அமெரிக்கா – சீனா மோதல்: கொரோனாவால் ஒரு போரா? – வசீகரன்

Flag Collection

அமெரிக்க வெகுஜன உளவியல் ஆபத்தானது.
தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு
யார் காரணம் என நினைக்கிறார்களோ
அவர்களை பழிதீர்த்தால்தான் அடங்குவார்கள்.

கொரோனாவின் கோரத்தாண்டவம் அமெரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதிய கணக்குப்படி, அமெரிக்காவில் 7 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நியூயார்க் நகரில் மட்டும் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,600 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா ஆரம்பம் முதலே சீனாவை குற்றச்சாட்டி வருகிறது. வூகான் நகர இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சீனா சொல்வதை, அமெரிக்கா நம்பவில்லை. அதே வூகான் நகரில் இருக்கும் வைரஸ் ஆய்வுகூடத்தில் இருந்து, கொரோனா வைரஸ் தவறுதலாக வெளியேறி இருக்கலாம் என்ற யூகத்தையும் தாண்டி, சீனா கொரோனா வைரஸை ஒரு உயிரியல் ஆயுதமாக தயாரித்திருக்குமோ என்ற சந்தேகமும் அமெரிக்காவுக்கு உள்ளது.

அதற்கும் மேலாக, சீனா திட்டமிட்டுத்தான் கொரோனா உயிரியல் ஆயுதத்தை அமெரிக்கா மீது ஏவியதோ என்ற ரகசிய சந்தேகமும் அமெரிக்காவுக்கு உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த பொருளாதார நடவடிக்கைகள், சீனாவின் அபிலாசைகளுக்கு எதிராக, அமெரிக்காவால் சீனாவின் மீது நிர்பந்தமாக திணிக்கப்பட்டதாக தோன்றுகிறது. அன்னிய முதலீட்டை சீனாவுக்குள் அனுமதிக்காமல், தற்சார்போடு தனது பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் சீனாவின் அடிப்படை கொள்கைக்கு மாறாக, சீனாவிற்குள்  அன்னிய முதலீட்டை ஏற்கும் ஒப்பந்தத்தில், சீனாவை அமெரிக்கா வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த திரைமறைவு ரகசியங்கள்தான், சீனா அமெரிக்கா மீது கொரோனாவை ஏவியிருக்குமோ என்ற அமெரிக்காவின் யூகத்திற்கு அடிப்படையாகிறது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது போலும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சமீபத்திய பேச்சுக்களில் அதற்கான சமிக்ஞைகளை காணமுடிகிறது. கொரோனா வைரஸ் வூகான் நகரில் இருந்து பரவியதா என்பது குறித்து அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்கிறார் வெளிப்படையாக. கொரோனா வைரஸை சீனா தெரிந்தே பரப்பி இருந்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிறார் ஆவேசமாக.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 20-ம் தேதி ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தபோது: “கடந்த டிசம்பர் மாதம் வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவியது முதலே சீனா விசயத்தில் எனக்கு மகிழ்சியில்லை. சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட மற்ற பல விசயங்களில் நான் மகிழ்சி அடைந்தேன். ஆனால், கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து சீனா மீது எனக்கு மகிழ்ச்சியில்லை.

கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது. என்ன நடந்தது என்பது குறித்து விசாரனை நடத்த சீனாவுக்கு அமெரிக்க நிபுணர்கள் குழுவை அனுப்ப விரும்புகிறேன். இதற்கு சீனா என்ன பதில் அளிக்கப்போகிறது என்பதுதான் முக்கியம். பிளேக் நோய் போல கொரோனா பரவியுள்ளது. சீனாவுக்குள் சென்று விசாரனை நடத்துவது குறித்து நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்களுடன் நாங்கள் பேசினோம், நாங்கள் சீனாவுக்குள் செல்லவேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்புகிறோம். ஆனால், எங்களை அவர்கள் அழைக்கவில்லை,” இவ்வாறு கூறியுள்ளார்.

ட்ரம்பின் இந்த பேட்டியை அடுத்து, சீனா உடனடியாக, அமெரிக்க நிபுணர்களை விசாரணை நடத்த சீனாவுக்குள் அனுமதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டது.

அமெரிக்க வெகுஜன உளவியல் ஆபத்தானது. தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு யார் காரணம் என அவர்கள் நினைக்கிறார்களோ – அமெரிக்கர்களுக்கு நிரூபணம் அவசியமில்லை –  அவர்களை பழிதீர்த்தால்தான் அடங்குவார்கள்.

இப்படித்தான் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் விசயத்திலும் ஆரம்பித்தது. ஈராக்கில் அணு ஆயுதம் தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டியது. ஈராக்கிற்குள் வந்து அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றது. இதற்கு ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் சம்மதிக்கவில்லை. அமெரிக்கா அதையே சாக்காக வைத்து ஈராக் மீது போர் தொடுத்தது. சதாம் ஹுசைனை கைது செய்தது. பின்னர் தூக்கிலிட்டு கொலை செய்தது. ஆனால், கடைசிவரை ஈராக்கில் அணு ஆயுதம் தயாரிக்கப்பட்டதாக அமெரிக்காவால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை.

அதற்கு முன்பு, அமெரிக்க இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டபோது, அதில் பின்லேடனுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டியது. பின்லேடனே அமெரிக்க தயாரிப்புதான். அரபு நாடுகள் மற்றும் ரஷியாவுக்குள் கலவரங்களை ஏற்படுத்த அமெரிக்க உளவுத்துறையால் உருவாக்கப்பட்டவர்தான பின்லேடன் என்ற தகவலும் கசிந்தது. இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட இருப்பது குறித்து உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்தும், அமெரிக்க அரசு அதை பொருட்படுத்தவில்லை என்ற செய்திகளும் வெளியானது. ஆனால், அதற்கெல்லாம் விளக்கம் அளிக்காத அமெரிக்கா, விடாப்பிடியாக பின்லேடனை நீண்டநாள் தேடியது. பின்லேடன் பதுங்கி இருப்பதாக கூறி, ஆப்கானிஸ்தான் மீது ராணுவத்தை ஏவியது. கடைசியில், பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை, பாகிஸ்தானின் அனுமதியின்றி, அத்துமீறி உள்ளே நூழைந்து கொன்றது. பின்லேடனுக்கு ஆதரவு அளித்ததால்தான் பின்னர் ஈராக்கை பலிவாங்கியது அமெரிக்கா.

இதற்கிடையில், கடந்த வாரம், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிரான குரல்கள் அமெரிக்காவுக்குள்ளேயே கேட்கத் துவங்கிவிட்டது. அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக, அமெரிக்க உளவுத்துறையும், சுகாதாரத்துறையும் எச்சரித்ததை அதிபர் ட்ரம்ப் பொருட்படுத்தவில்லை எனவும், அடுத்து வரும் அதிபர் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக, தனது பிம்பத்தை உயர்த்திப்பிடிக்கும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவே ட்ரம்ப் கவனம் செலுத்தினார் எனவும் குற்றச்சாட்டுகள் எழத்துவங்கியது. இதை திசைத்திருப்பவே ட்ரம்ப் சீனா மீது காட்டமாக பாயத் துவங்கியிருப்பதாக தோன்றுகிறது. அதன் முதல் கட்டமாக, ஐநாவின் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயற்படுவதாக கூறி, அதற்கான நிதியை நிறுத்தியிருக்கிறார். அடுத்ததாக, சீனாவிற்குள் நிபுணர் குழுவை அனுப்புவோம் என்று பேசத் துவங்கி இருக்கிறார் ட்ரம்ப்.

கடந்த காலங்களில் அமெரிக்கா இப்படித்தான் எப்போதும் போரை ஆரம்பிக்கும். அதுபோல. எதிர்காலத்தில் கொரோனாவை முன்வைத்து அமெரிக்கா ஒரு போரை நிகழ்த்துமானால், அது கொரோனாவைவிட பலமடங்கு அதிகமாக உலக அமைதியை குலைத்துவிடும்.

நன்றி: சதுரங்கம்.காம்
Total Page Visits: 576 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *