வளரிளம் பருவத்தினர் மனநலத்தில் கொரோனாவின் தாக்கம்

சரியான வழி முறைகளின்படி தீர்வு காணப்படாவிட்டால்,
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும்
மனநல பாதிப்புக்களின் விளைவுகள்
கோவிட்-19 பெரும்தொற்றால் ஏற்படும்
பொருளாதார நெருக்கடியையும் விஞ்சிவிடும்
கோவிட்-19 பொது முடக்கத்தால் இளம்பருவத்தினர் மனநலம் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகியன குறித்து மக்களுக்கான மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பின் நிலை அறிக்கை:
கோவிட்-19 பெருந்தொற்றுநோய் மற்றும் பொதுமுடக்கம் ஆகியன முழு சமூகத்தின் உடல் நலன் மற்றும் மனநலனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்களின் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சில வாரங்களிலேயே, மக்களிடத்தில் அதிகரித்து வரும் மனநிலை நெருக்கடி மற்றும் மனநோய்கள் குறித்து பல ஆய்வறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஏற்கனவே விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களை பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவையாகிறது. எந்தவொரு நெருக்கடி நிலையிலும், மக்களுக்கு மனநலம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது அறிவியல்ரீதியாக நிரூபணம் செய்யப்பட்ட ஒன்றாகும். இதற்கு கோவிட்-19 பெரும்தொற்றும் விதிவிலக்கல்ல.
இத்தகைய மனநல நெருக்கடியானது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது, நாம் பொதுவாக நினைத்துக்கொண்டு இருப்பதைக் காட்டிலும் மிக அதிகமாகவே பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். அதிக ஆபத்தில் இருக்கக்கூடிய வளரிளம் பருவத்தினர் மற்றும் இன்ன பிற மக்களின் மனநலத்தை பேணிப் பாதுகாக்க வேண்டி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளார். யுனிசெப் அமைப்பானது தனது அறிக்கையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் ஏற்படக்கூடிய மனநல நெருக்கடிகளை நிவர்த்தி செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், சரியான வழி முறைகளின்படி தீர்வு காணப்படாவிட்டால், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புக்களின் விளைவுகள் கோவிட்-19 பெரும்தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியையும் விஞ்சிவிடும் என யுனிசெப் எச்சரித்துள்ளது.
வளரிளம் பருவநிலை, மனித வளர்ச்சியின் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இத்தகைய காலகட்டத்தில் கோவிட் பெரும்தொற்று நோய் பற்றி தொடர்ச்சியாக வரும் தகவல்கள், வைரஸ் பரவல் குறித்து பரவலாக ஏற்பட்டுள்ள பயம், நெருக்கமானவர்களுக்கு நோய் ஏற்பட்டுவிடுமோ என்கிற பீதி, எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை மற்றும் மனிதர்களுக்கிடையில் குறைந்துபோய்விட்ட தகவல்தொடர்பு போன்ற சூழ்நிலைகளை வளரிளம் பருவத்தினர் எதிர்கொள்ள வேண்டிள்ளது.
இவற்றின் விளைவாக அவர்கள் கோபம், பயம், சோகம் மற்றும் துக்கம் என பல்வேறு வகையான உணர்ச்சிகளின் சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் “சேவ் தி சில்ரன்” என்கிற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில், நான்கில் ஒரு குழந்தைக்கு பதட்டம், சோர்வு, பயம், நோய்வாய்ப்பட்டு விடுவோமோ என்கிற அச்ச உணர்வு, அவநம்பிக்கை மற்றும் தனிமைத்துயர் ஆகிய பிரச்சினைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
வளரிளம் பருவத்தில் ஏற்படக்கூடிய உடல்சார்ந்த, மனம்சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த மாற்றங்கள் அவர்களது மனநல ஆரோக்கியத்தின் மீது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என பல அறிவியல் ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன.
நமது நாட்டில் மூன்றாம் மாதத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப் பொதுமுடக்கமானது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏழைகள், ஆதரவற்றோர், சமூகப் பொருளாதாரரீதியாக புறக்கணிக்கப்பட்டோர் மற்றும் சிக்கலான குடும்ப சூழலில் வாழ்ந்துவரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் ஆகியோர் கடுமையான தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்
உடல்ரீதியான, வாய்வழியிலான மற்றும் உணர்வு ரீதியான வன்முறைகள், குடும்ப வன்முறைகள், குடும்ப உறுப்பினர்களிடையே குடிப்பழக்கத்தினால் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றுடன், நோய் குறித்த பீதி மற்றும் பதற்றம் ஆகியவையும் இணைந்து, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு தீவிரமான மனநல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி, அதிகரித்துக் கொண்டே செல்லும் வறுமை ஆகிய பொருளாதார சிக்கல்கள் ஏற்கனவே இருந்துவரும் மனநலன் சார்ந்த பிரச்சனைகளை இரட்டிப்பாக்கியுள்ளன.
கிராமப்புறத்தைச் சேர்ந்த குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் மற்றும் இத்தகைய குடும்ப சூழ்நிலையில் வாழும் மாணவர்கள் ஆகியோரின் வாழ்க்கை இந்தப் பெருநதொற்றினால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.
பொதுமுடக்கத்தின் சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தினால் ஏற்படும் மனநலச்சிக்கலை சரியாக அனுகாவிட்டால், அவை தனிநபரின் மனநிலை ஆரோக்கியத்தை பாதித்து, அவருடைய நீண்டகால வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், ஏற்கனவே மனநலப் பிரச்சினைகளுடன் இருக்கும் வளரிளம் பருவத்தினர் கடுமையான மனநல நெருக்கடிக்கு ஆளாகி அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையும் ஏற்படும்.
யுனெஸ்கோவின் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அறிக்கையில் உள்ள நிலவரப்படி, உலகில் 188 நாடுகள் தங்களுடைய கல்வி நிலையங்களை மூடியுள்ளன. இதனால், கல்வி பெற்றுவந்த 90 சதவீதத்திற்கும் மேலான மாணவர்களுக்கு கல்விகற்கும் தொடர்ச்சி அற்றுப்போயுள்ளது. கொரோனா வைரஸ் பெரும்தொற்று நோயினை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ள சமூக இடைவெளி நடவடிக்கைகளால், வளரிளம் பருவத்தினரின் அன்றாட வாழ்வு சீர்குலைந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள கல்விச் சீர்குலைவானது அதனுடைய வேகத்திலும், அதன் உலகளாவிய தன்மையிலும் முன்னெப்போதும் இல்லாத அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக யுனெஸ்கோஇயக்குனர் எச்சரித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு ஆகியவற்றால் வளரிளம் பருவத்தினர் கல்வியில் கவனம் செலுத்த இயலாத நிலையில் உள்ளனர்.
இத்தகைய சூழலில், பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த்த் தேர்வினை தமிழகம் முழுவதும் உள்ள 9.44 லட்சம் மாணவர்கள், பெரும்தொற்று சூழலில் எழுதவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவற்றுள், 4.07 லட்சம் மாணவர்கள், அதாவது 50 சதவிகித மாணவர்கள், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவற்றுடன் சேர்ந்து அரசு உதவிப்பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.45 லட்சம் மாணவர்களும், தனியார் பள்ளிகளை சேர்ந்த 91,918 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6.45 லட்சம் மாணவர்களில் பெரும்பாலானோர் சமூகப் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்கள் மற்றும் விளிம்புநிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.
ஏற்கனவே உடல், மனம் மற்றும் உணர்வுரீதியான அழுத்தங்களைச் சந்தித்து இக்கட்டான சூழலில் இருந்துவரும் இந்த மாணவர்கள், பொதுத்தேர்வு என்கிற கல்விசார்ந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மற்றவர்களைவிட கூடுதலான மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது.
எனவே மக்களுக்கான மனநல மருத்துவர்களின் கூட்டமைப்பு தமிழக அரசிடம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது:
- குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் இடையே அதிகரித்துவரும் மனநல சிக்கல்கள் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படக்கூடிய மனநல சிக்கல்களைஅடையாளம்கண்டு, ஆராய்ந்து, சிகிச்சை மற்றும் நிவாரணங்கள் வழங்குவதற்கான சேவைகளை உருவாக்க வேண்டும்.
- தற்போது நிலவிவரும் பெருந்தொற்று சூழ்நிலையை கருத்தில்கொண்டு, மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் கருதி 2019-20 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்துசெய்ய வேண்டும்.
மக்களுக்கான மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு:
மரு. அரவிந்தன்
மரு. குருமூர்த்தி
மரு. கார்த்திக் தெய்வநாயகம்
மரு. அபிராமி
மரு. ஸ்ரீராம்
தொடர்புகளுக்கு: 9790817886 & 7401121618