இந்தியா-சீனா-அமெரிக்கா: ஒரு முக்கோண எல்லைக்கோடு – வசீகரன்

சீன அதிபரின் இந்தியப் பயணம்,
இந்தியா சீனா இடையே வர்த்தக உறவை மேம்படுத்தி,
புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்பட வழிசெய்தது.
இந்நிலையில்,
ஏன் இந்த தலைகீழ் மாற்றம்?

ஏற்கனவே, இந்தியாவை கொரோனா சூழ்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பதிப்பில், உலகின் இரண்டாவது இடத்திற்கு இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது இந்தியாவை போர்மேகமும் சூழ்கிறது.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி இரவு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு வீரர்களும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். இதில், இந்திய தரப்பில் ஒரு கர்னல் உட்பட 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த மே மாத துவக்கத்தில் இருந்தே இந்திய – சீன எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. சீனா எல்லையில் படைகளை குவித்தது. கடந்த மே-5,6 தேதிகளில் சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நூழைந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த எல்லை விவகாரம் தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் முதல் தூதரக அதிகாரிகள் வரை 12 சுற்று பேச்சுவார்த்தை நடந்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக. சுமூக முடிவு ஏற்பட்டதால், எல்லையில் இருந்து சீனப் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வந்தன. இந்த சந்தர்ப்பத்தில்தான் இருநாட்டு படைவீரர்களுக்கு இடையே கல்வீச்சு மோதல் நடந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீன அதிபருக்கு இந்தியா பிரம்மாண்ட வரவேற்பளித்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள புராதன வரலாற்றுத் தொடர்பை நினைவூட்டும் வகையில், சீன அதிபரை மகாபலிபுரம் அழைத்துவந்து கொண்டாடியது இந்தியா. இதன்மூலம், இந்தியாவுக்கும் சீனாவுக்குமான, நீண்ட நாளைய எல்லைப் பிரச்சனைகள் தீரும் என நம்பிக்கை தெரிவித்து பிஜேபி. சீன அதிபரின் இந்தியப் பயணம், இந்தியா சீனா இடையே வர்த்தக உறவை மேம்படுத்தி, புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்பட வழிசெய்தது.

இந்நிலையில், ஏன் இந்த தலைகீழ் மாற்றம் ?

கொரோனா வைரஸ் வருகைக்கு முன்பு, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக உறவுகளில் நெருக்கம் ஏற்பட்டிருந்தது. நீண்டகாலமாக சீனவுக்குள் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையை மாற்றி, சீனாவில் முதலீடு செய்ய அமெரிக்கா அனுமதி பெற்றது. இந்நிலையில்தான், கொரோனா வைரஸின் தாக்கம் சர்வதேச அரசியல் சூழ்நிலையை மாற்றிப்போட்டது.

கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா ஆடிப்போனது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனாவே காரணம் எனவும், ஐ.நா.வின் சர்வதேச சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக இருப்பதாகவும், ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். கொரோனா வைரஸை ஒரு உயிரியல் ஆயுதமாக சீனா தயாரித்தருக்கும் என்ற சந்தேகத்தையும் அமெரிக்கா எழுப்பியுள்ளது, மேலும், சர்வதேச சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த நிதியையும் அமெரிக்கா நிறுத்திவிட்டது.

அதேசமயம், இந்தியா உட்பட 120 நாடுகள், சர்வதேச சுகாதார அமைப்பிடம், கொரோனா வைரஸ் பரவல் குறித்து விசாரனை நடத்தும்படி புகார் அளித்துள்ளன. இது அமெரிக்காவின் தூண்டுதலில் நடந்ததாக சீனா கருதுகிறது. இந்த நேரத்தில், சர்வதேச சுகாதார அமைப்பின் நிர்வாக கமிட்டிக்கு, இந்திய சுகாதார அமைச்சரான ஹர்ஷவர்தன் தலைவராகியுள்ளார். கூடுதலாக, இந்திய நிறுவனங்களில் சீனா முதலீடு செய்வதற்கும் இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இவை அனைத்தும், அமெரிக்காவின் எண்ணத்திற்கு ஏற்ப இந்தியா செயல்படுவதாக சீனாவை கருத வைத்துள்ளது. டிரம்பின் இந்திய வருகையும், அமெரிக்கா, இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக உறவு நெருக்கமும் அதற்கு ஒரு காரணம். அத்துடன், மோடியும் டிரம்பும் அதிகமாக நட்பு பாராட்டிக் கொள்வதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

லடாக் மோதல் நடந்த அன்றே, “லடாக் மோதலை நாங்கள் உன்னிப்பாக கண்காணிக்கிறோம்,” என்றது அமெரிக்கா. சீனப் பொருட்கள் இறக்குமதியை குறைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கான்பூர்-தீனதயாள் உபத்யாய நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே சிக்னல்கள் அமைப்பது தொடர்பான ரூ.476 கோடி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை அளிக்க பரிசீலனை செய்யப்படுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கு, இந்தியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படி, இந்தியாவை முன்வைத்து அமெரிக்காவின் ராஜதந்திர காய்நகர்த்தல்கள் அனைத்துமே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவை சீர்குலைத்து வருகிறது.

இதற்கிடையில், சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில், உய்குர் இன முஸ்லீம்கள் சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர். அவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்களை சீனா தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக, அமெரிக்கா உட்பட பல நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. உய்குர் முஸ்லீம்கள் அனைவரும் சீனப் பழக்க வழக்கங்களையே பின்பற்ற வேண்டும் என்று சீன அரசு கட்டாயப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக, உய்குர் முஸ்லீம்களின் ஆயிரக்கணக்கான கல்லறைகளை சீன அரசு உடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதுதொடர்பாக, செய்தி சேகரிக்க ஊடகங்களை சீன அரசு அனுமதிக்கவில்லை.

சீனாவின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான, ‘உய்குர் மனித உரிமைகள் சட்டத்தில்,’ கடந்த புதன் கிழமை அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், சீனாவில் உய்குர் முஸ்லீம்களை சிறை வைத்தல், சித்தரவதை செய்தல், தடுப்புக்காவலில் வைத்தல் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் சீன அதிகாரிகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும்.

ஏற்கனவே, சீனாவின் வூகான் நகர வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக, அமெரிக்கா நிபுணர்கள் அங்கு சென்று ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என சீனாவை அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. இந்நிலையில், உய்குர் முஸ்லீம்கள் மனித உரிமைகள் சட்டத்தில், டிரம்ப் இப்போது கையெழுத்து இட்டிருப்பதன் மூலம், சீனாவின் மேலும் ஒரு உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய – சீனா எல்லைப் பிரச்சினையில் சமாதானம் செய்துவைக்கத் தயாராக உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இதுபோன்ற வலுக்கட்டாய தலையீடுகள், இந்திய- சீன எல்லைப் பிரச்சனையை மேலும் மேலும் சிக்கலாக்கி விடுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் போர் போன்றது அல்ல இந்திய-சீனப் போர். சீனாவுடன் போர்செய்ய வேண்டுமானால். அதனுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ள வேண்டிவரும். அது அவ்வளவு எளிதல்ல. உலகத்திற்கே எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் மற்றும் பல மூலப்பொருட்களை குறைவான விலைக்கு ஏற்றுமதி செய்வது சீனாதான்.

இந்தியா – சீனா இடையே போர் ஒன்று நிகழுமானால், அது இந்தியாவை கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தும். போரும் பொருளாதார சரிவும் சேர்ந்து நம்மை படுகுழியில் தள்ளிவிடும்.

நன்றி: சதுரங்கம்.காம்

Total Page Visits: 156 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *