லாக்டவுன்: பிரிவினைக் காலத்திற்குப் பிறகான மாபெரும் துயரம் – ராம்சந்திர குஹா

மத்திய அரசில் உள்ளவர்கள்
தங்களுடைய நலன்களைப் பற்றி மட்டுமே
சிந்திப்பது மாறாவிட்டால்,
அதுவும் சீக்கிரமே மாறாவிட்டால்
நம்முடைய எதிர்காலம்
கடும் இருளில் சிக்கிக் கொண்டுவிடும்.

மார்ச் 24 அன்று தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி, அன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடுதழுவிய லாக்டவுன் கடைப்பிடிக்கப்படும் என்றார். இதில் இந்த நாவல் கொரோனா வைரஸை பரவச்செய்யும் ரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்துக்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளும் அடக்கம். இந்த லாக்டவுன் இதுவரைக்கும் ஐந்து தடவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த லாக்டவுன் குறித்து, இந்தியாவின் குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர் மற்றும் பொருளாதார நிபுணரான ராம்சந்திர குஹா PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், “உலகின் மிகப்பெரிய கொரோனா வைரஸ் லாக்டவுனில் இருந்து கொண்டிருக்கும், கோடிக்கணக்கான ஏழை மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள், பிரிவினைக் காலத்துக்குப் பின்னர் இந்தியாவில் மனிதன் உருவாக்கிய மிகப்பெரிய துயரமாகும்,” என்று கூறியுள்ளார். நாடு முழுவதிலுமே இது சமூக மற்றும் உளவியல் சார்ந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், லாக்டவுன் தொடங்குவதற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடி ஒரு வாரமாவது கால அவகாசம் கொடுத்திருந்தால், புலம்பெயர் தொழிலாளர்களின் துயரங்களை தவிர்த்திருக்கலாம் அல்லது குறைக்கவாவது செய்திருக்கலாம் என்கிறார்.

“இது பிரிவினைக்காலம் அளவுக்கு வேண்டுமானால் மோசமானதாக இல்லாதிருக்கலாம், அந்த காலகட்டத்தில்கூட பயங்கரமான மதக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும்கூட, பிரிவினைக் காலத்துக்குப் பின்னர் இந்தியாவில் மனிதன் உருவாக்கிய மிகப்பெரிய துயரம் என்றால் அது இதுதான். பிரதமர் இந்த முடிவை எப்படி எடுத்தார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் துறைசார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாரா, அல்லது தன்னுடைய கேபினட் அமைச்சர்களிடமிருந்து அறிவுரை பெற்றாரா? அல்லது எல்லோர் சார்பாகவும் ஒருமனதாகத்தான் அவர் செயல்பட்டிருக்கிறாரா?”

“பிரதமர் ஆலோசனைப்பூர்வமான அனுகுமுறையை கையில் எடுப்பாரேயானால் இன்றும்கூட இந்த சூழ்நிலையை ‘சற்றேனும்’ தணித்துவிட முடியும். இதற்கு அவர் எதிர்க்கட்சிகளில் உள்ளவர்கள் உட்பட, நாட்டில் உள்ள சிறந்த அறிஞர்களிடத்தில் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்பதுதான் விஷயமே. அவருடைய கேபினட் அமைச்சர்களோ, மத்திய அரசாங்கம் உருவாக்கிய இந்தக் குழப்பத்திற்கு உண்டான பொறுப்புக்களை எப்படியாவது மாநிலங்களின் தலையில் கட்டிவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.”

“லாக்டவுன் நடைமுறைக்கு வந்த மறுநாளே, தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள் உட்பட லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தும், சைக்கிளில் சென்றும் அல்லது எந்த வாகனத்திலாவது தொற்றிக்கொண்டும் நூற்றுக்கணக்கான, சிலபோது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அப்பால் இருக்கும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். இரண்டு மாதங்கள் ஆனபிறகும்கூட, பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் இருந்து இந்த இடப்பெயர்வு நாடு முழுவதிலும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. உயிர்பிழைக்க அவர்கள் படும் பாடு இந்த நாட்டை உலுக்கியுள்ளது, உலகளாவிய செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து, இந்த சூழ்நிலையை சமாளிக்கும் அரசாங்கத்தின் திறனை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.”

புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கு மோடி மட்டும் குறைந்தபட்சம் ஒருவார கால அவகாசம் கொடுத்திருந்தால் இந்த துயரத்தை தவிர்த்திருக்கலாம் என்கிறார் குஹா. “அவரோ அவருடைய ஆலோசகர்களோ, லாக்டவுனால் நான்கே மணிநேரத்தில் ஏற்படப்போகும் பின்விளைவுகள் குறித்து சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது புதிராகத்தான் இருக்கிறது. அப்போதில் இருந்தே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனிதத்தன்மையற்ற இந்த துயரங்களுக்கு அவர்கள்தான் நேரடி பொறுப்பாளிகள்,” என்று குற்றம்சாட்டுகிறார் அவர்.

மேலும் அவர், இந்த துயரத்திற்கு பொது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூகம் என மூன்று பரிணாமங்கள் இருக்கின்றன என்கிறார். “ஒருசிலருக்கு மட்டுமே கோவிட் தொற்று ஏற்பட்டிருந்த மார்ச் மத்தியிலேயே புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதித்திருந்தால், அவர்கள் மிகவும் பத்திரமாக தங்களுடைய சமூகங்களிடத்தில் சென்று சேர்ந்திருப்பார்கள். இப்போது பார்த்தால், அவர்களில் பலருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கிறது, அவர்கள் இந்த நோயை சுமந்து செல்பவர்கள் ஆகிவிட்டனர்.”

“இந்த புலம்பெயர் பிரச்சினையின் தாக்கம் பெரும் பொருளாதார சரிவிற்கே இட்டுச் செல்லும். பெருந்தொற்றுக்கு முன்னதாகவே பொருளாதாரமானது மோசமான நிலையில்தான் இருந்தது, இப்போது ஏறக்குறைய குலைந்துபோகும் நிலைக்கே வந்துவிட்டது. அத்துடன், சமூக மற்றும் உளவியல் தாக்கங்களும் முக்கியமானவை. மிக அதிகமான துயரத்துடனும், பாதிப்புகளுடனும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மறுபடியும் வேலைதேடி தொழிற்சாலைகளுக்கும் நகரங்களுக்கும் செல்வதை விரும்ப மாட்டார்கள்.”

சுருங்கிவரும் பொருளாதாரம், அதனுடைய அடித்தளங்களுக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படுவது மற்றும் இந்த நாடு எதிர்கொண்டுள்ள பெருந்தொற்று ஆகியவற்றால், ‘இப்போதுள்ள நம்பிக்கையிழந்த இந்தியாவைப் போல் முன்னெப்போதுமே இருந்தத’ல்லை’ என்கிறார் குஹா. “பிரிவினைக்குப் பின்னர் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய நெருக்கடி இது. பிரிவினை காலத்தின்போது நேரு, படேல் மற்றும் அம்பேத்கர் போன்ற உயரிய அரசியல் தலைவர்கள் இருந்தார்கள்; கமலாதேவி சட்டோபாத்யாய மற்றும் மிருதுளா சாராபாய் போன்ற தன்னலமற்ற சமூகப் பணியாளர்கள் இருந்தனர்.”

“இந்தத் தலைவர்கள் எல்லோருமே தங்களுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் வேற்றுமைகளை ஒருபக்கம் வைத்துவிட்டு, இந்தியாவை ஒன்றுபடுத்துவதிலும், அதனுடைய சமூகம் மற்றும் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்வதிலும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். இப்போதுள்ள இந்த நெருக்கடி நிலையோடு அதைப் பொருத்திப் பார்த்தோமானால், மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களுடைய சொந்தக் கட்சியின் பிராண்டு அல்லது சொந்தக் கட்சியினரின் நலன்களை மேம்படுத்திக்கொள்வது பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறாவிட்டால், அதுவும் சீக்கிரமே மாறாவிட்டால் நம்முடைய எதிர்காலம் கடும் இருளில் சிக்கிக் கொண்டுவிடும்,” என்று கூறியுள்ளார் ராம்சந்திர குஹா.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியப் பொருளாதாரம் 130 கோடி மக்களின் இரண்டு மாதங்களுக்கும் மேலான லாக்டவுனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், சுற்றுலாத்துறை, சேவைத்துறை, சில்லறை வணிகம், ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தித்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகள் பெரும் இழப்பினால் ஒரு துயரார்ந்த எதிர்காலத்தையே எதிர்நோக்கியுள்ளன.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், கடந்த மே 12-ஆம் தேதி மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான உதவித் தொகுப்பானது எந்த அளவுக்கு பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டுவரும் எனத் தெளிவாகத் தெரியவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கியினுடைய மதிப்பீன்படி, கடந்த 40 வருடங்களில் முதல்முறையாக, தேவை மற்றும் அளிப்பு விகிதத்தில் நேரிட்டுள்ள ஏற்ற இறக்கங்களால், இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– இரா.செந்தில்

ராம்சந்திர குஹா பிற கட்டுரை:

மூலாதாரங்களின் கேள்வி: ஆர்எஸ்எஸ்-ன் புனிதமற்ற புனிதநூல்

Total Page Visits: 155 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *