வார்த்தைகளில் கவனம் வேண்டும்: மோடிக்கு மன்மோகன் சிங் எச்சரிக்கை

லடாக்கில்
சீன ராணுவம் எங்கும் ஊடுருவவில்லை என்று
பிரதமர் மோடி பேசியதை
சீன ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.

உலகின் எந்தத் தலைவர்களும் செய்யாத அளவுக்கு இந்தியப் பிரதமர் மோடி தனது 6 வருட பதவிக்காலத்தில் உலக நாடுகளில் ஏறக்குறைய எல்லா நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டார். ஆறு வருடங்களுக்கு முன்னர், 2014-இல் முதல்முறை ஆட்சிப் பொறுப்பேற்றபோது மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களை ‘உலக அளவில் இந்தியாவின் நிலையை உயர்த்துவது’ என விவரித்தார்கள். மோடியின் வருகைக்கு முன்னர் உலக அளவில் இந்தியாவிற்கு எந்த மதிப்பும் இல்லை என்றுகூட பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தார்கள். ஆனால் அதே மோடி, இந்திய வெளியுறவுக் கொள்கையை, இந்தியாவின் செலவில் தன்னுடைய மோடி பிராண்டை பெரிதாக்குவதற்குத்தான் பயன்படுத்தி வருகிறார் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது சமீபத்திய லடாக் விவகாரம்.

Cartoon Credit: Shreyas Navare

2015-ஆம் ஆண்டு வாக்கில் “இந்தியாவில் எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை மோடி அரசின் பிரச்சாரத்திற்குள் பொருத்திவிடுவோம். அவற்றை டிஜிட்டல் இந்தியாவில் வையுங்கள், இவற்றை ஸ்டார்ட்அப் இந்தியாவில் வையுங்கள், மற்றவற்றை ஸ்வச் பாரத், ஸ்டேண்ட்அப் பாரத், யோகா தினம், மேக் இன் இந்தியா போன்றவற்றில் வையுங்கள் என்று சொல்வது மட்டும்தான் எங்களுடைய வேலை. பிறகு இந்திய அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் அதையே பேசிக்கொண்டிருப்பார்கள்,” என்று ஒரு வெளிநாட்டுத் தூதுவர் சொல்லியிருக்கிறார்.

மோடியும் ஜின்பிங்கும் 2014-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 18 முறை சந்தித்திருக்கிறார்கள். மோடி 4 முறை சீனாவிற்கு சென்றுவந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம்  ஜின்பிங்கை இந்தியாவிற்கு அழைத்து மகாபலிபுரத்தில் விருந்தும் கொடுத்திருக்கிறார்.

தற்போது, லடாக் எல்லை விவகாரத்தில் சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய மோடி, “இந்தியாவில் சீனா எங்கும் ஊடுருவவில்லை. சீன ராணுவம் எங்கும் அத்துமீறவில்லை. இந்தியாவின் நிலப்பரப்பு எதையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

மோடியின் இந்த அறிக்கை குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி “நரேந்திர மோடி இப்போது சரண்டர் மோடி ஆகிவிட்டார்” என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர், “சீனாவின் மூர்க்கத்தனத்திற்கு இந்தியப் பகுதியை பிரதமர் சமர்ப்பித்துவிட்டார். அந்தப் பகுதி சீனாவுடையது என்றால் நம்முடைய வீரர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? எங்கு வைத்து கொல்லப்பட்டார்கள்?” என்றும் பிரதமரின் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு சீன ஊடகங்களில் பெரும் பேசுபொருள் ஆகிவிட்டது. லடாக்கில் சீன ராணுவம் எங்கும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேசியதை சீன ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. பிரதமர் மோடியின் பேச்சு பதற்றத்தை தணிக்கும் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் சீனா அத்துமீறவில்லை என்பதை மோடி ஒப்புக்கொண்டுவிட்டார். இதனால் எல்லை பிரச்சனை இந்தியாவில் நடக்கவில்லை என்றெல்லாம் சீன ஊடகங்கள் பலவாறாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பிரதம மந்திரியானவர் தன்னுடைய வார்த்தைகளின் அனுகூலங்களைப் பயன்டுத்திக்கொள்ள சீனர்களை அனுமதிக்கக் கூடாது. இந்தியப் பிரதேசங்களை வேண்டுமென்றே உரிமைகோரும் சீனாவின் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கண்டு இந்தியர்கள் பணிந்துபோகக் கூடாது. அத்துடன், ஒரு பிரதமரே தவறான தகவலை வெளியிடுவது ராஜதந்திரத்திற்கோ அல்லது உறுதியான தலைமைக்கோ மாற்று அல்ல. மேலும், இத்தகைய தவறான தகவல்களைக் கொண்டு கூட்டாளிகளை இணக்கமாக வைத்துக்கொள்வதால் உண்மையை மறைத்துவிட முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

  • இரா.செந்தில்
Total Page Visits: 134 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *