திரைவானில் உச்சியில் மிளிர்ந்த தாரகைகள்- பா.ஜீவசுந்தரி

திரைப்படங்கள் இன்றுவரை உலகளாவிய அளவில்
பெரும்பாலும் கதாநாயக பிம்பத்திலேயே இருக்கின்றன.
நம் இந்திய ஒன்றிய மொழித் திரைப்படங்கள்
முழுக்க முழுக்க கதாநாயக பிம்பங்கள் மட்டுமே 99.9% உள்ளன.

இந்த உலகின் மானுடச் சமூகத்தின் தொழில்கள், கலைகள், வளர்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் என அனைத்தும் 98% ஆண்கள் மயமாமாக மட்டுமே மாற்றமடையத் துவங்கி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தக் காலக்கட்டத்திற்கு பிறகு, பெரும் போராட்டங்கள் நிகழ, கடந்த 5 நூற்றாண்டுகளில் ஓரளவுக்கேனும் அனைத்திலும் திடமான நம்பிக்கைகளாக தங்களை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது பெண்கள் சமூகம். அதற்கான அவர்களது போராட்ட வாழ்வுகள் இவைதான் என்றெல்லாம் வரையறை செய்துவிட முடியாது. அத்தனைப் பெரிய போராட்டங்கள் அவை.

அம்மாதிரியான போராட்டங்கள் அனைத்திற்கும் ஒரே புள்ளிதான் என்றாலும் போராட்ட வடிவங்கள் ஒவ்வொரு துறைகளுக்கும் ஏற்றார்போல் பல மாறுபாடுகள் மற்றும் கால மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சி என அனைத்தையும் கடந்துதான் பயணிக்கிறது.

அப்படியான பயணத்தில் உலகத் திரைப்பட வரிசைகளும் ஒன்றுதான். ஒளிப்படம் துவங்கிய காலம் தொட்டு ஒவ்வொரு பரிணாமத்திலும் மறக்கடிக்கப்படுபவர்களின் பட்டியலில் பெண்களின் பட்டியல்தான் பெரியது.

உதாரணமாக நாம் கொண்டாடுகிறோம் சார்லி சாப்ளினை.

உண்மையில் உலகம் போற்றும் மகத்தான கலைஞன். அத்தனை இன்னல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், வறுமைக்கும் ஆளான கலைஞன். ஆனால் அவை அனைத்திற்கும் எதிராக திடமான குரல் கொடுத்த கலைஞனும்கூட. அதனால்தான் நாம் கொண்டாடுகிறோம். ஆனால் அந்தக் கலைஞனின் திரைவாழ்வில், கலை வடிவத்தில் அவரது இணையாக வந்து, அந்தப் படைப்பிற்கு பக்கப் பலமாக இருந்து வந்த பெண்களான எட்னா புர்வின்ஸ், அலிஸ் ஹோவெல், மேரி டிரெஸ்லர், சார்லெட் மினேயு, கேரி கிளார் வேர்ட், மார்ட்னா கோல்டன், பிளாரன்ஸ் லி, வெர்ஜினியா செரில், மர்லின் நாஷ், சோபியா லோரன், ஜெர்லடியின் சாப்ளின் போன்ற பெண்கள் பற்றியத் தரவுகளோ புத்தகங்களோ நம்மிடம் எந்த எண்ணிக்கையில் இருக்கிறது. இணையமும் இல்லை என்றால் இந்தப் பெயர் பட்டியல்கூட கிடையாது.

உலகம் கொண்டாடிய நிலையில் இருக்கும் திரைக் கலைஞனின் இணை மற்றும் துணைப் பாத்திரங்கள் ஏற்றவர்களுக்கே இதான் நிலை என்னும்போது,  முழு பார்ப்பனிய சிந்தனை மற்றும் சனாதனக் கொள்கைகளை இன்றுவரை தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த பெண்களுக்கான தரவுகள் என்னவாக இருக்கும், இருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் சிந்திக்க வேண்டிய அவசியமல்ல.

பா.ஜீவசுந்தரி

ஆனால் அந்நிலையை உடைத்தெறிந்து நாம் ரசித்து மறந்துபோன திரையுலகப் பெண் ஆளுமைகளை பற்றிய பெரும் தகவல்கள் அடங்கிய புத்தகம்தான் ஜீவசுந்தரி பாலனின் “ரசிகை பார்வை” புத்தகம்.

கடந்த பிப்ரவரி மாதம் கட்டாய ஓய்வின்போதே படித்து முடித்திருந்த புத்தகங்களில் ஒன்றுதான் இது. என்றாலும், அப்போது துண்டித்து வைக்கப்பட்டிருந்த இணையத்தினால் எங்கும் இதனைப் பற்றிப் பதிய முடியவில்லை. இப்புத்தகம் குறித்து இன்னும் நான் எனது பார்வையை எழுதவே இல்லையே எனத் தோன்றியது.  அதனால் எழுதத் துவங்கியதுதான்.

 

அப்படி என்னதான் இருக்கிறது இப்புத்தகத்தில், மேலே சொல்லியிருப்பது போல் பல பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்த கலைஞர்களின் வாழ்வு முதல் போராட்டம் வரை அனைத்தும் உள்ளது.

குறிப்பாக சுதந்திர இந்திய ஒன்றிய அரசுக்கு முன்பாக இருக்கும் பெண் திரைக்கலைஞர்கள் துவங்கி கிட்டத்தட்ட ரம்பா காலம் வரையிலான பெரும்பாலான பெண் கலைஞர்களின் வாழ்வு இருக்கிறது. போராட்டம் இருக்கிறது. அவர்கள் எப்படி இந்தத் துறையில் வந்தார்கள் எனும் தகவல்கள் இருக்கிறது. இத்துறையில் எப்படி போராடினர் என்னும் வாழ்வு உள்ளது.

இதில் இன்றுவரை நம்மால் பிரபலமாக பார்க்கப்பட்டு வரும் எம்.எஸ். சுப்புலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், என்.எஸ்.கே. மதுரம், அங்கமுத்து, அஞ்சலி தேவி, மனோரமா (புத்தகத்தை தற்போது பார்த்தால் பட்டியல் நீளும்.) போன்றவர்களின் வாழ்வும் போராட்டமும் எத்தனை சுவாரசியனானது மற்றும் அரவணைக்கும் தன்மை கொண்டது என்றெல்லாம் உணரமுடிந்தது. அதிலும் குறிப்பாக அங்கமுத்து, அஞ்சலிதேவி, என்.எஸ்.கே மதுரம் போன்றவர்களது வாழ்வு. இவர்களை எல்லாம் நிச்சயம் 1980கள் வரை பிறந்தவர்களுக்கு தெரிந்து இருக்கும்.

அதேநேரம் அவர்கள்கூட கவனிக்க முடியாத அல்லது கவனித்திராத பட்டியல் ஒன்று இருக்கிறது. அதிலும் மிக சுவாரசியங்களின் பட்டியல் ஒன்றும் இருக்கிறது. அவை டி.பி.ராஜலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.வரலட்சுமி, கண்ணாம்பா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, டி.ஏ.மதுரம், எம்.வி.ராஜம்மா, வி.என்.ஜானகி, குமாரி ருக்மணி, வசுந்தரா வி,கே.ஆர்.செல்வம், யூ.ஆர்.ஜீவரத்தினம், அஸ்வத்தம்மா, மாதூரி தேவி, சி.டி.ராஜகாந்தம், காந்திமதி, எம்.எஸ்.திரெளபதி, குமாரி கமலா, என்.சி.வசந்த கோகிலம், டி.வி.குமுதினி, புஷ்பவல்லி என நீள்கிறது. (இப்பட்டியல் கூட முன்னுரையில் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் குறிப்பிட்டப் பெயர்கள் என்பதால் ஓரளவு நினைவில் இருப்பவை. புத்தகம் கையில் இருந்தால் இன்னும்கூட நினைவு கூற முடியும்).

இத்தனைப் பெண் திரைக் கலைஞர்களின் வாழ்வையும், பயணத்தையும், போராட்டத்தையும் பதிவு செய்திருப்பது என்பது சாதாரன ஒன்றே அல்ல. அசாத்தியமான உழைப்பை உறிஞ்சக் கூடியது. அப்படி கடும் உழைப்பை செலுத்தி நமக்கான வாழ்நாள் பொக்கிச சேகரிப்பை கொடுத்திருக்கும் ஜீவசுந்தரி பாலம் அம்மா அவர்களின் மிகப் பெரியப் பாராட்டை பெறக்கூடிய ஒன்று.

வெறுமனே நாம் திரைப்படங்கள் காண்கிறோம். அது இன்றுவரை உலகளாவிய அளவில் பெரும்பாலும் கதாநாயக பிம்பத்திலேயே இருக்கின்றன. நம் இந்திய ஒன்றிய மொழித் திரைப்படங்கள் பற்றி சொல்லவே வேண்டாம், முழுக்க முழுக்க கதாநாயக பிம்பங்கள் மட்டுமே 99.9%. அவர்களுக்கான ரசிகக் கட்டமைப்பும்தான் இங்கு உருவாக்கப்படுகிறது.

ஆனால் அந்தக் கட்டமைப்புகள் அனைத்துடன் போராடி முத்திரை பதிக்கும் பெண் திரைக் கலைஞர்கள் பற்றிய பிம்பமும் ரசனையும் இங்கு எவ்வாறாக கற்பிக்கப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். அப்படி நமக்கு உணர்த்தும் புத்தகமாக கண்டிப்பாக இந்த “ரசிகை பார்வை” புத்தகம் இருக்கும்.

திரைப்படங்கள் ரசிக்கும் அனைவரும் ஒருமுறையாவது வாசிக்க வேண்டியப் புத்தகமும் கூட.

– இனியன்

Total Page Visits: 137 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *