தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை: அரசுக்கு நெருக்கடி தரும் வேதாந்தா

வேதாந்தா நிறுவனத்தின் அதிபர் அனில் அகர்வால்,
“சுயசார்பு-இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக
எங்களுடைய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க,
பிரதமர் மோடி உதவ வேண்டும்” என
வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில், உயிரிழந்த 13 பேருக்கான இரண்டாம் ஆண்டு நினைவு நாளை, கடந்த மார்ச் 22-ஆம் தேதி தமிழகம் நினைவுகூர்ந்தது. கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், இந்த நினைவு நாளுக்கான பொது நிகழ்ச்சிகள் எதுவும் பெரிய அளவில் நடைபெறவில்லை. அதே சமயம், சமூக வலைத்தளங்களில் அந்தப் போராட்ட நினைவுகள் அதிகமாக பகிரப்பட்டன.

இன்னொரு பக்கம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் வேதாந்தா நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் அதிபர் அனில் அகர்வால், “சுயசார்பு-இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக எங்களுடைய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, பிரதமர் மோடி உதவ வேண்டும்” என வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆலை மூடப்பட்டிருப்பதால், இந்தியாவின் செம்பு இறக்குமதி பெருமளவு அதிகரித்து இருப்பதாகவும், ஆலையின் இயந்திரங்கள் துருப்பிடித்து, வளாகங்கள் தூசுப் படிந்து, ஆலை நாசமடைந்து வருவதாகவும், இந்த ஆலை திறக்கப்படாவிட்டால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் எனவும், இதனால், இந்தியா பலவகையிலும் பாதிக்கப்படும், சீனாவுக்கு செம்பு ஏற்றுமதி செய்து பாகிஸ்தான் மிகப்பெரிய லாபம் பார்க்கும் எனவும், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுவது போல, அனில் அகர்வால் தெரிவித்துள்ளர்.

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால், தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. மக்கள் புற்றுநோய், சுவாசக்கோளாறு போன்ற நோய்களால் அவதிப்பட்டனர். அதனால், ஆலையை மூடவேண்டும் என, கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர். அதற்காக வைகோ உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திவந்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியதும், ஆத்திரமடைந்த மக்கள் தங்களுடைய போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இந்த தொடர் போராட்டத்தின் 100-வது நாள் அன்று, போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது, அதில் 15 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதனால், போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி தீவிரமடைந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில்தான், தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.

இந்நிலையில், இப்போது சுயசார்பு-இந்தியா என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மத்திய அரசுக்கு வேதாந்தா நிறுவனம் நெருக்கடி தருகிறது.

இந்தக் கொரோனா பரவல் காலத்தில், மத்திய அரசு பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்திருக்கிறது. ராணுவ ஆயுத உற்பத்தியில்கூட 70 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதித்து இருக்கிறது. இந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடை தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களைக்கூட, இந்தியா சீனாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. மத்திய, மாநில அரசுகள் தினம் தினம், சர்வதேச நாடுகளை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தபடியே இருக்கின்றன. இதில், சுயச்சார்பு-இந்தியா என்பதெல்லாம் ஒரு கண்கட்டு வித்தை.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய குரு திரைப்படம், தீருபாய் அம்பானியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என சொல்லப்பட்டது. அந்தப் படத்தில் தொழிலதிபரான கதாநாயகன், நாட்டின் பிரதமரை சந்தித்து, தான் தொழில் செய்வதை தடுத்தால், அது இந்த நாட்டையே பாதிக்கும் என மிரட்டுவது போல ஒரு கட்சி உள்ளது. அதை நினைவூட்டுகிறது, வேதாந்தா நிறுவன அதிபர் அனில் அகர்வாலின் எச்சரிக்கை.

கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி, மத்திய பிஜேபி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வாரிவழங்கியும், மக்கள் விரோத திட்டங்களை அவசர அவசரமாக அமல்படுத்தியும் வருகிறது. அதுபோல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் திறக்கப்படுமோ என்ற அச்சம் எழுகிறது.

– கொம்புக்காரன்

Total Page Visits: 141 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *