நமக்கு ஒரு துயரார்ந்த எதிர்காலமே எஞ்சியிருக்கிறது: யஷ்வந்த் சின்ஹா

அரசாங்கம் ஆரம்பத்திலேயே முறைப்படி ஆலோசனை நடத்தியிருந்தால்,
இந்தியாவின் ஏழ்மைப்பட்ட மக்கள் மீது,
அது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை
ஒரு கீழ்நிலைப் பணியாளர்கூட சுட்டிக்காட்டியிருப்பார்

யஷ்வந்த் சின்ஹா, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரத்தில், களத்தில் இறங்கிப் போராடிய முதல் அரசியல் ஆளுமையாவார். இதற்காக அவர் கைதும் செய்யப்பட்டார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், அடல் பிஹாரி வாஜ்பாயின் பிஜேபி அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்தவருமான சின்ஹா, முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் சேர்த்து, நரேந்திர மோடியால் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டவர்.

பிஜேபியில் இருந்து யஷ்வந்த் சின்ஹா வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே, நரேந்திர மோடியின் அரசாங்கத்தை ஆரம்பம் முதல் கடுமையாகவே விமர்சித்து வந்துள்ளார். சமீபத்திய நாட்களில் காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பேசிவரும் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

பொருளாதாரம் மற்றும் புலம்பயெர் தொழிலாளர் பிரச்சினைகள் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலை குறித்து The Citizen மின்னிதழிடம் யஷ்வந்த் சின்ஹா பகிர்ந்துகொண்டவை:

“வைரஸ் பரவல், மற்றும் வீழ்ந்துவரும் பொருளாதாரத் தாக்கத்தினால் இந்த வலியும், வேதனையும் அதிகரிக்கத்தான் போகின்றன. இது ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலை, நமது தொழிலாளர்களும், தினசரி கூலிவேலை செய்பவர்களும் கடும் கோபத்துடனே பெருநகரங்களில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கிறார்கள். இந்த கோபத்தை தெருக்களிலேயே உங்களால் பார்க்க முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க நம்மிடம் எந்த திட்டமும் இல்லை, நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நமக்கு எதுவும் தெரியவில்லை.”

“கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் பன்மடங்கு பெருகத் தொடங்கி இருக்கும் காலத்தின்போது, உலகிலேயே லாக்டவுனை தளர்த்திய ஒரே நாடு இந்தியாதான். மிகப்பெரிய லாக்டவுனை (“நாம் எப்போதுமே மிகப்பெரிய, மகத்தான, பிரம்மாண்டமானதைத்தான் செய்கிறோம் என்ற வகையில்”) இந்தியப் பிரதமர் அறிவித்த மார்ச் 24 அன்று, இந்த நோய்த்தொற்று எண்ணிக்கை வெறும் 100-கள் என்கிற எண்ணிக்கைக்குள்ளேதான் இருந்தது. அவை தற்போது ஒரு நாளைக்கு 6,000 என்கிற எண்ணிக்கையை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில்தான், நம்மிடம் எந்தவித திட்டமோ, சொல்லப்போனால் எந்தவித ஒருங்கிணைவோகூட இல்லாமல் எல்லாவற்றையும் திறந்து விட்டுக்கொண்டிருக்கிறோம்.”

இந்தப் பெருந்தொற்றுக்கு உண்டான அரசாங்கத்தின் கொள்கையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் சின்ஹா, “பெரும் லாக்டவுனை அறிவித்தபோது நாம் பெருமை கொண்டோம், ஆனால், இன்றைக்குள்ள எண்ணிக்கையைப் பாருங்கள். எல்லாவிதமான பொருளாதார நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்தவிட்டதன் விளைவாக நாம் மிகவும் அதிர்ச்சியடைந்தோம், இப்போது பார்த்தால் லட்சக்கணக்கான நோய்த்தொற்றுக்களை திறந்துவிட்டிருக்கிறோம், நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே அது இன்னமும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.”

“வர்க்கப் பிரிவுகளுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்திருப்பதற்கு பதிலாக, இந்த லாக்டவுனின்போது உள்ளூர் நிலைமைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்துவிட்டு, இப்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த லாக்டவுன் நிச்சயம் ஏற்புடையதல்ல. உத்திரப் பிரதேசத்திலும் பீஹாரிலும் திரும்பி வரும் தொழிலாளர்களே நோய்த்தொற்று உள்ளவர்களாக பதிவு செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் ஆரம்பத்திலேயே முறைப்படி ஆலோசனை நடத்தியிருந்தால், இந்தியாவின் ஏழ்மைப்பட்ட மக்கள் மீது, அது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை ஒரு கீழ்நிலைப் பணியாளர்கூட சுட்டிக்காட்டியிருப்பார், இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிப்பதற்கான திட்டங்களுக்கு அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் தெரிவித்திருப்பார். ”

“தொழிலாளர்கள் பெருநகரங்களில் இருந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள், அல்லது தப்பிச்செல்லும் முயற்சியில் இருக்கிறார்கள், ஆனால் நீங்களோ, தொழிற்சாலைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடுகிறீர்கள். இந்த சின்னஞ்சிறிய, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் எங்கிருந்து மூலப்பொருள்களை பெறுவார்கள், தொழிலாளர்களை எங்கிருந்து பெறுவார்கள், எப்படி, எங்கே சென்று தாங்கள் தயாரித்தவற்றை விற்பனை செய்வார்கள்?”

“இப்போதில் இருந்து, அடுத்து வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் என்ன நடக்கும் என்பதை கணிப்பது சாத்தியமே இல்லை. இந்த வைரஸின் ஆட்டத்தை எடைபோடுவது மிகவும் சிக்கலானது. ஆனால், நோய்த்தொற்று பன்மடங்கில் பெருகி வருவகிறது என்பது மட்டுமே நிச்சயமான ஒன்று. அடுத்தபடியாக, பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. பட்டினியும் வேலையின்மையும் இப்போது பெருகத் தொடங்கிவிட்டன. இதனால் ஏற்பட்டுள்ள கோபத்தை நாம் சாலைகளிலேயே பார்க்கத் தொடங்கிவிட்டோம்.”

“இந்தக் குழப்பத்தை மத்திய அரசாங்கம் எப்படி எதிர்பார்க்காமல் இருந்துவிட்டது என்பதுதான் விசித்திரமாக இருக்கிறது, அல்லது இதைப்பற்றியெல்லாம் அது கவலைப்படாமல்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு பெரும் அறிவிப்பை அவசரகதியில் வெளியிடுவதற்கு முன்னர், முதல் லாக்டவுன் அறிவிப்பின்போதே மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும்; தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், தினசரி கூலி வேலை செய்வோர்களுக்கு, அவர்களுக்கான உணவு, போக்குவரத்து மற்றும் அவசரத் தேவைக்கான பணம் உள்ளிட்டவற்றிற்கு திட்டங்களை வகுத்திருக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன்கூட, “ரேஷன்களும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் மட்டுமே போதாது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேறுபல அவசரத் தேவைகளுக்கு பணமும் வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.”

“ஆலோசிக்காமலேயே எல்லாவற்றையும் செய்துவிட்டு, இப்போது மத்திய அரசாங்கம் எடுத்துவரும் எல்லா நடவடிக்கைகளுமே வீணாகித்தான் போகின்றன. இந்திய அரசாங்கத்தின் தரப்பில் எந்தவித எதிர்பார்ப்பிற்கும், அரவணைப்பிற்கும், அறிவார்த்தமான நடவடிக்கைகளுக்கும் இடமில்லாமல் போய்விட்டது. மாநில அரசாங்கத்திடம் பணமில்லாமல் போய்விட்டால் மத்திய அரசாங்கம்தான் அதைத் தீர்ப்பதற்கு கைகொடுக்க வேண்டும், ஆனால் இப்போதும்கூட மாநில அரசுகளுக்கு எந்தவித உதவியும் செய்யாமல், மறுபடியும் உள்ளே சென்று தன்னை பூட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.”

“இந்த லாக்டவுன் முடியும் என்று காத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் கையிருப்பு கரைந்துபோய், அவர்கள் கடும் கடன் நெருக்கடியில் தள்ளப்படுவார்கள் என்பதுதான் உண்மை. இது முடிவுறுவதற்கான வாய்ப்பே கண்ணுக்கே தெரியாத நிலையில்தான் தங்களால் இதை சமாளிக்க முடியாது என்பதை அவர்களால் உணர முடியும். அத்துடன், இப்போது எல்லோருடைய குறிக்கோளுமே, எப்படியாவது தங்களுடைய சொந்த வீடுகளுக்கு, சொந்த ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. தொழிலாளர்களுக்கு விரோதமாக இருக்கும் பெருநகரங்களைக் காட்டிலும், கிராமங்கள் இன்னமும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் அமைப்பை தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அரசாங்கம் இவை அனைத்தையுமே எதிர்பார்த்திருக்க வேண்டும், ஆனால் சூழ்நிலையை மதிப்பிடாமலேயே நாம் முதல் 21 நாட்களை அப்படியே கடந்துசெல்ல விட்டுவிட்டோம். அதன் பிறகும், நாம் இரண்டாம் கட்ட லாக்டவுனை அறிவித்துக் கொண்டோம். இப்போது நான்காம் கட்ட லாக்டவுனில் இருக்கின்ற நாம், நம்முடைய தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையான அரசாங்க நிதி என்பது மொத்த ஜிடிபி-இல் 1 சதவிகிதம்தான் உள்ளது, பிரதமர் சொல்லிக்கொள்வது போல் 10 சதவிகிதம் எல்லாம் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆனாலும், அவர் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான உதவித் தொகுப்பை அறிவித்துக் கொண்டிருக்கிறார். இதைப் பிரித்துப் பார்த்தோம் என்றாலும்கூட, அரசாங்கத்தின் பங்கானது அவர்கள் சொல்லுகின்ற அளவின் விளிம்பில்கூட இல்லை. இதனை, ஐந்து தொடர்களாக பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொல்லியுள்ள, அல்லது சொல்லாமலே விட்டுவிட்ட விஷயங்களை வைத்தே நம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.”

“இன்றும்கூட, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதில் சில மாநில அரசுகள் மற்றும் என்ஜிஓ-க்கள் செய்துவரும் முயற்சிகளை கண்கூடாக பார்க்க முடிகிறது, ஆனால் மத்திய அரசாங்கம் இந்தக் களத்திலேயே இல்லை. தவறான கொள்கைகள் மட்டுமல்லாது, மக்களை ஏமாற்றுகின்ற வேலையிலும் ஈடுபட்டிருக்கின்ற ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் இச்சமயத்தில் விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆற்றல் மற்றும் மறுசுழற்சி மேலான்மை குறித்தெல்லாம் பேசிக்கொண்டிருப்பது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலத்தான் இருக்கிறது. பிரம்மாண்டமான அறிவிப்புகள் எல்லாம் செய்யப்படுகின்றன, ஆனால் அவற்றை எப்படி நிறைவேற்றுவது என்பது பற்றித்தான் எந்த அறிவும் இல்லாமல் போய்விட்டது.”

“எனக்கு ஒரு துயரார்ந்த எதிர்காலமே தெரிகிறது, இந்த வருடம் முடியும் வரையில் இப்போதைக்கு நிச்சயமாக எதையுமே கூற இயலாது. ஒரே நிச்சயமான விஷயம் என்னவென்றால், இந்த சூழ்நிலை மேலும் மேலும் மோசமடையும், பொருளாதாரம் தலைகீழ் வீழ்ச்சியடையும், வைரஸ் காரணமாக மட்டுமல்லாமல் பசியின் காரணமாக ஏற்படும் விளைவுகளையும், வேலையின்மையால் ஏற்படும் நிராதரவான நிலைமைகளையும் மக்கள் தாங்க வேண்டியிருக்கும்.”

யஷ்வத் சின்ஹாவின் இந்த பேச்சில் இருக்கும் உண்மையும் எதார்த்தமும் நுணுக்கமும் நம்மைச் சுடுகிறது, பேரச்சத்தில் ஆழ்த்துகிறது.

– இரா.செந்தில்  

 Source: thecitizen.in

Total Page Visits: 274 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *