து ஒரு விரிவான பதில் இருந்தது: பிஜேபி, ஆர்எஸ்எஸ் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய எல்லாமும் சேர்ந்து ‘இந்தியாவின் தகுதியை மோடி உலகத் தரத்திற்கு உயர்த்துகிறார்’ என்று எல்லோருக்கும் தெரியப்படுத்தின. மோடியின் வருகைக்கு முன்னர் உலக அளவில் இந்தியாவிற்கு மரியாதை இல்லாமல் இருந்தது எனவும் நமக்கு சொல்லப்பட்டது.

இந்த சித்தரிப்பு பெரும் வெற்றிபெற்றது, அத்துடன் தேர்தல்களில் வெற்றிபெறுவதில் மோடியின் இந்த பிராண்டு முக்கிய அஸ்திவாரமாக செயல்பட்டது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள்தான், மோடி தன்னுடைய பிராண்ட்-உருவாக்கத்திற்காக வெளிநாட்டுக் கொள்கையை பயன்படுத்தியிருப்பதும், அதையும் இந்தியாவின் செலவில் செய்துகொண்டிருப்பதும் நமக்குத் தெரியவந்திருக்கிறது.

ஒரு பிரதம மந்திரியாக நாம் ஒரு மார்க்கெட்டிங் மேனேஜரைத்தான் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை 2014-இல் மோடி பிரதமரான உடனேயே நாம் உணர்ந்துகொண்டோம். அவர் எப்போதுமே கோஷங்கள், சுருக்கெழுத்துக்கள், வெற்று முழக்கங்களையே கொண்டுவந்தார். அவைதான் மேக்இன் இந்தியா, ஸ்வச் பாரத், யோகா தினம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டேண்ட்அப் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்றவை. 2015-ஆம் ஆண்டு வாக்கில், இந்தப் புதிய அரசாங்கத்துடன் பேரம் பேசுவது தங்களுக்கு மிக சுலபமாக இருப்பதாக ஒரு வெளிநாட்டுத் தூதுவர் என்னிடம் தெரிவித்தார். “இந்தியாவில் எங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை வெறுமனே மோடி அரசாங்கத்தின் பிரச்சாரங்களுள் ஒன்றில் பொருத்துவதற்கான வழி என்னவென்று கண்டுபிடிப்போம். அதை டிஜிட்டல் இந்தியாவிலோ, ஸ்டார்ட்அப் இந்தியாவிலோ வைத்துவிடுவோம். இந்தியத் தூதுவர்களும் அதிகார வர்க்கத்தினரும் அதை மேற்கொண்டு உயர்வான நிலைக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள்,” என்றார்.

மோடிக்கு அதிகம் தேவைப்படுவது என்னவென்று வெளிநாட்டு சக்திகளுக்குத் தெரியும்: அவருடைய ஆளுமை-வழிபாட்டிற்கு தீனிபோடுதல் என்பதுதான் அது. இதனை மோடி தன் வாக்காளர்களிடம் தன்னுடைய வலிமையாக தயாரித்து வழங்கினார், ஆனால் உண்மையில் அது ஒரு பலவீனம். ஒரு அற்ப மனிதனை ஒருசில பரிசுகள் கொடுத்து சந்தோஷப்படுத்துவதைப் போன்றே, வெளிநாட்டு சக்திகளுக்கு மோடி சுலபமானவரா இருந்தார். சீனாவும் அதைத்தான் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

மோடியின் தன்னகங்காரத்திற்கு வேண்டிய தீனியை வூகானில், மகாபலிபுரத்தில், அகமதாபாத்தில் என தற்பெருமைப் புகைப்படங்களாக வழங்கியது சீனா. மோடியும் ஜின்பிங்கும் 2014-ஆம் ஆண்டில் இருந்து 18 முறை சந்தித்திருக்கிறார்கள், மோடி மட்டுமே சீனாவிற்கு 5 முறை சென்றுவந்திருக்கிறார். மோடியின் சுய-வழிபாட்டை பயன்படுத்திய சீனா அவரை மகிழ்ச்சிப்படுத்தியது, பின்னர் நாம் ஒரு பெருந்தொற்று மற்றும் பொருளாதார பின்னடைவின் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கும்போது நம்மை முதுகில் குத்திவிட்டது. எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு ‘எல்லாம் சரிதான்’ என்கிற முறையில் மோடியையும் நடந்துகொள்ளச் செய்துவிட்டது.

மோடி வெளிநாட்டுத் தலைவர்களுடனான தன்னுடைய ‘தனிப்பட்ட நட்புறவை’ பந்தாவாக காட்டிக்கொள்ளவே விரும்பினார். இந்தப் பிரதமர், சீனப் பயணியான ஹுவான் சுவாங், வத்நகரில் உள்ள தன்னுடைய கிராமத்திலும், சீனாவில் உள்ள ஜின்பிங்கின் கிராமத்திலும் தங்கியிருந்தது பற்றி அடிக்கடி பேசிவந்துள்ளார். ஜின்பிங்கே இதைச் சொன்னதாகவும், தன்னை சீனாவில் உள்ள அவருடைய கிராமத்திற்கு அழைத்துச் சென்று, மோடி கிராமம் என்று பொறித்து வைக்கப்பட்டுள்ளதை தனக்குக் காட்டியதாகவும் மோடியே கூறினார்.

ராஜதந்திரம் என்பது கொடுத்து வாங்கும் விளையாட்டு. இந்தியத் தரப்பில் மோடியின் தனிப்பட்ட பிராண்டுதான் முதன்மையானது என சொல்லப்பட்டால், பிறகு இந்திய தேசத்தின் நலன்கள் எல்லாமே முன்னுரிமைப் பட்டியலில் மிகவும் கீழே தள்ளப்பட்டுவிடும்.

கடந்தகாலங்களில் மோடி நம்மிடம், ‘தனிப்பட்ட நட்புறவு, தோழமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை, வெளிநாட்டு உறவுகள் என்ற கருத்துக்களின் ‘பாரம்பரியமான’ அர்த்தங்களுக்கும் மேலே சென்றுவிட்டது’ என்று கூறினார். இந்த தனிப்பட்ட உறவும்கூட அவருக்கு ‘பாரம்பரிய’ வெளிநாட்டுக் கொள்கை என்பதற்கும் “மேலான ஒன்று” என்பதாகும். அப்படி மேலான ஒன்று என மோடி எதை நினைத்தாரோ அதுவே ‘கீழான ஒன்று’ என்பதாக மாறிப்போய்விட்டது.

ஆகாஷி சின் பகுதியை சீனாவிடம் இருந்து மீட்டெடுக்கப் போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் எழுந்துநின்று அறிவித்தார். அச்சமயத்தில், வெளிநாட்டுக் கொள்கையும் உள்நாட்டு அரசியலும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும் ஒரு புவியரசியல் சிக்கல் என்பதைக் கேட்க முடியாத அளவுக்கு மோடி அராசங்கம் முழு செவிடாகிப் போயிருந்தது. இதற்கு மாறாக, கால்வான் பள்ளத்தாக்கை கைப்பற்றப் போகிறோம் என்றெல்லாம் ஜின்பிங் அறிவித்துவிடவில்லை.

தான் உள்நாட்டுப் பார்வையாளர்களிடம்தான் சொல்கிறோம் எனவும், பாகிஸ்தானைப் போலவே சீனாவும் அறிக்கை வெளியிடுவதற்கு மாறாக எதையும் செய்துfevவிடாது எனவும் அமித்ஷா நினைத்துவிட்டார். ஆனால், வெளிநாட்டு உறவுகளை உங்களுடைய உள்நாட்டு அரசியலின் ஒரு துணைப்பிரிவுதான் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் என்னவாகும் என்பதைத்தான் இப்போது தெரிந்து கொண்டிருக்கிறோம்.

வெளிநாட்டுக் கொள்கையையும் உள்நாட்டு அரசியலையும் மோடி அரசாங்கம் வெறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்தியதுதான், சீன விரிவாக்கத்திற்கு உண்டான தெற்காசிய செல்வாக்கை இந்தியா இழந்து நிற்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது. பிஜேபி-யின் உள்நாட்டு அரசியலுக்கு பாகிஸ்தானைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளதன் தேவை என்பது, இஸ்லாமாபாத்துடன் இந்தியா கொண்டிருக்க வேண்டிய நுட்பமான உறவைக் கைவிடுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் வழங்கியுள்ளது. பாகிஸ்தானை ‘தனிமைப்படுத்தல்’ என்ற கருத்தாக்கமே, இந்தியா தன்னைச் சுற்றிலும் சீனக் கூட்டாளிகளால் சூழப்பட்டு, தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் சூழலில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. நேபாளம் வீழ்ந்துவிட்டது, பூடான் எவ்வளவு நாட்களுக்கு தாக்குபிடிக்கும் எனத் தெரியாது? மேலும் மேற்கு வங்கத்தை வெற்றிகொள்வதற்கான அமித்ஷாவின் தேவையினால், ‘சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறிகள்’ என்று நாமே பொய்ப் பிரச்சாரம் செய்து டாக்காவையும் பெயங்ஜிங்கை நோக்கித் தள்ளிவிட்டோம்.

அமெரிக்காவை இந்தியா எதிர்கொண்டபோதும் இதே கதைதான் மிகவும் கசப்பான வகையில் செயல்பட்டதைப் பார்த்தோம். மோடி மற்றும் டிரம்ப் ஆகிய இருவருமே பரஸ்பர அரசியல் நிலைப்பாடு மற்றும் தேர்தல் நோக்கங்களை மனதில் கொண்டே, விளையாட்டரங்க பேரணிகளில் பேசி வருகிறார்கள். டிரம்பின் மறுதேர்தலுக்கு ஆதரவு அளிக்கும் அளவுக்குக்கூட மோடி சென்றுவிட்டார். இந்த வருட இறுதியில் ஜோ பைடன் மட்டும் தேர்தலில் வென்றுவிட்டால், டிரம்ப் உடனான மோடியின் பாசப்பிணைப்பே இந்திய-அமெரிக்க உறவுகளில் குறைந்தபட்சம் ஒரு தற்காலிக அருவருப்பையாவது ஏற்படுத்தாமல் போகாது.

மோடி தன்னுடைய வாட்ஸ்அப் இமேஜ் தொழிற்சாலையை இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து துண்டித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தமிழாக்கம்: மர்மயோகி

ஷிவம் விஜ் – தி பிரிண்ட் சிறப்பு ஆசிரியர்

நன்றி: https://theprint.in/
Total Page Visits: 225 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *