அமெரிக்காவை அதிரவைத்த போராட்டங்கள் – சுவி

“அடங்கவில்லை என்றால் சுடப்படுவீர்கள்”
என்று ட்வீட் செய்திருந்தார் டிரம்ப்.
சமூக விதிமுறைகளுக்குப் புறம்பானது என
டிவிட்டர் நிர்வாகமே அதை நீக்கிவிட்டது.

உலகையே கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார நிறுவனத்தையும் சீனாவையும் மிரட்டிக் கொண்டிருந்தார்.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் மின்னியாபொலிஸ் நகரில் ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை’ என்று கதறிய ஜார்ஜ் பெர்ரி ப்ளாயிட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரின் குரல் அமெரிக்காவையே புரட்டிப்போட்டது.

போராட்டக்காரர்களுக்கு பயந்து வெள்ளைமாளிகையின் பதுங்கு குழிக்குள் போய் ஒளிந்துகொண்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

என்ன நடக்கிறது அமெரிக்காவில்…

உலகில் தனிநபர் சுதந்திரம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்று என கருதப்படும் நாடு அமெரிக்கா,

வெளியிலிருந்து பார்க்கும்போது பளபளப்பாகத் தெரியும் அமெரிக்காவின் இருட்டுத் தெருக்களில் இன்னமும் நீக்ரோக்கள் அல்லது கறுப்பின மக்கள் அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என பலவாறு அழைக்கப்படும் கறுப்பின அமெரிக்கர்கள், நிறவெறியோடு நடத்தப்படுவது அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. அதன் காரணமாக இன்று அமெரிக்கா எரிந்து கொண்டிருக்கிறது. வடக்கிலிருந்து தெற்கு வரை கிழக்கிலிருந்து மேற்கு வரை அதன் 50 மாகாணங்களும், வெள்ளையினத்தவர்களும், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும், லத்தினோக்களும் ஆசியர்களும் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களது வரலாற்றில் அடிக்கடி நிகழ்கிற ஒரு விஷயம்தான்.

இப்போது பிளாய்ட்.

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சீற்றம் இது.

கடந்த மே மாதம் 25-ம் தேதி 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்டு Cup Foods எனும்  கடையில் சிகரெட் வாங்கச் சென்றுள்ளார். அவர் கொடுத்த 20 டாலர் நோட்டு போலியானது என அந்தக் கடையின் ஊழியர் காவல்துறைக்கு ஃபோன் செய்து புகார் கொடுக்கிறார். மேலும் அவர், ஜார்ஜ் குடித்திருப்பதாகவும், சுய-கட்டுப்பாட்டில் இல்லை எனவும்  தெரிவிக்கிறார்.

அடுத்த ஏழு நிமிடங்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் அங்கே வருகிறார்கள். காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான தாமஸ் லென் தனது துப்பாக்கியை எடுத்து ஃப்ளாயிடை நோக்கி குறிவைத்து மிரட்டுகிறார். காரை விட்டு இறங்க மறுத்த அவருடைய கையை மடக்கி விலங்கிட்டது போலீஸ். பயமும், ஒருவித எரிச்சலும் அடைந்த நிலையில் கீழே விழுகிறார் ஜார்ஜ்.

அவரை  போலீஸ் வாகனத்தில் ஏற்றும் முயற்சியில் டெரெக் செவின் எனும் அதிகாரியும் களமிறங்குகிறார். அப்போது கீழே விழுந்த ஃபிளாய்ட் சந்தித்த மோசமான நிமிடங்களை பலர் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்கின்றனர். 44 வயதாகும் டெரெக் செவின் தனது இடது கால் முட்டியை ஜார்ஜின் தலைக்கும் கழுத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அழுத்துகிறார். “I can’t breathe,”  “please, please, please,” என ஜார்ஜ் அலறுகிறார். எட்டு நிமிடங்கள் 46 நொடிகள் தனது காலை வைத்து அழுத்திக் கொண்டிருக்கிறார் செவின். ஆறு நிமிடங்கள் முடிந்தபோதே ஜார்ஜ் மூர்ச்சையாகிவிட்டார். அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்பது வீடியோவில் தெரிகிறது. அங்கே சென்றுகொண்டிருந்தவர்கள் ஜார்ஜின் நாடித்துடிப்பை சோதிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்துகிறார்கள். அவர்களை எல்லாம் அப்பால் விலகிப் போகுமாறு அந்த அதிகாரி விரட்டுகிறார்.

