அமெரிக்காவில் சீனா எதிர்ப்பு அரசியல் வைரஸ் – கொம்புக்காரன்

சீனாவுடனான உறவை, புதிய பனிப்போரின்
விளிம்புக்கு அமெரிக்கா தள்ளிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள சில அரசியல் சக்திகள்,
சீனா-அமெரிக்கா உறவை சீர்கெடுக்க முயற்சிக்கின்றன
– சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி

உலகம் முழுவதும் ஆக்கிரமித்து மனித குலத்தையே கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், தற்போது சர்வதேச அரசியல் சூழலையே மாற்றி இருக்கிறது. கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா தொடர்ந்து சீனாவை குற்றச்சாட்டி வருவதுடன், சீனாவுக்கு பலவகையிலும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை சீனா முழுமையாக மறுத்து வருவதுடன், தொடர்ந்து தனது தரப்பு விளக்கத்தையும் அளித்து வருகிறது. அந்த வகையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மே 24-ம் தேதி அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது: “சீனாவுடனான உறவை, புதிய பனிப்போரின் விளிம்புக்கு அமெரிக்கா தள்ளிவிடுகிறது. அமெரிக்காவில் உள்ள சில அரசியல் சக்திகள், சீனா-அமெரிக்கா உறவை சீர்கெடுக்க முயற்சிக்கின்றன. இருநாடுகளுக்கு இடையில் புதிய பனிப்போரை உருவாக்க முயற்சிக்கின்றன.

சீனாவின் பெயரை சர்வதேச அளவில் கெடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. சீனாவுக்கு எதிராக தகவல்களைப் பரப்பி வருகிறது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக ஒரு அரசியல் வைரஸ் பரப்பப்படுகிறது. இந்த அரசியல் வைரஸை சீனாவுக்கு எதிராக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள சில அரசியல்வாதிகள் அடிப்படை உண்மைகளை புறந்தள்ளி, சீனாவுக்கு எதிராக பல பொய் செய்திகளைப் பரப்பி சதிவேலையில் ஈடுபடுகின்றனர். அது எங்கள் கவனத்திற்கு வந்துக்கொண்டிருக்கின்றன,” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே, ‘கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து உலக நாடுகளிடம் விழிப்பணர்வை ஏற்படுத்த முயன்ற சீனர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் இதுவரை தெரியவில்லை. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் என்ற உண்மையை சீனா முழுமையாக மறைத்துவிட்டது. மேலும், கொரோனா வைரஸின் ஆரம்பகால மூலகூறுகளையும் சீனா அழித்துவிட்டது. இப்போது சீனா நாடகமாடுகிறது,’ என அமெரிக்கா குற்றச்சாட்டியதை தொடர்ந்து, ஆஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் குற்றச்சாட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து, சீனாவிற்குள் சென்று ஆய்வு நடத்தவேண்டும் என்ற தனது விருப்பத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், சீனாவின் வூகான் நகரில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தின் இயக்குநர் சீன தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “வூகான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதாக கூறுவது கட்டுக்கதை. கடந்த டிசம்பர் 30-ம் தேதி புதிய வகை நிமோனியா காய்ச்சல் பரவுவது எங்கள் கவனத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சளி மாதிரியை ஆய்வு செய்தபோது, அது புதிய வகை கொரோனா வைரஸ் என்பது தெரிய வந்தது அதுவரை இந்தப் புதிய கொரோனா வைரஸ் குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. அப்போதுதான் முதல் முறையாக எதிர்கெள்கிறோம். அப்படியிருக்கும்போது எங்கள் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் எவ்வாறு பரவியிருக்க முடியும்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் வௌவ்வால்களிடம் இருந்து கொரோனா வைரஸை பிரித்தெடுத்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். எங்களிடம் 3 வகையான கொரோனா வைரஸ் மூலக்கூறுகள் உள்ளன. அதில் ஒருவகை மூலக்கூறு. சார்ஸ் வைரஸுடன் 96 சதவீதம் ஒத்துப்போகிறது. புதிய வகை கொரோனா வைரஸுடன் எங்களிடம் இருக்கும் வைரஸ் மூலக்கூறு 79.8 சதவீதம் மட்டுமே ஒத்துப்போகிறது.

உலகில் தற்போது பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளது என்று பெரும்பாலான சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அறிவியல் சார்ந்த விவகாரம். அறிவியல் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க முடியும். இதற்கு சர்வதேச விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சீன வெளியுறவு அமைச்சர், “கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது. எவ்வாறு பரவியது என்பது குறித்து சர்வதேச விசாரணைக்கு சீனா தயாராக உள்ளது, ஆனால், அந்த விசாரணை நேர்மையாக, பாரபட்சமின்றி நடைபெற வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது,” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-சீனா இருபக்க அறிவிப்புகளையும் பார்க்கும்போது பிரச்சினையின் தீவிரம் தெரிகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு 1 லட்சத்தை கடந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்திருக்கும் அமெரிக்க மக்களின் பொது உளவியலை சம்தானம் செய்ய, அமெரிக்க அரசு ஒரு போரை நடத்துவதற்கான வாய்ப்புகள் கூடிக்கொண்டே போகிறது. நடப்பது எதுவும் நல்லதற்கில்லை.

-கொம்புக்காரன்

நன்றி: சதுரங்கம்.காம்

Total Page Visits: 92 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *