கிழக்கு படிப்பறிவு பெற்றது – தீபலட்சுமி

மூன்றாம் உலக நாடுகளுக்குக் கல்வியும்
சோஷலிஸக் கருத்துகளையும்
கொண்டு வந்த சோவியத் ஏடுகள்
தொகுப்பாசிரியர்: விஜய் பிரசாத்
போல்ஷிவிக் புரட்சிக்குப் பின்னர் “உலகை உலுக்கிய பத்து நாட்கள்” என்ற புகழ்பெற்ற நூலில் ஜான் ரீட் எழுதினார்: “நீண்ட காலமாய்த் தீர்க்கப்படாத எழுத்துத் தாகம் புரட்சியோடு சேர்ந்து உணர்ச்சி வெளிப்பாட்டுடன் வெடித்தது. ஸ்மால்னி கல்வி நிறுவனத்திலிருந்து மட்டும் முதல் ஆறு மாதங்களுக்கு டன் கணக்கில், வண்டி வண்டியாய் நூல்கள் பெருகி சோவியத் மண்ணை மூழ்கடித்தன. காய்ந்த மண் ஈரத்தை உறிஞ்சுவதைப் போல் பெருந்தாகம் கொண்டு மக்கள் எழுத்தையும் புத்தகங்களையும் உள்வாங்கத் தொடங்கினார்கள்.”
“The East was Read: Socialist culture in the third world” (கிழக்கு படிப்பறிவு பெற்றது: மூன்றாம் உலக நாடுகளில் சோஷலிச சிந்தனைகள்) என்ற தனது நூலின் முன்னுரையில், எழுத்தாளர் விஜய் பிரசாத், “இந்தக் கல்வி எழுச்சியானது ருஷ்ய மொழியில் மட்டுமல்லாது சோவியத் யூனியனில் இணைந்த அத்தனை நாடுகளின் தனிமொழியிலும் நிகழ்த்தப்பட்டது. பின்னர் முப்பதாண்டுகள் கடந்தும், இரு உலகப் போர்களின் நாசங்களுக்கு அப்பாலும்கூட சோவியத் நாட்டின் மக்களனைவரும் எழுதப் படிக்க அறிந்தவர்களாக இருந்தனர். இது குறிப்பிடத்தகுந்த சாதனையாகும்” என்கிறார்.
‘தி ஈஸ்ட் வாஸ் ரெட்” நூலானது சோவியத் யூனியன் நூல்களை உற்பத்தி செய்து விநியோகித்து, நுகர்வு செய்ததைப் பற்றிப் பேசுவதோடு நின்றுவிடவில்லை. 153 பக்கங்களே கொண்ட இந்தச் சிறிய நூலின் நோக்கம் மேலும் ஒரு லட்சியத்தைக் கொண்டது.
மறைந்துபோன தனித்துவம் வாய்ந்த உலகமான சோவியத் நாட்டின் புத்தகங்களுக்கு ஒரு நினைவஞ்சலி செலுத்துவது ஒரு நோக்கமென்றால், உலகம் முழுவதும் அவை ஏற்படுத்திய தாக்கத்தையும், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அவை உருவாக்கியிருந்த சோஷலிசக் கலாச்சாரத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டுவது இந்நூலின் இன்னொரு முக்கிய நோக்கமாகும்.
பிரசாத் குறிப்பிடுவது போல், “பல தலைமுறைகளாக நமது புத்தக அலமாரிகளில் சோவியத்

நாட்டின் புத்தகங்களோடு நாம் வளர்ந்தோம். நமது புத்தகம் வாங்கும் சக்தி அற்புதமான படங்களுடன் சோவியத் நாட்டில் பதிப்பிக்கப்படும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், டால்ஸ்டாயின் ஓரிரு தொகுப்புகள், மற்றும் லெனினின் கட்டுரைகள் என்பவையாகத்தான் இருந்திருக்க முடியும். புதினங்கள் முதல் கணிதத்தின் ஆரம்பப் பாடங்கள் வரை சோவியத் நாட்டின் புத்தகங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெள்ளமாய்க் குவிந்தன. அவ்வளவு புத்தகங்களைப் பதிப்பிக்கும் சக்தி சிறிதும் இல்லாத இடங்களுக்கெல்லாம் உலக இலக்கியம் என்று சொல்லக்கூடிய நூல்களையும் விலைமதிப்பற்ற அறிவுக்கொடையையும் கொண்டு சேர்த்தது சோவியத் யூனியன்.”
சோவியத் வாழ்வு (Soviet life) என்ற பத்திரிக்கை சிறுவனாக இருந்தபோது தன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து, இந்திய எழுத்தாளர் பங்கஜ் மிஷ்ரா கூறுகிறார்: “தபாலில் ஒரு புது இதழ் வந்ததுமே அதன் வழவழப்பான பக்கங்களைத் தடவிப் பார்ப்பதும், அதன் வாசத்தை முகர்ந்து பார்ப்பதுமாக இருப்பேன். ‘இளைய முன்னோடிகள்’ என்ற சிறுவர்களுக்கான கம்யூனிச அமைப்பு குறித்த பக்கங்களில் அதிகநேரம் செலவிடுவேன்; பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் இளம் தோழர்களுடன் சேர்ந்து என்றாவது ஒன்றாகப் பயணிக்கும் கனவைச் சுமந்தபடி.”
மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளம் வாசகர்களுக்கு சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய இலக்கிய நூல்கள், அவர்களது எல்லைக்கு அப்பாற்பட்ட உலகத்தைக் காணக்கிடைத்த எளிய, விலை குறைந்த சாளரங்களாகவே திகழ்ந்தன.
சோவியத் நாட்டில் உற்பத்தியான நூல்களையும் பத்திரிகைகளையும் நாளிதழ்களையும் மட்டுமல்ல, வேறு சில முக்கியமான பதிப்புக்களையும் நினைவுகூர்கிறார் மிஷ்ரா.
“நமது உள்ளூர்களில் பதிப்பகங்களும் புத்தகக் கடைகளும் ஏற்படுத்திக் கொள்ளவும் சோவியத் யூனியன் ஏராளமாக நிதியுதவி செய்தது. வளரும் நாடுகளுக்கான முக்கிய வளர்ச்சிப் பணியாக இதைச் செயல்படுத்தியது.” – கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசத்தின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட பேரிழப்புகளில் எழுத்தறிவுக்கும், கல்விக்கும், புரட்சிக்கும் சோவியத் அளித்து வந்த பெருங்கொடை நின்றுபோனதும் ஒன்றாகும்.
Post 3 நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ருஷ்ய மொழி துணைப் பேராசிரியரான ராசன் ஜாகலோவ் எழுதிய மற்றொரு கட்டுரை மாஸ்கோவின் ப்ராக்ரஸ் பப்ளிஷர்ஸ் பதிப்பகம் குறித்து சுருக்கமாகப் பேசுகிறது. ”பதிப்பக வரலாற்றிலேயே ப்ராக்ரஸ் பதிப்பகத்தைப் போல் பல்வேறு மொழிகளில் பதிப்பிக்கும் லட்சியம் வாய்ந்த பதிப்பகம் வேறில்லை,” என்கிறார் ஜாகலோவ்.
“தி ஈஸ்ட் வாஸ் ரெட்” நூலின் வாயிலாக, சோவியத் நாட்டின் உள்நாட்டு வாசிப்புப் புரட்சியையும், ப்ராக்ரஸ் பதிப்பகத்தையும் குறித்து மட்டுமல்ல, சோவியத் யூனியனில் அல்லாத அயல் மொழிகளில் புத்தகங்கள் பதிப்பித்த முதல் சோவியத் பதிப்பகமான “அந்நிய மொழிகள் பதிப்பகம்” (Foreign Language Publishing House) குறித்தும் பல தகவல்களை அறியலாம்.
எல்லாவற்றையும்விட முக்கியமாக, உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆர்வம்மிக்க வாசகர்களுக்கு எவ்வளவு விலைக்குறைவாக, உயர்ந்த தரத்தில் புத்தகங்களும் பத்திரிகைகளும் கிடைக்கும்படி சோவியத் யூனியன் செய்துவந்ததுள்ளது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
இன்னொரு கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போல் “ஃபாரின்” (அந்நிய நாட்டைச் சேர்ந்த எதுவும்) என்றாலே நமக்கு எட்டாத பெருந்தொலைவில் இருப்பது என்றும், ஆகவே மிகவும் மகிமை வாய்ந்தது என்றும் நம்பப்பட்ட காலகட்டம் அது. ஆனால் இந்தப் புத்தகங்கள் புவியியல், அரசியல், சமூக, உணர்வு சார்ந்த பல்வேறு எல்லைகளைக் கடந்து டண்ட்ரா பனிப்பாலைகளை நம் வீட்டுக்குள் கொண்டுவந்து சேர்த்தன. ”
தி ஈஸ்ட் வாஸ் ரெட் புத்தகங்களை மட்டும் சிலாகிக்கவில்லை. விடுதலையை நோக்கி கலாச்சாரங்களை எழுச்சிகொள்ளச் செய்யும் பெரும் இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் பேசுகிறது.
1968-இல் ஹவானாவில் நடந்த கலாச்சார மாநாடு குறித்த மற்றொரு கட்டுரையில், ‘கியூபாவுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மூன்றாம் உலக நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் நிகழ்வு’ என்று குறிப்பிடப்படுகிறது. சோஷலிச சினிமா குறித்தும் கவிதைகள் குறித்தும் சில கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
சிறியதாக இருந்தாலும் தி ஈஸ்ட் வாஸ் ரெட் புத்தகம் குறிப்பிடத்தகுந்ததொரு சாதனையாகும். தனித்தனியாகப் பலர் எழுதிய கட்டுரைகள் ஒன்றாகப் பார்க்கும்போது தனித்துவமானதொரு நினைவுலகத்துக்கு இட்டுச் செல்கின்றன;
ஆனால் அது மட்டுமல்ல;
பல்வேறு நாடுகளுக்கும் தலைமுறைகளுக்கும் இடையே சகோதரத்துவத்தையும் இணக்கத்தையும் ஏற்படுத்தி, அதன் மூலம் வாசிப்பறிவு மிகுந்த, கல்வியில் உயர்ந்த, சோஷலிச நாடுகளின் சமூகக் கூட்டமைப்பை உருவாக்கும் மகத்தான நோக்கத்தோடு செயல்பட்ட சோவியத் யூனியனின் மாபெரும் எழுத்து இயக்கத்தையும், அது மானுட சக்தியின் மீது கொண்டிருந்த மாபெரும் நம்பிக்கையைக் குறித்தும் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
சோவியத் வீழ்ச்சிக்குப் பின் அடியோடு மறக்கடிக்கப்பட்டுவிட்ட, பாதியில் நின்றுபோய்விட்ட மகத்தான இயக்கம் சோவியத்தின் புத்தகப் புரட்சி.
’தி ஈஸ்ட் வாஸ் ரெட்’ மீண்டும் வேறொரு காலத்தில், இடத்தில் இப்படியொரு இயக்கம் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது. அதன்மூலம் எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் விதைக்கிறது. நிச்சயம் படிக்க வேண்டிய நூல்.
தி ஈஸ்ட் வாஸ் ரெட்: மூன்றாம் உலகத்தில் சோஷலிசக் கலாசாரம்
தொகுப்பு: விஜய் பிரசாத்
லெஃப்ட் வேர்ல்டு புக்ஸ்
https://mayday.leftword.com/catalog/product/view/id/21395