ஒரு அதிகாரி ஃபிளாய்டின் வலது மணிக்கட்டில்  நாடித்துடிப்பை சோதனை செய்ய, அதன் பின்னர்தான் செவின் தனது முட்டியை அவர் ஜார்ஜின் கழுத்தில் இருந்து எடுத்தார். ஜார்ஜை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்கிறார்கள், ஒரு மணி நேரத்துக்குப் பின் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க காவல்துறை அதிகாரி ஜார்ஜின் கழுத்தில் கால் முட்டியால் நெரிப்பது வீடியோவில் பதிவாகி, இணையத்தளங்களில் வெளியாகி கொரோனாவை மிஞ்சக்கூடிய காட்டுத்தீயாக பரவுகிறது.

ஜார்ஜின் மரணத்திற்க்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் போராட்டம் மேலும் வலுவடைந்தது. அதுவே, அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் பரவிப்படர காரணமாகவும் அமைந்தது.

நியூயார்க், பிலடெல்பியா, டல்லாஸ், லாஸ்வில்லே, லாஸ் ஏஞ்சலிஸ் என அனைத்து அமெரிக்க மாகாணங்களிலும் போராட்டம் நடக்கிறது.

விதவிதமான போராட்ட வடிவங்களை மக்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். I can’t breath . . . என்னால் மூச்சுவிட முடியவில்லை . . . மூச்சுத்திணறுகிறது என கோஷமிடுகின்றனர். Black lives matter (கறுப்பினத்தவர் உயிரும் முக்கியம்தான்) என்ற கோஷங்களும் பதாகைகளும் விண்ணை முட்டுகின்றன.

இதுவே எதிர்ப்பாளர்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்று மண்டியிட்டு குரல் கொடுத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்கின்றனர். வெள்ளையினத்தவர் மட்டுமல்லாது ஆசியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் என எல்லா இனத்தவரும் இணைந்து போராடுகின்றனர். சில இடங்களில் போலீசாரும் பங்கெடுத்து அரசுக்கு எதிராக மண்டியிட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், எல்லா இடங்களிலும் அவ்வாறு நடகவில்லை. போராட்டக்காரர்களின் மீது தடியடியும் கண்ணிர்ப் புகைக்குண்டு வீச்சும் ரப்பர் குண்டு துப்பாக்கிச் சூடும் நடத்தப்படுகிறது. பலர் காயமடைகின்றானர்.

பல்வேறு நகரங்களில் நடக்கும் எதிர்ப்புப் பேரணிகள் கலவரங்களாக மாறுகின்றன, பல கார்கள் எரிக்கப்படுகின்றன. போலீஸ் நிலையங்கள் முற்றுகையிடப்படுகின்றன. மே-29 அன்று, மின்னியெபொலீஸ் காவல் நிலையம் போராட்டக்காரர்களால் தீவைத்து கொளுத்தப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஓர் இளைஞர் பலியானார்.

‘மாநில கவர்னர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், போராட்டங்களை அடக்கியாக வேண்டும், இல்லை என்றால் தேசியப் பாதுகாப்புப் படை அனுப்பி வைக்கப்படும்’ என டிரம்ப் எச்சரித்தார்.

இதன்பிறகு பல்வேறு நகரங்களில் இருக்கும் டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் டவர் கட்டிடங்களின் முன்பு இத்தகைய ஆவேசப் போராட்டங்கள் உச்ச கட்டத்தை எட்டின.

‘ராணுவத்தைக் கொண்டு போராட்டங்களை அடக்குவேன்’ என்ற டிரம்பின் அதிகாரத் தோரணைமிக்க குரலுக்கு பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின.

அமெரிக்க ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெனரல் மார்க் மில்லி அதிபர் டிரம்பின் ராணுவ தாக்குதல் முடிவைத் தொடர்ந்து, முக்கியமான உத்தரவு ஒன்றை தனது படை வீரர்களுக்கு பிறப்பித்து இருக்கிறார்:

“அமெரிக்க மண்ணில் அமெரிக்க மக்களுக்கு எதிராக ராணுவத்தை களம் இறக்கக் கூடாது என்ற சட்டத்தின்படி, போராடுகின்ற அமெரிக்க மக்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தை களமிறக்க அனுமதிக்கமாட்டோம்.

நாம் அமெரிக்காவின் அரசியல் சட்டத்திற்கும், இறையாண்மைக்கும்தான் கட்டுப்பட வேண்டும். அமெரிக்காவில் எல்லா ஆண்களும் பெண்களும் சமம். அவர்கள் என்ன மதம், நிறம், மொழி, இனமாக இருந்தாலும் சரி, அவர்கள் எல்லோரும் சமமானவர்கள்.

நாம் ராணுவத்தில் சேர்ந்தபோது அமெரிக்காவின் அரசியல் சாசனத்தினை காப்பாற்றுவோம் என்றுதான் சத்தியம் செய்தோமே தவிர, ஜனாதிபதி டிரம்பின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு, அவரைக் காப்பாற்றுவோம் என்று சத்தியம் செய்யவில்லை,” எனவும் கோபமாக தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்ப்புகள் இப்போது ஐரோப்பிய நாடுகளிலும் மற்ற உலக நாடுகளிலும் மெதுவாகப் பரவத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கத் தூதரகங்கள் முன்பும் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பினை காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கோபமடைந்து, “அடங்கவில்லை என்றால் சுடப்படுவீர்கள்” என்று ட்வீட் செய்திருந்தார் டிரம்ப். இந்த ட்வீட்டை, சமூக விதிமுறைகளுக்குப் புறம்பானது என டிவிட்டர் நிர்வாகமே நீக்கிவிட்டது.

அமெரிக்க காவல்துறை தலைவர், “டிரம்ப் பேசாமலே இருந்தால் நல்லது”, என அவரது வாயை மூடிக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறார்.

உலகின் தலைச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் மைக்கேல் ஜோர்டனும், டைகர் வுட்ஸும் “எங்களுக்கு கிடைத்ததெல்லாம் போதும்,” என வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

போராட்டங்களை அடக்க அடக்க அது அமெரிக்கா முழுக்க பரவி வருகின்றது. டிரம்ப் அரசுக்கு இது மாபெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

ANTIFA என்ற அமைப்பு இந்தப் போராட்டங்களுக்கு பின்னணியில் இருப்பதாகவும், அந்த அமைப்பைத் தீவிரவாத இயக்கமாக அறிவித்து தடைசெய்யப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால், ANTIFA  ஒரு இயக்கமாக செயல்படவில்லை தேவையானபோது அங்கு கூடுபவர்களே அமைப்பாக செயல்படுவார்கள். அதற்கென தலைவர், பொறுப்பாளர்கள் யாரும் கிடையாது. சொல்லப்போனால் அதற்கு அலுவலகமே கிடையாது.

அமெரிக்கவின் மொத்த ஜனத்தொகையில் 13 சதவீதம் மக்கள் ஆப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கறுப்பின-அமெரிக்கர்கள். ஆனால், அமெரிக்கா முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையில் அவர்கள் 38 சதவீதம் உள்ளனர்.

அமெரிக்கா முழுவதிலுமே வீடற்றவர்கள், வேலையற்றவர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள், மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கறுப்பின மக்கள்தான்.

இன்றைக்கு கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களும் கறுப்பின மக்களே ஆவர். 21 மாகாணங்களில் நடந்துள்ள கொரோனா மரணங்களின் 50 சதவீதம் மரணங்களில் கறுப்பின மக்களே இறந்துள்ளனர்.

அவர்களுடன் இணைந்து போராடும் லத்தீன் அமெரிக்கர்கள், ஆசியர்கள், வெள்ளையின மக்கள் எல்லோரும் மோசமான பொருளாதார நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வேலை பறிபோயுள்ளது. உணவிற்காக காத்திருக்கின்றனர். மருத்துவ காப்பீடு இல்லாமல் அவதியுருகின்றனர். அவர்கள் எல்லோரும் அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக போராடுகின்றனர். பெரும் காட்டுத்தீ பற்றிப்படர காய்ந்த சருகுகள் தேவை. ஜார்ஜ் போன்றே பல கறுப்பினத்தவர்கள் காவல்துறையினர் வன்முறையால் உயிரிழந்துள்ளனர்.

2014 இல், எரிக் கார்னர் என்ற கறுப்பினத்தவர் ஒருவரை நியூயார்க் காவல் அதிகாரி கழுத்தை நெறித்துக் கொன்றார். அவரும் இறப்பதற்கு முன்பு “என்னால் சுவாசிக்க முடியவில்லை,” என்று ஜார்ஜ் கூறியது போலவே 11 முறை கூறியுள்ளார். இரக்கமற்ற முறையில் எரிக் கார்னரை படுகொலை செய்தது நியூயார்க் போலீஸ். இவரும் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை.

கொல்லப்படும் போது தனது மகனுக்கும் பிளாய்ட் வயதுதான் என்றும், தனது மகன் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட்டதற்கு இணையானது பிளாய்டின் படுகொலை என்கிறார் எரிக் கார்னரின் தாய் க்வென்கர்.

2016 இல் ஆல்டன் ஸ்டெர்லிங் என்ற கறுப்பினத்தவர் தனக்கு சொந்தமான சி.டி.கள் விற்கும் கடைக்கு வெளியே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடமும் கொலைகார ஆயுதங்கள் ஏதுமில்லை.

2013 ஆம் ஆண்டு கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் காவல்துறை அதிகாரி ஒருவர் விடுதலைப் பெற்றதை எதிர்த்து துவங்கப்பட்ட ”பிளாக்ஸ் லைவ்ஸ் மேட்டர்” என்ற இயக்கத்தின் கோஷமே இன்று எல்லோராலும் முழங்கப்படுகிறது.

“கலகம் என்பது செவிசாய்க்கப்படாதவர்களின் மொழி” என்கிறார் மார்ட்டின் லூதர் கிங். ஒரு கறுப்பின இளைஞன் கொல்லப்பட்டதினால் மட்டும் இந்தப் போராட்டம் வெடிக்கவில்லை.

தற்போது நிகழ்ந்துவரும் அனைத்து வகையான போராட்டங்களும் கறுப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க அரசின் எதேச்சதிகார போக்கையும் காவல்துறையின் அத்துமீறல்களையும் கண்டிக்கும் விதமாகவே நடந்து வருகின்றன.

2013 முதல் 2019 வரை 7666 கறுப்பின மக்கள் அமெரிக்கா முழுக்க காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மேப்பிங் போலீஸ் வயலன்ஸ் என்ற அமைப்பு கூறுகிறது. சரியான காரணங்கள் ஏதுமின்றி நடத்தப்பட்ட இந்தப் படுகொலைகளுக்காக யாரும் இதுவரையில் தண்டிக்கப்படவும் இல்லை. 99 சதவீத  படுகொலைகளில் காவல்துறையினரின் மீது இதுவரை வழக்குகளே பதியப்படவில்லை.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 13 சதவீதம் உள்ள  கறுப்பின மக்கள், வெள்ளை இனத்தவரைவிட இரண்டு மடங்கு அதிகம் கொல்லப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 23 லட்சம் சிறைவாசிகளில் கணிசமானோர் கறுப்பினத்தவர்.

2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் கறுப்பின திரைக்கலைஞர்கள் அனைவரும் ஆஸ்கர் விருதை புறக்கணித்த சம்பவம் அமெரிக்க நிறவெறியின் வரலாற்றை சொல்லும்.

அமெரிக்க வரலாறு என்பது முழுவதும் பூர்வகுடி மக்களுக்கு, கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளின் வரலாறு என்றே வரையறுக்கலாம். அது கொலம்பஸ் அமெரிக்காவை வந்தடைந்ததில் இருந்தே துவங்குகிறது. அப்போகலிப்டோ படத்தின் முடிவில் வரும் காட்சிகளைப் போல.

பின்னர் பருத்தி விவசாயத்தில் லாபம் பார்க்க, வேலையாட்களின் தேவைக்காக ஆப்பிரிக்கர்களை கடத்தி வந்து, அவர்களை அடிமைகளாக அமெரிக்க பண்ணைகளில் கடும் உழைப்பில் ஈடுபட வைத்து, அவர்களின் வியர்வையில் பெரும் நகரங்களை உருவாக்கியதில் அது தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது.

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடக்குப் பகுதி அமெரிக்கா இன வேற்றுமைகளை அகற்றவும், தெற்குப் பகுதி அமெரிக்கா அடிமை முறையை ஆதரித்தும் உள்நாட்டு போரில் ஈடுபட்டபோது, ஆப்ரகாம் லிங்கன் தலைமையில் வடக்குப் பகுதி பெருவெற்றி பெற்று, நிற வேற்றுமைகளை சட்டப்படி அகற்றிய வரலாறு அங்கிள் டாம்ஸ் கேபின் நாவலைப் போல, ஜாங்கோ அன்செயிண்டு படத்தில் உள்ளது போல ரத்தத்தில் எழுதப்பட்ட போராட்டங்களின் வரலாறுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில், முதல் இரண்டு உலகப்போர் காலங்களில் தொடர்ந்த உள்நாட்டு கலகங்களின் வழியாக, அவர்களின் உரிமைக்குரல் வீறுகொண்டு எழுந்தது.

1960-களில் மால்கம் எக்ஸ் தலைமையில் நடந்த கறுப்பின மக்களின் சிவில் உரிமை போராட்டங்களில், 1970-களில்  கருஞ்சிறுத்தைகளின் எழுச்சியில் அந்தப் போராட்டம் உலக அரங்கை எட்டியது.

அமெரிக்க நிறவெறியின் வரலாற்றினை, இரண்டு லட்சம் மக்களைத் திரட்டி அறைகூவல் விடுத்த மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற, “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்ற கவிதையே சொல்லிவிடும்.

1960-ல் விடுதிகளுக்குச் சென்ற கறுப்பின இளைஞர்கள் ஒரு கப் காபி வேண்டும் என கேட்டு உள்ளிருக்கும் போராட்டத்தை ஆரம்பித்தனர். அது இரண்டு வாரங்களில் நாடு முழுவதும் பரவியது. எல்லா இடங்களிலும் ஒரே பதில்தான்: ”நீக்ரோக்களுக்கு காபி கொடுப்பதில்லை, வெளியே போ.”

அப்போது அமெரிக்காவில் கறுப்பர்களுக்கான சமஉரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. பெரும் போராட்டங்கள் நடந்து வந்தன. ஹோட்டல்களில் சாப்பிடக்கூட கறுப்பின மக்களுக்கு அனுமதி கிடையாது. தண்ணீர் அருந்தும் பொது இடங்களில் கறுப்பர்களுக்கு என பொருள்படும்படி “கலர்டு பீப்பிள்” என தனியாக பிரிக்கப்பட்டிருக்கும். கருப்பர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதியில்லை என சில இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைத்திருந்தார்கள். பேருந்து முதலிய பொது போக்குவரத்திலும் ஏராளமான ஒடுக்குமுறைகள் நிலவின.

ஆனால், அப்போது நடந்து கொண்டிருந்த வியட்நாம் யுத்ததில் அதிகப்படியாக கறுப்பின மக்களே ஈடுபடுத்தப்பட்டு பிணங்களாக நாடு திரும்பிக் கொண்டிருந்தனர். இதை அப்போது ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் இன விடுதலைக்கு போராடிய மார்டின் லூதர் கிங் கடுமையாக எதிர்த்தார்.

1960-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ரோம் நகரில் நடந்தது. ‘லைட் ஹெவி வெயிட்’ பிரிவில் அமெரிக்காவின் முகமது அலி தங்கப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் போட்டி முடிந்து வெற்றி வீரனாக நாடு திரும்பிய முகமது அலி, “நான் இந்நாட்டிற்காக தங்கப் பதக்கம் வாங்கி வந்துள்ளேன். நான் இப்போது ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிடப் போகிறேன்,” என்று கூறி ஒரு ஹோட்டலுக்குச் சென்று காபி கேட்டுள்ளார்.

“நாங்கள் கறுப்பின மக்களுக்கு எதுவும் தருவதில்லை,” என அங்கு பணியில் இருந்த பணிப்பெண் பதில் அளித்தார். இதனால், கடும் கோபமடைந்தார் முகமது அலி. சண்டையிட்டு வெளியேறி தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஓகியோ நதியில் வீசியெறிந்து “பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கிவந்த  பதக்கத்தை  அணிய விரும்பவில்லை,” என சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க திரைப்பட இயக்குனர் ஸ்பைக் லீ சொல்வது எக்காலத்திற்கும் பொருந்தும். “அமெரிக்கா என்பது ஒரு ‘அறத்தின்’ மீது உருவாகியிருக்கிறது. இனக்கொலை, மனித உழைப்புத் திருட்டு, அடிமை வியாபாரம் என இவைதான் அந்த அடிப்படை ‘அறம்’. செவ்விந்திய மக்களை இனப்படுகொலை செய்தார்கள். ஆப்பிரிக்க மக்களை அவர்களுடைய சொந்த நாடுகளிலிருந்து திருடினார்கள். அடிமை முறையை உருவாக்கினார்கள். இதிலிருந்துதான் இன்றைய நிறவெறி உச்சமடைந்திருக்கிறது,” என்கிறார். இவரும் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர்.

காலம்தோறும் நடந்து வந்த போராட்டங்கள் அதன் இறுதிக் கட்டத்தை வந்தடைந்துள்ளன. சாத்தியமுள்ள அனைவரின் மனதையும் வென்ற அந்தக் கோரிக்கைகள் இன்னும் வெல்லவேண்டியது ஏராளம் இருக்கிறது.

பலவிதமான ஆதரவுக் குரல்கள் உலகம் முழுவதிலிருந்தும் கேட்கின்றன. இனியும் தவிர்க்க முடியாது.

லாங்ஸ்டன் ஹியூஸ் சொல்வதை போல:

“ஒத்திவைக்கப்பட்ட கனவு என்னவாகும்

சூரியன் எழுவதால் உலர்ந்து போகுமா ?

அல்லது உயர்ந்து எரித்து அதன் பின் ஓடுமா ?

அது அழுகிய உணவைப்போல் நாறுமா ?

அல்லது இனிப்பு தோய்த்த மருந்தாக இனிக்குமா ?

ஒரு வேளை பாரமானதாக இருக்குமா ?

அல்லது வெடித்துவிடுமா. . . ?

காத்திருக்கும் காலம் நல்ல பதிலைச் சொல்லும்.

தொடர்புடைய கட்டுரை: அமெரிக்கா ஒரு நாகரீக தேசமா? – ரான் ஃபார்தஃபர்

Total Page Visits: 231 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *