பத்திரிக்கைத்துறை: உண்மைக்குப் பிந்தைய யுகத்தில் – சுலஃப்கார் அஹ்மத்

உண்மைக்குப்-பிந்தைய யுகத்தில்,
நமக்கு நாமே பயிற்றுவித்துக் கொள்வதும்,
தகவல் தெரிவித்துக் கொள்வதும் நம்முடைய பொறுப்புத்தான்,
நம்முடையது மட்டும்தான்,
ஏனென்றால் நம்மை அறியாமையில் வைத்திருப்பதும்,
அடிபணிய வைத்திருப்பதும்தான்
நம்முடைய ஆளும் வர்க்கத்தின் விருப்பங்கள்.

 

ஜார்ஜ் ஆர்வெல் ஒருமுறை மிகச்சரியாக கூறினார், “ஒரு சமூகம் உண்மையில் இருந்து எவ்வளவு அதிகமாக விலகிச்செல்கிறதோ அதைப் பேசுபவர்களையும் அந்தளவுக்கு வெறுக்கும்.” அமெரிக்க எழுத்தாளர் மார்க் டிவைன், “உண்மையானது தன் கால்களில் செருப்பு போட்டுக்கொள்ளும் நேரத்தில் பொய் இந்த உலகில் பாதியை சுற்றி வந்திருக்கும்,” என்கிறார். பொய்யிற்கு ஒரு மிகப்பெரிய சந்தையும், போதுமான வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள், அதேநேரம், உண்மையின் நிலை அதற்கு நேர் எதிராக இருக்கிறது என்றே தோன்றுகிறது. பத்திரிக்கைத் துறையானது உண்மைக்குப்- பிந்தைய யுகத்தில் ஒரு லாபகரமான, அதேசமயம் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய தொழிலாகவும் மாறியிருக்கிறது.

இது ஒரு உலகளாவிய தொழில், பரந்த அளவுக்கு எட்டக்கூடியது; ஆகையால், இதை கேள்வி கேட்கத்தான் வேண்டியுள்ளது. உண்மைக்குப்-பிந்தைய யுகத்தில், நமக்குச் சொல்லப்படுகின்ற அல்லது நமக்கு காட்டப்படுகின்ற விஷயங்கள் உண்மையில் நம்பகமானவைதானா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வது உண்மையிலேயே கடினம். நாள் முழுவதும் நமக்கு அளிக்கப்படுகின்ற தகவல் பெருக்கத்தினால் எந்த செய்தி நம்பகமானது மற்றும் உண்மையானது என்பதை அடையாளம் காண்பதில் வாசிப்பவர்கள்/பார்வையாளர்களுக்கு குழப்பமே ஏற்படுகிறது. இலாபத்தை நோக்கமாகக் கொண்ட பத்திரிக்கைத்துறையில், எந்தச் செய்தியை தெரிவிக்க வேண்டும், எதைத் தெரிவிக்க வேண்டாம் என்பதைத் தேர்வுசெய்வது பத்திரிக்கையாளர்களுக்கும் சுலபமானதல்ல. பெரும்பாலான நேரங்களில், ‘பெரும்பான்மையினர்’ அங்கீகரிக்கின்ற மற்றும் படிக்க/பார்க்க விரும்புகின்ற அல்லது ஆளும் அதிகார அமைப்பின் செயல்திட்டத்திற்கு பொருந்தக்கூடிய செய்திகளை அளிக்கவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

தற்சமயம், இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு இடையில் ஒரு தெள்ளத்தெளிவான பிரிவினைக் கோடு உள்ளது; முதல் பிரிவில் ஆளும் கட்சியின் ‘அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர்களாக’ உள்ளவர்கள் இடம்பெற்றிருப்பர்; இரண்டாவது பிரிவில் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுகின்ற பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றிருப்பர். மேலும், இந்த இரண்டாம் பிரிவினர் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை விடாமல் கேள்வி கேட்பவர்களும் ஆவர். இந்த வகையான பத்திரிக்கையாளர்கள்தான், அவர்களை விரும்பாவதவர்களால் நாளுக்கு நாள் துன்புறுத்தப்பட்டு, மிரட்டப்பட்டு, அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இவர்கள் மிக சுலபமாக ‘நகர்ப்புற நக்சல்கள்’ அல்ல ‘காங்கிரஸ் செய்தியாளர்கள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். பிற பத்திரிக்கையாளர்கள் காட்டுவதற்கோ அல்லது சொல்வதற்கோ துணியாத செய்திகளை சொல்லவும்/காட்டவும் செய்கின்ற செய்தியாளர்களை ‘வேட்டையாடும்’ ஒரு புதிய போக்கினை ஆளும் அதிகார அமைப்பு சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. இந்தப் போக்கின் ஒரு சமீபத்திய உதாரணம் என்னவென்றால், பேஸ்புக்கில் ‘தேச-விரோத’ விஷயங்களை பதிவு செய்துள்ளதான குற்றச்சாட்டில் காஷ்மீரை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகும்.

ஆளும் கட்சிகளின் செயல்திட்டத்திற்கு பொருத்தமான செய்திக்கதைகள் அல்லாமல், எல்லோருக்குமே ஒரு ‘அசௌகரியமான உண்மையாக’ இருக்கும் செய்திகளை வெளியிடுவதுதான் பத்திரிக்கைத் துறையின் நோக்கம் என்பதில் விவாதத்திற்கே இடமில்லை. அது குரலற்றவர்களின் குரலாக, எந்த ஒரு சமூகத்தினதும் விளிம்புநிலையில் உள்ளவர்களின் செய்தியாளராகவும்தான் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, உண்மைக்குப்-பிந்தைய யுகத்து பத்திரிக்கைத்துறை தன்னுடைய அடிப்படை நோக்கத்தில் இருந்தே விலகிச் சென்றுவிட்டது. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இது பாதகமான வகையில் ‘பொது உளவியலை’ பாதிக்கிறது.

இன்றுள்ள காலங்களில், ‘போலி உண்மை’ என்ற, நாஜிக்களின் ஜோசப் கோயபல்ஸிற்கு உரித்தான கருத்தாக்கத்திற்கு ஏற்ற வகையில்தான் பத்திரிக்கையாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்தப் போலி உண்மை என்பது, ‘ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் அதுவே உண்மையாகிவிடும்’ என்ற விதியை அடிப்படையாக கொண்டது. இவையெல்லாமே, ‘விவாதப்பூர்வமான குடிமக்கள்’ என்பதற்கு பதிலாக ‘செவிட்டு ஆட்டுக்குட்டிகள்’ மற்றும் ‘கட்டுப்படுத்தப்பட்ட குடிமக்கள்’ என்போர்களையே உருவாக்குகின்றன. இவை எல்லாம், இதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. உண்மைக்குப்-பிந்தைய யுகத்திலான பத்திரிக்கைத் துறையானது தனிநபர் அளவிலும், சமூக அளவிலும் ‘சந்தேகவாதத்தை’ உருவாக்கிவிட்டிருக்கிறது. பலிகடாவாக்குதல், எதிர்காலம் குறித்த அச்சம், வன்முறை, மற்றும் மக்களை இருதுருவமாக்குவதல் ஆகிய எல்லாமே, தற்கால பத்திரிக்கைத்துறையின் துணை-தயாரிப்பாகிய சந்தேகவாதத்தின் எதிர்மறை விளைவுகள்தான்.

உண்மைக்குப்-பிந்தைய யுகத்தில், தங்களுக்கு அளிக்கப்படுகின்ற கூற்றுக்கள் மற்றும் செய்திகளை மறு-சோதனைக்கு உட்படுத்த வேண்டியது படிப்பவர்/பார்ப்பவருடைய பொறுப்புதான் என்றாகிவிட்டது. நமக்கு நாமே பயிற்றுவித்துக் கொள்வதும், தகவல் தெரிவித்துக் கொள்வதும் நம்முடைய பொறுப்புத்தான், நம்முடையது மட்டும்தான், ஏனென்றால் நம்மை அறியாமையில் வைத்திருப்பதும், அடிபணிய வைத்திருப்பதும்தான் நம்முடைய ஆளும் வர்க்கத்தின் விருப்பங்கள். மேலும், படிப்பவர்/பார்ப்பவர் என்போர் தயார்நிலையில் உள்ள கருத்தாக்கங்களை அப்படியே போட்டு விழுங்கிவிடாமல், தங்களுக்கு காட்டப்பட்டதையும் சொல்லப்பட்டதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்.

தமிழாக்கம்: இரா.செந்தில்

சுலஃப்கார் அஹ்மத் –

அரசியல்-அறிவியல் ஆராய்ச்சியாளர்,

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் 

நன்றி: Countercurrents.org

 

Total Page Visits: 307 - Today Page Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *