பெருந்தொற்றில் வெற்றிபெறுதல் போரில் சண்டையிடுவது அல்ல: அமர்த்யா சென்

சமூகப் பேரிடரை சமாளித்தல் என்பது போரில்
சண்டையிடுவதைப் போன்றதல்ல. போரின்போது மட்டும்தான்,
தலைவர் விரும்புவதையே எல்லோரையும் செய்ய வைக்கும் வகையில்,
உச்சிமுதல் உள்ளங்கால் வரையிலான அதிகாரத்தை பயன்படுத்துவது
சரியாக இருக்கும் – இதற்கு யாரையும்
கலந்தாலோசிக்க தேவையில்லை.
மாறாக, ஒரு சமூகப் பேரிடரை எதிர்கொள்ள
ஆட்சியாளர்கள் பங்கேற்பும்,
கவனமான பொது விவாதமும்தான் தேவைப்படுகிறது.

உலகிலேயே இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு, மற்றும், அதுதான் உலகிலேயே மிகப்பழமையான வளரும் நாடு என்ற உண்மையில் பெருமைகொள்ள நமக்கு காரணம் இருக்கிறது. எல்லா மக்களுக்கும் குரல் கொடுத்திருப்பதற்கும் மேலாக, இந்த ஜனநாயகமானது, நமக்கு பலதரப்பட்ட நடைமுறைப் பலன்களையும் அளித்திருக்கிறது. இருந்தாலும், இந்த நாடு மிகப்பிரமாண்டமான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும்போது, மிகவும் அதிகமாக தேவைப்படுகின்ற அதே ஜனநாயகத்தை நாம் நல்லமுறையில் பயன்படுத்துகிறோமா என்பதுதான் கேள்வி.

முதலில் கொஞ்சம் வரலாற்றைப் பார்க்கலாம். பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வரும் நேரத்தில், புதிதாக அமைவிக்கப்பட்ட ஜனநாயகமானது, இந்தியா தனது பலன்களை நேரடியாக அனுபவிக்கும் வகையிலேயே தொடங்கியது. சர்வாதிகார பிரிட்டிஷ் ஆட்சி முழுவதிலும் இடைவிடாமல் தோன்றிக்கொண்டிருந்த பஞ்சங்கள், ஜனநாயக இந்தியா அமைக்கப்பட்ட உடனே சட்டென்று நின்றுபோனது. கடைசி பஞ்சம் என்றால், அது சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், நான் சிறுவனாக இருக்கும்போது நேரில் கண்ட 1943-ஆம் ஆண்டு வங்காள  பஞ்சம்தான், அதுவே காலனிய ஆட்சியின் முடிவாகவும் அமைந்துபோனது. அப்போதில் இருந்து இந்தியாவில் எந்தவித பஞ்சமும் ஏற்படவில்லை, அத்துடன், சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப பத்தாண்டுகளில் ஏற்படப்போவதாக அச்சுறுத்திய பஞ்சங்களும் தீர்க்கமான முறையில் தவிர்க்கப்பட்டன.

இது எப்படி நடந்தது?

பஞ்சங்களை தடுப்பதற்கு கடுமையாக செயலாற்றும் திறனுக்கான, மிகவும் வலுவான ஊக்கத்தை ஜனநாயகம்தான் அரசாங்கத்திற்கு கொடுத்திருந்தது. பலதரப்பட்ட பொது விவாதங்கள் மற்றும் தேர்தல்களின் கலவையான நிழ்வுப் போக்கினால், மக்களின் தேவைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்க வேண்டியிருந்தது. ஆனாலும், தேர்தல்களால் மட்டுமே இதை செய்துவிட முடியவில்லை.

உண்மையில், ஒன்றுக்கும் மற்றொன்றிற்கும் இடையில் பெரிய இடைவெளியுடன், குறிப்பிட்ட காலப்பகுதியில் நடக்கின்ற சுதந்திரமான தேர்தல்களுக்கான அமைப்பு என்று மட்டுமே ஜனநாயகத்தைப் புரிந்துகொள்ளக் கூடாது. அத்துடன், அதன் கூடவே சேர்ந்து உருவான அரசியல் சூழலால் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கில் நாம் ஊசலாடவும் கூடாது.

உதாரணத்திற்கு, 1982-இல் ஃபாக்லேண்ட்ஸ் போருக்கு முன்னர், தேர்தல்களில் மோசமான இழுபறிக்கு ஆளாகியிருந்த மார்கரெட் தாட்சர் அந்தப் போரினால் (ஆளும் அரசாங்கங்கள் எப்போதும் செய்வது போலவே) பெரும் அதிர்ஷ்டம் பெற்றார். மேலும், அதைத் தொடர்ந்து வந்த 1983-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் சௌகரியமாக வெற்றியும் பெற்றார்.

அத்துடன், பாராளுமன்ற அமைப்பில் நடக்கும் பொதுத்தேர்தல்கள்கூட பாராளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மை இடங்களைப் பெறுவதையே பிரதான நோக்கமாக கொண்டவை.

வாக்களிப்பு முறையில் சிறு பகுதி மக்களின் நலன்கள் அல்லது உரிமைகள் பற்றிய, எந்தவித முறைப்படியான விதிமுறையும் கிடையாது. அப்படிப் பார்த்தால், மக்கள் அனைவரும் தங்களுடைய சொந்த நலன்களின் அடிப்படையில்தான் வாக்களித்திருப்பார்கள் எனும்போது, ஒரு தேர்தலானது பஞ்சத்திற்கு பலியாகிறவர்களின் உறுதியான ரட்சகனாக இருந்துவிட முடியாது, ஏனென்றால் எந்த ஒரு பஞ்சத்திலுமே வெறும் சிறு பகுதி மக்கள்தான் பட்டினி கிடக்கிறார்கள் என்பதே உண்மை.

இருந்தாலும், பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் வெளிப்படையான பொது விவாதம் ஆகியவற்றால்தான், பாதிக்கப்படக்கூடிய ஏழைகள் எதிர்கொள்கின்ற துன்பத்தையும் ஆபத்தையும் பெரும்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தவும் புரியவைக்கவும் முடிகிறது, இதுபோன்ற அழிவு நடப்பதற்கு அனுமதிக்கின்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆட்டிவைக்கவும் முடிகிறது. மனிதர்களின் மீது இரக்கம்கொள்ளவும், அவர்களை புரிந்துகொள்ளவும் முடிகின்ற மனிதர்கள் மற்றும் கட்சிகளால்தான் அரசாங்கம்கூட நடத்தப்படுகிறதே என்பதே உண்மை, ஆகையால், பொது விவாதத்தில் இருந்து தெரிந்துகொண்ட தகவல் மற்றும் ஆய்வுகள் அரசாங்கத்தின் மீது நேரடி தாக்கம் ஏற்படுத்தலாம்.

சிறு பகுதி மக்கள் மட்டுமே பஞ்சத்தினால் ஏற்பட்ட வறுமையை உண்மையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும்கூட, பொது விவாதம் மற்றும் சுதந்திரமான பத்திரிக்கை விவாதத்தினால் தகவல் தெரிவிக்கப்பட்ட, ஒரு கவனமுள்ள பெரும்பான்மையானது அரசாங்கத்தை எதிர்வினையாற்ற வைக்க முடியும்.

இது அனுதாப உணர்வின் ஊடாகவும் நடக்கலாம் (அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது), அல்லது தன்னுடைய செயல்பாடின்மையால் (அரசாங்கம் எந்த அக்கறையுமே இல்லாமல் இருக்கும்போது) உருவாக்கப்பட்டிருக்கும் எதிர்ப்பு உணர்வின் ஊடாகவும் நடக்கலாம்.

ஜனநாயகத்தை “விவாதப்பூர்வமான ஆளுகை” எனும் ஜான் ஸ்டூவர்ட் மில்லின் பகுப்பாய்வானது, பஞ்சத்திற்கு பலியாக்கூடிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பவரை காப்பாற்றும் ரட்சகனை அடையாளம் காண உதவுகிறது, குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் கட்டுப்பாடில்லாத விவாதத்தம்தான் இதற்கு  மிகவும் உதவிகரமாய் இருக்கிறது.

சமூகப் பேரிடரை சமாளித்தல் என்பது போரில் சண்டையிடுவதைப் போன்றதல்ல. போரின்போது மட்டும்தான், தலைவர் விரும்புவதையே எல்லோரையும் செய்ய வைக்கும் வகையில், உச்சிமுதல் உள்ளங்கால் வரையிலான அதிகாரத்தை பயன்படுத்துவது சரியாக இருக்கும் – இதற்கு யாரையும் கலந்தாலோசிக்க தேவையில்லை.

மாறாக, ஒரு சமூகப் பேரிடரை எதிர்கொள்ள ஆட்சியாளர்கள் பங்கேற்பும், கவனமான பொது விவாதமும்தான் தேவைப்படுகிறது.

பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஒப்பீட்டுரீதியில் வாய்ப்பு வசதி பெற்றிருக்கும் அதிப்படியான மக்களைக் காட்டிலும், சமூகரீதியாக கீழ்நிலையில் இருக்கலாம், அதேபோல் பல்வேறு சமூகப் பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் இருக்கலாம், ஆனால் பொது விவாதத்தை கவனிப்பதே, என்ன செய்ய வேண்டும் என்பதை கொள்கை-வகுப்பாளர்கள் புரிந்துகொள்ள வகை செய்யும். கேட்பதைக் காட்டிலும், கட்டளை இடுவதில்தான் நெப்போலியன் மிகவும் சிறந்தவராக இருந்திருக்கலாம். ஆனால் இது அவருடைய ராணுவம் வெற்றிபெறுவதை தடுத்துவிடவில்லை (ரஷ்ய படையெடுப்பு மட்டும் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்). ஆனாலும், ஒரு சமூகப்  பேரிடரை வெற்றிகொள்ளுதல்/கடந்துவருதல் என்பதற்கு, கவனித்துக் கேட்பதென்பது எப்போதுமே அவசியமான ஒன்றுதான்.

இது பெருந்தொற்றினால் ஏற்படும் பேரிடருக்கும் பொருந்தும், அதாவது, இவ்விடத்தில், வசதி வாய்ப்புப்  பெற்றுள்ள சிலர் வேண்டுமானால் இந்த நோயை தொற்றிக்கொள்வது பற்றி அக்கறை கொள்ளலாம், அதேநேரத்தில் பலருக்கும் இது வருமானம் ஈட்டுவது குறித்த கவலையும் சேர்ந்த ஒன்று (அந்த வருமானமானது நோயினால் அச்சுறுத்தப்படுவதாகவோ அல்லது லாக்டவுன் போன்ற நோய்க்கு எதிரான கொள்கையினால் அச்சுறுத்தப்படுவதாக இருக்கலாம்), மேலும் – தங்களுடைய சொந்த ஊரிலிருந்து சென்றிருக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது வீட்டிற்கு திரும்புதலுக்கான வழியை கண்டுபிடித்தலாக மட்டுமே இருந்துவிடக்கூடும்.

பல்வேறு வகை குழுக்களினால் ஏற்படும் பலதரப்பட்ட ஆபத்துக்கள் அரசாங்கத்திற்கு   தெரியப்படுத்தப்பட வேண்டும், இதற்கு பங்கேற்புவாத ஜனநாயகத்தினால்தான் பெருமளவுக்கு உதவி செய்ய முடியும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பத்திரிக்கை சுதந்திரம் நிலவும்போதும், பொது விவாதம் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும்போதும், பிறவற்றை கேட்கவும் ஆலோசிக்கவும் செய்வதன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அரசாங்க கட்டளை மையங்கள் இருக்கும்போதும் இது ரொம்பவே உதவிகரமாக அமையும்.

கோவிட்-19 பரவல் காரணமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் நெருக்கடியில், இந்தப் பரவலை மிக வேகமாக நிறுத்துவது குறித்த அக்கறையில் அரசாங்கமானது நிச்சயம் சரியாகத்தான் செயல்பட்டுள்ளது. ஒரு மேலோட்டமான நிவாரணமாக சமூக விலகல் என்பதும்கூட முக்கியமானதுதான். அத்துடன், இந்திய கொள்கை-உருவாக்கத்தில் அது சரியான முறையில் சாதகமாகத்தான் இருக்கிறது.

இருந்தாலும், இந்த நோய்ப்பரவலை தாமதமாக்கும்  விழைவு, அந்த விழைவுக்குள் எடுத்துக்கொள்ளப்படுகின்ற பல்வேறு பாதைகளை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை, இவற்றில் சில, பலமில்லியின் ஏழை மக்களின் வாழ்வில் பேரழிவையும் பெருங்குழப்பத்தையும் கொண்டுவரக்கூடியவை, அதேநேரத்தில், மற்றவர்களோ இந்த பாதிப்பைத் தடுக்கும் பேக்கேஜில் சேர்க்கப்படும் கொள்கைகளினால் உதவி பெறக்கூடியவர்களாக இருப்பார்கள்.

வேலைவாய்ப்பும் வருமானமும்தான் ஏழைகளின் அடிப்படைக் கவலைகள், அவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போதெல்லாம் அவற்றை தக்கவைத்திருப்பதற்கு சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கொள்கை-வகுப்பதில் இருக்க வேண்டிய அடிப்படை அம்சம். மிகச்சாதாரணமாகவே, பட்டினியும் பஞ்சங்களும்கூட வருமானத்தின் போதாமை மற்றும் உணவை வாங்குவதற்கு ஏழைகளுக்கு உள்ள திறனின்மையோடு தொடர்புகொண்டுவிடுகின்ற இந்தச் சூழ்நிலை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று (விரிவான பொருளாதார ஆய்வுகள் இதைத்தான் சொல்லுகின்றன). ஒரு திடீர் லாக்டவுன் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை வருமானம் இல்லாமல் செய்யும்போது, குறிப்பிட்ட அளவுக்கான பட்டினி என்பது விலகிவிடாது.

எப்போதுமே கட்டுப்பாடற்ற நிறுவன பொருளாதாரம் என்பதற்கு முழுமையான உதாரணமாக (எந்த வகையில் பார்தாதலும் உண்மையிலேயே அது அப்படித்தான்) எடுத்துக்கொள்ளப்படுகின்ற அமெரிக்காகூட, வேலைவாய்ப்பில்லாதவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரும் உள்நாட்டு செலவினம் என்கிற வகையில் வருவாய் மானியங்களை அமைத்திருக்கிறது. அமெரிக்காவில் இத்தகைய சமூகரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளின் தோற்றம் மற்றும் அங்கீகரிப்பில், அரசியல் எதிர்நிலையில் இருந்து கிடைத்துள்ள ஆதரவு உட்பட பொது விவாதம் ஒரு மிகமுக்கிய பங்காற்றியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள ஏழை மக்களை, பட்டினி மற்றும் ஆதரவற்ற நிலையில் இருந்து அப்பால் வைத்திருப்பதற்கான நிறுவனமய செயல்பாடானது, தன்னுடைய சொந்த பொருளாதார நிலைமைகளோடுதான் தொடர்பு கொண்டதாக இருக்கும், ஆனால் சாத்தியமுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பரிசீலிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. உதாரணத்திற்கு, ஏழைகளுக்கு உதவ அதிகப்படியான பொது நிதியங்களை ஒதுக்கலாம் (தற்போதுள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில், ஒப்பீட்டுரீதியிலான சிறிதளவு ஒதுக்கீடே போதுமானது), தேசிய அளவிலான பேரளவு உணவளிக்கும் ஏற்பாடுகளும் இதில் அடங்கும். அத்துடன், இந்திய உணவுக் கழகத்தின் பண்டகசாலைகளில் பயன்படுத்தப்படாமலே இருக்கும் 60 மில்லியன் டன்கள் அளவுக்கான அரிசி மற்றும் கோதுமையில் இருந்தும்கூட எடுத்துக்கொள்ள முடியும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை அடைவதற்கு உண்டான வழிமுறைகள் மற்றும் வகைகள், அவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், அவர்களுடைய நோய் நிலை மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் கவனம் செலுத்துதல் ஆகியவையும் சவாலான பிரச்சினைகள்தான், அவற்றிற்கு, முறையான ஆலோசனை இல்லாத நெகிழ்வுத்திறனற்ற முடிவுகளைக் காட்டிலும், கவனமாக காதுகொடுத்துக் கேட்கும் திறனே வேண்டும்.

கேட்பது என்பதே சமூகப் பேரிடரை தடுக்கும் அரசாங்கத்தின் வேலையில் மையப்புள்ளியாக இருக்க முடியும் – பிரச்சினைகள் என்னவென்று கேட்பது, அவை சரியாக எதை தாக்கும், பாதிப்புக்கு உள்ளானோரை அது எப்படி பாதித்திருக்கிறது என்பனவற்றை கேட்க வேண்டியதுதான் முக்கியம்.

ஊடகத்தின் வாயை மூடுவது மற்றும் தண்டிக்கும் நடவடிக்கைகளால் கருத்து வேறுபாடுள்ளவர்களை மிரட்டுவது ஆகியவற்றை விட்டுவிட்டு, தகவல் தெரிவிக்கப்பட்ட பொது விவாதத்தினால்தான் ஆளும் அரசாங்கத்திற்கு பெருமளவில் உதவி செய்திட முடியும். பெருந்தொற்றை கடந்துவருதல், பார்ப்பதற்கு வேண்டுமானால் போரில் சண்டையிடுவதைப் போல் தோன்றலாம், ஆனால் நிஜமான தேவை அதற்கும் தொலைவில் இருக்கிறது.

தமிழாக்கம்: இரா.செந்தில்

Source : indianexpress.com

Total Page Visits: 190 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *