லடாக்: இந்தியா-சீனா மோதல் – பின்னணியில் அமெரிக்கா: வசீகரன்

சீனாவுக்கு எதிராக ஒரு போர் வருமானால்,
வரலாற்றில் முதல் முறையாக,
இந்திய மண்ணில் நின்று
அமெரிக்க ராணுவம் போர் செய்யவும்
வாய்ப்பிருக்கிறது.

மத்திய பிஜேபி அரசு காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை இரண்டு மாநிலங்களாக பிரித்தது. அதில் லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக உள்ளது. அங்குள்ள லடாக் ஏரிக்கு அருகே இந்திய ராணுவம் தற்போது சாலை அமைத்துவருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவும் சீனாவும் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் ஆரம்பம் முதலாகவே அருணச்சலப் பிரதேசத்தில் சீனா உரிமைக் கோரி வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம்.

இதற்கிடையே, சிக்கிமில் உள்ள டோக்லாம் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி, அங்கு கடந்த 2017-ம் ஆண்டு தனது ராணுவ வீரர்களை நிறுத்த முற்பட்டது. அப்போது இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் சமரசம் உருவானது.

தற்போது இந்திய ராணுவம் சாலை அமைக்கும் லடாக் ஏரிப் பகுதியை, சீனா தன்னுடையது என சொந்தம் கொண்டாடி, அதிக அளவில் ராணுவ வீரர்களையும் குவித்துள்ளது. இதன் காரணமாக, இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் பதட்டம் நிலவுகிறது. இதுதொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சமரசம் ஏற்படவில்லை.

இந்நிலையில், தெற்கு மற்றும் மத்திய ஆசியா நாடுகளுக்கான மூத்த அமெரிக்க அதிகாரி ஆலிஸ் வெல்ஸ், சீனா இந்திய எல்லையில் தொந்தரவு செய்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் சீனா பலமுறை பிரச்சனை செய்துள்ளது. அப்போது எல்லாம் அமெரிக்க தனது கண்டனத்தை பகிரங்கமாகவோ, நோரடியாகவோ கூறியதில்லை.

கடந்த ஆண்டு இறுதியில், மோடி அரசு சீனா அதிபரை மகாபலிபுரம் அழைத்து வந்து, கௌரவித்து வரலாற்றுப் பெருமைத் தேடிக்கொண்டது. சீன அதிபர் வருகையின் மூலம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதார உறவுகள் மேம்படுவதுடன், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்துவந்த வரலாற்று ரீதியான சச்சரவுகளும் நீங்கும் என மத்திய அரசு அப்போது விளக்கமளித்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னால் நிலைமை மீண்டும் தழைகீழாக மாறியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரிக்கத் துவங்கியதுமே, அதிபர் டிரம்ப் சீனாவின் மீது குற்றச்சாட்டத் துவங்கிவிட்டார். கொரோனா பற்றிய உண்மைகளை சீனா உலகத்திடம் மறைத்துவிட்டது. சீனாவிற்குள் சென்று அமெரிக்கா ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இப்படி வரிசையாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, இறுதியில் உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்துவரும் நிதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால், நிதியுதவி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியா உட்பட 120 நாடுகள் கொரோனா வைரஸ் பரவல் குறித்து விசாரனை நடத்தும்படி, உலக சுகாதார நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளன.

ஏற்கனவே, கொரோனா ரேபிட் கிட் கருவி விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்சினை எழுத்துள்ளது. இந்தியாதான் முதலில் சீனாவிடம் ரேபிட் கிட் வாங்க ஆர்டர் கொடுத்தது. ஆனால், இந்தியாவுக்காக தயார் செய்யப்பட்ட ரேபிட் கிட்டுகளை அமெரிக்கா வாங்கிச் சென்றுவிட்டது. அதன்பின், சீனாவில் இருந்து 5 லட்சம் ரேபிட் கிட்டுகள் இந்தியாவிற்கு வந்தன. அந்த ரேபிட் கிட்டுகள் தவறான முடிவுகளை காட்டுகின்றன என்று இந்தியா புகார் கூறியதுடன், மாநில அரசுகள் அதைப் பயன்படுத்தவும் தடை விதித்தது. அந்தக் கருவிகளை திருப்பி அனுப்ப உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த கருவியை தயாரித்த சீன நிறுவனங்கள்,  “அந்தக் கருவியில் எந்த குறையும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்த்த் கருவியை பயன்படுத்திய இந்தியாவை தவிர, வேறு எந்த நாடும் இதுவரை குறைக்கூறவில்லை,” என மறுப்புத் தெரிவித்துள்ளன. அந்த ரேபிட் கிட் கருவி பற்றி அமெரிக்காவும் இதுவரை குறைகூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கொரோனாவுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும், இந்தியாவின் பங்குச் சந்தை ஒரேயடியாக சரிந்தது. அந்த நேரத்தில், கொரோனாவை சமாளித்து முடித்திருந்த சீனா, இந்திய நிறுவனங்களின் பங்குகளை பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா மூலம் வாங்கிக் குவித்தது. இதைப் பார்த்து எச்சரிக்கை அடைந்த இந்தியா, அந்நிய முதலீட்டு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, இந்திய நிறுவனங்களின் பங்குகளை சீனா வாங்குவதை கட்டுப்படுத்தியது. இந்த சூழ்நிலையில்தான், இந்திய-சீன எல்லையில் சச்சரவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும் இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் கூறும்போது, தென் சீன கடல் பகுதியாக இருந்தாலும் சரி அல்லது வேறு விவகாரங்களாக இருந்தாலும் சரி, சீனாவின் ஒவ்வொறு நடவடிக்கையும் அச்சுறுத்தலையே நினைவூட்டுகின்றன. தற்போது இந்திய எல்லையில் தொடர்ந்து தொந்தரவு தரும் நடவடிக்கையில் சீனா ஈடுப்பட்டுள்ளது. தனது பலத்தை காட்டும் விதத்தில் சீனா தொடர்ந்து இதுபோல் செயல்படுகிறது. பலத்தைக் காட்டி ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபடுகிறது. இதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்,” என்றார்.

சீனா-அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுப்பெற்றுவரும் நிலையில், இப்படிப்பட்ட பேச்சு வர இருக்கும் போர் ஒன்றிற்கான முன்னறிவிப்பு போல தோன்றுகிறது. சீனாவுக்கு எதிராக அப்படி ஒரு போர் வருமானால், வரலாற்றில் முதல் முறையாக, இந்திய மண்ணில் நின்று அமெரிக்க ராணுவம் போர் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

நன்றி: சதுரங்கம்.காம்

தொடர்புடைய கட்டுரைகள்:

அமெரிக்கா – சீனா மோதல்: கொரோனாவால் ஒரு போரா? – வசீகரன்
அமெரிக்கா ஒரு நாகரீக தேசமா? – ரான் ஃபார்தஃபர்
Total Page Visits: 298 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *