ஒரு பத்திரிக்கையாளனின் வாக்குமூலம் – அபய் குமார்

இன்று பத்திரிக்கைத்துறையின் தரத்தை
நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
இந்தியாவில் இந்த தொழிலுக்கு இழுக்கைத் தேடித் தந்துள்ள
இந்த பத்திரிக்கையாளர் கூட்டம்தான்,
நாட்டில் உள்ள சமூகம் மற்றும் ஜனநாயக அரசின் ஒருமைப்பாட்டிற்கு
பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

என் குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் ஒரு பத்திரிக்கையாளனாக ஆசைப்பட்டேன். என் பயணத்தை நான் ஒரு உருது மொழி செய்தித்தாளில் இருந்து தொடங்கினேன். என்னுடைய முதல் கட்டுரைகள் சில கிரிக்கெட் பற்றியதாக அமைந்திருந்தன. கிரிக்கெட்டை டிவி-யில் பார்த்தும், நண்பர்களும் விளையாடியும் அதைப்பற்றி எழுதினேன். சீக்கிரத்திலேயே, ரக்ஸால் என்ற என்ற என் சொந்த ஊரில் இருந்தபடி செய்தித் தொடர்பாளராக வேலைசெய்யத் தொடங்கினேன்.

பத்திரிக்கைத் துறைக்கு வந்த பின்னர்தான், இந்த உலகத்தைப் பற்றி நான் எந்தளவுக்கு கொஞ்சமாக தெரிந்து வைத்திருக்கிறேன் என்பதையே உணர்ந்தேன். என்னுடைய ஆங்கில அறிவும் பலவீனமாக இருந்தபடியால் என் பட்டப்படிப்பில் ஆங்கில இலக்கியம் படிக்க முடிவெடுத்தேன். ஒரு நல்ல உருது மொழி பத்திரிக்கையாளராக இருக்க வேண்டும் என்றால்கூட ஆங்கில மொழி அவசியம் என்பது எனக்குத் தெரியும்.

என்னுடைய பட்டப்படிப்பு நாட்களில், ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டேன். என்னுடைய கட்டுரைகள் சீக்கிரத்திலேயே பாட்னா, இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாயின. அவர்கள் வாராந்திர இளைஞர் பக்கத்தில் அவற்றை பதிப்பித்தனர்.

இறுதியாண்டு தேர்வுக்குப் பின்னர், நான் Indian Institute of Mass Communication பற்றி தெரிந்துகொண்டேன். பத்திரிக்கைத்துறை பற்றிய படிப்பிற்கு இந்த நிறுவனம் ஒரு மரியாதைக்குரிய இடம் வகிப்பதாக சொல்லப்பட்டது. அங்கே நுழைவுத் தேர்வில் தகுதிபெற்று ஒரு வருடத்திற்கு பத்திரிக்கைத்துறை பற்றி படித்தேன். அங்கிருந்து, ஒரு முன்னணி ஆங்கில தினசரியில் வேலைக்கு சேர்ந்த நான், டெல்லியில் ஒன்றரை வருட காலம் ஒரு செய்தியாளராக வேலை செய்தேன்.

ஆனால், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி புரிந்துகொள்ள நான் இன்னமும் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. அதனால் வேலையை விட்டுவிட்டு உயர் கல்வியில் இன்னும் சில ஆண்டுகளை செலவிட தீர்மானித்தேன். அந்த செய்தித்தாள் பத்திரிக்கையில் இருந்து பல்கலைக்கழகம் சென்றேன். இங்குதான் என்னுடைய எம்ஏ, எம்பில் மற்றும் பிஎச்டி படித்து முடிக்க பத்தாண்டு காலத்தை செலவிட்டேன்.

அவ்வகையில், ஒரு நல்ல பத்திரிக்கையாளரின் முதல் தகுதி புத்தகங்களுடன் நேரம் செலவிடுவதுதான். இதனால் நான் களப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தமல்ல. ஒரு முக்கியமான இந்த சமூகவியலாளர் வாதிடுவதைப் போல், புத்தகப் பார்வைக்கும் களப்பார்வைக்கும் இடையில் ஒரு ஒத்திசைவு இருந்தே ஆகவேண்டும். இன்றுள்ள பெரும்பான்மையான பத்திரிக்கையாளர்கள் வாசிப்பதன் அவசியத்தை உணர்வதே இல்லை. இதனை அவர்கள் தங்களுடைய தொழிலில் “மிகச்சிறிய அளவு முக்கியத்துவம்” கொண்டது என்றே கருதுகின்றனர்.

ஒரு பத்திரிக்கையாளரின் இரண்டாவது நல்ல தகுதி என்றால், ஒரு விஷயத்தைப் பற்றிய எல்லா தரப்பினரின் கூற்றுக்களையும் சேர்ப்பதுதான். செய்தி எழுதும்போது, உண்மையுடன் அபிப்பிராயத்தை கலப்பதை அவர் தவிர்க்க வேண்டும். தன்னுடைய அபிப்பிராயத்தை ஒரு தனி துண்டுப் பகுதியாக எழுத அவருக்கு சுதந்திரம் உண்டு, ஆனால் செய்திக்கும் பார்வைக்கும் உண்டான ஒரு பிரிவுச் சுவர் இருந்தே ஆகவேண்டும். இந்தப் பிரிவுச் சுவர் இன்றுள்ள ஊடக நிறுவனங்களால் இடிக்கப்பட்டுவிட்டது.

மூன்றாவது தகுதி என்பது பரபரப்பையும் பதற்றத்தையும் தவிர்ப்பது. அதற்குப் பதிலாக, அவர் உண்மை நிலவரங்களைத்தான் தெரிவிக்க வேண்டும். அந்த நிலவரங்கள் கிராஸ்-செக் செய்யப்பட வேண்டும். அவர் தன்னுடைய மொழித்திறனை தெளிவாகவும் எளிதாகவும் வைத்துக்கொள்ள வேண்டும், ஆனால் உள்ளடக்கத்தின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.

மக்களுக்கு நம்பகமானவராக இருக்க வேண்டியது ஒரு பத்திரிக்கையாளரின் நான்காவது தகுதி. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், மிகுந்த பாதிப்புக்கு உள்ளானோரை அவர் முதல் இடத்தில் வைக்க வேண்டும். அவர் செய்தித்தாள் அதிபருக்கு “விசுவாசமாக” இருக்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது ஒரு தலைவரின் நலன்களைப் பற்றி எல்லாம் அவர் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

ஐந்தாவது தகுதி என்பது, மக்கள் சொல்வதைக் கேட்க அவர் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். அவர் ஆணவம் கொண்டவராக மட்டும் இருக்கவே கூடாது. முதல் பார்வையிலேயே “தெளிவாக இல்லை” எனத் தோன்றுவதை புரிந்துகொள்ள அவர் முயற்சி செய்தாக வேண்டும். ஒரு நிறுவனத்தின் மேல்மட்டத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பத்திரிக்கையாளர், விளிம்புநிலை மக்களுக்கு குரல் கொடுக்க முயற்சிக்க வேண்டும். செய்தியறை மற்றும் எடிட்டோரியல் பகுதி மட்டுமே யாரோ சிலரையும், சில பணக்கார மனிதர்களையும் பங்கேற்க வைத்து அதனுடைய ஒட்டுமொத்த உரிமையையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் பரந்துபட்ட சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும். ஊடகம் என்பது  அரசாங்கத்தின் தயவு மற்றும் கார்ப்பரேட் விளம்பரங்கள் ஆகியவற்றை மிகவும் கடைசி கட்டத்திற்குத்தான் சார்ந்திருக்க வேண்டும்.

இந்த தகுதிகளையும், அடிப்படை அம்சங்களையும் மனதில் வைத்துக்கொண்டு இன்று பத்திரிக்கைத்துறையின் தரத்தை நீங்களே இப்போது மதிப்பிட்டுக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் இந்த தொழிலுக்கு இழுக்கைத் தேடித் தந்துள்ளனர். அவர்கள் தங்கள் கழுத்துவரையில் ஊழலில் புதைந்து போயிருக்கின்றனர், பத்திரிக்கைத் துறையின் ஏபிசி-யைக்கூட அவர்கள் பின்பற்றத் தவறிவிட்டனர்.

அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு பத்திரிக்கையாளனாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். அவர்கள் ஒரு உண்மையான பத்திரிக்கையாளராக செயல்படுவதில்லை, மாறாக எப்போது பார்த்தாலும் பொய்களையும் வெறுப்பையுமே பரப்பி வருகிறார்கள். இன்று, இந்த பத்திரிக்கையாளர் கூட்டம்தான் நாட்டில் உள்ள சமூகம் மற்றும் ஜனநாயக அரசின் ஒருமைப்பாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள்.

தமிழில்: மர்மயோகி

Abhay Kumar is a PhD from JNU. Minority and Social Justice are areas of interest.

You may write to him at debatingissues@gmail.com

Source: https://countercurrents.org/2020/05/why-i-feel-ashamed-of-being-a-journalist

தொடர்புடைய கட்டுரை: பத்திரிக்கைத்துறை: உண்மைக்குப் பிந்தைய யுகத்தில் – சுலஃப்கார் அஹ்மத்

Total Page Visits: 941 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *