கொரோனாவை விரட்டிய வியட்நாமின் கதை – சுவி

இந்த நாடு வைரஸை வெற்றிகொண்டது
இது முதல்முறையல்ல,
ஏற்கனவே 2003-இல் பரவிய சார்ஸ் நோயை
மனித இனத்தால் வெற்றிகொள்ள முடியும் என
நிரூபித்துக் காட்டியதும் இதே வியட்நாம்தான்.

கொரோனா பயத்தில் உலகமே அறைகளில் அடைபட்டுக் கிடந்தபோது அந்த சின்னஞ்சிறு நாடு கொரோனாவை வெற்றிகொண்டு வீதிக்கு வந்தது. அது வைரஸை வென்றது இது முதல்முறையல்ல, ஏற்கெனவே 2003-ல் சார்ஸ் நோயை மனித இனம் வெற்றிகொள்ள முடியும் என நிரூபித்துக் காட்டியதும் அந்த நாடுதான். அதுதான் வியட்நாம். உலகில் அமெரிக்காவை வெற்றிகொண்ட ஒரே நாடு என்றும் அதை சொல்லலாம், வியட்நாமின் வெற்றிக்கதையை அங்கிருந்துதான் நாம் துவங்க வேண்டியிருக்கிறது.

தெற்காசியாவில் பின்தங்கிய நிலையில் இருக்கும் சின்னஞ்சிறு விவசாய தேசம் வியட்நாம். 1850 முதல் பிரான்சின் காலனிய நாடாக வியட்நாம் இருந்து வந்தது. முதல் உலகப்போர் முடிந்து தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் உலகமெங்கும் அலை அலையாக எழுந்தபோது வியட்நாமும் விழித்துக்கொண்டது. ரஷ்யப் புரட்சியால் உத்வேகம் பெற்ற ஹோசிமின் சோவியத் பாணியில் கம்யூனிச வியட்நாமை உருவாக்க முயற்சி செய்தார். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு  வந்தபோது வியட்நாமும் விடுதலை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பொய்த்துப் போனது.

ஒட்டுமொத்த உலகமும் அமெரிக்க ஆதரவு, சோவியத் ஆதரவு என இரு துருவங்களாக பிரிந்து பனிப்போர் காலத்திற்குள் நுழைந்தது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளில் போர் ஏற்படும் சூழல். பனிப்போர் காலத்தின்போது உண்மையில் உரசல் மட்டுமே நடக்கும், போர் நடக்காது. அந்த சூழ்நிலையில், பிரான்சின் ஆதரவோடு அரசர் பாவோ-தாய், வியட்நாமில் ஆட்சியமைக்க முயன்றார், சைகோன் நகரை தலைநகராக அறிவித்தார். உடனடியாக ஹோசி-மின் வியட்நாம் ஜனநாயக குடியரசை அறிவித்தார். ஹனோய் தலைநகரானது. இது பெரும் சச்சரவாக மாறியது.

பிரான்சின் முற்சியால் 1954-ல் ஜெனிவாவில் நடந்த ஒப்பந்தம் தற்காலிகமாக வியட்நாமை இரண்டாகப் பிரித்தது. வடக்கு வியட்நாம் கம்யூனிச ஆதரவுடனும் தெற்கு வியட்நாம் பிரான்ஸ் அரசரின் கட்டுக்குள்ளும் வந்தது. வடக்கு வியட்நாமை சோவியத், சீனா போன்ற கம்யூனிச நாடுகள் ஆதரித்தன. தெற்கு வியட்நாமை அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் ஆதரித்தன.

தெற்கு வியட்நாமில் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் அரசரின் படைகளால் வேட்டையாடப்பட்டனர். ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். தென் பகுதியில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. கம்யூனிஸ்ட்டுகளும் மற்ற ஜனநாயகக் குழுக்களும் இணைந்து தேசிய விடுதலை முன்னணியை ஏற்படுத்திப் போராடினர்.

இரண்டாம் உலகப்போரில் சோவியத் கம்யூனிஸ்ட்களின் வெற்றியைத் தொடர்ந்து சீனா, கொரியா என தொடர்ந்து தென்கிழக்கு ஆசியப் பகுதியில் மேலும் ஒரு நாடு கம்யூனிஸ்ட் நாடாக மாறினால், அந்தப் பகுதி முழுவதும் கம்யூனிஸத்தின் பிடியில் விழுந்துவிடும் என்று கணித்த அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி, உடனடியாக ஓர் ஆய்வுக்குழுவை வியட்நாமுக்கு அனுப்பிவைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமெரிக்கா தனது படைபலத்தை அதிகரித்துக்கொண்டு, வியட்நாம் போரில் இறங்கியது.

1950-ல் சில ஆயிரங்களில் ஆரம்பித்த அமெரிக்க படையினரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, ஒரு கட்டத்தில் 5 லட்சம் அமெரிக்கப் படையினர் வியட்நாம் மண்ணில் போரில் ஈடுபட்டனர். பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்கள், அமெரிக்க ராணுவத்தின் துணையோடு பியன்-தியன்-பு என்ற இடத்தில் தமது படைகளைக் குவித்து தளம் ஒன்றை உருவாக்க முயன்றனர்.  அந்தத் தளம் தகர்க்கப்பட முடியாதது, வலுவானது என்று பிரெஞ்சு, அமெரிக்க இராணுவ நிபுணர்கள் உறுதியாக நம்பினார்கள்.

ஆனால், அந்தத் தளத்தை சுற்றியிருந்த உயரமான மலைகளில் இருந்து திடீர் தாக்குதல் நடத்தி வியட்நாம் மக்கள் படைகள் பிரெஞ்சு ஆக்கிரமிப்புப் படைகளை மண்டியிடச் செய்தன. 11,000 பிரெஞ்சுப் படையினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இந்தோ-சீனாவில் ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆக்கிரமிப்புகளுக்கு முதல் சவக்குழி வெட்டப்பட்டது. அதற்கு முழுமையான காரணம் கெரில்லா யுத்த முறைதான்.

முதல் உலகப் போர் முடிந்த காலம் துவங்கி, கம்யூனிச கட்சிக்கு தலைமை தாங்கி ஒருங்கிணைந்த வியட்நாமை உருவாக்க கடுமையாக போராடி வந்தார் ஹோசிமின். அவரது வலதுகரமாகவும் போர்ப்படைத் தளபதியாகவும் இருந்த ஜெனரல் வோ நகுயான் கியாப் படைகளை வழி நடத்தினார்.

ஹனோய் பல்கலைக் கழகத்தில் அரசியல், பொருளாதாரம், மற்றும் சட்டத் துறைகளில் படித்துக்கொண்டே வரலாற்று ஆசிரியராகப் பணிபுரிந்தார் கியாப். 1939-ம் ஆண்டு ஜப்பான் வியட்நாம் மீது போர் தொடுத்தபோது ஹோசி-மின் தலைமையிலான இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனாவுக்கு இடம் பெயர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட கெரில்லா போரில் கியாப் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அப்போது, “ஒரு நாட்டின் மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் யுத்தம் ராணுவ, அரசியல், மற்றும் பொருளாதாரத் தளங்களில் நடத்தப்படுகிறது. எதிரிகள், ஒரு ராணுவத்தை மட்டும் எதிர்கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர்கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்,” என்றார் ஜெனரல் கியாப்.

பெரும் விவசாயப் பரப்பில்  மக்கள் விவசாயம் செய்துகொண்டிருப்பார்கள். அமெரிக்க ராணுவம் வந்தால் வயல் வரப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்துச் சுடுவார்கள். பின் மீண்டும் விவசாயம் செய்வார்கள். சுடுவதற்கு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பயிற்சி பெற்றிருந்தார்கள். மக்களே படைவீரர்கள். வாய்ப்பு கிடைக்கும் வரை அவர்கள் காத்திருப்பார்கள். தாக்கி அழித்தல் பின் மறைந்து கொள்ளுதல் என்ற கெரில்லா முறைக்கு இன்றும் சிறந்த உதாரணமாக வியட்நாமிய போர் முறையே விளங்குகிறது.

காடுகளும் இயற்கை அமைப்புகளும் வியட்நாமியர்களுக்கு சாதகமாக இருந்தன. விஷ அம்புகள், பதுங்கு குழிகள், திடீரென தாக்கும் பெரும் மரக்கட்டைகள் என்பன போன்ற அம்சங்களைக் கொண்ட கெரில்லா போர் முறைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அமெரிக்கப் படையினர் காடுகளில் வசமாக சிக்கிக்கொண்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா நாபாம் எனப்படும் வெண்பாஸ்பரஸ் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தி காடுகளை அழித்தது. அதில் ஆடைகள் முழுக்க தீப்பற்றி எரிந்த நிலையில் நிர்வாணமாக ஓடிவந்த வியட்நாமிய சிறுமி கிம் புவா-வின் புகைப்படம் வெளிவந்து உலகைத் திகைக்க வைத்தது. இன்றும் அவர் வியட்நாம் போர் கொடுமையின் ரத்த சாட்சியாக இருக்கிறார்.

அமெரிக்காவின்  கொடுமைகள் அத்தோடு நிற்கவில்லை மேலும் தொடர்ந்தது. அதன் பாதிப்புகள் இன்றும் தொடர்கிறது. வியட்நாம் கெரில்லாக்கள் காடுகளில் ஒளிந்து கொள்வதால் அவர்களைத் தேடிப்பிடிக்க செல்லும் அமெரிக்க படையினர் வலையில் மாட்டிக்கொண்ட எலி போல உயிரிழப்பதைக் கண்ட அமெரிக்க ராணுவம் – ஏஜெண்ட் ஆரஞ்ச் என்ற கொடிய களைக்கொல்லி – உயிரியல் ஆயுதத்தை முதன்முறையாகப்  பயன்படுத்தியது. விமானங்கள் மற்றும் தெளிப்பான்கள் மூலம் லட்சக்கணக்கான லிட்டர்களைத் தெளித்து கிட்டத்தட்ட 30,000 சதுர கிலோமீட்டருக்கு மேற்பட்ட காடுகளை அழித்தது. புல் பூண்டுகள் உள்ளிட்ட பசுமையான அனைத்தும் கருகி அழிந்தன.

உயிரியல் ஆயுதம்  மனிதர்கள் மீதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. அது வியட்நாமிய சாமானிய மக்களையும் அமெரிக்கப் படையினரையும் பெருமளவில் பாதித்தது. அதன் பக்க விளைவாக இன்றும் வியட்நாமில் மூன்று தலைமுறையைக் கடந்தும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். அவர்களின் மரபணுவுக்குள் போர் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கொல்லப்பட்ட அமெரிக்கப் படை வீரர்களின் உடல் பொதிகளையும், அமெரிக்க இராணுவம் வியட்நாம் மக்கள்  மீது அவிழ்த்துவிட்ட ஈவிரக்கமற்ற கொலைகளையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் மத்தியில் அவர்களது அரசு கட்டியமைத்திருந்த பிம்பங்கள் சரிந்தன. தொலைக்காட்சியில் போர்க்காட்சிகள்  முழுமையாக ஒளிபரப்பாக ஆரம்பித்ததும் வியட்நாம் போரின்போதுதான். அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஒருகட்டத்தில், போரை எதிர்த்து அமெரிக்க மக்கள் நடத்திய போராட்டத்துக்கு அடிபணிந்தது அமெரிக்காஅரசு.

நான்கு அமெரிக்க அதிபர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகள் நடத்திய போரில் வியட்நாமிய மக்களின் அர்ப்பணிப்பு மிக்க போராட்டம் வெற்றி கண்டது. அமெரிக்கா வியட்நாமிலிருந்து படைகளை முழுவதுமாக  விலக்கிக் கொண்டது. வியட்நாம் ஒரே நாடாக விடுதலை பெற்றது.

வியட்நாம் போரில் மக்கள் அனைவருக்கும் ஒரு பங்கு இருந்தது. அதனாலேயே அவர்கள் இழப்புகளையும் தாண்டி வெற்றி பெற்றனர். கிட்டத்தட்ட அதே போன்ற வெற்றியை மக்களின் முழு ஒத்துழைப்புடன் வியட்நாம் இப்போது பெற்றுள்ளது. ஆனால், எதிரிதான் வேறு. ஆம், அப்போது அமெரிக்கா, இப்போது கொரொனா வைரஸ். வியட்நாம் கொரோனாவை வென்றிருக்கிறது. அமெரிக்கா கொரோனாவிடம் வீழ்ந்துக் கொண்டிருக்கிறது.

2020 ஜனவரி 22 அன்று வியட்நாமில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவுக்கு வெளியே எந்த நாட்டையும்விட முன்னதாகவே கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்த நாடு வியட்நாம். சீனாவின் அண்டை நாடு வியட்நாம். கிட்டத்தட்ட 1100 கிலோ மீட்டர் எல்லையை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது. சீன நிறுவனங்களுக்குப் பொருட்களை தயாரித்துத் தரும் வேலையைப் பெரும்பாலான வியட்நாமிய நிறுவனங்கள் செய்துவருகின்றன. அதனால் இயல்பாகவே சீனப் போக்குவரத்து வியட்நாமில் அதிகம். சீனப் பயணிகள் அதிகமாக வருகைபுரியும் சுற்றுலாதான் வியட்நாமின் பெரும் வருமானம் தரும் தொழில். அதனால் கொரோனா தொற்றும் முன்னதாகவே வியட்நாமுக்கு வந்து சேர்ந்துவிட்டது.

ஆனால், முதல் தொற்று ஏற்படுவதற்கு முன்பே வியட்நாம் அரசு போர் அறிவிப்பை செய்தது. ஆம், கொரோனாவிற்கு எதிராகப் போர் என்ற அறிவிப்பை செய்த முதல் நாடு வியட்நாம். கொரோனாவை பெரும் கொள்ளை நோயாக அறிவித்து செயலில் இறங்கியது வியட்நாம் அரசு.

ஜனவரி 21-ல்  கொரோனாவை எதிர்கொள்ள திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன்பிறகுதான் அங்கு முதல் தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் இருந்து வந்த இரண்டு சீனர்களிடம் கொரொனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக நாடு முழுவதும் உள்ள 700 மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள தயார்ப்படுத்தப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் பிப்ரவரி 11-ல் கோவிட் 19 என பெயரை அறிவித்தபோது வியட்நாமில் 16 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. அடுத்த 22 நாட்களுக்கு புதிய தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

உண்மையில், வியட்நாமுக்கு வைரஸைக் கட்டுப்படுத்துவதிலும் முன் அனுபவம் இருந்தது. 2003-இல் சார்ஸ் வைரஸ் வியட்நாமில் பரவியது. அப்போது அங்கே 63 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் இறந்திருந்தனர். அதன்பிறகு எடுத்த அசுரவேக நடவடிக்கைகள் காரணமாக இருபதே  நாட்களில் சார்ஸை வெற்றிகண்டது வியட்நாம்.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் இதே முறைகள் பயன்படுத்தப்பட்டன. பிப்ரவரி ஒன்றிலேயே சீனா, ஹாங்காங், தைவான் முதலான நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தடைசெய்யப்பட்டன. எல்லைகள் மூடப்பட்டன. சீன எல்லைகளும்  உடனடியாக மூடப்பட்டன. மார்ச் 21-இல் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதிகப்படியான பரிசோதனைகள், தொடர்புகளைக் கண்டறிதல், தொற்றாளர்களைத் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றி அதில் வெற்றியும் பெற்றது.

மார்ச் மாதத் தொடக்கத்திலேயே கொரோனா கண்டறியும் பரிசோதனைக் கருவிகளை குறைந்த விலையில் உருவாக்கிவிட்டார்கள் வியட்நாமிய விஞ்ஞானிகள். குறைவான செலவு பிடிக்கும் முறைகளைப் பயன்படுத்தி அதிக அளவில் 2 லட்சத்து 60 ஆயிரம் பரிசோதனைகளை வியட்நாம் நடத்தியிருந்தது. இத்தனைக்கும் ஏப்ரல் மாதம் 112 தொற்றுகள் மட்டுமே அங்கே ஏற்பட்டிருந்தன.

கொரோனா மனிதத் தொடர்பால் பரவுவதை கவனத்தில் கொண்டு எலோருக்கும் விடுப்பு அளிகப்பட்டது. விடுமுறைக்கால உதவித்தொகையும் அளிக்க 1.1 பில்லியன் டாலர் தொகை ஒதுக்கப்பட்டது.

மக்களும் கொரோனா குறித்த விழிப்புணர்வு இருந்ததால் வீட்டில் கட்டுப்பாட்டுடன் இருந்தனர். மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் வீட்டிற்கே சென்றன. வாழ்க்கை மோசமாகிவிடும் என்ற பயம் ஏற்படாமல் அரசு பார்த்துக்கொண்டது. மக்களின் கூட்டு மனப்பான்மை இந்த நேரத்தில் வெளிப்பட்டது. கொரோனாவிற்கு எதிரான ஒரே குறிக்கோளோடு அவர்கள் ஊரடங்கை கடைப்பிடித்தனர். கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்காக அந்நாட்டு அரசு ராணுவத்தைப் பயன்படுத்தியது. மக்கள் யாரும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அது அவர்களுக்கு பெரிய பலன் கொடுத்தது. தொற்று மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 8 ஆயிரம் பேர் தனித்தனியாக அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டார்கள்.

ஒட்டுமொத்தமாக இரண்டு குழுக்கள் வேலை செய்தன. ஒரு குழு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது. மற்றொரு குழு தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தது. தொற்றாளர் முதல் அடுக்கு என்றால் அவரது தொடர்பில் இருந்த இரண்டாம் அடுக்கினர், அவர்களின் தொடர்பில் இருந்த மூன்றாம் அடுக்கினர் என ஐந்தடுக்கு வரை தொடர்பில் இருந்தவர்களைப் பரிசோதனைக்கு உடபடுத்தினர். முதல் அடுக்கில் இருந்த தொற்றாளருக்கு ஐந்தாம் அடுக்கில் இருப்பவரை முன்பின் தெரியாது என்றாலும் அவர்களுக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பரிசோதனைக்காக நடமாடும் ஆய்வகங்கள் மக்கள் கூடும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டன. மக்கள் தாங்களே முன்வந்து பரிசோதனைகளை செய்துகொண்டனர்.

ஒன்பது கோடி மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் இதுவரை 324 பேர் மட்டுமே கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மூலம் அங்கு ஒருவர்கூட பலியாகவில்லை. ஆம் ஒருவர் கூட பலியாகவில்லை. 61 தொற்றாளர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனர். 263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இரண்டு முக்கிய அம்சங்கள் வியட்நாமின் வெற்றிக்கு காரணம் என  ஆய்வாளர்கள்  கருதுகின்றனர். அவர்களுக்கு இருந்த மனிதவளத்தை சரியான முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்தியது. மற்றொன்று, நீண்டகாலமாக சரியான முறையில் இயங்கிவரும் மருத்துவத் துறையின் செயல்பாடுகள். வியட்நாம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6 சதவீதத்தை மருத்துவத் துறைக்கென ஒதுக்குகிறது.

ஹனோய் மருத்துவப் பல்கலைக்கழகம் உலக அளவிலான  தர வரிசையில் 23-ம் இடத்தைப் பிடித்து, தரமான மருத்துவ வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. வியட்நாமில் உருவாக்கப்பட்ட கொரோனா கண்டறியும் பரிசோதனைக் கருவி ஐரோப்பிய தரத்துடன் சிறந்து விளங்குவதாகவும் பேரிடர் காலங்களில் பயன்படுத்தத்தக்கது எனவும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

எந்தவொரு பெரிய தொழில்நுட்பமும் இன்றி இந்தச் சாதனையை வியட்நாம் அரசு செய்துள்ளது – இல்லை, இல்லை, வியட்நாமிய மக்கள் செய்துள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு முன் நடந்தது போலவே மீண்டும் ஒருமுறை கெரில்லா யுத்தத்தில் வியட்நாம்  வென்றுள்ளது. ஆம், இந்தமுறை வியட்நாம் வீழ்த்தியது கொரோனாவை!

மீண்டும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். மக்கள் வேலைகளுக்கு செல்கின்றனர். ஹோசிமின் சிட்டி அதன் பரபரப்புக்குள் மீண்டும் மூழ்கிவிட்டது. வியட்நாமில் சகஜநிலை திரும்பிவிட்டது.

Total Page Visits: 283 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *